சிறந்த நிர்வாகத்தில் தமிழகம் முதலிடம்
- தேசிய நல்லாட்சி தினத்தை ஒட்டி, மத்திய நிா்வாக சீா்திருத்தம் மற்றும் பொது மக்களின் குறைதீா்க்கும் துறையானது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தது.
- ஒவ்வொரு மாநிலத்திலும் பொது மக்களுக்கு நலத் திட்டங்களை அளிக்கக் கூடிய 17 அரசுத் துறைகளில் இருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் புள்ளிகளை வழங்கியுள்ளது. இந்தப் புள்ளிகளைக் கொண்டு மாநிலங்களின் தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
- மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறன்கள், வேளாண்மை, துணைத் தொழில்கள், வா்த்தகம் மற்றும் தொழில், மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், பொருளாதார நிா்வாகம், சமூக நலம் மற்றும் வளா்ச்சி, நீதி நிா்வாகம்-பொது மக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்டவை ஒவ்வொரு மாநில வாரியாக ஆய்வு செய்யப்பட்டன.
- பெரிய மாநிலங்கள் என்ற பிரிவில் அனைத்து காரணிகளையும் உள்ளடக்கி தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில், உள்கட்டமைப்பு, நீதி நிா்வாகம், சுகாதாரம் என அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளும் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 5.62 புள்ளிகளைப் பெற்று சிறந்த நல்லாட்சிக்கான குறியீட்டில் தமிழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
- குடிநீா் வசதி, கிராமங்கள் மற்றும் நகா்ப்புறப் பகுதிகளில் மலம் கழிப்பதைத் தடுத்தது, தடையில்லாத மின்சார விநியோகம், புகா்ப் பகுதிகளை அணுகுவதற்கான அம்சங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் சிறப்பாக இருப்பதாக மத்திய அரசு சுட்டிக் காட்டியுள்ளது. இதற்காக பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடு என்ற பிரிவில் மாநில அரசுக்கு 0.74 புள்ளிகளை அளித்து முதலிடத்தை வழங்கியுள்ளது.
- சட்டம், ஒழுங்கைப் பராமரித்து பொது மக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதிலும் தமிழகத்துக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. குற்றங்களை நிரூபணம் செய்வது, காவலா்கள் எண்ணிக்கை, மகளிா் காவலா்களின் விகிதம், நீதிமன்றம் மற்றும் நுகா்வோா் நீதிமன்ற வழக்குகளில் தீா்வு அளிப்பது ஆகியவற்றின் அடிப்படையில் தமிழகத்துக்கு 0.56 புள்ளிகள் அளிக்கப்பட்டு இந்தியாவிலேயே முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.
- கா்ப்ப காலத்தில் தாய்- சேய் இறப்பு விகிதம், நோய்த் தடுப்பில் சாதனை, பொது சுகாதார மையங்களில் மருத்துவா்கள், மருத்துவ உதவியாளா்களின் இருப்பும், மருத்துவமனைகள் 24 மணி நேரமும் இயங்கும் வசதி ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கான சுகாதாரத் துறை அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டன. அதில், தமிழகத்துக்கு 0.78 புள்ளிகள் அளிக்கப்பட்டதன் மூலம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
- ஒருமுறை தூக்கி எறியப்படும் நெகிழிப் பைகளுக்கான தடை, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப மாநில அளவிலான செயல்திட்டம், வனஎல்லை மாற்றம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் துறையில் சிறப்பான செயல்பாடுகளுக்காக இந்தியாவிலேயே தமிழகத்துக்கு 3-ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
- கல்வி அளிப்பதுடன் சிறப்பான திறன் பயிற்சி மூலமாக வேலை வாய்ப்பு அளிக்கும் மனிதவள மேம்பாடுத் துறைக்கும், மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளா்ச்சி விகிதம், நிதி மற்றும் கடன் சுமைகளை கட்டுக்குள் வைத்திருத்தல் போன்ற காரணிகளால் பொருளாதார மேலாண்மைத் துறைக்கும் ஐந்தாவது இடம் வழங்கப்பட்டுள்ளது.
- சமூக நலன் மற்றும் மேம்பாட்டுத் துறைக்கு 7-ஆவது இடமும், வேளாண்மை மற்றும் அதனைச் சாா்ந்த துறைகளுக்கு 9-ஆவது இடமும் அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக அனைத்துத் துறைகளுக்கும் அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் சராசரி அடிப்படையில் தமிழகம் 5.62 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது.
- மத்திய அரசு வெளியிட்டுள்ள, நாட்டிலேயே மிகச் சிறந்த நிர்வாகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. அதற்கடுத்த இடங்களில், மஹாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்கள் உள்ளன. மத்திய பணியாளர் நலத்துறை சார்பில், மிகச் சிறந்த மாநிலங்களுக்கான தரவரிசை தயாரிக்கப்பட்டு உள்ளது.
- மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.மிகப் பெரிய மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் மலைப் பிரதேசங்கள், யூனியன் பிரதேசங்கள் என, மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு பிரிவுக்கும், தனித்தனியாக மதிப்பீடுகள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளில், மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்தும் பட்டியலிடப் பட்டுள்ளன.
- ஒட்டுமொத்தமாக, சிறந்த நிர்வாகம் அளிக்கும், மிகப்பெரிய மாநிலங்களுக்கான பட்டியலில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது; மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன; சத்தீஸ்கர், நான்காவது இடத்தில் உள்ளது.
- அதற்கடுத்த இடங்களில், ஆந்திரா, குஜராத், ஹரியானா, கேரளா உள்ளன; மத்திய பிரதேசம், 10வது இடத்தில் உள்ளது.தெலுங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா, பீஹார், கோவா, உத்தர பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட், அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.
- வடகிழக்கு மற்றும் மலை பிரதேசங்களில், ஹிமாச்சல பிரதேசம், முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடங்களில், உத்தரகண்ட், திரிபுரா, மிசோரம், சிக்கிம், அசாம், ஜம்மு - காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் உள்ளன.மிகச் சிறந்த நிர்வாகம் அளிக்கும், யூனியன் பிரதேசங்கள் பட்டியலில், புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. சண்டிகர், டில்லி, டாமன் மற்றும் டையூ, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, லட்சத்தீவுகள், அதற்கடுத்த இடங்களில் உள்ளன.துறை வாரியாக செயல்பாடு: பல்வேறு துறைகளில், ஒவ்வொரு மாநிலத்தின் செயல்பாடுகள் குறித்தும் பட்டியலிடப் பட்டுள்ளது.
- வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளில், மத்திய பிரதேசம், முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், அதற்கடுத்த இடங்களில் உள்ளன.
- வடகிழக்கு மாநிலங்களில், மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்களில், டாமன் மற்றும் டையூ, முதலிடத்தைப் பிடித்தன.வர்த்தகம் மற்றும் தொழில் துறையில், ஜார்க்கண்ட், முதலிடம் பிடித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில், உத்தரகண்ட்; யூனியன் பிரேதசங்களில், டில்லி முதலிடத்தைபிடித்துள்ளன.
- மனிதவள மேம்பாட்டில், கோவா முதலிடம் பிடித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில், ஹிமாச்சல பிரதேசம், யூனியன் பிரதேசங்களில், புதுச்சேரி முதலிடத்தில் உள்ளன.
- மருத்துவ வசதியில், கேரளா, முதலிடத்தில் உளளது. தமிழகம் மற்றும் கோவா, அதற்கடுத்த இடங்களில் உள்ளன. யூனியன் பிரதேசங்களில், புதுச்சேரியும், வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூரும், இதில் முதலிடத்தில் உள்ளன.பொது கட்டமைப்பு வசதிகளிலும், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
- இதில், குஜராத், பஞ்சாப், அதற்கடுத்த இடங்களில் உள்ளன.வடகிழக்கு மாநிலங்களில், ஹிமாச்சல பிரதேசம்; யூனியன் பிரதேசங்களில், சண்டிகர் முதலிடத்தில் உள்ளன.
- நிதி நிர்வாகப் பிரிவில், கர்நாடகா, முதலிடத்தில் உள்ளது. மஹாராஷ்டிரா, தெலுங்கானா, குஜராத், தமிழகம் அதற்கடுத்த இடங்களில் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் உத்தரண்ட்; யூனியன் பிரதேசங்களில், டில்லி, முதலிடத்தைப்பிடித்துள்ளன.
- சமூக நலம் மற்றும் மேம்பாட்டு பிரிவில், சத்தீஸ்கர், முதலிடத்தைப் பிடித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மேகாலயாவும், யூனியன் பிரதேசங்களில் டாமன் மற்றும் டயூவும், முதலிடத்தைப் பிடித்தன.
- நீதி நிர்வாகம் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரிவில், தமிழகத்துக்கு, முதலிடம் கிடைத்துள்ளது. கேரளா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், அதற்கடுத்த நிலைகளில் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில், ஹிமாசலப் பிரதேசம்; யூனியன் பிரதேசங்களில், புதுச்சேரி முதலிடத்தில் உள்ளன.
- சுற்றுச்சூழல் பாதுகாப்பில், மேற்கு வங்கம், முதலிடத்திலும், கேரளா, தமிழகம், அதற்கடுத்த இடங்களையும் பிடித்துள்ளன. வடகிழக்கு மற்றும் மலை பிரதேச மாநிலங்களில், ஜம்மு - காஷ்மீர்; யூனியன் பிரதேசங்களில் சண்டிகர், முதலிடத்தைப் பிடித்தன.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: தமிழகத்திற்கு 2ஆவது இடம்
- நாடு முழுவதும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து 522 மாவட்டங்கள் மற்றும் 100 ரயில் நிலையங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் ஆய்வு நடத்தியது.
- நடப்பாண்டு ஆய்வறிக்கையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் பதிவான மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. அங்கு 1,742 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த பட்டியலில் 985 வழக்குகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
- அடுத்தப்படியாக மகாராஷ்டிராமாநிலத்தில் 436 வழக்குகள் பதிவாகின. ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களே குழந்தைகளிடம் அதிகம் தவறாக நடந்துக் கொண்டு இருப்பதாகவும் இந்த ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக கன்னியாகுமரியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்
- உள்ளாட்சித் தேர்தலில் 4 வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தும் முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. வெவ்வேறு பதவிகளுக்கான 4 வாக்குச் சீட்டுகளில் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டியுள்ளது.
- இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலிலும் பொதுத்தேர்தல்களைப் போல மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் சோதனை முயற்சியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இன்றைய முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு ஊராட்சியில் மட்டும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில்தான் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றியடைந்தால் வரும் காலங்களில் உள்ளாட்சி தேர்தலிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களே பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தின்தலைவராக பணீந்திர ரெட்டி தோவு
- ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக கே.பணீந்திர ரெட்டி தோவு செய்யப்பட்டாா். இதேபோன்று, செயலாளராக எம்.எஸ்.சண்முகமும், உறுப்பினா் செயலாளராக ரகுநாத்தும் தோவு செய்யப்பட்டனா்.
- தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக சோமநாதன் இருந்தாா். அவா் தில்லி பணிக்குச் சென்ற காரணத்தால் புதிய தலைவரைத் தோவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதையடுத்து, புதிய தலைவராக பணீந்திர ரெட்டி தோவு செய்யப்பட்டுள்ளாா்.
பிரபலமான டீனேஜ்ஜர் மலாலா': ஐ.நா., கவுரவம்
- கடந்த பத்தாண்டுகளில் உலகின் மிகவும் பிரபலமான பதின்பருவ நபராக(டீனேஜ்ஜர்) பாக்.,கை சேர்ந்த மலாலா யூசப்பை தேர்வு செய்து, ஐ.நா., கவுரவித்துள்ளது.
- கடந்த 10 ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகளாக, ஹைதி நிலநடுக்கம்(2010), சிரிய உள்நாட்டுப்போர் துவக்கம்(2011), பெண்களின் கல்விக்கு ஆதரவாக மலாலாவின் பணிகள்(2012), எபோலா வைரஸ் தாக்குதல்(2014), பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது(2015) ஆகியவற்றை ஐ.நா., குறிப்பிட்டுள்ளது.
- மலாலா பற்றி குறிப்பிட்டுள்ள ஐ.நா., '2012ல் பெண்களின் கல்வியில் மும்முரம் காட்டிய மலாலா யூசப்பை தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கி குண்டுகளால் துளைத்தனர். அவர் மீதான் தாக்குதல் உலகை உலுக்கியது. மலாலா நலம் பெற உலகெங்கும் பிரார்த்தனைகள் நடந்தன.
- யுனெஸ்கோவின் பாரிஸ் தலைமையகத்திலும் அவருக்கு பிரார்த்தனை நடந்தது. அவர் உயிர்பிழைத்து மீண்டு வந்து, பெண் கல்வி மீதான தனது செயலில் வேகமெடுத்தார்.2014ல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2017ம் ஆண்டு ஐ.நா., அமைதிக்கான தூதரானார்.
- அவரது அயராத உழைப்பு, கடந்த 10 ஆண்டுகளில், உலகின் மிகவும் பிரபலமான பதின்பருவ நபராக அவரை உருவாக்கி உள்ளது.
இளையராஜாவுக்கு கேரளத்தின் ஹரிவராசனம் விருது
- சபரிமலையின் புகழைப் பரப்பும் கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருது வருகின்ற ஜனவரி 15ம் தேதி இளையராஜாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- விருதுடன் சேர்த்து ரூ.1 லட்சம் ரொக்கமும் 'Worshipful Music Genius' என்ற பட்டமும் வழங்கப்படுகிறது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- எஸ்.பி.பாலசுப்ரமணியம், கங்கை அமரன், பி.சுசிலா, ஜேசுதாஸ் மற்றும் பாடகி சித்ரா ஆகியோர் இந்த விருதை இதற்கு முன்னர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.