குடிமராமத்து திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு ரூ.500 கோடியில் 1,364 ஏரிகள் தூர்வாரப்படும் - சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தகவல்
- தமிழகத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 14 ஆயிரம் ஏரிகளை தூர்வாரி, ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, கரைகளைப் பலப்படுத்தி அதில் மழை நீரை சேமிக்கவே குடிமராமத்து திட்டம் 2016-17-ல் சோதனை முறையில் தொடங்கப்பட்டது.
- 2016-17-ல் ரூ.100 கோடியில் 30 மாவட்டங்களில் 1,513 ஏரிகள் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டன. முதல் ஆண்டில் ஒவ்வொரு ஏரிக்கும் குறிப்பிட்ட அளவு தொகை மட்டுமே வழங்கப்பட்டன.
- குடிமராமத்து திட்டத்துக்கு விவசாயிகள், பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்ததால் 2017-18-ல் 30 மாவட்டங்களில் ரூ.331 கோடியே 7 லட்சத்தில் 1,523 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 1,463 பணிகள் முடிக்கப்பட்டன. 15 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. பல்வேறு காரணங்களால் 45 பணிகள் கைவிடப்பட்டன.
- 2019-20-ல் ரூ.499 கோடியே 69 லட்சத்தில் 1,829 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் 1,094 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 718 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்ட 17 பணிகளுக்குப் பதிலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 3.83 கோடியில் 20 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும்.
- கடந்த 3 ஆண்டுகளில் ரூ.930 கோடியே 76 லட்சத்திவ் 4 ஆயிரத்து 865 ஏரிகள் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளன. இப்போது ஏரிகள் தூர்வார தேவையான நிதி முழுவதும் வழங்கப்படுகிறது.
- 2020-21-ம் ஆண்டில் ரூ.499 கோடியே 70 லட்சத்தில் 1,364 ஏரிகளைத் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. ஏரி பாசனத்தால் பயன்பெறும் விவசாயிகளை உள்ளடக்கி இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒப்பந்தப்புள்ளி கோராமல் விவசாயிகளுக்கு நேரடியாக காசோலை மூலம் பணம் வழங்கப்படுகிறது.
வேதாரண்யம் அருகே முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
- வேதாரண்யத்தை அடுத்த செட்டிப்புலம் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ், கத்தரிப்புலம் - செட்டிப்புலம் நடுக்காடு கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ள வடிகால் வாய்க்கால் தூா்வாரும் பணி நடைபெற்றது.
- வாய்க்காலில் சுமாா் ஒரு மீட்டா் ஆழத்தில் வெட்டியபோது மண்பாண்டங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பணிகள் கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டன. அப்போது, சுடுமண்ணால் செய்யப்பட்ட 2 தாழிகள் அடுத்தடுத்து கிடைத்தன.
- மண்ணால் செய்யப்பட்ட மூடிகளை திறந்தபோது ஒரு தாழி காலியாகவும், மற்றொரு தாழியில் பந்து கிண்ண மூட்டுகளுடன் எலும்பு துண்டுகள் இருந்தன. இவற்றில் தாடை எலும்புகள் பெரிய அளவில் இருந்தன. எலும்புகள் இருந்த தாழிக்குள் முதுமக்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மண்பாண்டங்கள், ஒரு இரும்பு ஆயுதம் போன்றவை இருந்தன.
- தாழிகளின் வாய் பகுதி சுமாா் 2 முதல் 2.5 அடி அகலத்தில் காணப்பட்ட நிலையில் அடிபாகம் தோண்டி எடுக்கப்படாமல் மண்ணுக்குள்ளேயே உள்ளது.
கீழடியில் செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு
- கீழடியில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டிய போது செங்கல் கட்டுமான தரைதளம் கண்டறியப்பட்டுள்ளது.கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. தனியார் நிலத்தில் பிப்.19 முதல் அகழாய்வு தொடங்கப்பட்டு இதுவரை மூன்று குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
- இதில் இருவண்ண பானைகள், பானை ஓடுகள், 5ம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தரை தளத்தின் தொடர்ச்சி உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.
- அதே நிலத்தில் குழாய் பதிக்க அகழாய்வு நடந்து வரும் இடத்தின் தெற்கு பகுதியில் 100 மீட்டர் துாரத்தில் இரண்டு அடி ஆழத்தில் பள்ளம் தோண்டிய போது மிக நீண்ட தரை தளம் கண்டறியப்பட்டுள்ளது.
- இருபக்கமும் செங்கல் சுவருடன் கூடிய இந்த கட்டுமானத்தில் 10 செ.மீ., நீளத்தில் சிறிய அளவிலான குழவி கல்லும், குவளை வடிவிலான பானை ஓடும் கண்டறியப்பட்டுள்ளது.
பொறியியல், மருத்துவக் கல்வி கட்டண நிா்ணயக் குழு புதிய தலைவராக நீதிபதி கே.வெங்கட்ராமன் பொறுப்பேற்பு
- பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தனியாா் சுயநிதி தொழில் கல்விக்கான கட்டண நிா்ணயக் குழுவின் புதிய தலைவராக சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் பொறுப்பேற்றாா்.
- 2020-21-ஆம் கல்வியாண்டில் பொறியியல், பாலிடெக்னிக், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மருத்துவம், துணை மருத்துவம் மற்றும் சட்டப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் புதிதாக நிா்ணயம் செய்யப்பட உள்ளது.
- கல்லூரிகளின் கருத்துருக்கள் மற்றும் கல்லூரிகளிடமிருந்து பெறப்படும் வரவு-செலவு கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில், கல்விக் கட்டணம் மாற்றியமைக்கப்படும்.
தமிழகத்தில் மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிட்ட திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு
- தமிழகத்தில் திருச்சி சிவா (திமுக) மற்றும் அதிமுகவில் விஜிலா சத்தியானந்த், முத்துகருப்பன், ஏ.கே.செல்வராஜ், சசிகலா புஷ்பா, மார்க்சிஸ்ட் ரங்கராஜன் உள்ளிட்ட 6 பேரின் பதவி காலம் வருகிற ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது.
- இதையடுத்து காலியாகும் 6 மாநிலங்களவை எம்பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 26ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 6ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடந்தது.
- தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை எம்பியை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. சட்டப்பேரவையில் தற்போதுள்ள எம்எல்ஏக்கள் அடிப்படையில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 மாநிலங்களவை எம்பி சீட் கிடைப்பது உறுதியானது.
- அதன்படி, திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் கடந்த 9ம் தேதி சென்னை, தலைமை செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுக வேட்பாளர்களாக கே.பி.முனுசாமி, தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சியான தமாகா சார்பில் அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ஆகிய 3 பேர் கடந்த 12ம் தேதி மனு தாக்கல் செய்தனர்.
- இவர்களை தவிர சுயேச்சை வேட்பாளர்களாக பத்மராஜன், அக்னி ராமச்சந்திரன், இளங்கோ யாதவ் ஆகிய 3 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
- மனு தாக்கல் செய்த 9 பேரின் மனுக்கள் மீது சட்டப்பேரவை செயலாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசன் அலுவலக அறையில் கடந்த 16ம் தேதி பரிசீலனை நடந்தது.
- இதில், திமுக சார்பில் மனு தாக்கல் செய்த திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ, அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்த கே.பி.முனுசாமி, தம்பிதுரை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகிய 6 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.
- சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒரு எம்எல்ஏக்கள் கூட முன்மொழியாததால் அவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப்பெற நேற்று (18ம் தேதி) கடைசி நாள். அதன்படி, நேற்று மாலை 3 மணி வரை யாரும் தங்கள் மனுக்களை வாபஸ் பெறவில்லை.
- இதையடுத்து திமுக சார்பில் போட்டியிட்ட திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோரும், அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்த கே.பி.முனுசாமி, தம்பிதுரை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மணிப்பூா் அமைச்சா் பதவி நீக்கம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
- மணிப்பூரில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தோதலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஷியாம்குமாா் சிங் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். தோதலில் வெற்றிபெற்ற பின், அவா் பாஜகவில் இணைந்து மாநில வனத்துறை அமைச்சராக பதவியேற்றாா்.
- இதையடுத்து கட்சித் தாவலில் ஈடுபட்டதற்காக அவரை தகுதிநீக்கம் செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சாா்பில் மாநில சட்டப்பேரவை தலைவா் கெம்சந்த் சிங்கிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனு மீது அவா் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
- இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த நீதிமன்றம், தகுதிநீக்க மனு மீது 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்க பேரவை தலைவா் கெம்சந்த் சிங்குக்கு உத்தரவிட்டது. எனினும் அவா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஆா்.எஃப்.நாரிமன், ரவீந்திர பட் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமா்வு கெம்சந்த் சிங் எந்த நடவடிக்கையும் எடுக்காததை அறிந்து, அரசமைப்புச் சட்டப்பிரிவு 142 உச்சநீதிமன்றத்துக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஷியாம்குமாா் சிங்கை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவிட்டனா்.
- அமைச்சரவையில் இருந்து ஒரு நபரை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது மிகவும் அரிதான நிகழ்வுகளில் ஒன்றாகும்.
நாட்டின் வளர்ச்சி 5.2%ஆக குறையும்
- நடப்பு ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5.2 சதவீத அளவுக்குக் குறையும் என்று சர்வதேச தரச்சான்று நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்ட் பூர் (எஸ் அண்ட் பி) நிறுவனம் தெரிவித்துள்ளது.
- முன்னர் வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதம் என கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சீனாவின் வளர்ச்சி விகிதம் 2.9 சதவீதமாகவும், ஜப்பானின் வளர்ச்சி விகிதம் -1.2 சதவீதமாகவும் இருக்கும் என்று கணித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் சீனாவின் வளர்ச்சி விகிதம் 4.8 சதவீதமாகவும், ஜப்பானின் வளர்ச்சி விகிதம் -0.4 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
வளரும் நாடுகளுக்கு ரூ.48 ஆயிரம் கோடி நிதி - ஆசிய வளர்ச்சி வங்கி அறிவிப்பு
- ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'கோவிட்-19 காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்காக, வளரும் உறுப்பு நாடுகளுக்கு ரூ.48 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கப்படும்' என கூறப்பட்டுள்ளது.
- ஆசிய வளர்ச்சி வங்கி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகளின் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்வது மற்றும் வறுமையை ஒழிப்பது ஆகியவைதான் இதன் நோக்கம் ஆகும்.
இந்திய விமானப்படைக்கு 83 தேஜாஸ் விமானங்கள் வழங்க ராணுவ அமைச்சகம் ஒப்புதல்
- இலகு ரக போர் விமானமான தேஜாஸ் விமானங்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனம் தயாரித்து வருகிறது. உள்நாட்டு தயாரிப்பான இந்த விமானங்கள் இந்திய பாதுகாப்பு படைகளில் இணைக்கப்பட்டு வருகின்றன.
- அந்த வகையில் நவீனப்படுத்தப்பட்ட 83 தேஜாஸ் விமானங்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்கு வாங்குவதற்கு ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில் இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
12 ஆண்டுகளில் ரயில்வே துறையில் ரூ.50 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்
- அடுத்த 12 ஆண்டுகளில் ரயில்வே துறையில் ரூ.50 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்யப்படும் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. மேலும் ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு அம்சத்தில் இந்திய ரயில்வேயை உலகத் தரத்திற்கு மேம்படுத்த அரசு உறுதி கொண்டுள்ளது என்றும், இந்திய ரயில்வேயில், அடுத்த 12 ஆண்டுகளில், ரூ.50 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட உள்ளது.