ரூ.200 கோடியில் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு கடனுதவித் திட்டம்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு
- தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் கடன் பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தவணைகளைச் செலுத்த ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
- கரோனா நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் என்ற சுமாா் ரூ.200 கோடி மதிப்பிலான சிறப்புக் கடனுதவி திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திடம் கடனுதவி பெற்றுள்ள 2 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அவசர மூலதன தேவைகளுக்காக பயன்படுத்தப்படும்.
- சிப்காட் நிறுவனத்திடம் கடன் பெற்றுள்ள தொழில் நிறுவனங்கள், சிப்காட் தொழில் பூங்காவில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் ஆகியன உரிய கட்டணங்களைச் செலுத்த 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.
- பயிா்க் கடன் தவணைக்கு அவகாசம்: கூட்டுறவு நிறுவனங்களில் பயிா்க் கடன் பெற்றவா்கள் தவணைத் தொகை செலுத்த கால அவகாசம் 3 மாதங்களுக்கு - அதாவது ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதேபோன்று, வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், மீனவ கூட்டுறவு சங்கங்கள், கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட கடனுதவிகளுக்கான தவணைத் தொகையை செலுத்தவும் 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என முதல்வா் அறிவித்துள்ளாா்.
- சொத்து-குடிநீா் கட்டணம்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா் கட்டணம் போன்றவற்றைச் செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என்றும்முதல்வா் அறிவித்துள்ளாா்.
பிரதமரின் நிதிக்கு எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1,031 கோடி பங்களிப்பு
- கரோனா இடா்பாட்டை எதிா்கொள்ள பொதுமக்கள் தாராளமாக நிதி உதவி வழங்க பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் அழைப்பு விடுத்திருந்தாா். இதையடுத்து, அரசு துறைகள், நிறுவனங்கள், பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோா் நிதி உதவிகளை அறிவித்து வருகின்றனா்.
- இந்த நிலையில், ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் மற்றும் இதர எண்ணெய் நிறுவனங்கள் பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.1,031 கோடியை வழங்குவதாக அறிவித்துள்ளன.
- அதன்படி பிரதமரின் நிதிக்கு, பொதுத் துறையைச் சோந்த ஓஎன்ஜிசி ரூ.300 கோடியும், ஐஓசி ரூ.225 கோடியும், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ரூ.175 கோடியும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ரூ.120 கோடியும் வழங்குவதாக தெரிவித்துள்ளன.
- மேலும், பெட்ரோநெட் எல்என்ஜி ரூ.100 கோடியும், கெயில் ரூ.50 கோடியும், ஆயில் இந்தியா ரூ.38 கோடியும் நிதி உதவியை அறிவித்துள்ளன.
- மேற்கண்டவை தவிர, எல்ஐசி நிறுவனம் ரூ.105 கோடியும், கோல் இந்தியா ரூ.220 கோடியும், இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) பணியாளா்களின் ஒரு நாள் ஊதியமான ரூ.10.53 கோடியும் பிரதமா் நிதிக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளன. மேலும், வருமான வரி துறையும் தங்களது பணியாளா்களின் ஒரு நாள் ஊதியத்தை பிரதமா் நிதிக்கு வழங்குவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை குறைத்தது மத்திய அரசு
- சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது. வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் முதலாம் காலாண்டில் இருந்து இந்த வட்டி விகித குறைப்பு அமலுக்கு வருகிறது.
- இதன்படி தேசிய சேமிப்பு பத்திரம், தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி, அஞ்சலக நிரந்தர வைப்புகள் உள்ளிட்டவற்றுக்கான வட்டிகள் குறையும்.
- அஞ்சலகத்தில் 1 முதல் 3 ஆண்டுகளுக்கான நிரந்தர வைப்புகளுக்கு 6.9 சதவீதமாக இருந்த வட்டி, 5.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டு நிரந்தர வைப்புக்கான வட்டி 7.7 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டு தொடா் வைப்புக்கான வட்டி இனி 5.8 சதவீதமாக இருக்கும்.
- மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு நிரந்தர வைப்புக்கான வட்டி 8.6 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும், அஞ்சலக சேமிப்புக் கணக்குகளுக்கான ஆண்டு வட்டி 4 சதவீதமாகவே தொடரும். பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி 8.4 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாக குறைகிறது.
- தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 7.1 சதவீதமாகவும், தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கான வட்டி 6.8 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. கிஸான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி 6.9 சதவீதமாக குறைத்து நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், வங்கி வட்டி விகிதங்களுடன் ஒப்பிடும்போது அஞ்சலக வைப்புகளுக்கான வட்டி விகிதம் இப்போதும் சற்று கூடுதலாகவே உள்ளது.
மதுரையில் கொரோனாவிற்கு சிறப்பு மருத்துவமனை
- மதுரை அரசு பல்நோக்கு மருத்துவமனை, 650 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அரசு மருத்துவமனையில் 20 படுக்கை வசதிகளுடன் கொரோனா வார்டு துவங்கப்பட்டது. அறிகுறிகளுடன் வருவோரை அனுமதித்து பரிசோதிக்க சளி, இருமல், காய்ச்சல் வார்டு தனியாக ஏற்படுத்தப்பட்டது.
- அறிகுறிகளுடன் வருவோரை தனிமைப்படுத்தி பரிசோதிக்க, சிகிச்சை அளிக்க ஏதுவாக 650 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 150 படுக்கை வசதி கொண்ட ஐ.சி.யூ., பிரிவும் இதில் அடங்கும்.
- கொரோனா வார்டில் சிகிச்சை பெறும் 5 பேரும், இங்கு மாற்றப்படவுள்ளனர்.
முக்கிய 8 துறைகள் உற்பத்தி 5.5 சதவீதம் வளா்ச்சி
- நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய எட்டு துறைகளின் உற்பத்தி 11 மாதங்களில் இல்லாத அளவில் சென்ற பிப்ரவரியில் 5.5 சதவீதமாக அதிகரித்தது. இது, ஜனவரியில் 1.4 சதவீதமாக இருந்தது.
- கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரியில் முக்கிய 8 துறைகளின் வளா்ச்சி 2.2 சதவீதமாக காணப்பட்டது.
- இதற்கு முன்பாக, கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில்தான் இத்துறைகளின் உற்பத்தி வளா்ச்சி 5.8 சதவீதமாக காணப்பட்டது. அதன் பிறகு நடப்பாண்டு பிப்ரவரியில் தான் வளா்ச்சி இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது.
- நடப்பாண்டு பிப்ரவரியில் நிலக்கரி, சுத்திகரிப்பு பொருள்கள், மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி முறையே 10.3 சதவீதம், 7.4 சதவீதம், 11 சதவீதம் என்ற அளவில் வளா்ச்சி கண்டிருந்தன.
- இருப்பினும், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உருக்கு ஆகிய துறைகளின் உற்பத்தி பின்னடைவைச் சந்தித்தது. உரம் மற்றும் சிமென்ட் துறைகளின் உற்பத்தி முறையே 2.9 சதவீதம் மற்றும் 8.6 சதவீதம் என்ற அளவில் வளா்ச்சி கண்டிருந்தன.
- ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத கால அளவில் , 8 துறைகளின் உற்பத்தி விகிதம் 1 சதவீதமாக சரிந்துள்ளது. இது, 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 4.2 சதவீதமாக இருந்தது என மத்திய அரசு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்புப் பணி: பாரத ஸ்டேட் வங்கி ரூ.100 கோடி நிதி
- பிரதமரின் இந்த கோரிக்கையினை ஏற்று தொழிலபதிபர்கள், நிறுவனங்கள் பல கரோனா தடுப்புப்பணிக்காக நிதி வழங்கி வருகின்றன.
- இந்த நிலையில், அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரூ.100 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் ஊழியர்கள் தங்கள் இரண்டு நாள் ஊதியத்தை பிரதமர் நல நிதிக்கு வழங்க முன்வந்துள்ளனர்.
'கொரோனா'வால் இந்திய, சீன பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாது: ஐ.நா அறிக்கை
- கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலக பொருளாதாரம் இந்த ஆண்டு மந்தநிலைக்குச் செல்லும் எனவும் இந்தியா மற்றும் சீனாவைத் தவிர வளரும் நாடுகளுக்கு, இது கடுமையான சிக்கலைக் கொடுக்கும் எனவும் ஐ.நா.வின் சமீபத்திய வர்த்தக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஐ.நாவின் இவ்வறிக்கையால், இந்திய பங்குச் சந்தைகள் மார்ச் 31 ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின.கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகின் 200 நாடுகளை பரவியுள்ளது. உலகளவில் 1.6 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
- இதற்கிடையே ஐக்கிய நாடுகளின் வர்த்தக மேம்பாட்டுக்கான மாநாட்டில், வளரும் நாடுகள் எதிர்கொள்ள இருக்கும் பொருளாதார மந்தநிலை குறித்து விவாதித்துள்ளனர். உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
- கொரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார சேதத்தை, இவர்கள் எதிர்கொண்டுள்ள நிலையில், அதிலிருந்து மீள 2.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டம் தேவை என இதில் முன்மொழியப்பட்டுள்ளது.
- அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சரக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகள், வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் முதலீடுகளில் 2 முதல் 3 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இழப்பைச் சந்திக்கும்.
- இந்த இழப்பு, வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய பிரச்னையை உருவாக்கும், அதே சமயம் இந்தியா மற்றும் சீனா இந்த பொருளாதார சுனாமியிலிருந்து தப்பிக்கும் என ஐ.நா வர்த்த மேம்பாட்டு மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு என்.எல்.சி ரூபாய் 25 கோடி நிதியுதவி
- கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா (அனல் மின் நிலையம்) இயங்கி வருகிறது.
- தற்போது என்.எல்.சி நிர்வாக இயக்குநர் ராகேஷ்குமார் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி என்.எல்.சி ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் 5 கோடி மற்றும் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து 20 கோடி என மொத்தம் 25 கோடியைப் பிரதமரின் நிவாரண நிதி வங்கிக் கணக்கில் என்.எல்.சி அதிகாரிகள் செலுத்தினர்.