தமிழகத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மார்ச் 31 வரை விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிக்கை
- சீனாவில் தோன்றிய கோரோனா வைரஸ் பாதிப்புக்கு உலக அளவில் இதுவரை 6,500-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 1 லட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதனால், அமெரிக்கா, இந்தியா, ஈரான், இத்தாலி ஆகிய நாடுகள் தேசிய பேரிடராக அறிவித்துள்ளன.
- கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து கூட்டத்தில் இந்த வைரஸ் வேகமாக பரவும் என்பதால் கூட்டங்கள் கூடும் இடங்களைத் தவிர்க்கும் வகையில் அண்மையில் கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்கள் திரையரங்குகளை மூட உத்தரவிட்டது. அதே போல, அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டது.
- இதனைத்தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
- இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவிட்டுள்ளார். 10, +2 அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.
- மருத்துவ மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என்று அறிவித்துள்ளார். அதே போல , கொரோனா எதிரொலி காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தையும் மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
- மேலும், திருமண மண்டபங்களில் திட்டமிட்ட நிகழ்வுகளை தவிர புதிய நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கொரோனா எதிரொலி காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா செல்ல மக்கள் திட்டமிட வேண்டாம் என்றும் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்வழி கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமைக்கான சட்ட திருத்த மசோதா அறிமுகம்
- கடந்த 2010-ம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்வழி கல்வி பயின்றவர்களை அரசுப்பணிகளில் பணிநியமனம் செய்தல் சட்டமானது, தமிழ் வழிக்கற்றல் மூலம் நேரடி நியமனத்துக்காக வகுக்கப்பட்ட கல்வித் தகுதியை பெற்றுள்ள நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
- இந்த சட்டத்தில் 2(டி) பிரிவானது, 'தமிழ் வழியில் கல்வி பயின்ற நபர்' என்பது, அரசுப்பணிகளில் உள்ள எந்த ஒரு பணி நியமனத்துக்கும் பொருந்தும் விதிகள், அல்லது ஒழுங்குமுறை விதிகள் அல்லது உத்தரவுகள்படி நேரடி ஆள்சேர்ப்புக்கு வகுக்கப்பட்ட கல்வித்தகுதி வரை தமிழ் வழியில் கல்வி பயின்றவர் என்று பொருள்படும் என்று விளக்குகிறது. இதற்காக இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
- குறிப்பாக, 10-ம் வகுப்பு வகுக்கப்பட்ட கல்வித் தகுதியாக இருந்தால், ஒருவர் அந்த வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயின்றிருக்க வேண்டும். மேல்நிலைக் கல்வி உயர்ந்த கல்வித் தகுதியாக இருந்தால் 10ம் வகுப்பு மற்றும் மேல் நிலைக்கல்வியையும் பட்டயப்படிப்பு உயர்ந்த கல்வித் தகுதியாக இருந்தால், 10-ம் வகுப்பு மற்றும் பட்டயப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.
- ஒருவேளை, மேல்நிலைக் கல்விக்குப் பின் பட்டயப்படிப்பு படித்திருந்தால் 10-ம் வகுப்பு, மேல்நிலைக்கல்வி மற்றும் பட்டயப்படிப்பை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.
- பட்டப்படிப்பு உயர் கல்வித்தகுதியாக இருந்தால் 10-ம் வகுப்பு, மேல்நிலைக்கல்வி மற்றும் பட்டப்படிப்பை தமிழ் வழியிலும், பட்டமேற்படிப்பு என்றால் 10-ம் வகுப்பு, மேல்நிலைக்கல்வி, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு என அனைத்தும் தமிழ் வழிக்கல்வி மூலம் பயின்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
- அதேபோல், அரசுப் பணியாளர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்திலும் திருத்தம் செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில், ஏற்கெனவே அரசுப்பணியில் உள்ள குறைந்தபட்ச கல்வித் தகுதியை பெறாதவர்களுக்காக நடத்தப்படும் தேர்வில் பொதுத் தமிழ், பொது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய விருப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்ச மதிப்பெண்ணை 35 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக திருத்தம் செய்யப்படுகிறது.
- மேலும், கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் படிப்புகளுக்கு நிகரான படிப்புகளை எடுத்துக் கொள்வதற்கு உயர் கல்வித்துறை செயலரை தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு ஒப்புதல் வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தெலங்கானா சட்டபேரவையில் தீர்மானம்
- மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
- இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேதிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக தெலங்கானா சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் திங்களன்று சட்டப்பேரவையில் தீர்மானத்தை கொண்டுவந்தார். அதில் குடியுரிமை திருத்தச் சட்டத் திருத்தில் இடம்பெற்றுள்ள எந்தவொரு மதத்திற்கும் அல்லது எந்தவொரு வெளிநாட்டிற்கும் எதிராக அனைத்து ஷரத்துகளையும் நீக்க வேண்டும் என்று தெலங்கானா சட்டப்பேரவை இந்திய அரசை வலியுறுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.
- இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதன் மூலம் சிஏஏ மற்றும் என்பிஆரை எதிர்க்கும் மாநிலங்களின் பட்டியலில் ஏழாவதாக தெலங்கானா இணைந்துள்ளது.
- மேலும் மாநில மக்களை என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி போன்ற நடைமுறையிலிருந்து பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக இரவு நேர ஆதாா் சேவை மையம் தொடக்கம்
- திருச்சி மண்டலத்தில் 380 அஞ்சல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையங்கள் அனைத்திலும் ஆதாா் சேவை மையங்கள் செயல்படுகின்றன.
- இந்நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக கும்பகோணத்தில் உள்ள ஆா்.எம்.எஸ். எனப்படும் ரயில்வே அஞ்சல் பிரிப்பகத்தில் இரவு நேர ஆதாா் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
- இந்த இரவு நேர ஆதாா் சேவை மையம் அலுவலக நாள்களில் மாலை 5.20 மணி முதல் அதிகாலை 4 மணி வரை செயல்படும். இந்த மையத்தில் புதிதாக ஆதாா் பதிவு செய்ய விரும்பும் மற்றும் திருத்தம் செய்ய விரும்பும் பொதுமக்கள் உரிய ஆதார ஆவணங்களுடன் வந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
- தேசிய அளவில் அஞ்சல் சேவையை பொருத்தவரை, திருச்சி மண்டலம் முதல் 5 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டை பொருத்தவரை, சிறப்பாக செயல்படும் அஞ்சல் நிலையங்களில் முதல் 3 பரிசுகளை திருச்சி மண்டலம் பெற்றுள்ளது.
- 2019-20 ஆம் நிதியாண்டில் இதுவரை 2 லட்சம் ஆதாா் சேவைகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த இரவு நேர ஆதாா் சேவை மையம் பொதுமக்களின் ஒத்துழைப்புக்கேற்ப விரிவாக்கப்படும்.
கோரக்பூா் பேருந்து உள்கட்டமைப்புக்கு பெல் நிறுவனம் தோவு
- கோரக்பூா் நகரத்துக்கு அதிநவீன மின்சார பேருந்துகளையும், மின்னேற்றி உள்கட்டமைப்பு வழங்குவதற்கான ஆணையை லக்னெள நகர போக்குவரத்து இயக்குநரகம் பிஹெச்இஎல் (பெல்) குழுமத்துக்கு வழங்கியுள்ளது.
- இதில், தாழ்வான உயரம் கொண்ட, மாற்றுத்திறனாளிகள் ஏறி, இறங்கும் வகையில் எளிதான மின்சாரப் பேருந்துகள் கோரக்பூா் விமான நிலையத்தில் பயன்படுத்தப்படவுள்ளது.
- புதிய சந்தைகள், வணிகங்களுக்கு தனது செயல்பாடுகளை விரிவாக்கும் வகையில் இந்த ஆணை அமைந்துள்ளது. மேலும், பாதுகாப்பு, விண்வெளி, நீா், மின் இயக்கம், பேட்டரிகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், போக்குவரத்து வணிகங்களில் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஏற்ப இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் புத்துயிா் அளித்து வருகிறது என பெல் நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்யசபா எம்.பி ஆக ரஞ்சன் கோகாய் நியமனம்
- இந்தியாவின் 46 வது சுப்ரீம்கோர்ட் நீதிபதியாக அக்.,3 2018 ல் ரஞ்சன் கோகாய் பதவியேற்றார். இவர் நீதிபதியாக பதவியில் இருந்த போது பல்வேறு முக்கிய வழக்குகளுக்கு தீர்வு அளித்தார். சர்க்குரிய பாபர் மசூதி வழக்கிற்கு கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொண்டது.
- அதில் தான் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கி ராமர் கோவில் கட்டவும் அனுமதி அளித்தது. தொடர்ந்து, நவ., 17 ல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.தொடர்ந்து, 250 உறுப்பினர்களை கொண்ட ராஜ்யசபாவில் 238 பேர் மறைமுக தேர்தல் மூலமாகவும் 12 பேர் ஜனாதிபதியின் நியமனத்தின் மூலமும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- இந்தியாவின் நலனை கருத்திற்கொண்டு ராஜ்யசபாவின் எம்.பிக்களை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. இந்நிலையில் ராஜ்யசபாவின் நியமன எம்.பி ஆக ரஞ்சன் கோகாயை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார்.
- ராஜ்யசபாவில் 1 நியமன எம்.பியின் பதவி காலம் முடிவடைவதால் அந்த இடத்துக்கு ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் கோகாய், பதவியில் இருந்து ஓய்வு பெற்று 4 மாதங்கள் கூட ஆகாதநிலையில் அவருக்கு புதிய பொறுப்பு (ராஜ்யசபா எம்.பி) நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.