Type Here to Get Search Results !

20th JANUARY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

சென்னையில் சர்வதேச தோல் கண்காட்சி
  • இந்திய சர்வதேச தோல் கண்காட்சி, வரும், 31ம் தேதி முதல் பிப்., 3ம் தேதி வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் 20 வெளிநாடுகளை சேர்ந்த, 450 நிறுவனங்கள், தங்களது பொருட்களை காட்சிப்படுத்த உள்ளனர். 
  • அதே சமயம், இந்திய நிறைவுற்ற தோல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், லெதர் பேஷன் ஷோவும் நடைபெறுகிறது.
தூத்துக்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை: தமிழக அமைச்சரவை ஒப்புதல்
  • தூத்துக்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது உள்ளிட்ட புதிய தொழில் ஆலைகளுக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
  • குறிப்பாக, ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க 'அல்கெராபி' என்ற நிறுவனத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
  • இதேபோன்று, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் மின்சார வாகனம் தயாரிக்கும் ஆலை நிறுவப்பட உள்ளது. சீன நாட்டின் 'வின்டெக்' எனும் மின்சார வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தை அமைக்கவும் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பெரிய வகை சரக்கு கப்பலை கையாண்டு தூத்துக்குடி வஉசி துறைமுகம் புதிய சாதனை
  • தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு பனாமா நாட்டு கொடியுடன் 254.52 மீட்டா் நீளமும், 43 மீட்டா் அகலமும், 12.23 மீட்டா் மிதவை ஆழமும் கொண்ட பெரிய வகை சரக்கு கப்பல் ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. 
  • அரபு நாட்டில் உள்ள மினாசா்க் என்ற துறைமுகத்தில் இருந்து 93,353 டன் சுண்ணாம்புக் கல் எடுத்து வந்த எம்.வி. எலெட்ரா என்ற அந்தக் கப்பலில் இருந்து துறைமுகத்தில் உள்ள 9 ஆவது சரக்கு தளத்தில் நாளொன்றுக்கு 50,000 டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட மூன்று நகரும் பளுதூக்கிகள் மூலம் சரக்குகள் கையாளப்படுகிறது.
  • தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு 93,353 டன் சரக்குகளுடன் பெரிய வகை கப்பல் வந்தது புதிய சாதனை ஆகும். இதற்குமுன்பு கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 16 ஆம் தேதி எம்.வி. என்பிஏ வோமீா் என்ற கப்பலின் மூலம் 89,777 டன் நிலக்கரி கையாளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • நிகழ் நிதியாண்டில் கடந்த மாதம் வரை 9.55 லட்சம் டன் சுண்ணாம்புக் கல் கையாளப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதார வளர்ச்சி4.8 சதவீதமாக குறைப்பு: ஐஎம்எப் கணிப்பு
  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 6.1 சதவீதத்தில் இருந்து 4.8 சதவீதமாக சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) குறைத்துள்ளது. 
  • இந்திய பொருளாதாரம் மிகவும் மந்த நிலையில் உள்ளது. இதை மீட்டெடுக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டாலும், தொழில்துறைகள் முடங்கி கிடக்கின்றன. 
  • இதனால், ரிசர்வ் வங்கி மட்டுமின்றி பல்வேறு நிதியமைப்புகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை குறைத்து மதிப்பீடு செய்து வருகின்றன. கடந்த வாரம் ஐநா அமைப்பு பொருளாதார வளர்ச்சியை குறைத்திருந்தது. 
  • இதுபோல், சர்வதேச நிதியமும் (ஐஎம்எப்) இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை குறைத்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என கடந்த ஆண்டு அக்டோபரில் சர்வதேச நிதியம் தெரிவித்திருந்தது. 
  • இது 4.8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், நேற்று வெளியிட்ட உலக பொருளாதார நிலை தொடர்பான அறிக்கையில் இதை தெரிவித்துள்ளது. 
  • இதற்கு பொருளாதார மந்தநிலையே முக்கிய காரணம். எதிர்பார்த்ததைவிட மந்த நிலை மிக மோசமாக உள்ளது. அதோடு, வங்கி சாரா நிதி நிறுவனங்களிடம் கடன் தேவை மற்றும் உள்நாட்டில் பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளது என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. 
  • இதுபோல் அடுத்த நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும். இது ஏற்கெனவே இருந்த மதிப்பீட்டை விட 0.9 சதவீதம் குறைவு. 2021-22 ல் இது 6.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக ஐஎம்எப் தெரிவித்துள்ளது. உலக பொருளாதார வளர்ச்சியையும் ஏற்கெனவே இருந்த மதிப்பீட்டை விட ஒரு சதவீதம் வரை குறைத்து மதிப்பீடு செய்துள்ளது.
ஆக்ஸ்பம் அறிக்கை
  • இந்தியாவில் உள்ள ஒரு சதவீத பெரும் பணக்காரர்களின் சொத்து, 70% ஏழைகள் வைத்திருக்கும் சொத்தை விட 4 மடங்குக்கும் அதிகமானது என்று ஆக்ஸ்பம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலக பொருளாதார அமைப்பின் (டபிள்யுஇஎப்) 50வது ஆண்டுக் கூட்டம் நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு 'கவனிக்க வேண்டிய நேரம்' என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை ஆக்ஸ்பம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. 
  • உலகத்தில் உள்ள 2,153 கோடீஸ்வரர்கள், உலக மக்கள் தொகையில் 60 சதவீதமாக இருக்கும் 4.6 பில்லியன்(460 கோடி) மக்களைவிட அதிக சொத்து வைத்துள்ளனர்.
  • இந்தியாவில் உள்ள ஒரு சதவீத பெரும் பணக்காரர்கள், 70 சதவீத ஏழைகள் (95 கோடி பேர்) வைத்திருக்கும் சொத்தை விட 4 மடங்குக்கும் அதிகமான சொத்துக்களை வைத்துள்ளனர். * இந்தியாவில் உள்ள 63 பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, இந்தியாவின் 2018-19ம் நிதியாண்டு பட்ஜெட்டான 24 லட்சத்து 42 ஆயிரத்து 200 கோடியைவிட அதிகமாக உள்ளது.
  • பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு கடந்தாண்டை விட இந்தாண்டு சற்று குறைந்திருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. ஆனாலும் பணக்காரர்-ஏழை இடையிலான இடைவெளி மிக அதிகமாகவும், அதிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளன. 
  • இந்த சமநிலையற்ற தன்மை பற்றி விரிவாக ஆலோசிக்காமல், பணக்காரர்-ஏழை இடையிலான இடைவெளியை தீர்க்க முடியாது.சாதாரண மக்கள் குறிப்பாக பெண்களின் செலவினங்களில்தான் பெரும் பணக்காரர்கள் அதிகளவில் சொத்துக்களை குவிக்கின்றனர்.
  • வருமானம் மற்றும் பாலின சமநிலையற்ற தன்மை குறித்து உலக பொருளாதார அமைப்பு மாநாட்டில் முக்கியமாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஒரு தொழில்நுட்ப கம்பெனியின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஓராண்டு வாங்கும் சம்பளத்தை, வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர் சம்பாதிக்க 22 ஆயிரத்து 277 ஆண்டுகள் ஆகும். வீட்டு வேலை செய்யும் பெண் ஒரு ஆண்டில் சம்பாதிக்கும் பணத்தை விட அதிகமாக தொழில்நுட்ப கம்பெனியின் சிஇஓ 10 நிமிடத்தில் சம்பாதிக்கிறார். அவரது சம்பளம் வினாடிக்கு 106 ஆக உள்ளது.
  • வீட்டில் சமைப்பது, சுத்தப்படுத்துவது, குழந்தைகளை மற்றும் முதியோர்களை கவனிப்பது என இந்தியாவில் உள்ள பெண்கள் ஒவ்வொரு நாளும் பணம் ஏதும் பெறாமல் பணியாற்றுகின்றனர். 
  • இதை மதிப்பிட்டால், இந்தியாவின் பொருளாதாரத்துக்கு இவர்களது பங்களிப்பு ஆண்டுக்கு ₹19 லட்சம் கோடியாக இருக்கும். இது இந்தியாவின் 2019ம் ஆண்டு கல்வி பட்ஜெட்டான 93 ஆயிரம் கோடியைவிட 20 மடங்கு அதிகமாக இருக்கும்.
  • உலகளவில் பெண்கள் சம்பளம் பெறாமல் ஒவ்வொரு நாளும் 12.5 பில்லியன் மணி நேரம் பணியாற்றுகின்றனர். உலக பொருளாதாரத்துக்கு இவர்களின் பங்களிப்பு ஒராண்டுக்கு 10.8 டரில்லியன் டாலர்.
  • பெரும் பணக்காரர்கள் ஒரு சதவீதம் பேரை, தங்கள் சொத்து மதிப்பில் 0.5 சதவீதத்தை கூடுதல் வரியாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு வழங்கினால் அது, 117 மில்லியன் வேலை வாய்ப்புக்கு தேைவயான முதலீட்டுக்கு சமமான தொகையாக இருக்கும்.



அக்டோபர் 2020 முதல் கட்டாயமாகிறது பெடஸ்ட்ரியன் பாதுகாப்பு விதிகள்
  • பாதசாரி பாதுகாப்பு அம்சங்கள் (Pedastrian safety) இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அனைத்து கார்களுக்கும் கட்டாயமாக இருக்கவேண்டும் என இந்தியச் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் (Morth) அறிவித்திருக்கிறது. 
  • சாலை விபத்துகளால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம்.
  • சாலை விபத்தில் மரணிக்கும் 1.5 லட்சம் மக்களில் 60 சதவிகிதம் பேர் பாதசாரிகள்தான் என்கின்றன தரவுகள். சாலை விபத்தால் பாதிக்கப்படும் பாதசாரிகளைக் காக்கவே இந்த பெடஸ்ட்ரியன் பாதுகாப்பு விதிமுறைகள். இதன்படி, அனைத்து கார்களிலும் பெடஸ்ட்ரியன் சேஃப்ட்டி மென்பொருள் மற்றும் சென்சார்கள் கட்டாயமாக்கப்படுகின்றன.
  • காரின் முன்பக்கம் இருக்கும் இன்ஃபிராரெட் சென்சார்கள், காரின் ஏர்பேக்கை இயக்கும் `ஏர்பேக் கன்ட்ரோல் யூனிட்' என்ற அமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும். 
  • பாதசாரி யார் மீதாவது கார் மோதும்போது இந்த சென்சார்கள் அதை உணர்ந்து காரின் ஹூட் பகுதியைக் கொஞ்சமாகத் திறந்திடும். இதனால், காரில் இருப்பதிலேயே கடுமையான பகுதியான இன்ஜின் மற்றும் சேஸியின் மீது விபத்துக்குள்ளானவர் மோதாமல் தடுக்கப்படும்.
  • விபத்தில் வெளியாகும் அனைத்து விசையும் காரின் ஹூட் மீது செலுத்தப்பட்டு, பெடஸ்ட்ரியனுக்குப் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் காக்கப்படும். மென்பொருள் மட்டுமல்ல, அக்டோபர் மாதம் முதல் வரப்போகும் அனைத்து வாகனங்களின் டிசைனும் பாதசாரிகளின் பாதுகாப்புக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும்.
  • அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளை ஒப்பிடும்போது சாலைப் பாதுகாப்பில் இந்திய வாகனங்களின் நிலை பின்னடைவிலேயே இருக்கிறது. தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் பல கடுமையான விதிமுறைகள் மூலம் சாலை விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்க முயன்று வருகின்றன.
  • இதுவரை சொகுசு வாகனங்களில் மட்டுமே இருந்த பல பாதுகாப்பு அம்சங்கள் இப்போது விலை குறைவான மாஸ் மார்க்கெட் கார்களிலும் வரத்தொடங்கிவிட்டன. கிராஷ் டெஸ்ட், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், ஏபிஎஸ், ஏர்பேக் என 2019-ல் அதிகப்படியான பாதுகாப்பு அம்சங்கள் கார்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
  • இந்திய கார்களைப் பொறுத்தவரை தற்போது பாசிவ் சேஃப்ட்டி தொழில்நுட்பங்களே அதிகம். ரேடார் தொழில்நுட்பத்தை மையமாக வைத்து இயங்கும் ஆக்டிவ் சேஃப்ட்டி தொழில்நுட்பங்களான எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் தானியங்கி எமர்ஜென்சி பிரேக் (Autonomous braking) வசதிகள் 2020-ம் ஆண்டு முதல் அனைத்து வாகனங்களிலும் கட்டாயமாக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. 
பாஜக தலைவராக ஜே.பி. நட்டா தேர்வு
  • ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவராக இருந்துவரும் ஜகத் பிரகாஷ் நட்டா (ஜே.பி. நட்டா) அந்தக் கட்சியின் தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • தற்போதைய தலைவராக உள்ள அமித்ஷாவுக்கு பிறகு அந்தப் பொறுப்புக்கு வரும் நட்டா மூன்றாண்டு காலத்துக்கு அப்பொறுப்பில் இருப்பார்.
  • 1992 பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு அவரது அரசியல் வாழ்க்கை பெரிய மாற்றம் வந்தது. 1993ல் எம்.எல்.ஏ. ஆனவர் ஒரே ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார்.
  • இரண்டாவது, மூன்றாவது முறை அவர் தொடர்ந்து வென்றிருந்தால் ஹிமாச்சல பிரதேச அரசில் அமைச்சர் ஆகியிருப்பார். ஆனால் அதன் பிறகு அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. 
  • மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார். 
3,500கி.மீ தொலைவு வரை உள்ள இலக்குகளை தாக்கும் கே-4 ஏவுகணை சோதனை வெற்றி
  • சோதனை ஆந்திர மாநில கடற்பகுதியில் நடைபெற்றது என்றும், இந்த ஏவுகணை ஆனது சுமார் 3,500கி.மீ தொலைவு வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக நீருக்கு அடியில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது.
  • இந்திய பாதுகாப்புத் துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இந்த ஏவுகணையை உருவாக்கியது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலில் இந்த ஏவுகணைகள் பொருத்தப்படும்.
  • இதுதவிர நீர்மூழ்கி கப்பலில் பொருத்துவதற்கு முன்பு மேலும் பல கட்டங்களாக இந்த ஏவுகணை சோதிக்கப்படும் என்று தெரிகிறது. குறிப்பாக இந்த கே-4 ஏவுகணை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி ஏவுகணையாகும்.
  • மேலும் 700கி.மீ தொலைவு வரையிலான இலக்குகளைத் தாக்கும் பிஓ-5 ஏவுகணை இந்தியாவின் முதல் நீர்மூழ்கி ஏவுகணை ஆகும்.



ஆந்திரா 3 தலைநகரத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிய மசோதா நிறைவேற்றம்
  • ஆந்திர மாநிலத்தில் தலைநகர் தொடர்பான பிரச்னை நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆட்சியிலிருந்த சந்திரபாபு நாயுடு அமராவதியைத் தலைநகராக அறிவித்து அதை மேம்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டினார். 
  • ஆனால், அதற்குள் அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதால் தேர்தலில் வெற்றி பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அமராவதியோடு விசாகப்பட்டினம், கர்னூலையும் நிர்வாக நகரங்களாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. 
  • ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்கும் முடிவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து, அதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
  • பரவலாக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டுவதற்காக 3 இடங்களில் தலைநகர் அமைக்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவித்திருந்தார். 
  • அதன்படி அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டிணம் நிர்வாக தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் அமைக்கப்படும் என கூறப்பட்டது.
  • ஆனால் அமராவதியை தலைநகராக நிர்மாணிக்க இடம் கொடுத்த விவசாயிகளும், பொதுமக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 
  • இந்த நிலையில் 3 தலைநகர் முடிவுக்கு ஜெகன்மோகன் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
  • தொடர்ந்து அம்மாநில சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தொடரில், 3 தலைநகர் அமைப்பதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 175 இடங்களை கொண்ட சட்டப்பேரவையில் 151 உறுப்பினர்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வைத்திருப்பதால், அங்கு இந்த மசோதா நிறைவேறுவதில் எவ்வித சிக்கலும் இல்லை.
  • ஆனால் 58 உறுப்பினர்களை கொண்ட ஆந்திர சட்டமேலவையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 9 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். 3 தலைநகர் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தெலுங்கு தேசம் கட்சிக்கு 28 உறுப்பினர்கள் உள்ள நிலையில், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவும் அக்கட்சிக்கு இருப்பதால், மேலவையில் இம்மசோதா நிறைவேறுவது சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.
உயிருள்ள மைக்ரோ ரோபாட்டை உருவாக்கி விஞ்ஞானிகள் அசத்தல்
  • உலகின் முதலாவது உயிருள்ள ரோபாட்டை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.செனோபோட் (xenobot) என பெயரிடப்பட்டுள்ள இந்த சிறு ரோபாட், தவளையின் கருவுற்ற முட்டையில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
  • தவளையின் இரண்டு விதமான செல்களை இணைத்து அவை இயங்கும் வகையிலான வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இவை வழக்கமான ரோபாட்டுகளும் அல்ல, இயல்பான உயிரினமும் அல்ல என்று விளக்கம் அளித்துள்ள விஞ்ஞானிகள், இது நமது விருப்பத்திற்கு ஏற்ப புரோகிராம் செய்யக்கூடிய ஒரு உயிருள்ள படைப்பு என்று கூறி உள்ளனர்.
  • மனித உடலில் நுண்ணிய வகையில் மருந்துகளை செலுத்தவும், கதிரியக்கம் மிக்க கழிவுகளை அகற்றவும், ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்கவும் இந்த ரோபாட்டுகள் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது. இடப்பட்ட உத்தரவை நிறைவேற்றிய பின்னர் சாதாரண உயிர் செல்களைப் போல இவை 7 நாட்களுக்குள் அழிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் வந்த அதி நவீன சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்கள்
  • தஞ்சாவூர் விமானப் படை தளத்தில் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களின் படையணி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சுகோய்-30 எம்கேஐ விமானங்கள் தஞ்சாவூர் கொண்டு வரப்பட்டுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சுகோய் இந்த படையணியை தொடங்கி வைக்கிறார்.
  • கடந்த வருடம் டிசம்பர் மாதம் இந்தியாவின் விமானப்படை சார்பாக பிரம்மோஸ் சோதனை நடத்தப்பட்டது. சுகோய் 30 எம்கேஐ (Su-30 MKI) மூலம் இந்த பிரம்மோஸ் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பிரம்மோஸ் ஏவுகணை மிக துல்லியமாக இலக்கை தாக்கி சாதனை படைத்தது.
  • பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் சுகோய் 30 எம்கேஐ (Su-30 MKI) இணை இந்தியாவின் விமானப்படைக்கு அதிக பலம் கொடுக்கும் என்று முப்படை தளபதி பிபின் ராவத் தெரிவித்தார். இதையடுத்து சுகோய் 30 எம்கேஐ (Su-30 MKI) விமானத்தை இந்தியாவின் முக்கிய விமானப்படை தளங்களில் களமிறக்க இந்திய பாதுகாப்பு படை முடிவெடுத்துள்ளது.
  • அதன் ஒரு கட்டமாக இன்று தஞ்சாவூரில் உள்ள விமானப்படை தளத்தில், சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களின் படையணி அமைக்கப்பட்டது. இதற்காக சுகோய்-30 எம்கேஐ விமானம் தஞ்சாவூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டது. முப்படை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி ஆர்கேஸ் படாரூயா ஆகியோர் இந்த படையணியை தொடங்கி வைக்கிறார்கள்.
  • இந்த படைக்கு 222 டைகர்ஷார்க்ஸ் (222 Tigersharks) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படை இந்தியாவின் மிகவும் வலிமையான விமானப்படை அணியாகும். 
  • இந்த சுகோய் 30 எம்கேஐ பிரம்மோஸ் ஏவுகணையை தாங்கி சென்று தாக்க கூடிய வலிமைப்படைத்தது. இதன் மூலம் தென்னிந்தியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். முக்கிய எல்லை அருகே அடிக்கடி சுகோய் 30 எம்கேஐ இனி ரோந்து செல்லும்.
  • இந்தியாவில் மொத்தம் 250 சுகோய் 30 எம்கேஐ விமானங்கள் உள்ளது . இதில் தற்போது முதல்முறையாக தென்னிந்தியாவில் சுகோய் 30 எம்கேஐ விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளது. அதிலும் தஞ்சாவூரில் அந்த போர் விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel