மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக சஞ்சய் கோத்தாரி பதவியேற்றார்
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைமை கண்காணிப்பாளராக சஞ்சய் கோத்தாரி பதவியேற்றார்.மத்திய அரசின் அமைப்பான சி.வி.சி. எனப்படும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் ஆணையராக இருந்த கே.வி. சவுத்ரி ஒய்வு பெற்றதையடுத்து அந்த பதவி கடந்தாண்டு ஜூன் வரை காலியாக இருந்தது.
- இந்நிலையில் சி.வி.சி. எனப்படும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் புதிய ஆணையரை, பிரமர் தலைமையில் தேர்வு குழு கடந்த பிப்ரவரியில் தேர்வு செய்தது. இதன் படி. சி.வி.சி.யின் புதிய ஆணையராக சஞ்சய் கோத்தாரி நியமிக்கப்பட்டார்.
ரூ.13,500 கோடி மூலதனம் திரட்டுகிறது பேங்க் ஆஃப் பரோடா
- பொதுத் துறையைச் சோந்த பேங்க் ஆஃப் பரோடா விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான ரூ.13,500 கோடி மூலதனத்தை திரட்டவுள்ளதாக தெரிவித்துள்ளது.
- இந்த தொகையை வரும் 2021 மாா்ச் 31-ஆம் தேதி வரையில் திரட்டிக் கொள்ள இயக்குநா் குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ரூ.9,000 கோடி மூலதனம் தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு பங்குகளை ஒதுக்கீடு செய்வதன் மூலமாக திரட்டப்பட்டவுள்ளது.
- மேலும், முதல் மற்றும் இரண்டாம் நிலை பிரிவில் உள்நாடு அல்லது வெளிநாடுகளில் கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலமாக ரூ.4,500 கோடி திரட்டப்படும் என்று பேங்க் ஆஃப் பரோடா பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு பணிக்கு 10 கோடி இந்து அறநிலையத்துறை அறிவிப்பு
- முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 கோடி நிதியுதவி வழங்குவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 47 திருக்கோவில்கள் சார்பாக நிதியுதவி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
- கடந்த 20ம் தேதி வரை நிவாரண நிதியாக மொத்த தொகை 160 கோடியே 93 லட்சத்து 74 ஆயிரத்து 572 ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் 'யுவான்' கரன்சி
- சீனா, டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யவுள்ளது. அந்நாட்டின் மத்திய வங்கிகள் ஒன்றிணைந்து டிஜிட்டல் 'யுவான்' கரன்சியை அறிமுகப்படுத்த உள்ளன.
- இதனை வங்கி அளிக்கும் தனி வாலட் ஒன்றில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அந்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் அனைத்தும் இப்பயன்பாட்டை துவங்கியதும் இதனை மெல்ல விரிவுபடுத்தவும் சீனா திட்டமிட்டுள்ளது.
- டிஜிட்டல் கரன்சி திட்டத்தை 5 வருடமாக ரகசியமாக தீட்டிய சீனா, தற்போது அதனை நிறைவேற்றி உள்ளது. உலக நாடுகளில் பிட்காயின்கள் பயன்பாடு இருந்தாலும், ஒரு நாட்டு வங்கியே அதிகாரபூர்வமாக டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்நிலையில் சீனாவின் சியோங் மாகாணத்தில் உள்ள ஸ்டார்பக்ஸ், மெக்டொனால்டு உள்ளிட்ட 19 பிரபல உணவு நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்கள் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த ஒப்பந்தமிட்டுள்ளன.
சவுதியில் சிறார் மரண தண்டனை முறை ரத்து
- சவுதி அரேபியாவில் சிறார்களுக்கு மரண தண்டனை வழங்கும் முறையை ரத்து செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், மனித உரிமைகளை நிலைநாட்டும் வகையில், சவுதி அரசர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
- அதன் ஒருபகுதியாக, பல்வேறு குற்றங்களுக்கு, வழங்கப்பட்டு வந்த கசையடி தண்டனையை, கடந்த சனிக்கிழமை ரத்து செய்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
- இந்நிலையில் சிறார்களுக்கு வழங்கப்பட்டு வந்த மரண தண்டனையை ரத்து செய்து அந்நாட்டு மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். சவுதியின் இந்த அறிவிப்புக்கு மனித உரிமை அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
உடல் அடக்கம் செய்வதைத் தடுத்தால் சிறைத்தண்டனை: தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பிப்பு
- கரோனா தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம்/தகனம் செய்வதைத் தடுக்கும் செயலையும், தடுக்க முயற்சிப்பதையும் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி குற்றமாக்கி கடுமையாக தண்டனை வழங்கும் நோக்கில் தமிழக அரசு அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.
- இந்த அவசரச் சட்டத்தின்படி, அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் உடலை கண்ணியமான முறையில் அடக்கம்/ தகனம் செய்வதைத் தடுப்பதும், தடுக்க முயற்சிப்பதும் குற்றமாக்கப்பட்டு, அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939, பிரிவு-74ன்படி அபராதம் உட்பட குறைந்தபட்சமாக ஓராண்டு சிறைத் தண்டனையும் அதிகபட்சமாக மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான சலுகைகள் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு - முதல்வர் உத்தரவு
- பொது முடக்கத்தால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விவசாயிகளை காக்கும் பொருட்டு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
- வேளாண் விளைபொருட்களை சேமித்து வைக்க அரசு கிடங்குகளை மே மாதம் 30ஆம் தேதி வரை கட்டணமின்றி விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
- கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விளைபொருட்களை அடமானம் வைத்து அதன் பேரில் வழங்கப்படும் பொருளீட்டுக் கடனுக்கான 5 சதவிகித வட்டியை மேலும் ஒரு மாதத்திற்கு செலுத்த வேண்டியதில்லை என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
- எதிர்வரும் நாட்களில் மாம்பழ விளைச்சல் அதிகம் இருக்கும் என்பதால் அவற்றை குளிர்பதன கிடங்குகளில் சேமித்து வைக்கும் கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற சலுகையும் மே இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விளைபொருட்கள் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க ஏதுவாக வியாபாரிகளுக்கான 1 சதவிகித சந்தைக் கட்டணம் ரத்தும் மே இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதனக் கிடங்கில் பாதுகாத்திட கட்டணம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.