கல்லூரி, பல்கலை. இறுதியாண்டு தேர்வு நடத்தலாம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக பல மாநிலங்கள் அறிவித்துள்ளன.
- ஆனால், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்தது. இதற்கு, 'மாணவர்களின் உயிரோடு யுஜசி விளையாடுகிறது,' என மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
- இருப்பினும், அது தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 31 மாணவர்கள், யுஜிசி.யின் உத்தரவை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
- இந்த விசாரணையில் மாணவர்கள், மாநில அரசுகளின் தரப்பில், 'இறுதிாண்டு தேர்வுகளை நடத்தாமல் ஐஐடி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு பட்டம் வழங்க முடியும் என்றால், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களிலும் ஏன் அப்படி செய்ய அனுமதிக்க முடியாது? மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் யுஜிசி தன்னிச்சையாக செயல்ப்படுகிறது.
- மாநில அரசுகளுடன் கூட கலந்து ஆலோசிக்காமல், செப்டம்பர் 30ம் தேதி இறுதியாண்டு தேர்வு நடத்தப்படும் என அது அறிவித்துள்ளது. இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்,' என வாதிடப்பட்டது.
- மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, 'கல்லூரி, பல்கலைக் கழங்களில் இறுதியாண்டு தேர்வுகளை நடத்தாமல் இருப்பது, மாணவர்களின் திறன்கள் அனைத்தையும் நீர்த்துப்போக செய்யும். அதனால், தேர்வுக்கு எதிரான மனுக்கள் அத்தனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
- இத்தேர்வை நடத்துவதை முடிவு செய்வதில், யுஜிசி.க்கு மட்டுமே அதிகாரம் உள்ளது; மாநிலங்களுக்கு கிடையாது,' என வாதிட்டார்.
- இந்நிலையில், இந்த வழக்கில் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. 'கல்லூரி, பல்கலைக் கழங்களின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய முடியாது.
- இத்தேர்வுகளை நடத்த, யுஜிசி.க்கு தடை எதுவுமில்லை. இதில் யுஜிசி.க்கு தான் முழு அதிகாரம் உள்ளது. தேர்வுகளை நடத்தாமல் மாணவர்களை கண்டிப்பாக தேர்ச்சி பெற செய்யக்கூடாது. இறுதியாண்டு தேர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
- அதில் தேர்ச்சி பெற்று பட்டம் வாங்கினால்தான், சதவீதத்தின் அடிப்படையில் மாணவர்கள் உயர் படிப்புக்கு செல்ல முடியும். இது, மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம். ஒருவேளை தங்கள் மாநிலங்களில் இந்த தேர்வை நடத்தும் சூழல் தற்போது இல்லை என்றால், தேர்வை ஒத்திவைப்பது குறித்து யுஜிசி.யிடம் மாநில அரசுகள் முறையிடலாம்.
- தேர்வு நடத்தும்போது மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை போன்ற எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இதற்கு, மாநில அரசுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,' எனறு தெரிவித்தது, மேலும், மாணவர்கள் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
உடல் நலக்குறைவால் அவதி ஜப்பான் பிரதமர் அபே ராஜினாமா
- ஜப்பான் பிரதமராக ஷின்சோ அபே. இவரது கடந்த பதவிககாலம் வரும் 2021ம் ஆண்டு செப்டம்பருடன் முடிகிறது. இவர், கடந்த 2006ம் ஆண்டு ஜப்பானின் மிக இளம் வயது பிரதமராக பொறுப்பேற்றார்.
- உடல் நிலை காரணமாக தனது பிரதமர் பதவியை 2007ம் ஆண்டு ராஜினாமா செய்தார். கடந்த 2012ல் 2வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். விடுதலை ஜனநாயக கட்சியின் தலைவரான இவர், ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர்.
- இந்நிலையில், கடந்த சில நாட்களாக அபேவின் உடல்நிலை சரியில்லை என்பது குறித்து செய்திகள் வெளியாகி வந்தன. அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் இருப்பதால் பதவியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார்.
நடைபாதை வணிகர்களுக்கான தற்சார்பு இந்தியா நிதி இணையப் பக்கம் தொடக்கம்
- நடைபாதை வியாபாரிகளுக்கான பிரதமரின் தற்சார்பு இந்தியா நிதிக்கு இணையப் பக்கத்தை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறைச் செயலர் துர்கா சங்கர் மிஷ்ரா காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
- இந்த இணையப் பலகணி (டேஷ்போர்டு) சக்தி வாய்ந்த, ஊடாடும் வல்லமை கொண்டது. தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கும் ஒரே இடத்தீர்வை வழங்கக்கூடியது. நகர அளவில், இந்த நிதியின் முன்னேற்றம் குறித்து கண்காணிக்க இது பயன்படும்.
- பிரதமர் தற்சார்பு நிதித் தளம் குறித்த விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வது 2020 ஜூலை 2-ஆம் தேதி தொடங்கியது. இது முதல், 7.15 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
- பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1.70 லட்சத்துக்கும் அதிகமானவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் தற்சார்பு நிதி 2020 ஜூன் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது.