டாய்ஸ்ச் வங்கி இந்தியாவில் ரூ.2,700 கோடி முதலீடு
- ஜொமனியைச் சோந்த டாய்ஸ்ச் வங்கி, இந்தியாவில் வங்கிச் சேவையை விரிவுபடுத்துவதற்காக ரூ.2,700 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
- கடந்த 2019-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரூ.3,800 கோடி முதலீடு செய்த நிலையில், இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இந்த வங்கி முதலீடு செய்யவுள்ளது.
10 கோடி தடுப்பூசி மருந்துகளை வாங்க மாடர்னா நிறுவனத்திடம் அமெரிக்கா ஒப்பந்தம்
- மாடர்னா நிறுவனத்திடம் 10 கோடி கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க அமெரிக்க அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.மாடர்னா நிறுவனத்தின் கண்டுபிடிப்பான கொரோனா தடுப்பூசி mRNA-1273 ஏற்கனவே இறுதி கட்ட பரிசோதனையில் உள்ளது.
- இதையடுத்து சுமார் 11,400 கோடி ரூபாய் செலவில் 10 கோடி தடுப்பூசி மருந்துகளை வாங்க அந்நிறுவனத்திடம் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.
- நபர் ஒருவருக்கு இரண்டு தடுப்பூசிகள் போட சுமார் ரூ 2,300 செலவு ஆகும் என மாடர்னா அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி ஆய்வுக்காக மாடர்னா நிறுவனத்திற்கு அமெரிக்கா ஏற்கனவே ரூ 19,000 கோடி நிதி உதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வர அமெரிக்கா திட்டமிடப்பட்டுள்ளது.
- இது தவிர ஜான்சன் அன்ட் ஜான்சன், ஆஸ்ட்ராஜெனகா, பயோஎன்டெக்சனோபி, கிளாக்ஸோ ஆகிய நிறுவனங்களிடம் கொரோனா தடுப்பூசி மருந்துகளுக்காக அமெரிக்க அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
- பைசர் மற்றும் பயோடெக் நிறுவனங்களிடம் 10 கோடி தடுப்பூசி மருந்துகளைப் பெற 195 கோடி அமெரிக்க டாலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்திடம் 10 கோடி மருந்துகளுக்காக 100 கோடி டாலர் மதிப்புள்ள ஒப்பந்தம் செய்ய உள்ளது.
கொந்தகையில் 5 அடி உயர மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகை அகழாய்வில் 5 அடி உயர மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் பிப்.19-ம் தேதி தொடங்கியது.
- கீழடியில் விலங்கின் எலும்பு, இருவண்ண பானைகள், இணைப்பு பானைகள், உலைகலன், தரைதளம், செங்கல்கட்டுமானம், வட்டவடிவ துளைகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. மணலூரில் உலைகலன் கண்டறியப்பட்டது.
- அகரத்தில் தங்க நாணயம், நத்தை ஓடுகள், பல்வேறு வித வடிவ பானைகள், பானை ஓடுகள், 5 அடுக்குகள் கொண்ட உறைகிணறு உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.
- கொந்தகையில் முதுமக்கள் தாழிகள், 4 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் ஏற்கெனவே கண்டறியப்பட்டன. இதுவரை குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டறியப்பட்டு வந்தநிலையில் தற்போது 5 அடி உயர மனித (பெரியவர்) எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு 2020ஆம் ஆண்டு சிறந்த புலனாய்வுக்கான உள்துறை அமைச்சரின் பதக்கம்
- "சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம்", குற்றப் புலனாய்வில் சிறந்த செயல்திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, 2018-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
- 2020-ஆம் ஆண்டுக்கான, "சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம்", அகில இந்திய அளவில் 121 காவல்துறை அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- புலனாய்வில் சிறந்து விளங்கும் அதிகாரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக இது வழங்கப்படுகிறது. மத்தியப் புலனாய்வு நிறுவனத்தைச் (சிபிஐ) சேர்ந்த 15 அலுவலர்களுக்கும், மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்ட்டிரா காவல் துறையைச் சேர்ந்த தலா பத்து பேருக்கும், உத்தரப்பிரதேச காவல்துறையைச் சேர்ந்த எட்டு பேருக்கும், கேரளா மற்றும் மேற்கு வங்காள காவல் துறைகளைச் சேர்ந்த தலா ஏழு பேருக்கும், பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர்கள், ஜி. ஜான்சி ராணி, எம்.கவிதா, ஏ.பொன்னம்மாள், சி.சந்திரகலா, ஏ.கலா மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் டி.வினோத் குமார் ஆகிய ஆறு பேர் விருது பெறுகிறார்கள்.
- புதுச்சேரியைச் சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் ஏ. கண்ணனும் இந்த விருது பெறுகிறார். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட, 21 பெண் காவல் துறை அதிகாரிகள் விருது பெறுவது குறிப்பிடத்தக்கது.