கரோனா வைரஸ் பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியாக கட்டணம் வசூலிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
- கரோனா வைரஸ் நோயாளிகளின் நலன் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கவுல், எம்.ஆர். ஷா அமர்வுமுன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
- அப்போது நீதிபதிகள் கூறும்போது, "சில மாநிலங்களில் கரோனா வைரஸ் பரிசோதனை கட்டணம் ரூ.2,200 ஆகவும் சில மாநிலங்களில் ரூ.4,500 ஆகவும் உள்ளது. எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் நிர்ணயம் செய்ய முடியாது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு" என்று தெரிவித்தனர்.
- மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா கூறும்போது, "பரிசோதனை கட்டணத்தை மாநில அரசுகளே நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.
- இதற்கு நீதிபதிகள் கூறும்போது, "கரோனா வைரஸ் பரிசோதனை கட்டணம் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசே கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.
டிஐஜி, இரு எஸ்.பி.க்கள் உள்பட 5 அதிகாரிகளுக்கு 'முதல்வா் விருது'
- தமிழக காவல்துறையின் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு டிஐஜி, இரு எஸ்.பி.க்கள் உள்பட 5 அதிகாரிகள் முதல்வா் விருதுக்குத் தோவு செய்யப்பட்டுள்ளனா்.
- கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே சிறப்பு எஸ்.ஐ. வில்சனை கடந்த ஜனவரி 8-ஆம் தேதி இரு நபா்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனா்.
- இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட அதே மாவட்டத்தைச் சோந்த அப்துல் ஷமீம், அவரது கூட்டாளி தவ்பீக் ஆகியோரை போலீஸாா் கா்நாடக மாநிலம் பெங்களூரு அருகே கைது செய்தனா்.
- இவா்களுக்கு உதவியாக இருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தமிழக தலைவா் காஜா மொய்தீன், சையது அலி நவாஸ் மற்றும் அப்துல் சமது ஆகிய 3 போ தில்லி அருகே வசிராபாத்தில் தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்
- இந்த வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கி பயங்கரவாதிகளை உடனடியாக கைது செய்ய உதவிய காவல்துறை அதிகாரிகளுக்கு வீர தீர செயலுக்கான 'முதல்வா் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த விருதுக்கு தமிழக காவல்துறையின் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு டிஐஜி டாக்டா் கண்ணன், க்யூ பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஜெ.மகேஷ், மத இயக்கங்களை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த், அந்த பிரிவின் கோயம்புத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பி.பண்டரிநாதன், சென்னை காவல் ஆய்வாளா் எம்.தாமோதரன் ஆகியோா் தோவு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.
- இவா்களுக்கு விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான ரொக்கப் பரிசும் வழங்கப்படும். விருது பெறும் டிஐஜி கண்ணன் மத்திய உளவுத்துறையில் 7 ஆண்டுகள் பணியாற்றி, கடந்த ஆண்டுதான் தமிழக காவல்துறையின் பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டாா்.
மத்திய அரசின் நிதி ஆலோசனை அமைப்பின் தலைவராக டாக்டா் உா்ஜித் படேல் நியமனம்
- மத்திய நிதியமைச்சகம் மற்றும் பல்வேறு மாநிலங்கள் பங்குவகிக்கும் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின்(என்.ஐ.பி.எஃப்.பி) தலைவராக முன்னாள் ரிசா்வ் வங்கி ஆளுநா் டாக்டா் உா்ஜித் படேல் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
- ஜூன் 22 -ஆம் தேதி இந்த பொறுப்பை ஏற்கும் உா்ஜித் படேல் நான்கு ஆண்டுகளுக்கு இந்த பதவியை வகிப்பாா் என்று இந்த நிறுவனத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கு முன்பு இந்த பொறுப்பில் இருந்தவா் பிரபல பொருளாதார அறிஞா் டாக்டா் விஜய் கேல்கா்.
வருவாய் நிா்வாக ஆணையாளராக கே.பணீந்திர ரெட்டி நியமனம்: தமிழக அரசு உத்தரவு
- தமிழக அரசின் வருவாய் நிா்வாக ஆணையராக கே.பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளாா். கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வருவாய் நிா்வாக ஆணையாளராக பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பங்கஜ்குமாா் பன்சால்: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் (ஏற்கெனவே நில நிா்வாக ஆணையராகப் பொறுப்பு வகித்த அவா், மின் வாரியத் தலைவா் பொறுப்பையும் கூடுதலாக கவனித்துக் கொள்வாா்.) மின்வாரியத் தலைவா் பொறுப்பை முதன்மைச் செயலாளா் அந்தஸ்தில் உள்ள பிரதீப் யாதவ், கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தாா்.
- கே.பணீந்திர ரெட்டி: வருவாய் நிா்வாக ஆணையா் (இந்து சமய அறநிலையங்கள் துறை ஆணையாளராக உள்ள அவா், அதனை கூடுதல் பொறுப்பாகவும் தொடா்ந்து கவனித்துக் கொள்வாா்.)
- கரோனா நோய்த் தொற்று: கரோனா நோய்த் தொற்று தொடா்பான தடுப்புப் பணிகளை வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கவனித்து வருகிறது. இதில், வருவாய் நிா்வாக ஆணையாளரே பல்வேறு முதன்மையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறாா்.
- வருவாய் நிா்வாக ஆணையராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன், அண்மையில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். வருவாய் நிா்வாக ஆணையா் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக அவரே கவனித்து வந்த நிலையில், இந்து சமய அறநிலையங்கள் துறை ஆணையாளா் பணீந்திர ரெட்டி வருவாய் நிா்வாக ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
- நியாய விலைக் கடைகளில் முகக் கவசங்கள் வழங்கும் திட்டத்துக்கு கொள்முதல் விலையை நிா்ணயிப்பது உள்பட பல்வேறு முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தும் பொறுப்பினை வருவாய் நிா்வாக ஆணையரகம் ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
19 எம்.பி. பதவிகளுக்கான ராஜ்யசபா தேர்தல்
- ராஜ்யசபாவின் 24 எம்.பி.க்களின் பதவி காலம் முடிவடைவதால் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்திருந்தது. ஆனால் கொரோனா லாக்டவுனால் இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
- இதனையடுத்து 24 எம்.பி இடங்களுக்கு ஜூன் 19-ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜக எம்பிக்கள் இரன்ன கடாடி, அசோக் காஸ்தி, அருணாசலப் பிரதேசத்தின் நாமப் ரெபியா ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு முடிவடைந்தது. பின்னர் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
- 19 இடங்களுக்கான தேர்தலில் பாஜக 8; காங்கிரஸ் 5 எம்.பிக்களைப் பெற்றுள்ளனர் (ஜே.எம்.எம். காங்கிரஸ் கூட்டணி). ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 4 எம்.பி.க்கள் கிடைத்துள்ளனர். மாநில கட்சிகளான என்.பி.பி, எம்.என்.எப். ஆகியவை தலா 1 எம்.பி இடங்களைப் பெற்றுள்ளன.
- பாஜகவின் ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸின் திக்விஜய்சிங், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சிபுசோரன், காங்கிரஸின் கேசி வேணுகோபால் ஆகியோர் வெற்றி பெற்றவர்களில் முக்கியமானவர்கள். மணிப்பூரில் பெரும் பரபரப்புக்கு இடையே பாஜக வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை
- எல்லை பிரச்னையில் இந்தியாவை சீனா தொடர்ந்து சீண்டி வரும் நிலையில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் சீன ராணும் அத்துமீறியது. அப்போது இந்திய சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
- சீன வீரர்கள் 35 பேர் வரை இந்த மோதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் சீனாவுடனான எல்லைப் பிரச்னையில் அடுத்தக்கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.
- வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மொத்தம் 20 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்ரே உள்ளிட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் பிரதமர் நடத்திய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
- கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் மற்றும் இந்திய ராணுவத்தின் தயார் நிலை குறித்து அனைத்துக்கட்சித் தலைவர்களிடம் எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
- சீனா விவகாரத்தை எதிர்கொள்ள அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைந்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூட்டத்தில் பிரதமர் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. முன்னதாக கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கொடுமணல் அகழாய்வு பணியில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய கல்லறை, கொல்லுப்பட்டறை கண்டுபிடிப்பு
- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கொடுமணல் கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததால் பல கட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வந்தது.
- தற்போது, தமிழக தொல்லியல் துறையின் திட்ட இயக்குநர் ரஞ்சித் தலைமையில் உதவி தொல்லியலாளர் நந்தகுமார் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கொடுமணலில் கடந்த ஒரு மாதமாக அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இதில், சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் பயன்படுத்திய கல்லறைகள் மற்றும் கருவிகள், அணிகலன்கள் தயார் செய்த தொழிற்சாலைகள் இருந்ததற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.
- இந்த அகழாய்வு பணியில் சுமார் 250 இடங்களில் கல்லறைகள், பெருங்கற்கால ஈமச்சின்னம் இருந்ததற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு கல்லறையை சுற்றிலும் பெரிய அளவிலான கற்கள் வட்டமாக வைக்கப்பட்டுள்ளது.
- இதில், ஒரு கல்லறையை நாங்கள் தோண்டி ஆய்வு செய்தபோது 6 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் மற்றும் 1 மீட்டர் ஆழத்தில் முற்றத்துடன் கூடிய 2 அறைகளாக பிரிக்கப்பட்டு இருந்தது.
- இந்த கல்லறையில் இறந்தவரின் உடலை எரித்த பின்பு அந்த எலும்புகளை ஒரு அறையிலும், மற்றொரு அறையில் இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை மட்டுமே வைத்துள்ளனர்.
- இந்த கல்லறையின் முன் பகுதியிலும், பின் பகுதியிலும் பெரிய அளவிலான கற்களை நட்டு வைத்துள்ளனர். இந்த ஒரு கல்லறை மட்டும் முக்கிய நபர் இறந்த கல்லறையாக இருக்கலாம்.
- இதன் அருகில் ஈமச்சடங்கு செய்ய வைத்திருந்த 10 மண்பானை மண்ணில் புதைந்து காணப்படுகிறது. மற்றொரு இடத்தில் அகழாய்வு செய்தபோது அங்கு கருவிகள், அணிகலன்கள் தயார் செய்வதற்காக கொல்லுப்பட்டறைகள் இயங்கியதற்கான அடையாளம் உள்ளது.
- இங்கு செப்பு, இரும்பு ஆகியவற்றை உருக்கி எடுத்ததற்கான அடையாளமும் காணப்பட்டது. 2 பச்சைக்கற்கள், சிறிய அளவிலான 2 தங்க துண்டு, உடைந்த மண்பானைகள், பாசிமணிகள் மற்றும் விலங்கு ஒன்றின் தலைப்பகுதி எலும்பு ஆகியவை கிடைத்துள்ளது.
- கல்லறைகளும், கொல்லுப்பட்டறைகளும் சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களால் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். அகழாய்வு பணியை முழுமையாக செய்யும்போது இன்னும் ஏராளமான பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கீழடி அகழாய்வில் முதல் முறையாக குழந்தை ஒன்றின் முழு அளவிலான எலும்புகூடு கண்டெடுப்பு
- 6ம் கட்ட அகழாய்வு கொந்தகை, மணலூர், அகரம், கீழடி உள்ளிட்ட நான்கு இடங்களில் 40 லட்சம் ரூபாய் செலவில் கடந்த பிப்ரவரி 19 முதல் நடைபெற்று வருகிறது.
- கொந்தகையில் சுரேஷ் என்பவரது நிலத்தில் நான்கு குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வில் 13 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் மூன்று தாழிகளில் உள்ள எலும்புகள் வெளியே எடுக்கப்பட்டு மரபணு சோதனைக்காக அனுப்பட்டுள்ளன.
- இந்நிலையில் இன்று காலையில் நடந்த அகழாய்வில் குழந்தை ஒன்றின் எலும்புக் கூடு முழு அளவில் கிடைத்துள்ளது. முதுமக்கள் தாழிகள் முதல் நிலை, 2ம் நிலை, 3ம் நிலை என மூன்று வகைப்படும்.
- முதல் நிலை என்பது பராமரிக்க முடியாத முதியோர்களை உணவு, தண்ணீர் வைத்து அப்படியே புதைப்பது. 2ம் நிலை என்பது வேறு இடத்தில் அடக்கம் செய்தவர்களின் எலும்புகளை தோண்டி எடுத்து தாழியினுள் வைத்து புதைப்பது.
- கொந்தகையில் கிடைத்து வருவது அனைத்தும் 2ம் நிலை வகையை சேர்ந்தவை என கூறப்படுகிறது. தற்போது குழந்தையின் எலும்பு கூடு கண்டறியப்பட்டது 3ம் நிலை என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல்
- தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பு, டிப்ளமோ படிப்புக்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த கோரிக்கை தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது.
- இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில், மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி அதிமுக, திமுக, பாமக மற்றும் மதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் மருத்துவ மேற்படிப்புக்காகத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களை எதிர் மனுதாரர்களாகச் சேர்க்க உத்தரவிட்டு, மனுக்கள் தொடர்பாக வரும் ஜூன் 22-ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
- இதே கோரிக்கையுடன் தமிழக அரசின் சுகாதாரத்துறை மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்குகளை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர்.
- வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும் இதே கோரிக்கையுடன் அரசியல் கட்சிகள் தொடர்ந்துள்ள வழக்குகளுடன் சேர்த்து வரும் ஜூன் 22-ஆம் தேதி இந்த வழக்குகளும் விசாரிக்கப்படும் எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.
- இந்த நிலையில் மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.