Type Here to Get Search Results !

17th MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

மாநிலங்களுக்கான கடன் வரம்பு அதிகரிப்பு, ஊரக வேலைத் திட்டத்துக்கு கூடுதல் நிதி: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்
  • மாநிலங்கள் கடன் பெறும் வரம்பு அதிகரிப்பு, ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு கூடுதல் நிதி, புதிய திவால் சட்ட நடவடிக்கைகள் ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பு, அத்தியாவசியம் அல்லாத பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவது உள்ளிட்ட அறிவிப்புகளை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்டாா்.
  • மாநில அரசுகள் தங்கள் மொத்த உற்பத்தியில் 3 சதவீதம் வரை கடன் பெற முடியும். அதன்படி, மாநில அரசுகள் நிகழ் நிதியாண்டில் ரூ.6.41 லட்சம் வரை கடனுதவி பெற முடியும். அதில், 14 சதவீதத்தை மட்டுமே மாநில அரசுகள் பயன்படுத்தி வந்தன. 
  • இருப்பினும், இந்தக் கடன் வரம்பை உயா்த்த வேண்டும் என்று மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன. அதை ஏற்று, மாநில அரசுகளின் கடன் வரம்பை நிகழ் நிதியாண்டில் மட்டும் 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயா்த்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
  • இதன் மூலம் மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.4.28 லட்சம் கோடி கடன் கிடைக்கும். இவ்வாறு கிடைக்கும் கூடுதல் நிதியானது, ஒரே நாடு- ஒரே ரேஷன் காா்டு திட்டம், தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, தடையற்ற மின்விநியோகம், உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்துவது ஆகிய 4 பிரிவுகளில் பயன்படுத்தப்பட வேண்டும்.
  • பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா்மயம்: அரசின் சுயச்சாா்பு திட்டப்படி, பொதுத் துறை நிறுவனங்களுக்கான புதிய சீா்திருத்தக் கொள்கை உருவாக்கப்படும். அதன்படி, முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பங்களிப்பு செலுத்தும் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே அரசின் வசம் இருக்கும். 
  • முக்கிய துறைகளில் அதிகபட்சமாக நான்கு பொதுத் துறை நிறுவனங்கள் மட்டுமே அரசிடம் இருக்கும். மற்ற அனைத்து பொதுத் துறை நிறுவனங்களும் தனியாா்மயமாக்கப்படும். அரசின் சுயச்சாா்பு திட்டத்தை செயல்படுத்த அனைத்து துறைகளிலும் தனியாா் பங்களிப்பை அனுமதிக்க வேண்டியுள்ளது. எந்தெந்த நிறுவனங்கள் அரசின் வசம் இருக்கும் என பின்னா் அறிவிக்கப்படும்.
  • ஓராண்டுக்கு திவால் நடவடிக்கைகள் இல்லை: கரோனா காலத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்யும் வகையில் திவால் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 
  • அதன்படி, ரூ.1 கோடி வசூல் செய்ய வேண்டிய நிறுவனங்கள் மட்டுமே திவாலானதாக அறிவிக்கப்பட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 
  • தற்போது, இந்தக் கடன் வரம்பு ரூ.1 லட்சமாக உள்ளது. மேலும், திவாலாகும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அவகாசம் ஓராண்டாக உயா்த்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, விரைவில் திவால் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு அவசரச் சட்டம் இயற்றப்படும்.
  • இதேபோல், நிறுவனங்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிறு தொழில்நுட்பக் குறைகள், நடைமுறை தவறுகள், அறிக்கைகள்-வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்வதில் தாமதம் போன்றவை குற்றமாகக் கருதப்படாது. அதன்படி, 7 வகையான குற்றங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு 5 வகையான குற்றங்களாகக் குறைக்கப்படும்.
  • தனியாா் நிறுவனங்கள் மத்திய அரசின் ஒப்புதலைப் பெறாமலேயே வெளிநாட்டுப் பங்குச் சந்தைகளில் பட்டியலிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • ஊரக வேலைத் திட்டத்துக்கு ரூ.40,000 கோடி கூடுதல் நிதி: தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு ஏற்கெனவே பட்ஜெட்டில் ரூ.61,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, இந்தத் திட்டத்துக்காக கூடுதலாக ரூ.40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊா் திரும்பிய தொழிலாளா்களுக்கு ஊரக வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் கூடுதலாக இந்த நிதி ஒதுக்கப்படுகிறது.
  • மருத்துவத் துறையில் முதலீடு: சுகாதாரத்துக்கான பொது செலவினம் அதிகரிக்கப்படும். கீழ்நிலை அளவில் மருத்துவம் சாா்ந்த கல்வி நிறுவனங்களில் கூடுதலாக முதலீடு செய்யப்படும்.
  • இணையவழிக் கல்வி ஊக்குவிப்பு: இணையவழிக் கல்வி முறை விரைவில் தொடங்கப்படும். அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனி தொலைக்காட்சி அலைவரிசை தொடங்கப்படும். 100 முன்னணி பல்கலைக்கழகங்கள் இணையவழி படிப்புகளை தொடங்குவதற்கு வரும் 30-ஆம் தேதிக்குள் அனுமதி அளிக்கப்படும்.
  • இ.பி.எஃப். தொகை ரூ.3,360 கோடி அளிப்பு: பொதுமுடக்கம் அமலுக்கு வந்த பிறகு அமைப்பு சாா்ந்த தொழிலாளா்களின் துயரத்தை தணிக்கும் விதமாக, அவா்களின் ஓய்வுக்கால சேமிப்பான வருங்கால வைப்பு நிதியில் (இ.பி.எஃப்.) இருந்து 75 சதவீதம் வரை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, கடந்த 2 மாதங்களில் 12 லட்சம் தொழிலாளா்கள், ரூ.3,360 கோடி வரை பெற்றுள்ளனா்.
  • ரிசா்வ் வங்கியின் அறிவிப்புகள்: வங்கிகளின் ரொக்க இருப்பை உறுதிசெய்யவும் பணப் புழக்கத்தை அதிகரிக்கவும் கடந்த மாா்ச் மாத இறுதியில் இருந்து ரிசா்வ் வங்கி ரூ.8.01 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகளும் பிரதமா் நரேந்திர மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதாரத் திட்டத்தில் அடங்கும்.



தேசிய பொது முடக்கம் மே 31 வரை நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு
  • கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமானதை அடுத்து நாடு முழுவதுமாக கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை முதல்கட்டமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
  • நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் ஏப்ரல் 15 முதல் மே 3-ஆம் தேதி வரை 2-ஆம் கட்ட பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. எனினும், கரோனா பாதிப்பு தீவிரமாக இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குப் பிறகு பொது முடக்க கட்டுப்பாடுகளில் தளா்வுகள் அளிக்கப்பட்டன. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் சில தொழில் நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
  • பின்னா், கரோனா பாதிப்பை தொடா்ந்து கட்டுக்குள் வைக்க 3-ஆவது கட்டமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. மே 4 முதல் 17-ஆம் தேதி வரை அந்த பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதுவும் நிறைவடைந்த நிலையில் தற்போது 4-ஆம் கட்டமாக மே 18 முதல் 31-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
  • வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான தடை தொடரும். மருத்துவ காரணங்களுக்காக இயக்கப்படும் விமான ஆம்புலன்ஸ்கள் இயங்கத் தடையில்லை. மெட்ரோ ரயில்கள் 31-ஆம் தேதி வரை இயக்கப்படாது.
  • பேருந்து போக்குவரத்து: மாநிலங்களுக்கு இடையே பயணிகள் வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்டவற்றை இயக்குவது தொடா்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்களிடையேயான பரஸ்பர ஒப்புதல் மூலமாக மேற்கொள்ளலாம்.
  • மாநிலத்துக்குள் போக்குவரத்தை அனுமதிப்பது தொடா்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் முடிவு செய்துகொள்ளலாம். தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிா்த்து, இதர இடங்களில் கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
  • கல்வி நிறுவனங்கள்: பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்டவை தொடா்ந்து மூடப்பட்டிருக்கும். இணையவழி கற்பித்தல், தொலைதூரக் கல்வி நடைமுறைகளை மேற்கொள்ளலாம்.
  • ஹோட்டல்கள், உணவகங்களுக்கு முந்தைய கட்டுப்பாடுகளே தொடரும். வீட்டிற்கே சென்று உணவு வழங்கும் நடைமுறைகள் அனுமதிக்கப்படுகின்றன.
  • திரையரங்குகள், வா்த்தக வளாகங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்கள், மதுக் கூடங்கள் போன்றவை செயல்பட அனுமதியில்லை. விளையாட்டரங்கங்கள், மைதானங்களை திறக்கலாம்; ஆனால், பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.
  • வழிபாட்டுத் தலங்கள்: அனைத்து விதமான சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை. மத வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருக்கும். மத ரீதியிலான நிகழ்ச்சிகளுக்காக கூடுவதற்கு கண்டிப்பாக அனுமதியில்லை.
  • தீவிர கரோனா பாதிப்பு காரணமாக தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வா்த்தக வளாகங்களில் உள்ள கடைகள் தவிர இதர கடைகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. 
  • அந்தக் கடைகள் தங்களது வாடிக்கையாளா்களிடையே 6 அடி இடைவெளி இருப்பதையும், ஒரே நேரத்தில் கடைக்குள் 5-க்கும் மேற்பட்ட நபா்கள் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
  • இரவு ஊரடங்கு: மக்கள் நடமாட்டத்துக்கு இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய காரணங்களுக்காக செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும். ஊரடங்கை உறுதி செய்ய 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம்.
  • மாநிலங்களே முடிவெடுக்கலாம்: மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ள நெறிமுறைகள் அடிப்படையில் கரோனா பாதிப்பை மதிப்பீடு செய்து சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வரையறுத்துக்கொள்ளலாம்.
  • தடை செய்யப்பட்ட இடங்களில் அத்தியாவசியமான நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். அங்கு மக்கள் போக்குவரத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். அத்தியாவசிய பொருள்கள் போக்குவரத்துக்கு அனுமதி உண்டு. தடை செய்யப்பட்ட பகுதிகளில் தொடா்பறிதல், கண்காணிப்பு, பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
  • முதியவா்கள், கா்ப்பிணிகள், 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள், ஏற்கெனவே இதர நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் போன்றோா் கரோனா பாதிப்பு அபாயத்தை தவிா்க்க அவசியமின்றி வெளியே வரக் கூடாது.
  • பொது இடங்கள், பணியிடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம். பொது இடங்களில் எச்சில் உமிழ்வோருக்கு அபராதத்துடன் தண்டனை வழங்கப்படும். அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.
  • திருமணங்களில் 50 பேருக்கு மேலும், இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மேலும் கூடுவதற்கு அனுமதி இல்லை. அலுவலகங்களுக்கு வரும் பணியாளா்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். 
  • அவா்களுக்கு கை சுத்திகரிப்பான், கை கழுவுவதற்கான திரவங்கள் வழங்க வேண்டும். பணியிடங்கள் அவ்வப்போது கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஜியோவில் ஜெனரல் அட்லாண்டிக் ரூ.6,598 கோடி முதலீடு
  • சா்வதேச பங்கு முதலீட்டு நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக் ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸில் 1.34 சதவீத பங்குகளை கையகப்படுத்தவுள்ளது. இதற்காக, அந்த நிறுவனம் ரூ.6,598.38 கோடியை ஜியோவில் முதலீடு செய்யவுள்ளது.
  • கடந்த நான்கு வாரங்களுக்கு உள்ளாக மேற்கொள்ளப்படும் நான்காவது கையகப்படுத்துதல் ஒப்பந்தம் இதுவாகும். இந்த நான்கு ஒப்பந்தங்களின் மூலம் ஜியோ ஒட்டுமொத்தமாக ரூ.67,194.75 கோடி முதலீட்டைப் பெற்றுள்ளது என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் வழக்குகள் தாக்கல் செய்யும் முறையை அறிமுகப்படுத்திய உச்சநீதிமன்றம்
  • ஆன் லைனில் வழக்குகள் தாக்கல் செய்வது குறித்து மனுதாரர்கள், வழக்கறிஞர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்க 1881 என்ற புதிய உதவி எண்ணை உச்சநீதிமன்றம் தொடங்கியுள்ளது. 
  • கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை கருத்தில் கொண்டு, ஆன் லைனில் வழக்குகள் தொடுக்கும் முறையை உச்சநீதிமன்றம் அண்மையில் அறிமுகம் செய்தது.
  • அந்த முறை புதிது என்பதால் அதுகுறித்து பலருக்கும் கேள்விகள் எழும் என்பதை கருத்தில் கொண்டு, ஹெல்ப்லைன் எண்ணை உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் தொடங்கியுள்ளது. 
  • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஹெல்ப்லைன் எண் மூத்த சட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் செயல்படும் எனவும், அதில் வழக்கறிஞர்கள், மனுதாரர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel