Type Here to Get Search Results !

29th & 30th JULY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவமனை தினம் கொண்டாட்டம்
  • இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர்.முத்துலெட்சுமிரெட்டி. இவர்1882ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி, புதுக்கோட்டையில் பிறந்தார்.
  • 1912ஆம் ஆண்டு மருத்துவராக தனது பட்ட படிப்பை முடித்து, இந்தியாவின் முதல் பெண் டாக்டர் என்ற பெற்றுமையை பெற்றார். மத்திய அரசு இவருக்கு 1956 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
  • இந்நிலையில், டாக்டர். முத்துலட்சுமி நினைவாக தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் ஜூலை 30 ஆம் தேதி மருத்துவமனை தினம் கொண்டாடப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். 
  • அதன்படி இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவமனை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு
  • கொடைக்கானலில் செயல்பட்டு வரும் அன்னை தெரசா மகளிர் பல்கலைகழகம் மற்றும் தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு மருத்துவக்குணம் கொண்ட கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கோரி மத்திய அரசுக்கு விண்ணப்பித்திருந்தன.
  • இந்த விண்ணப்பத்தை ஆராய்ச்சி செய்த மத்திய அரசு, தற்போது மலைப்பூண்டின் மகத்துவத்தை தெரிவிக்கும் வகையில் புவிசார் குறியீடு வழங்கி இருக்கிறது.
  • இதன்மூலம் மகராஷ்டிரா, கர்நாட காவுக்கு அடுத்தப்படியாக, அதிக புவிசார் குறியீடு பெற்ற மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் 12 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்வு
  • உலக அளவில் தென்சீனப் புலி, மலேசியன் புலி, இந்தோ-சீனப் புலி, சைபீரியன் புலி, வங்கப் புலி, சுமித்ரன் புலி, காஸ்பியன் புலி, ஜவான் புலி, பாலி புலி என 9 வகையான புலிகள் உள்ளன.
  • கடந்த 20-ஆம் நூற்றாண்டில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புலிகள் இருந்த நிலையில், வேட்டை, வனப் பகுதிகள் அழிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடந்த 2000-ஆம் ஆண்டில் புலிகளின் எண்ணிக்கை 3 ஆயிரமாக சரிந்தது. 
  • இதில், குறிப்பாக ஜவான், காஸ்பியன் ஆகிய புலி வகைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. தென் சீனப் புலி வகையை பல ஆண்டுகளாகப் பார்க்க முடியாத காரணத்தால், அழியும் நிலையில் உள்ள விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 வகை புலிகளைக் காக்கும் வகையில், கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் உலக புலிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • இந்தியா முன்னிலை: இந்தியாவில் புலிகளைக் காக்கும் வகையில், கடந்த 1972-இல் புலிகள் திட்டம் தொடங்கப்பட்டது. புலிகள் வசிக்கும் பகுதி புலிகள் காப்பகங்களாக மாற்றப்பட்டு, இந்தியாவில் தற்போது 50 புலிகள் காப்பகங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட சர்வதேச புலிகள் கணக்கெடுப்பில் 3,890 புலிகள் இருந்தது தெரியவந்தது. அதில், 2,226 புலிகள் அதாவது 60 சதவீதத்துக்கும் மேலான புலிகள் இந்தியாவில் இருப்பது தெரியவந்தது.
  • புலிகளின் நிலையை அறிந்து கொள்ளும் வகையில், புலிகளின் எண்ணிக்கை குறித்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடு தழுவிய கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2006-இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 1,411 புலிகளும், 2010-இல் 1,706 புலிகளும், 2014-இல் 2,226 புலிகளும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 2018-இல் 20 மாநிலங்களில் 38,1400 ச.கி.மீ.பரப்பளவில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 
  • 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வனத் துறை ஊழியர்கள், வன ஆர்வலர்கள், வன ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். 26,838 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 3 கோடிக்கும் மேற்பட்ட வன விலங்குகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அதில், 76,651 புலிகளின் புகைப்படங்களாகும். 
  • இந்தப் புகைப்படங்கள், புலிகளின் எச்சம், கால் தடம் உள்ளிட்ட பல தரவுகளின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், இந்திய அளவில் கடந்த 2014-ஆம் ஆண்டைக் காட்டிலும் புலிகளின் எண்ணிக்கை 33 சதவீதம் அதிகரித்து, 2,967 புலிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
  • தமிழகத்தில் ஆனைமலை, களக்காடு முண்டந்துறை, முதுமலை, சத்தியமங்கலம் ஆகிய 4 புலிகள் காப்பகங்கள் மற்றும் பல்வேறு வனக் கோட்டங்களில் கடந்த 2006-இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை 76-ஆக இருந்தது. 
  • வனத் துறையின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, 2010-இல் 163-ஆகவும், 2014-இல் 229-ஆகவும் உயர்ந்தது. அதுவே, 2018-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 35 புலிகள் அதிகரித்து 264 புலிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
  • மேலும், புலிகள் பாதுகாப்பில் சிறந்த மேலாண்மைக்கான விருதை சத்தியமங்கலம் புலிகள் காப்பகமும், சிறந்த பராமரிப்புக்கான தரவரிசையில் ஆனைமலை புலிகள் காப்பகம் 89 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தையும்பிடித்துள்ளது.
கீழடி அகழாய்வில் உறை கிணறு கண்டெடுப்பு
  • மத்திய தொல்லியியல்துறை சார்பில் கீழடியில் தொடர்ந்து மூன்று கட்ட அகழாய்வுகள் நடத்தப்பட்டன. அதன்பின், தமிழக அரசு நான்காம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. தற்போது 5ஆம் கட்ட அகழாய்வு தமிழக அரசு சார்பில் கடந்த ஜூன் 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • 5-ஆம் கட்ட அகழாய்வில், முருகேசன், கருப்பையா, மாரியம்மாள் ஆகியோருக்கு சொந்தமான நிலங்களில் குழிகள் தோண்டியபோது அழகுசாதனப் பொருள்கள், பானைகள், ஓடுகள், இரட்டைச் சுவர், 3 அடி அகலச் சுவர் ஆகியவை கண்டறியப்பட்டன. 
  • மேலும் முருகேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் திங்கள்கிழமை குழி தோண்டியபோது, 5 உறைகள் கொண்ட 4 அடி உயர உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது.இது சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தையது என அகழாய்வாளர்கள் தெரிவித்தனர்.



புகையிலை பொருள் விற்பனை கட்டுப்பாடு - நாட்டிலேயே 2ம் இடம் பிடித்த தமிழகம்
  • சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டிலிருந்து சிறார்களை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டதில், நாட்டிலேயே தமிழகம் இரண்டாமிடம் வகிக்கிறது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் அஷ்வினி குமார் செளபே மக்களவையில் அளித்த தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது.
  • சிகரெட்டுகள் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் தயாரிப்புகள் சட்டம், 2003 (COTPA), சிகரெட் மற்றும் இதரப் புகையிலைப் பொருட்களை சிறார்களுக்கு விற்பனை செய்வதையும், கல்வி நிறுவனங்களுக்கு அருகே விற்பனை செய்வதையும் தடை செய்கிறது.
  • இந்த விஷயத்தில் தமிழகம் நாட்டிலேயே சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களில் இரண்டாமிடம் வகிக்கிறது. முதலிடத்தில் குஜராத் வருகிறது. தமிழகத்தில் கடந்தாண்டில் மட்டும் 6425 பேருக்கு புகையிலைப் பொருட்கள் தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டு ரூ.13.4 லட்சம் வசூலிக்கப்பட்டது.
  • குஜராத் மாநிலத்தில் 8000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.14.34 லட்சம் வசூலிக்கப்பட்டது. மூன்றாமிடம் பிடித்த பஞ்சாப் மாநிலத்தில் அபராதமாக ரூ.13.14 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
  • 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தல் கூடாது மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து 100 மீட்டர் சுற்றளவிற்கு அத்தகையவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று COTPA சட்டத்தின்படி தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2,500 ஆண்டுகளுக்கு முந்தைய 3 சுவர்கள் கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு
  • சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 3 சுவர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 
  • கீழடி கிராமத்தில் தமிழக அரசு சார்பில் 5-ஆம் கட்ட அகழாய்வு, கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 
  • ஏற்கெனவே மூன்று கட்ட அகழாய்வுகள் மத்திய அரசின் தொல்லியல் துறை மூலமும், நான்காம் கட்ட அகழாய்வு தமிழக அரசு சார்பிலும் மேற்கொள்ளப்பட்டன. 
  • இந்த ஆய்வின் போது, கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரிகம் இருந்தது தெரியவந்தது. 
  • அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளில் பழங்கால மக்கள் பயன்படுத்திய பானைகள், ஓடுகள், அழகு சாதனப் பொருள்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, முருகேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் குழி தோண்டியபோது இரட்டைச் சுவர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
  • இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இந்த சுவருக்கு அருகிலேயே 5 அடுக்குகள் கொண்ட 4 அடி உயர உறைகிணறு கண்டறியப்பட்டது. 
  • இந்நிலையில், இந்தக் கிணறுக்கு அருகிலேயே தோண்டப்பட்ட குழியில் 5 அடி நீளத்திலும் 3 அடி அகலத்திலும் ஒரு சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.
  • மற்றொரு குழியில் அகலமான நிலையில் ஒரு சுவர் இருப்பது தெரிந்தது. 
  • போதகுரு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் குழி தோண்டியபோது 2 அடி அகலத்திலும் ஒரு அடி உயரத்திலும், 12 அடி நீளத்திலும் மற்றொரு சுவர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
  • 5 அடி நீளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுவரில் 3 அடுக்குகளில் செங்கல்கள் அடுக்கி கட்டப்பட்டுள்ளன. 
ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு பெற்றது ஒடிசா
  • குறிப்பிட்ட பகுதியில் தயாராகும் உணவுப் பொருள்கள், உடைகள் உள்ளிட்டவற்றுக்கு காப்புரிமை பெற்றுக் கொள்வது புவிசார் குறியீடு ஆகும்.
  • இந்த உரிமையை, அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களும், மாநிலங்களும் பெருமையாகக் கருதுகின்றன. இந்த வரிசையில், ரசகுல்லாவுக்கு, ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களிடையே உரிமைப் போட்டி நடந்து வந்தது.
  • பூரி ஜெகன்நாத் சுவாமிக்கு பிரசாதமாக ரசகுல்லா படைக்கப்பட்டதாக ஒடிசாவும், திரிந்து போன பால் என்பது கெட்டுப் போன பால் என்பதால் அதிலிருந்து தயாரிக்கப்படும் ரசகுல்லா இறைவனுக்கு படையல் ஆகாது என்று மேற்கு வங்கமும் வாதிட்டு வந்தன.
  • கடந்த 2017 ஆம் ஆண்டு வங்காள ரசகுல்லா என்று மேற்கு வங்க மாநிலம் புவிசார் குறியீடு பெற்றது. இந்நிலையில், ஒடிசா ரசகுல்லா என்ற பெயரில் இந்த இனிப்பு வகைக்கு, ஒடிசா மாநிலம் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. 
  • இதற்கான சான்றிதழை ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமிதத்துடன் வெளியிட்டுள்ளார். இந்த‌ச் சான்றிதழை சென்னையில் உள்ள புவிசார் குறியீட்டு பதிவாளர் அலுவலகம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா தலைமை செயலகம் பெயர் மாற்றம்
  • ஒடிசாவில் பிஜூ ஜனதா தள ஆட்சி நடக்கிறது. முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளார். மாநில சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதல்வர் நவீன்பட்நாயக் கூறியது, ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள் நாம் அவர்களின் சேவகர்கள். 
  • அந்த வகையில் இந்த இடம் (தலைமை செயலகம் ) சாச்சிவாலயா என்றிருப்பதை ''லோக் சேவா பவன்'' என பெயர் மாற்றப்படும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.



லோக்சபாவில் மருத்துவ கமிஷன் மசோதா நிறைவேற்றம்
  • இந்திய மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ துறையை, 63 ஆண்டுகளாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த, இந்திய மருத்துவ கவுன்சிலை செல்லாததாக ஆக்கும், 'தேசிய மருத்துவ கமிஷன் மசோதா - 2019' லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
  • இந்த மசோதா படி, எம்.பி.பி.எஸ்., படிக்கும் மாணவர்கள், இறுதியாண்டில் நடத்தப்படும், 'நெக்ஸ்ட்' எனப்படும், தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், முதுகலை படிப்பில் சேர்க்கப்படுவர். 
  • ஜனநாயக ரீதியில் இயங் கிய அந்த அமைப்பை மூடிவிட்டு, தற்போது, மூன்றடுக்கு கொண்ட நியமன அமைப்பை, அரசு கொண்டு வருகிறது. இதில், 25 பேர் இடம் பெறும், மருத்துவ ஆணையம்; 89 பேர் இடம் பெறும், மருத்துவ ஆலோசனைக்குழு ஆகிய இரண்டு அடுக்குகள் அமைக்கப்பட உள்ளன. 
  • ஏற்கனவே ஆணையத்தில் உள்ள, 25 பேரும், அதன் கீழ் இயங்கும் ஆலோசனை குழுவிலும் இடம் பெற உள்ளனர். அப்படியெனில், இவர்கள், தங்களுக்கு தாங்களே ஆலோசனை அளித்துக் கொள்வரா?
  • மூன்றாவதாக, 'தர நிர்ணயக்குழு' என்ற, ஐந்து பேர் குழு, புதிய கல்லுாரிகளின், உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து, அனுமதி வழங்கும். 
  • இந்தக் குழுவின் தலைவர், பிரதான அமைப்பான, ஆணையத்திலும் உறுப்பினராக இருப்பார். அப்படியெனில், தலைவராக இவர் தந்த அனுமதியில், ஏதாவது தவறு என்றால், அப்பீலுக்காக, இவரை உறுப்பினராக கொண்ட ஆணையத்திடமே வர வேண்டுமா. முடிவெடுத்தவரே, மேல்முறையீட்டை திரும்ப விசாரிப்பாரா.
  • எனவே, அரசால் நியமனம் செய்யப்படும், அந்த, 25 பேர் வைத்ததுதான், சட்டமாக இருக்கப்போகிறது. மேலும், 50 சதவீத இடங்களுக்கான கட்டணம் மட்டுமே குழுவால் நிர்ணயிக்கப்படுவதும், மீதமுள்ள, 50 சதவீத இடங்களுக்கு, சம்பந்தப்பட கல்லுாரியே, கட்டணம் நிர்ணயிக்க அனுமதிப்பதும், முறைகேடுகளுக்கு வழிவகுக்காதா? சுழற்சி முறை ஆணையத்தில், ஆறு துணைவேந்தர்களுக்கு இடம் வழங்கப்படுகிறது. அதுவும், 29 மாநிலங்களுக்கும், சுழற்சி முறையில் தான் இந்த இடம் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • லஞ்சம், ஊழலில் ஊறித் திளைத்த இந்திய மருத்துவ கவுன்சிலின் அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இனிமேல், நாட்டின் மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ துறை சீரடையும்.இவ்வாறு, அவர் கூறினார். இதைத் தொடர்ந்து, லோக்சபாவில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. 
புதிய நிதி செயலாளராக ராஜீவ் குமார் நியமனம்
  • ராஜீவ் குமார் நிதி அமைச்சின் புதிய செயலாளராக செவ்வாய்க்கிழமை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 
  • ஜார்கண்ட் கேடரைச் சேர்ந்த 1984 தொகுதி IAS அதிகாரியான ராஜீவ் குமார், நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் திணைக்களத்தின் (DFS) செயலாளராக பணியாற்றி வந்தார்.
  • இப்பொறுப்பில் இருந்த சுபாஷ் சந்திர கார்க் அண்மையில் எரிசக்தித்துறை செயலாளராக மாற்றப்பட்டார். அவர் விருப்ப ஓய்வில் செல்ல விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், காலியாக உள்ள நிதித்துறை செயலாளர் பதவிக்கு ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதற்குமுன் மத்திய நிதித்துறை செயலாளராக இருந்த சுபாஷ் சந்திர கார்க், மின்துறை செயலாளராக மாற்றப்பட்டார். அவர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளார். பொதுத்துறை வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட வங்கி சீர்திருத்தப் பணிகளில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
சம்பள பிரச்னைகளுக்கு தீர்வு; மசோதா லோக்சபாவில் நிறைவேறியது
  • ஊழியர்களின் சம்பள பிரச்னைகளுக்கு தீர்வு காணும், சம்பள விதிமுறை மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது.சம்பளம் அல்லது கூலி நிர்ணயம் தொடர்பாக, தற்போதுள்ள மசோதாவில், அரசு அங்கீகரித்த பட்டியலில் உள்ள சில தொழில்களில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே, பலன் கிடைக்கிறது. 
  • இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நாடு முழுவதும், அனைத்து வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ள, 50 கோடி தொழிலாளர்கள் பயனடையும் வகையிலான, சம்பள விதிமுறை மசோதா, லோக்சபாவில் நேற்று(ஜூலை 30), குரல்ஓட்டெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
  • இந்த மசோதாவின் படி, தொழிலாளர்கள் அல்லது ஊழியர்களுக்கு குறைந்தபட்ச கூலி அல்லது சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். தாமதமாக சம்பளம் கொடுக்கப்படும் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
முத்தலாக் தடை மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது
  • நீண்ட விவாதத்திற்கு பின், முத்தலாக் தடை மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது. தொடர்ந்து இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். 
  • தாக்கல் முஸ்லிம் சமூகத்தில், மூன்று முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் முறையை குற்றமாக்கும், முத்தலாக் சட்ட மசோதா, லோக்சபாவில் கடந்த 25ம் தேதி நிறைவேறியது. தொடர்ந்து, இந்த மசோதா ராஜ்யசபாவில் இன்று(ஜூலை 30) தாக்கல் செய்யப்பட்டது. 
  • முத்தலாக் தடை மசோதாவை தாக்கல் செய்து, ரவிசங்கர் பிரசாத் பேசுகையில்; மனிதநேய எண்ணம் கொண்டது முத்தலாக் தடை மசோதா. இந்த மசோதா நீதிக்கானது, மத ரீதியிலானது அல்ல. இதனை யாரும் அரசியலாக்க வேண்டாம். மேலும் பெண்களின் மாண்பையும், அவர்களது அதிகாரத்தையும் நிலைநிறுத்தக்கூடியது என்றார். 
  • வெளிநடப்பு இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், அதிமுக கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ஓட்டெடுப்பில் டிஆர்எஸ் , தெலுங்கு தேசம், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. 
  • இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன.. பார்லிமென்ட் நிலை குழுவிற்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தின.
  • நிறைவேறியது அனைத்து கட்சிகள் பேசிய பின்னர், அனைவருக்கும் சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பதிலளித்து பேசினார். இதன் பின்னர், ராஜ்யசபாவில் ஓட்டெடுப்பு நடந்தது. இதில் மசோதாவிற்கு ஆதரவாக 99 ஓட்டுகளும், எதிராக 84 ஓட்டுகளும் கிடைத்தன.
  • இதன் மூலம் இந்த மசோதா நிறைவேறியதாக அவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். விரைவில் இந்த மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.



ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியல் இந்தியாவுக்கு 78வது இடம்
  • உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் அரசு சாரா அமைப்பான 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலுக்காக உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வு மேற்கொள்கிறது.
  • இப்படியாக ஆய்வு நடத்தியதன் அடிப்படையில் 88 மதிப்பெண்ணைப் பெற்று டென்மார்க் ஊழல் இல்லாத நாடு அல்லது ஊழல் மிகவும் குறைந்த நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. 
  • நியூசிலாந்து 87 மதிப்பெண்ணைப் பெற்று இரண்டாவது இடத்தையும், பின்லாந்து, சிங்கப்பூர், ஸ்வீடன் ஆகிய நாடுகள் தலா 85 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
  • இந்த வரிசையில் 41 மதிப்பெண்களைப் பெற்று ஊழல்கள் நிறைந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா 78-வது இடத்தைப் பெற்றுள்ளது. 2017-ல் 40 மதிப்பெண்களைப் பெற்றிருந்த இந்தியா 81-வது இடத்தைப் பிடித்திருந்தது. 
  • அந்த வகையில் கடந்த 2017 பட்டியலைவிட 2018 பட்டியலில் இந்தியா முன்னேறியுள்ளது. ஆனால் 2016-ம் ஆண்டில் 40 மதிப்பெண்ணைப் பெற்ற இந்தியா 79-வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
  • பாகிஸ்தான், இந்தப் பட்டியலில் 117-வது இடத்தையும், சீனா 87-வது இடத்தையும் பெற்றுள்ளது. சோமாலியா, வெறும் 10 மதிப்பெண்ணை மட்டுமே பெற்று கடைசி இடத்திலும் உள்ளது.
இந்திய ரெயில்வே சரக்கு போக்குவரத்து : அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
  • இந்தியாவில் புகழ்பெற்று விளங்கும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் அமேசான் நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனம் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்வோருக்கு இந்தியா முழுவதும் பொருட்களை அனுப்ப வேண்டியுள்ளது. இதனால் இந்த அமேசான் நிறுவனம் இந்திய ரெயில்வே உடன் ஒரு ஒப்பந்தம் செய்துக் கொண்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தப்படி மும்பை ராஜதானி மற்றும் ஷீல்தா ராஜதானி ஆகிய இரு ரெயில்களில் அமேசான் நிறுவனத்துக்கு 2.5 டன் எடை எடுத்துச் செல்லக்கூடிய சரக்கு பெட்டிகள் ஒதுக்கப்பட உள்ளன. 
  • இதில் அமேசான் நிறுவனப் பொருட்களை மட்டும் அந்த நிறுவனம் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த ஒப்பந்தம் 1 மாதத்துக்குப் போடப்பட்டுள்ளது. இது விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தில் சரக்குகளை ஏற்றுவது மற்றும் அமேசான் நிறுவனத்தின் பொறுப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரெயில்வே சுமை ஏற்றுவோர் சங்கம் அதிருப்தி அடைந்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் இப்பிரிவை எதிர்த்து சங்கத்தின்சர்பில் வரும் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆம் தேதிகளில் வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.
விமானங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறது இந்தியா
  • விமானங்களைத் தாக்கி அழிக்கும் ஆர் 27 வகை ஏவுகணைகளை, ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
  • இந்த வகை ஏவுகணைகளை எஸ்யு-30 மற்றும் சுகோய் ரக விமானங்களில் இருந்து ஏவ முடியும். நீண்ட தூரத்தில் செல்லும் எதிரி விமானங்களையும் இந்த ஏவுகணை மூலம் தாக்கி அழிக்க முடியும். இந்திய விமானப்படையின் தரத்தை மேலும் உயர்த்த ஏவுகணைகள் வாங்கப்பட இருப்பதாக ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • கடந்த 50 நாட்களில் இந்திய விமானப்படைக்காக 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கும் மேல் போர் உபகரணங்கள் வாங்குவதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1000 ஆண்டு பழமையான இந்துக் கோயில் பாகிஸ்தானில் மீண்டும் திறப்பு
  • பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில சியால்கோட் நகரத்தில் கடந்த 72 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்தது 1000 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயில் ஒன்று.
  • கடந்த 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக பாகிஸ்தானில் நடந்த கலவரத்தில் அந்தக் கோயில் சேதப்படுத்தப்பட்டது. அதிலிருந்து பக்தர்கள் யாரும் அந்தக் கோயிலுக்கு செல்வதில்லை.
  • ஷவாலா தேஜா சிங் கோயில் என்றழைக்கப்படும் இந்தக் கோயிலை கட்டியவர் சர்தார் தேஜா சிங். நாட்டுப் பிரிவினையின்போது இந்தக் கோயில் மூடப்பட்டது.
  • இதனிடையே இந்தக் கோயிலை மீண்டும் திறந்து புனரமைப்பு செய்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்க முடிவுசெய்தார் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான்.



12 மணிநேரம் 35 கோடி மரங்களை நட்டு சாதனை படைத்த எத்தியோப்பிய மக்கள்
  • கிழக்கு ஆப்ரிக்காவில், மக்கள் தொகை அதிகம் கொண்ட 2வது நாடாக எத்தியோப்பியா திகழ்கிறது. இதன் வனப்பகுதி அண்மைக்காலத்தில் வேகமாக சுருங்கி வரும் நிலையில், மழைக்காலத்துக்கு முன் 400 கோடி மரக்கன்றுகளை நட எத்தியோப்பிய அரசு திட்டமிட்டுள்ளது.
  • அதன்படி நேற்று, எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமது தலைமையில் 'பசுமை மரபு' என்ற பெயரில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு 12 மணிநேரத்தில் சுமார் 35 கோடி மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்தனர்.
மலேசியாவின் புதிய மன்னராக அல்-சுல்தான் அப்துல்லா முடிசூட்டப்பட்டார்
  • மலேசியாவில் மன்னரின் முடியாட்சியின் கீழ், கூட்டாட்சி முறையிலான அரசியல் சட்டம் அமலில் உள்ளது. இங்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது தலைமையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசை நிர்வகித்து வருகின்றனர்.
  • இந்நிலையில், மலேசியாவில் கடந்த 2016ம் ஆண்டு மன்னர் பொறுப்பேற்ற 5வது சுல்தான் அகமது, காரணம் எதுவும் தெரிவிக்காமல் கடந்த ஜனவரி மாதம் பதவியை ராஜினாமா செய்தார்.
  • தொடர்ந்து புதிய மன்னராக, மலேசியாவின் 9 மாநிலங்களை ஆளும் அரச குடும்பத்தினர்களில் ஒருவரான அல் சுல்தான் அப்துல்லா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
  • அதன்படி மலேசியாவின் 16வது மன்னராக அவர் முடிசூட்டப்பட்டார். இதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் பங்கேற்றிருந்தனர்.
உலக அளவிலான போர்களில் 12,000 குழந்தைகள் பலி ஐ.நா அதிர்ச்சி ரிப்போர்ட்
  • போர் நடந்து வரும் இந்த நாடுகளில் கடந்த 2018ம் ஆண்டு நடைப்பெற்ற போர் மற்றும் உள்நாட்டு கலவரங்களில் பலியான குழந்தைகள் பற்றி ஐ.நா. ஆய்வு செய்துள்ளது. 
  • இந்த ஆய்வின்படி 'கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் சிரியா, ஏமன், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
  • இது ஒருபுறம் என்றால் குழந்தைகள் வேறு பல்வேறு விதங்களிலும் துன்புறுத்தப் படுகிறார்கள். பாலியல் ரீதியாக துன்புறுத்தல் மற்றும் பள்ளிகள், மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள், குழந்தைகளை கடத்தி கிளர்ச்சியாளர்களாக பயன்படுத்துதல் போன்று எண்ணற்ற கொடுமைகளுக்கு குழந்தைகள் ஆளாக்கப்படுகிறார்கள் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.
ஜெர்மன் கிராண்ட்பிரி கார் பந்தயம் பெல்ஜியம் வீரர் சாம்பியன் ஆனார்
  • நடப்பு சீசனில் 11வது போட்டியாக ஹாக்கென்ஹீமில் நடைபெற்ற இப்பந்தயத்தில் முன்னணி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு கார்களை இயக்கினர். போட்டஸ், ரிக்கியார்டோ உள்ளிட்ட 6 வீரர்களின் கார்கள் பழுது ஏற்பட்டதால் பாதியிலேயே வெளியேறினர்.
  • ரெட்புல் அணியின் வெர்ஸ்டா சிறப்பாக காரை இயக்கி ஒரு மணி 44 நிமிடம் 31 வினாடிகளில் இலக்கை அடைந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். நடப்பு சாம்பியனான ஹாமில்டன் கடுமையாகப் போராடியும் 9வது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel