Type Here to Get Search Results !

21st MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

சிதிலமடைந்த சிவன் கோயிலில் சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு
  • வந்தவாசி அருகே சிதிலமடைந்த சிவன் கோயிலில் 12-ஆம் நூற்றாண்டு சோழர் கால கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
  • திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட கீழ்வில்லிவலம் கிராமத்தின் கிழக்குப் பகுதியில் சிதிலமடைந்த நிலையில் சிவன் கோயில் உள்ளது. இந்தக் கிராம மக்கள் கோயிலை அண்மையில் சுத்தம் செய்தபோது அங்கு கல்வெட்டுகள் இருப்பது தெரிய வந்தது. 
  • இந்தக் கோயிலின் வடக்கு அடித்தளப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குலோத்துங்க சோழர் காலத்து கல்வெட்டு சிதிலமடைந்து இருந்தாலும், அதில் கிடைக்கப் பெற்ற 13 வரிகளில் கோயிலுக்கு நிலதானம் அளிக்கப்பட்ட செய்தி தெரிய வருகிறது. 
  • மேலும், இந்தக் கோயிலின் சிதிலமடைந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 18 வரிகள் கொண்ட மற்றொரு கல்வெட்டில் தாமல் வெங்கடப்பர் நாயக்கர் என்பவர் ஏரி மீன்கள் மூலம் வரும் வருவாயில் ஏரிக்கரையில் பனைமரம் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 
  • இதன் காலம் கி.பி. 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். மேலும், மற்றொரு கல்வெட்டின் காலம் கி.பி.18-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். 
3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல் திட்டைகள் கண்டெடுப்பு
  • புதுக்கோட்டை அருகே மலைடிப்பட்டி கிராமத்தில் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஏழு கல் திட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • மலையடிப்பட்டி நெடுமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் மேலச்சுங்காடு மொக்காண்டி கொம்படி ஆலயம் பெருங்கற்கால நினைவுச் சின்னமான கல்வட்டத்தின் மையத்தில் அமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது. 
  • கோயிலின் முக்கிய வழிபாட்டுப் பகுதியில் இருந்த கல்வட்டம் மற்றும் கல்திட்டை முழுமையாக அகற்றப்பட்டு, அதில் இருந்த கற்பலகைகள் கோயிலுக்கு நேர் எதிர்புறத்தில் கிடத்தப்பட்டு பலி பீடமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதன் அருகில் இருக்கும் 2 கல் வட்டங்கள் முழுமையாக சிதைக்கப்படாமல் கல்லறை போன்ற அமைப்புகளுடன் உள்ளது. 
  • இதன் மையப்பகுதியில் மரங்கள் மற்றும் கொடிகள் மிகுந்து அடர்த்தியாகக் காணப்படுகிறது. இத்தகைய வழிபாட்டு முறை கோயில் கட்டுமான அமைப்புகளுக்கும் உருவ வழிபாட்டுக்கும் முந்தையது என மூத்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பெரும்பாலும் வட மாவட்டங்களைப் போல தென்மாவட்டங்களில் பெருங்கற்கால சின்னங்கள் வழிபாட்டில் காணப்படுவதில்லை. 
  • ஆனால் கொம்படி வேல் வழிபாடும், சுடுமண் சிற்ப வழிபாடும் மிகுதியாக உள்ளன. நெடுங்கல் வழிபாடு, கல் திட்டை வழிபாடு உள்ளிட்ட வழிபாட்டு முறைகள் பெரும்பாலும் அற்றுப்போய் கோயில் கட்டுமானங்களாக மாறி விட்ட நிலையில் இக்கோயிலில் மட்டும் கல் வட்டம், கல் திட்டை வழிபாட்டில் உள்ள நிகழ்காலச் சான்றாக உள்ளது.
  • ஏழு கல்வட்டங்கள் முழுமையாகவும், பகுதியளவு சிதைந்த நிலையில் கல்வட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான கல்வட்டங்களில் இரும்புத் தாது கற்களான லேட்டரைட் எனப்படும் செம்புராங்கற்கள் கொண்டு வட்ட வடிவில் அடுக்கப்பட்டு உள்ளன. கல்வட்டத்தின் மையத்தை விட்டு சற்று விலகலாக கிழக்குப்புற விளிம்புப் பகுதியில் கருங்கல்லினாலான நான்கு பலகைக் கற்களை இணைத்து சதுர வடிவிலான கல்லறை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 



எவரெஸ்டில் 24 முறை ஏறி நேபாள வீரர் உலக சாதனை
  • காத்மாண்டு இமயமலையில் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 24 முறை ஏறி நேபாள வீரர் காமி ரிடா ஷெர்பா உலக சாதனை படைத்துள்ளார்.இமயமலையில் உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. 
  • கடல் மட்டத்திலிருந்து 8848 மீட்டர் உயரத்தில் எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது.நேபாளத்தை சேர்ந்த மலையேறும் வீரர் காமி ரிடா ஷெர்பா 50. இவர் ஏற்கனவே 22 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளார். 23வது முறையாக கடந்த 15ல் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.
  • இந்நிலையில் இந்திய காவல்துறையை சேர்ந்த மலையேறும் குழுவினருடன் எவரெஸ்ட் சிகரத்துக்கு ஷெர்பா மீண்டும் புறப்பட்டார். நேற்று காலை 6:38 மணிக்கு இந்திய குழுவினருடன் எவரெஸ்ட் சிகரத்தை சென்றடைந்தார்.இதையடுத்து 24வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி ஷெர்பா உலக சாதனை படைத்துள்ளார்.
அதிக லாபம், டர்ன் ஓவர்: இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமானது ரிலையன்ஸ்
  • மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த 2018-19-ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தைக் காட்டிலும் அதிக லாபம் ஈட்டி, இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்.
  • கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டர்ன் ஓவர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corporation - IOC) நிறுவனத்துடன் ஒப்பிடுகையில், அதில் பாதியளவே இருந்தது. ஆனால், அதற்குப் பின்னர் அந்த நிறுவனம் தொலைத் தொடர்பு, சில்லறை விற்பனை, டிஜிட்டல் சேவை எனப் பல தளங்களில் தனது தொழிலை விரிவுபடுத்தி, பெரிய நிறுவனமாக உருவெடுத்தது.
  • இந்த நிலையில், கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த 2018-19-ம் நிதியாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 6.23 லட்சம் கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்துள்ளது. அதே சமயம் ஐஓசி நிறுவனம் 6.17 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கே டர்ன் ஓவர் செய்துள்ளது.
டெஸ்லாவுடன் கைகோக்கும் அசோக் லேலாண்ட்! - சென்னையில் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கத் திட்டம்
  • அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய அசோக் லேலாண்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தேசிய இளையோர் கூடைப்பந்து: ஆடவர் பிரிவில் ஹரியாணா, மகளிர் பிரிவில் கேரளம் சாம்பியன்
  • கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான 16 வயதுக்கு உட்பட்டோருக்கான 36-ஆவது தேசிய இளையோர் கூடைப்பந்து இறுதி ஆட்டத்தில் ஆடவர் பிரிவில் ஹரியாணா அணியும், மகளிர் பிரிவில் கேரள அணியும் சாம்பியன் பட்டம் வென்றன. 
  • மகளிர் பிரிவுக்கான இறுதி ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கேரள அணி 80-69 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழக அணியைத் தோற்கடித்தது. முன்னதாக 3 மற்றும் 4 ஆம் இடங்களுக்கான மகளிர் பிரிவு ஆட்டத்தில் 48 புள்ளிகள் பெற்று ராஜஸ்தான் அணி 3 ஆவது இடத்தையும், 47 புள்ளிகள் பெற்று பஞ்சாப் அணி 4 ஆவது இடத்தையும் பிடித்தன.
  • ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஹரியாணா அணி 81- 74 என்ற புள்ளிகள் கணக்கில் கேரள அணியை வீழ்த்தியது. ராஜஸ்தான் அணி 3 ஆவது இடத்தையும், கர்நாடகம் அணி 4 ஆவது இடத்தையும் பிடித்தன. 
  • இதில் ஆடவர் பிரிவில் வெற்றி பெற்ற ஹரியாணா அணிக்கு ரூ.1.5 லட்சமும், இரண்டாம் இடம் பிடித்த கேரள அணிக்கு ரூ.1 லட்சமும், மூன்றாம் இடம் பிடித்த ராஜஸ்தான் அணிக்கு ரூ.50 ஆயிரமும், பரிசுக் கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
  • மகளிர் பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்த கேரளா, தமிழகம், ராஜஸ்தான் அணிகளுக்கும் பரிசுத் தொகை, கோப்பைகள் வழங்கப்பட்டன. மகளிர் பிரிவில் தமிழக அணியைச் சேர்ந்த வீராங்கனை சத்யாவுக்கு பிராமிசிங் பிளேயர் விருது வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள், வீராங்கனைகள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.



ரயில் பெட்டி தொழிற்சாலைகளின் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.2,500 கோடி ஒதுக்க திட்டம்
  • ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலைகளின் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.2,500 கோடி ஒதுக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. 
  • இந்திய ரயில்வேயின் தலைசிறந்த ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையாக சென்னை ஐ.சி.எஃப் (இணைப்பு பெட்டி தொழிற்சாலை) விளங்குகிறது. இங்கு தானியங்கி ரயில் பெட்டிகள், சொகுசு ரயில் பெட்டிகள், அதிவேக வந்தே பாரத் விரைவு ரயிலுக்கான ரயில் பெட்டிகள் போன்ற பல்வேறு ரகங்களில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
  • இந்நிலையில், ஐ.சி.எஃப் சார்பில், 60,000-ஆவது ரயில்பெட்டி (தானியங்கி ஆய்வு ரயில்பெட்டி) தயாரிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.எஃப் கடந்த ஆண்டில் (2018-19) 3,262 ரயில்பெட்டிகளைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது.
  • உலகின் மிகப்பெரிய ரயில் பெட்டித் தொழிற்சாலையாக ஐ.சி.எஃப். திகழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிதியாண்டில் (2019-20) 4,000 ரயில்பெட்டிகளைத் தயாரித்து, பழைய சாதனையை ஐ.சி.எஃப். முறியடிக்கும்.
  • ஐ.சி.எஃப். ஆலையில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத ரயில் தில்லி- வாரணாசி இடையே பயணிகள் ஆதரவுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் ரயில்-18 வடிவமைப்பில், குளிர்சாதனவசதி மற்றும் படுக்கை வசதி கொண்ட ரயில்-19 ரயிலை தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரயில்-18 போன்ற 40 ரயில் தொடர்களை ஐ.சி.எஃப். உற்பத்தி செய்ய உள்ளது. ரயில்-18 இன் இயக்கத்தின் போது கால்நடைகள் வந்து மோதி ரயிலின் முன்புறம் சேதம் ஆவதை தவிர்க்க அலுமினியம் கொண்ட வடிவமைப்பு பயன்படுத்தப்படவுள்ளது. 
ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை திட்டம்
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியின் காரணமாக தற்காலிகமாக தங்கியுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த குறிப்பிடத்தகுந்த நபர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கும் திட்டத்தை அமீரகத்தின் துணை அதிபரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தும் அறிவித்தார்.
  • முதல் கட்டமாக 6,800 முதலீட்டாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மொத்தம் 100 பில்லியன் திராம் (₹1.90 லட்சம் கோடி) முதலீடு செய்துள்ளார்கள்.
மிக நீண்ட இஃப்தார் விருந்து: கின்னஸ் புத்தகத்தில் இந்திய தொண்டு நிறுவனம்
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய தொண்டு நிறுவனம் 1 கி.மீ. தொலைவுக்கு மிக நீண்ட இஃப்தார் விருந்தை நடத்தி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
  • ஜோகிந்தர் சிங் சலேரியா என்ற இந்தியர் அபுதாபியில் பிசிடி என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். துபை தொழிற்பூங்காவில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் வளாகத்தில் தினந்தோறும் சைவ இஃப்தார் விருந்து பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
  • இதில், ஏழு வகையான சைவ உணவுகள் பரிமாறப்பட்டன. இதனை உலகிலேயே மிக நீண்ட இஃப்தார் விருந்தாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel