மாற்றுச் சான்றிதழ்களில் சாதியை குறிப்பிடக்கூடாது பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
- பள்ளிக் கல்வி இயக்குநர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும்போது சாதி என்ற இடத்தில் எந்தச் சாதியையும் குறிப்பிடாமல் வருவாய்த்துறை சார்பில் வழங்கப்பட்ட ஆவணத்தில் பார்க்கவும் என குறிப்பிடுமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக தக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
- ஏனெனில் வருவாய்த்துறை வழங்கும் சாதிச் சான்றே இறுதியானதும், ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், பள்ளி மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழை பள்ளிகளில் கைப்பட எழுதி வழங்கத் தேவையில்லை.
- பள்ளிக் கல்வித்துறையின் எமிஸ் இணையதளம் மூலம் மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்து, அதனை பின்னர் தரவிறக்கம் செய்து, தலைமை ஆசிரியர் கையெழுத்துட்டு மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும். அதன்படி வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் மாணவர்களின் சாதியை குறிப்பிட தேவையில்லை.
- இதனால் எமிஸ் இணையதளம் மூலம் இனி வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழ்களில் சாதியின் பெயர் குறிப்பிடப்படாது என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ் சி.இ.ஓ. வினய் துபே ராஜினாமா
- ஜெட் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி வினய் துபே தனது பதவியை ராஜினாமா செய்தார். சொந்த காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்ததாக வினய் துபே தெரிவித்துள்ளார்.
- ஜெட் ஏர்வேஸ் துணை தலைமை நிர்வாக அதிகாரி அமித் அகர்வால் இன்று காலை தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் சி.இ.ஓ.வும் ராஜினாமா செய்துள்ளார்.
வெளிநாட்டு நிதி கணக்குகளை தராததால் இன்போசிஸ் அறக்கட்டளை அங்கீகாரம் அதிரடி ரத்து: மத்திய அரசு நடவடிக்கை
- இன்போசிஸ் அறக்கட்டளை அங்கீகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை, நிதியை பெறுவதற்காக வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
- இதன்படி, வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிதிக்கு ஆண்டு தோறும் வரவு - செலவு கணக்குகளை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்பிக்க வேண்டும்.
- இந்நிலையில், முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இன்போசிஸ் அறக்கட்டளை கடந்த 6 ஆண்டுகளாக தனது வெளிநாட்டு நிதி தொடர்பான வரவு - செலவு கணக்குகளை தாக்கல் செய்யாததால் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது குறித்து கடந்த ஆண்டு இன்போசிஸ் அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் பதில் இல்லை என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை : இலங்கை அதிபர் அதிரடி
- ஈஸ்டர் பண்டிகை நாளில் இலங்கையில் நடந்த பயங்கரவாத குண்டு வெடிப்பை தொடர்ந்து, தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 இஸ்லாமிய அமைப்புகளுக்கு இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேன தடை விதித்துள்ளார்.
- மேலும், அந்த அமைப்புக்கு இலங்கையில் உள்ள தக்ஹீத் ஜமாத் உள்பட சில இஸ்லாமிய அமைப்புகள் உதவி செய்ததும் தெரிய வந்தது.
சர்வதேச கிரிக்கெட் விருது
- சியட் சர்வதேச கிரிக்கெட் விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி சிறந்த வீரர் விருதை பெற்றுள்ளார். நேற்றைய தினம் சியட் சர்வதேச விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது.
- கடந்த 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் சிறப்பாக ஆடிய மொஹிந்தர் அமர்நாத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அந்த விருதினை இந்திய அணியின் மூத்த வீரர் சுனில் கவாஸ்கர் அவருக்கு வழங்கினார்.
- சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது புஜாராவுக்கும், சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருது ரோஹித் ஷர்மாவுக்கும் வழங்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி சிறந்த வீரர் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரர் ஆகிய இரு விருதுகளை பெற்றார்.
- சிறந்த பந்துவீச்சாளராக ஜஸ்ப்ரீத் பும்ரா தெரிவு செய்யப்பட்டார். சிறந்த டி20 வீரருக்கான விருது ஆரோன் பிஞ்ச்சிற்கு வழங்கப்பட்டது.
- சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரருக்கான விருது குல்தீப் யாதவிற்கும் சிறந்த டி20 பந்துவீச்சாளர் விருது ரஷீத் கானிற்கும் வழங்கப்பட்டது. மகளிர் கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா, சிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை விருதைப் பெற்றார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குழு உறுப்பினரான முதல் இந்தியப் பெண்
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இப்போது பெண் நடுவர்களை நியமித்து வருகிறது. சமீபத்தில் சர்வ தேச ஆண்கள் ஒருநாள் போட்டிக்கான நடுவராக கிளேர் போலோசாக் என்பவரை நியமித்தது. தற்போது அவருடன் மற்றொரு ஆஸ்திரேலியாவின் எலாய்ஸ் ஷெர்ல்ட்ன் உள்ளார்.
- இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த ஜி எஸ் லட்சுமி சர்வதேச கிரிக்கெட் கமிட்டி குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இனி சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கான நடுவரகளை தேர்ந்தெடுக்க உள்ளார். ஜி எஸ் லட்சுமி கடந்த 2008-09 ஆம் வ்ருடம் இந்திய பெண்கள் கிரிக்கெட் குழுவின் நடுவராக பணி புரிந்துள்ளார்.
- இந்தக் குழுவில் இவரைத் தவிர லாரென் ஏஜன்பெர்க், கிம் காட்டன், ஷிவானி மிஸ்ரா, சூ ரெட்ஃபெர்ன், மற்றும் ஜாக்குலின் வில்லியம்ஸ் உள்ளிட்ட பெண்கள் உள்ளனர்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகை
- ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் ஜாவத் ஷரீப் இருநாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.ஈரானிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று இந்தியா. கடந்த ஆண்டில் மட்டும் ரூ. 5.9 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
- ஈரான் மீது அமெரிக்க விதித்துள்ள பொருளாதாரத் தடையால் கடந்த 2ம் தேதியிலிருந்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா முற்றிலும் நிறுத்தியது.பொருளாதாரத் தடையால் சர்வதேச நாடுகளின் ஆதரவைத் திரட்டும் நோக்கில் ஈரான் செயல்பட்டு வருகிறது.
- சமீபத்தில் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்ட ஜாவத் ஷரீப் அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சரை சந்தித்துப் பேசினார்.இந்நிலையில் ஜாவத்தின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு ரூ.42 ஆயிரம் கோடி வழங்க சர்வதேச நிதியம் முடிவு
- பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் ரூ.42 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது.
- பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. மந்தமான வளர்ச்சி, உயர் பணவீக்கம் மற்றும் அதிகப்படியான கடன் போன்ற காரணங்களால் பாகிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
- இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் மற்றும் சர்வதேச நிதியத்தின் அதிகாரிகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் சர்வதேச நிதியத்தின் இயக்குநர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.