மே 17 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: கடைகள், தொழிற்சாலைகளுக்கு அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது தமிழக அரசு
- தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மே மாதம் 3ம் தேதி (இன்று) வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறையாததால் மேலும் 2 வாரத்துக்கு அதாவது மே 17ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
- மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 (நாளை) முதல் 17.5.2020 நள்ளிரவு 12 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதன்படி,
- நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
- சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
- கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும்.
- அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும்.
- சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் சென்னை மாநகராட்சி ஆணையர்/ மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கு பின், சூழ்நிலைக்கேற்ப, 25 சதவிகித பணியாளர்களுடன் (குறைந்தது 20 பேர்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.
- தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தது 20 பேர்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.
- அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் மின் வணிக நிறுவனங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம்.
- உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, பார்சல் மட்டும் வழங்கலாம்.
- அனைத்து தனி கடைகள் (முடி திருத்தகங்கள்/ அழகு நிலையங்கள் தவிர), ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமான பொருட்கள், சானிடரிவேர், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக் கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- பிளம்பர், எலெக்டிரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள், சிறப்பு தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் ஆகியோர் சென்னை மாநகராட்சி ஆணையர் / சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
- சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. 50 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தபட்சம் 20 பேர்) மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில், அதாவது ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில், உள்ள அனைத்து தொழிற்சாலைகள் (ஜவுளித்துறை உட்பட) செயல்பட அனுமதிக்கப்படும்.
- 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் மட்டும், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, சூழ்நிலைக்கேற்ப, ஜவுளித்துறை நிறுவனங்களை 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம்.
- SEZ, EOU தொழிற் நகரியங்கள், தொழிற்பேட்டைகள் (ஊரகம், நகரம்) 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம். நகர பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளில், ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை.
- நகர பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
- மின்னணு வன்பொருள் உற்பத்தி 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
- கிராமப்புறங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலைகள் (ஷிப்ட் முறையில் தக்க சமூக இடைவெளியுடன்) 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
- நகரப்பகுதிகளில் உள்ள தோல் பொருட்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான டிசைனிங் மற்றும் சாம்பிள்கள் உருவாக்கம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, 30 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
- தகவல் தொழில்நுட்பம் 50 சதவிகித பணியாளர்கள், குறைந்தபட்சம் 20 பேர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும். நகர்புறங்களில் கட்டுமான பணிகள், பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும். பணியாளர்களை ஒருமுறை மட்டும் வேறு இடத்தில் இருந்து அழைத்துவர அனுமதிக்கப்படும்.
- அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். பிளம்பர், எலெக்ரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னர் அனுமதிக்கப்படுவர்.
- மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள் ஆகியோரின் சிறப்பு தேவைகளுக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர். அச்சகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
- கட்டுமான பணிகளுக்கு தேவையான ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமான பொருட்கள், சானிடரிவேர், மின் சாதன விற்பனை கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்ல எந்தவித தடையும் இல்லை.
- மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார் ரிப்பேர், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
- கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனி கடைகள், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பபடும்.
- உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். மின் வணிக நிறுவனங்கள் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டவாறு செயல்படலாம்.
அரசு, தனியாா் துறை ஊழியா்களுக்கு 'ஆரோக்ய சேது' செயலி கட்டாயம்
- நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளபோதும், பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. அதன்படி, அரசு, தனியாா் அலுவலகங்கள் குறைந்தபட்ச பணியாளா்களுடன் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'அரசு, தனியாா் துறை பணியாளா்கள் அனைவரும் 'ஆரோக்ய சேது' செயலியைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படுகிறது. தங்கள் பணியாளா்கள் அனைவரும் அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்வதை நிறுவனங்களின் தலைவா்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
- அதேபோல், கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் 'ஆரோக்ய சேது' செயலியை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ரூ.5,876 கோடி உதவி செய்த அமெரிக்கா
- கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும், மருத்துவ வசதிகளை மேம்படுத்திக் கொள்ளவும், பல்வேறு நாடுகளுக்கு, அமெரிக்கா உதவியுள்ளது. அதன்படி, இதுவரை, மொத்தம், 5,876 கோடி ரூபாய் உதவி வழங்கப்பட்டுள்ளது.
- இதில், இந்தியாவுக்கு, 44 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவற்றுக்கும் உதவி வழங்கப்பட்டு உள்ளது.
- பல்வேறு சர்வதேச அமைப்புகள், அரசு சாரா அமைப்புகளுக்கும் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, அமெரிக்க பார்லிமென்ட் அனுமதி அளித்துள்ளது.
- பல்வேறு நாடுகளில், மருத்துவ வசதிகள், பரிசோதனை மையங்கள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
11.45 கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளுக்கு மத்திய அரசு ஆர்டர்
- அரசு நிறுவனமான இந்துஸ்தான் லேட்டக்ஸ் லிமிடெட் இந்த மாத்திரைகளை கொள்முதல் செய்து அரசுக்கு வழங்கும். இதற்காக ஐபிசிஏ லேப்ஸ், சடைஸ் கடிலா என்ற இரு நிறுவனங்களிடம் மொத்தம் 11 கோடியே 45 லட்சம் மாத்திரைகளுக்கு ஹெச்எல்எல் ஆர்டர் கொடுத்துள்ளது.
- கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் இந்த மாத்திரைகளால் பக்க விளைவுகள் ஏற்படும் என்பதால் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த மாத்திரைகள் பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து மக்களுக்கும் இலவச இன்சூரன்ஸ்: அசத்துகிறது மஹா., அரசு
- மாநிலத்தில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் இலவச சுகாதார இன்சூரன்ஸ் திட்டத்தை வழங்கி அசத்தி உள்ளது மஹா., அரசு. மஹாராஷ்டிரா மாநிலத்தில் மாநில தின விழா கொண்டாடப்பட்டது.
- தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் சுஅதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் முயற்சியாக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் பகுதி நேர அரசு ஊழியர்கள் மற்றும் வெள்ளை நிற ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றனர்.
- ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பொதுத்துறை சங்கம் மற்றும் அரசும் இணைந்து இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவச சுகாதார காப்பீடு திட்டம் வழங்கப்படும்.
- மாநில மக்கள் தொகையில் 85 சதவீதம் பேர் தற்போது மகாத்மா ஜோதிபா புலே ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் கீழ் உள்ளனர் மீதமுள்ள 15 சதவீதம் பேருக்கும் இந்த இலவச சுகாதார காப்பீடு திட்டத்தில் இணைத்து கொள்ளப்படுவர்.
- இத்திட்டத்தின் மூலம் மஹாராஷ்டிரா மாநிலம் குடிமக்கள் அனைவருக்கும் இலவச காப்பீடை வழங்கும் முதல் மாநிலம் என சுகாதார அமைச்சர் கூறினார்.
கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதுதான் உலக சுகாதார அமைப்பு
- கொரோனா வைரஸ் ஊஹானில் உள்ள உயிரி ஆய்வுக்கூடத்தில் உருவானது என்றும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், உலக சுகாதார நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
- கொரோனா வைரஸின் மரபணுத் தொடரை ஆராய்ந்த உயிரியல் வல்லுநர்களின் கூற்றுப்படி, அது இயற்கையாக உருவானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் செயல் இயக்குநர் மைக்கேல் ரியான், விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவக் காரணமான இடை உயிரினம் குறித்த தகவல் மட்டும் இன்னும் கண்டறியப்படவில்லை என்று கூறினார்.