கொல்லிமலையில் கல்வெட்டுடன் கூடிய 9-ஆம் நூற்றாண்டு நடுகல்
- கொல்லிமலையில் மண்ணில் புதைந்த நிலையில் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுடன் கூடிய நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இந்தக் கல்வெட்டானது புதைந்த நிலையிலிருந்து 64 செ.மீ. உயரமும் 35 செ.மீ. அகலமும் உள்ளது. கருங்கல் பலகையின் மேற்பகுதியில் ஏறத்தாழ 20 செ.மீ. அளவுக்கு கல்லைச் சமன்படுத்தி இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டை அடுத்துள்ள கீழ்ப் பகுதியில் 8 செ.மீ. ஆழத்தில் இளைஞர் ஒருவரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
- ஓங்கிய குத்துவாளுடன் வலக்கையை உயர்த்தியுள்ள அவரது இடக்கை முஷ்டி முத்திரையில் உள்ளது. செவிகள் நீள்வெறுஞ் செவிகளாகவும், இடையில் வரிந்து கட்டிய சிற்றாடை, இடுப்பில் மற்றொரு குறுவாள் உள்ளது.
- சிற்றாடையின் முந்தானை வலப்புறம் இருக்க, மடியை மறைக்குமாறு முக்கோணத் தொங்கலாக ஆடையின் கீழ்பகுதி இறக்கிவிடப்பட்டுள்ளது. தலைமுடி இரண்டு சுருள்கள் கொண்ட கொண்டையாக முடியப்பட்டுள்ளது.
- இந்த நடுகல்லின் தலைப்பகுதியில் காலம், காலமாக கத்தி, அரிவாள் போன்ற கருவிகளைத் தீட்டி கூர்மைப்படுத்தும் பழக்கம் இருந்ததே கல்வெட்டின் முதல்வரி சிதைந்ததற்கு காரணம் என்கிறார் இரா. கலைக்கோவன்.
கீழடி அகழாய்வில் செங்கல் தரைத்தளம் கண்டெடுப்பு
- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில், செங்கல்லால் உருவாக்கப்பட்ட தரைத்தளம் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
- இந்த தளம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், பண்டைய காலத்தில் வீடுகளில் தரைத்தளங்கள் செங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
எத்தனால் கொள்முதல் விலையை உயர்த்தியது மத்திய அரசு
- எரிபொருளில் கலக்கும் எத்தனாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.1.84 வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
- மத்திய அரசின் இந்த முடிவின்படி, வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்கி ஓராண்டுக்கு எண்ணெய் சந்தைப்படுத்தும் பொதுத் துறை நிறுவனங்கள் எரிபொருளில் கலப்பதற்காக கொள்முதல் செய்யும் சி ஹெவி மொலாசஸிலிருந்து தருவிக்கப்படும் எத்தனாலுக்கான விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.43.46-லிருந்து ரூ.43.75-ஆகவும், பி ஹெவி மொலாசஸிலிருந்து தருவிக்கப்படும் எத்தனாலுக்கான விலை ரூ.52.43 லிருந்து ரூ.54.27-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
- மேலும், கரும்பு சாறு, சர்க்கரை, சர்க்கரை பாகு ஆகியவற்றிலிருந்து தருவிக்கப்படும் எத்தனாலுக்கான விலை ரூ.59.48-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- வரும் 2019-2020 சர்க்கரை பருவத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இந்த விலை உயர்வு வரும் டிசம்பர் 1-ஆம் தேதியிலிருந்து அடுத்தாண்டு நவம்பர் 30-ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெட்ரோலில் எத்தனாலை கலப்பது அதிகரிக்கும்பட்சத்தில் ஆண்டுக்கு 20 லட்சம் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இறக்குமதி செலவினத்தில் 100 கோடி டாலர் வரை மிச்சமாகும் என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ஐடிபிஐ வங்கிக்கு ரூ.9,300 கோடி மூலதனம்: அமைச்சரவை ஒப்புதல்
- ஐடிபிஐ வங்கிக்கு ரூ.9,300 கோடி மூலதனம் அளிக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது.
- வழங்கப்படவுள்ள மொத்த தொகையான ரூ.9,300 கோடியில், எல்ஐசி அவ்வங்கியில் 51 சதவீத பங்குகளை வைத்துள்ளதற்காக ரூ.4,743 கோடி அதனை சாரும். எஞ்சிய ரூ.4,557 கோடியை, 49 சதவீத பங்குகளை வைத்துள்ளதற்காக மத்திய அரசு ஒரே தவணையில் வழங்கும் என்றார் அவர்.
- ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசு வைத்திருந்த பங்கு மூலதனத்தை 86 சதவீதத்திலிருந்து 46.46 சதவீதமாக குறைத்துக் கொண்டது. அதேசமயம், நடப்பாண்டு ஜனவரியில், அந்த வங்கியில் எல்ஐசி தனது பங்கு மூலதனத்தை 51 சதவீதமாக அதிகரித்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மாலத்தீவுடன் ஒப்பந்தம்
- தெற்காசிய நாடான, மாலத்தீவுக்கு சென்றுள்ள, வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கர், அந்த நாட்டு, வெளியுறவு அமைச்சர், அப்துல்லா ஷாகித்துடன், இரு தரப்பு உறவு குறித்து பேச்சு நடத்தினார். குற்ற வழக்குகளில், பரஸ்பர சட்ட உதவி அளிக்கும் ஒப்பந்தத்தில், இருவரும் கையெழுத்திட்டனர்.
பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கும் சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சி
- வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங் நகரில் சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்ட ரோபோக்கள், மென்பொருள் சாதனங்கள், டிரோன்கள், கண்கவர் ஒளி விளக்குகள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
- இந்த கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள இந்த கண்காட்சியை ஏராளமான பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.
'டுவென்டி-20' போட்டிகளில் மிதாலி ராஜ் ஓய்வு
- முன்னாள் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ், சர்வதேச 'டுவென்டி-20' போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.
- இந்தியாவின் முதல் 'டுவென்டி-20' கேப்டனான மிதாலி ராஜ், 36, மொத்தம் 32 போட்டிகளுக்கு தலைமை வகித்துள்ளார். இதில், 2012, 2014 மற்றும் 2016 ஆண்டுகளில் நடந்த 'டுவென்டி-20' உலக கோப்பையும் அடங்கும்.
- தற்போது ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக உள்ளார். இந்நிலையில் சர்வதேச 'டுவென்டி-20' போட்டிகளில் இருந்து இன்று (செப். 3) ஓய்வு முடிவை அறிவித்தார்.
- 2021ல் நடக்கவிருக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடருக்காக ஓய்வு அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.