சென்னை பல்கலைக்கு துணைவேந்தர் நியமனம்
- சென்னை பல்கலை துணைவேந்தராக பணியாற்றிய, துரைசாமியின் பதவிக்காலம், மே மாதம் முடிந்தது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, தேடல் குழுவை நியமித்து, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார்.
- இதையடுத்து, தகுதியான பேராசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டன. இதன்படி, புதிய துணைவேந்தராக பேராசிரியர் கவுரி நியமிக்கப்பட்டதாக, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளார்.
- பேராசிரியர் கவுரி, அண்ணா பல்கலை முன்னாள் பேராசிரியர். 37 ஆண்டுகள் கற்பித்தல் பணி அனுபவம் மிக்கவர். அண்ணா பல்கலை பதிவாளராக பணியாற்றி, நிர்வாக அனுபவம் உள்ளவர்.
- இவர், 94 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.சர்வதேச கருத்தரங்குகளில், 30 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார். இவரது வழிகாட்டுதலில், 13 பேர், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புகளை முடித்துள்ளனர்.
- தமிழக அரசின், டான்சி, கேபிள், 'டிவி' மற்றும் 'டெக்ஸ்கோ' நிறுவன இயக்குனராக பணியாற்றியவர். மேலும், மத்திய அரசின் தக் ஷ் கல்வி தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். சென்னை பல்கலையின் கல்வி வளர்ச்சிக்கு திறம்பட செயல்படுவார்.
இந்திய வம்சாவளி மருத்துவருக்கு பிரிட்டனில் கோவிட்-19 சேவைக்கான விருது
- ரவி சோலங்கி என்ற இந்திய வம்சாவளி மருத்துவர், நோய்த் தொற்று தடுப்பு சேவைக்கான , பிரிட்டன் ராயல் அகாடமி ஆஃப் என்ஜினியரிங் தலைவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் .
- கோவிட்-19 நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கையாளுவதற்கு, பொறியியல் ரீதியிலான தீர்வுகளை சிறந்த முறையில் பயன்படுத்தும் குழுக்களை பாராட்டவும் கௌரவிக்கும் வகையிலும் இந்த விருது வழங்கப்படுகிறது.
- 29 வயதான சோலங்கி லெஸ்டர் நகரில் பிறந்தவர். குஜராத்தில் இருந்து பிரிட்டனில் குடியேறிய இந்திய தம்பதியின் மகன்.இவருடைய தாயார் மது, செவிலியராக உள்ளார். தந்தை காண்ட்டி கணக்காளராகப் பணிபுரிகிறார்.
- பிரிட்டனில் சுகாதார சேவை அலுவலர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், புதிய தேசிய சுகாதார சேவை (என்.ஹெச்.எஸ்.) அறக்கட்டளைக்கு பாதுகாப்பான இணையதளத்தை, தனது நண்பர் ரேமாண்ட் சீயம்ஸ் உடன் இணைந்து இவர் உருவாக்கியுள்ளார்.
- HEROES என்ற அந்த இணையதளத்தை அவர்கள் உருவாக்கினர். ரோண்ட் சீயம்ஸ் பொறியாளராக உள்ளார். கடந்த மார்ச் மாதம் இவர்கள் இருவரும் 36 மணி நேரத்தில், https://www.helpthemhelpus.co.uk/ என்ற இந்த இணையதளத்தை உருவாக்கினர்.
- என்.எச்.எஸ். இருதய நோய் சிகிச்சை நிபுணர் டோமினிக் பிமென்ட்டா என்பவர், HEROES அறக்கட்டளையை தொடங்கினார். முன்னாள் ப்ரீமியர் கால்பந்து வீரர் ஜோ கோலே இதற்கு ஆதரவு அளித்தார்.
- சுகாதார சேவையில் உள்ள அலுவலர்களுக்கு முழு உடல் பாதுகாப்புக் கவச உடை (பி.பி.இ.), மானியங்கள், கலந்தாய்வு, குழந்தை பராமரிப்பு, போக்குவரத்து, உணவு மற்றும் இதர வசதிகளுக்கு இந்த அறக்கட்டளை ஏற்பாடு செய்கிறது.