தேசிய தகுதித் தேர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகும் பணியிடங்களை நிரப்புவதற்கு, நாடு முழுதும், ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக, என்.ஆர்.ஏ., எனப்படும் தேசிய பணியாளர் தேர்வு முகமை என்ற அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான பணியாளர்களை நிரப்புவதற்கு, அந்தந்த துறைகள் தனித்தனியாக தேர்வுகளை நடத்துகின்றன.
- ரயில்வே, பொதுத் துறை வங்கிகள் என, ஒவ்வோர் அமைப்புக்கும் தேர்வு முறைகள் உள்ளன. இதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக, ஒவ்வொரு தேர்வுக்கும் தனித் தனியாக, தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும். தேர்வு நடைபெறும் இடத்துக்கு பயணிக்க வேண்டும்.
- வெவ்வேறு நேரங்களில் தேர்வு நடத்தப்படுவதால், தனித் தனியாக அதற்கு தயாராக வேண்டிஉள்ளது. இதனால், அரசு வேலை எதிர்பார்ப்போர், அதிக பணம் மற்றும் நேரத்தை செலவிட வேண்டியுள்ளது.
- மேலும், பெண்களுக்கு பாதுகாப்பு பிரச்னையும் உள்ளது. இந்நிலையை மாற்றும் வகையில், 'மத்திய அரசுப் பணிகளுக்கு, தேசிய அளவில் ஒரே தேர்வு முறை அறிமுகம் செய்யப்படும்' என, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
- பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான எல்லையை ஒட்டியுள்ள லடாக்குக்கு, ராணுவ வீரர்கள் மற்றும் பீரங்கிகளை கொண்டு செல்வதற்கு வசதியாக, புதிய சாலை அமைக்கப்பட உள்ளது. மணாலியில் இருந்து லே பகுதி வரை, இந்த புதிய சாலை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
- லக்னோ, ஆமதாபாத், ஜெயப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் கவுஹாத்தி ஆகிய ஆறு விமான நிலையங்களை பராமரிப்பதற்கான உரிமத்தை, அதானி குழுமம் பெற்றுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த விமானங்களில், மூன்றை பராமரிக்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெய்ப்பூர், கவுஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
- 'டிஸ்காம்' எனப்படும் மின் பகிர்மான நிறுவனங்கள், தங்களுடைய செயல்பாட்டு மூலதனத்தை உயர்த்திக் கொள்வதற்கான விதிகளை தளர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், கடனில் தத்தளிக்கும் இந்த நிறுவனங்கள், 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆட்சியை கைப்பற்றியது ராணுவம் மாலி அதிபர் கெய்டா ராஜினாமா
- மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில், அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா, 2013 முதல், ஆட்சி புரிந்து வந்தார். இவர், பயங்கர வாதத்தை ஒடுக்க தவறியதாகவும், 2018ல் நடந்த தேர்தலில் முறைகேடு செய்து, மீண்டும் ஆட்சியை பிடித்ததாகவும் கூறி, மக்கள் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியதுடன், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
- இதன் விளைவாக, நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டது.நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, நாட்டின் பிரதமர் பவ்பவ் சிஸ்சே, ராணுவத்தினருடன் பேச்சு நடத்தினார்.
- எனினும், அது பலனளிக்காமல் போகவே, ஆட்சியை கைப்பற்றிய ராணுவத்தினர், அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவையும், பிரதமர் பவ்பவ் சிஸ்சேவையும், கைது செய்து, வீட்டு காவலில் வைத்தனர்.
- இதையடுத்து, அதிபர் மற்றும் பிரதமரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் அறிவுறுத்தினார்.
- இதற்கிடையே, மாலியில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி நிலை குறித்து ஆலோசிக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், ராணுவத்தின் அழுத்தம் காரணமாக, அதிபர் கெய்டா, தன் பதவியை ராஜினாமா செய்தார்.
உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில், இந்தியாவில் சிறந்த 9 பல்கலைக்கழகங்களில் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் இடம்
- உலக பல்கலைக்கழகங்களின் கல்வி தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் சாங்காய் தரவரிசை அமைப்பு வெளியிடும். இந்த ஆண்டு அந்த அமைப்பு உலக பல்கலைக்கழகங்களின் கல்வி தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் உலகளவில் முதல் 900 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது.
- கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட உலகப் பல்கலைக்கழகங்களின் கல்வி தர வரிசை பட்டியலில் விஐடி 901-1000 இடங்களுக்குள் இடம் பெற்றிருந்தது. ஆனால் இந்த ஆண்டு விஐடி பல்கலைக்கழகம் முன்னேறி 801- 900 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது.இந்த ஆண்டு சாங்காய் தரவரிசை அமைப்பின் உலக தரவரிசை பட்டியலில் இந்தியாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களுக்குள் விஐடி பல்கலைக்கழகம் மட்டும்தான் முதல் 1000 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- சாங்காய் தரவரிசை அமைப்பு கடந்த 2003ம் ஆண்டிலிருந்து வெளிப்படை தன்மையாக பல்வேறு ஆய்வு மற்றும் தகவலின் அடிப்படையில் உலக பல்கலைக்கழகங்களின் கல்வி தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.
- சாங்காய் உலக தரவரிசை அமைப்பை இந்திய அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. இந்த தரவரிசை பட்டியல் இந்திய அரசாங்கம் கல்வி நிறுவனங்களுக்கு 'சீர்மிகு' அந்தஸ்து வழங்குவதில் கருத்தில் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலை கோம்பை கிராமத்தில் கி.பி. 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு
- திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர். க.மோகன்காந்தி, காணிநிலம் முனிசாமி, மதுரை தியாகராஜர் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் கோவிந்தராஜ், வரலாற்று ஆர்வலர் வேந்தன் ஆகியோர் திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலை கோம்பை கிராமத்தில் கள ஆய்வு நடத்தியபோது, பல்லவர், சோழர் காலத்தைச் சேர்ந்த நடுகற்கள், கற்கோடாரிகள் கண்டெடுக்கப்பட்டன.
- கோம்பை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த நடுகல் ஒன்றை கண்டறிந்தோம். இந்த கல்லானது 5 அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இந்த கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ள எழுத்துகள் சிதைந்துள்ளதால் தெளிவாக தெரியவில்லை.
- இக்கல்லில் உள்ள வீரனின் இடது கையில் வில்லும், வலது கையில் வாளும் உள்ளது. இடையில் குறுவாள் உள்ளது. 2-வது நடுகல்லானது தலைக்கொண்டை மட்டுமே தெரிந்த நிலையில் முழுக்கல்லும் மண்மூடி கிடக்கிறது.
- இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் நடுகல்லை ஆராய்ந்தோம். இக்கல்லானது 5.3 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட பிரமாண்டமான பலகைக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இக்கல்லில் உள்ள எழுத்துகளும் சிதைந்துள்ளதால் தெளிவாக படிக்க முடியவில்லை.
- இக்கல்லின் அமைப்பை வைத்துப் பார்த்தால் பல்லவர் காலம் முடிந்து பிற்காலச்சோழர் காலம் தொடங்கிய காலத்தில் இக்கற்கள் செதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது, கி.பி.9-ம் நூற்றாண்டின் தொடக்கம் என தெரிகிறது.
- 2-வது கல்லில் உள்ள வீரன் நேர்த்தியான மேல் கொண்டை இட்டுள்ளான். அவனது காதுகளில் நீண்ட குண்டலங்கள் உள்ளன. இடையில் உள்ள ஆடை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கழுத்தில் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டுள்ளன. வலது கையில் வில்லும், இடது கையில் அம்பும் எந்தியபடி உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்த வீரனின் தோற்றத்தைப் பார்க்கும்போது இனக்குழுத் தலைவன் போல் காட்சி தருகிறது. பகைவர்களோடு நடைபெற்ற போரில் வீர மரணம் அடைந்த வீரனுக்கு நடுகல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கல்லுக்கு இவ்வூர் மக்கள் வேடியப்பன் என பெயரிட்டு வணங்கி வருகின்றனர்.
- அதேபோல், கோம்பை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில், பிள்ளையார் கோயில்களில் பழமை வாய்ந்த கற்கோடாரிகள் சிறிதும், பெரிதுமாக காணப்படுகிறது. கற்காலத்தில் மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடவும், அதன் கடினமான தோல்களை கிழிக்கவும், மரங்களை வெட்ட கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதம் கற்கோடாரிகள்.
- அதன் பிறகு, பிளேடு போன்ற கூர்மையான சிறு, சிறு நுண்கருவிகளை மனிதன் கண்டறிந்தான். இந்த கற்கோடாரிகள் கி.மு.1,000-ம் ஆண்டுகள் அதாவது 3,000 ஆண்டுகளுக்குப் பழமையுடையாதாக இருக்கும். இதன் மூலம் இப்பகுதியில் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அரிய முடிகிறது.