கிருஷ்ணகிரியில் புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
- கிருஷ்ணகிரியில் புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். ரூ.348 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
சேலம் மாவட்டம் மேட்டூர் சரபங்கா நீரேற்று திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
- சேலம் மாவட்டம் மேட்டூர் சரபங்கா நீரேற்று திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சரபங்கா வடிநில பகுதியில் வறண்ட ஏரிக்கு நீரேற்றம் மூலம் வழங்கும் இத்திட்டம் ரூ.565 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. சரபங்கா நீரேற்று திட்டத்தால் ஓமலூர், சங்ககிரி, மேட்டூர், எடப்பாடி ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன.
ஏர் இந்தியா'வின் 100 சதவீத பங்கை வாங்க வெளிநாடு வாழ் இந்தியருக்கு அனுமதி
- அமைச்சரவைக் குழு கூட்டத்தில், ஏர் இந்தியா நிறுவனத்தின், 100 சதவீத பங்குகளை வாங்க, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அனுமதி அளிப்பது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது, விமான சேவை நிறுவனத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கான வரம்பு, 49 சதவீதமாக உள்ளது.
- இது, ஏர் இந்தியாவிற்காக, 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடு, விதிமுறைகளை மீறாத வகையில், உள்நாட்டு முதலீடாக கருதப்படும்.
- தொழில் துவங்குவதை மேலும் சுலபமாக்கும் வகையில், 2013ம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டத்தில், 72 திருத்தங்கள் செய்ய, கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி, அபராத வகையைச் சேர்ந்த, 66 குற்றங்களில், 23 குற்றங்கள், வேறு பிரிவிற்கு மாற்றப்படும்.
- பல்வேறு பிரிவுகளில், குற்றங்களுக்கான சிறைத் தண்டனை நீக்கப்படும்; அபராதம் குறைக்கப்படும்.ஒரு நிறுவனம், சமூக பொறுப்புணர்வு பணிகளுக்காக செலவிடும் தொகை, 50 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், சமூக பொறுப்புணர்வு குழு அமைக்கத் தேவையில்லை.
ஜிஐசாட்-1 செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்புவது திடீர் ஒத்திவைப்பு
- ஜி.எஸ்.எல்.வி.-எப்10 ராக்கெட் மூலம் ஜிஐசாட்-1 செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) திடீரென ஒத்திவைத்துள்ளது. தொழில்நுட்பக் காரணங்களால் ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது.
- குறிப்பிட்ட நேர இடைவெளியில் பூமியை மிகத் தெளிவாகவும், விரைவாகவும் படம் எடுத்து அனுப்பும் வகையில் முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் அதிவிரைவு புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஜிஐசாட்-1. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவு தளத்திலிருந்து வியாழக்கிழமை மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது. இந்த நிலையில், ராக்கெட் ஏவும் திட்டத்தை இஸ்ரோ திடீரென ஒத்திவைத்துள்ளது.
500 ஆண்டுகள் பழைமையான போர் பதக்கம் கண்டெடுப்பு
- சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் போர் வீரர்கள் பயன்படுத்திய போர் பதக்கம், கரூர் மாவட்டம், குளித்தலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சேலம் பாரா மஹால் நாணய சங்க இயக்குநர் ஜீ.சுல்தான் தெரிவித்துள்ளார்.
- தொடர்ந்து பழங்கால நாணயங்களின் வரலாற்றை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறோம். நாட்டின் வரலாற்றுக்கு நாணயங்கள் மிக முக்கியக் காரணியாக விளங்குகின்றன.
- போர் வீரர்களின் ஓவியம், கல்வெட்டு, சிற்பங்கள் ஆகியவை தமிழக அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சேலம் அரசு அருங்காட்சியகத்தில் போர் வீரர்களின் சிற்பம் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
- அந்த வகையில், மார் 500 ஆண்டுகளுக்கு முன் போர் வீரர்கள் அடையாளக் குறியீடாக கழுத்தில் வளையம் பொருத்தி பயன்படுத்திய போர் பதக்கம் கொங்கு மண்டலத்துக்குள்பட்ட கரூர் மாவட்டம், குளித்தலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது செம்பு உலோகத்தில் பொறிக்கப்பட்டு, அதைச் சுற்றியும் வட்ட வடிவத்தில் அலுமினிய வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் எடை 8.42 மில்லி கிராம் ஆகும்.
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- டில்லியில் மார்ச்.,04 பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல அமைச்சர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வங்கிகள் இணைப்பு தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கான ஆவணங்களை வங்கிகள் அரசிடம் சமர்ப்பித்துள்ளன. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
- வங்கிகளின் இணைப்பிற்கு பின் வங்கிகளின் சேவையில் எவ்வித மாற்றங்களும் இருக்காது. பரிவர்த்தனைகள் எதுவும் பாதிக்கப்படாது. ஏப்., 1 ல் இந்த இணைப்பை அமல்படுத்துவதற்கான காலமான நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 2017ல் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்தன. தற்போது 18 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளின் இணைப்பின் பிறகு 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இருக்கும்.
- லாபம் அதிகரிப்பு 2019 ஏப்., மாதத்தில் பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கியுடன் இணைக்கப்பட்டது. இணைப்பின் பலனை அரசு தீவிரமாக கவனித்து வந்தது.
- சராசரி ரீட்டெய்ல் கடன் அனுமதிக்கும் காலம் 23 நாட்களில் இருந்து 11 நாட்களாக குறைந்துவிட்டது, பாங்க் ஆப் பரோடாவில் செயல்பாட்டு லாபம் 11.4% அதிகரித்துள்ளது.
- வங்கிகள் இணைப்புதொடர்ந்து கடந்த ஆகஸ்டில் 10 பொதுத்துறை வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. தற்போது அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.
- பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 2 வங்கியும், கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பொரேஷன் வங்கியும், இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கியும் இணைக்கப்படுகிறது.
- இந்த 10 வங்கிகள் இணைப்பிற்கு பின் இனி 4 வங்கிகளாக செயல்படும். இதனால் வங்கி பணியார்களுக்கோ, வாடிக்கையாளர்களுக்கோ எவ்வித பாதிப்பும் இருக்காது என அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக 3 பெண் நீதிபதிகள் கொண்ட அமர்வு - உயர்நீதிமன்றத்தில் நிகழ்ந்த வரலாறு
- சர்வதேச மகளிர் தினம் வருகிற 8ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. மகளிரை கவுரவிக்கும் விதமாக சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக 3 பெண் நீதிபதிகள் மட்டுமே கொண்ட முழு அமர்வு ஒரு வழக்கை விசாரித்தது.
- தொழிலாளர் அரசு காப்பீட்டு திட்டமானது தனியார் கல்வி நிலைய ஊழியர்களுக்கு பொருந்துமா என்பது குறித்து முடிவு செய்ய 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமைத்து உத்தரவிட்டார்.
- அதன்படி ,இந்த வழக்குகளை நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, அனிதா சுமந்த், பி.டி.ஆஷா ஆகியோர் வழக்கை விசாரித்தனர். இந்த முழு அமர்வில் இடம்பெற்றுள்ள 3 நீதிபதிகளுமே பெண் நீதிபதிகள் என்பதால் இந்திய நீதித்துறையில் இது ஒரு சரித்திர நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
- மகளிர் தினம் நெருங்கும் நேரத்தில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று பெண் நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு வழக்கு ஒன்றை விசாரித்தது சர்வதேச அளவிலான சரித்திர நிகழ்வாக அமைந்துள்ளது.
கிரிப்டோ கரன்சி வர்த்தகத்திற்கான தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் 'கிரிப்டோ கரன்சி' (குறியீட்டு நாணயம்) பரிவா்த்தனையை இந்திய ரிசா்வ் வங்கி தடை செய்து, கடந்த 2018ஆம் ஆண்டு சுற்றரிக்கையை வெளியிட்டது.
- அத்துடன் இதேபோல 'பிட்காயின், ரிப்பிள், லைட்காயின், எத்திரியம்' போன்ற மெய்நிகா் பணத்தை விற்பதும் வாங்குவதும் பரிவா்த்தனைகளில் ஈடுபடுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பும் இதேபோன்ற அறிக்கைகளை ரிசர்வ் வாங்கி வளியிட்டுள்ளது.
- ஆனால் ஏப்ரல் 2018-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையினை எதிர்த்து, இந்த வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
- தொடர்ந்து நடைபெறு வந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பில், கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான தடையை நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சி., 'டுவென்டி-20' தரவரிசையில் ஷபாலி வர்மா 'நம்பர்-1'
- சர்வதேச 'டுவென்டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது.
- இதில் 'பேட்டிங்' தரவரிசையில் இந்தியாவின் ஷபாலி வர்மா, 761 புள்ளிகளுடன் 20வது இடத்தில் இருந்து 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். இவர், ஆஸ்திரேலியாவில் நடக்கும் 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இதுவரை 4 போட்டியில், 161 ரன்கள் எடுத்துள்ளார்.
- இதன்மூலம் ஷபாலி வர்மா, 'டுவென்டி-20' தரவரிசையில் முதலிடம் பிடித்த 2வது இந்திய வீராங்கனையானார். ஏற்கனவே மிதாலி ராஜ் இம்மைல்கல்லை எட்டியிருந்தார். தவிர இவர், ஐ.சி.சி., தரவரிசையில் குறைந்த வயதில் (16) முதலிடம் பிடித்த இந்தியரானார்.
- நியூசிலாந்தின் சுசீ பேட்ஸ் (750 புள்ளி) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (701) 4வது இடத்தில் இருந்து 6வது இடம் பிடித்தார். மற்ற இந்திய வீராங்கனைகளான ஜெமிமா ரோட்ரிக்ஸ் (658), ஹர்மன்பிரீத் கவுர் (617) முறையே 9, 12வது இடத்தில் உள்ளனர்.
- பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் பூனம் யாதவ் 704 புள்ளிகளுடன் 12வது இடத்தில் இருந்து 8வது இடத்துக்கு முன்னேறினார். இவர், உலக கோப்பை தொடரில் 4 போட்டியில் 9 விக்கெட் சாய்த்துள்ளார்.
- மற்ற இந்திய வீராங்கனைகளான தீப்தி சர்மா (723), ராதா யாதவ் (712) முறையே 5, 7வது இடத்தில் உள்ளனர். இங்கிலாந்து 'சுழல்' வீராங்கனை சோபி எக்லெஸ்டோன், 779 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார்.
- 'ஆல்-ரவுண்டர்களுக்கான' தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா (279) 16வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு முன்னேறினார். நியூசிலாந்தின் சோபி டெவின் (398) முதலிடத்தில் உள்ளார்.