Tuesday, 2 April 2019

கிராமப்புற மற்றும் நகர்ப்புற துப்புரவு - Rural and Urban Sanitation

நோக்கம்
 • இந்திய மக்கள் தொகையில் பாதிப் பேர் நகர்ப்புற பகுதிகளில் வாழ்வார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. 
 • நகரமயமாக்கல் இந்த அளவுக்கு வேகமாக அதிகரித்து வருவதால், அதனுடன் சேர்ந்து குடிநீர் வினியோகம், கழிவுநீர் அகற்றுதல், குப்பை அகற்றுதல், திறந்தவெளியின்மை, காற்று மற்றும் நீர் மாசு பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன. 
 • இவற்றில் பெரும்பாலான சுற்றுச்சூழல் பிரச்சினைகள் எங்கு தோன்றுகின்றன என்றால் திட்டமிடாமல் நகரங்களை உருவாக்குவதில்தான் தொடங்குகிறது. இதனால் தண்ணிர், நிலம் ஆகியவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு அதனால் பிரச்சினைகள் உருவாகின்றன. 
 • இந்த பிரச்சினைகளில் எந்த பிரச்சினை மிகவும் முக்கியமானது; எது உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்பதில் கூட கருத்தொற்றுமை எட்டப்படுவதில்லை. எனவே, இந்தியாவின் மிகக் கடுமையான நகர்ப்புற சுற்றுச்சூழல் சவால்கள் எவை என்பதை அனுபவ ஆதாரத்துடன் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். 
 • அப்போதுதான் அவை குறித்து கொள்கை வகுப்பாளர்களால் ஆராய முடியும். இந்தக் கட்டுரையின் நோக்கமே இந்தியாவில் நகரமயமாக்கல் நடைமுறை காரணமாக எழுந்துள்ள சவால்கள் மற்றும் நீடித்தல் திறன் தொடர்பான தெளிவான புரிதலை ஏற்படுத்துவதும், இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்த கொள்கை பரிந்துரைகளை அளிப்பதும்தான். 
இன்னும் குறிப்பாக கூறவேண்டுமானால் அவை கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்டிருக்கும்.
 • இந்தியா எதிர்கொள்ளும் முக்கியமான நகர்ப்புற சவால்கள் என்னென்ன என்பதை தெளிவாக விளக்குகிறது.
 • இந்த சவால்களின் தீவிரத் தன்மையை விளக்குவதற்கான அனுபவ ஆதாரங்களை வழங்குகிறது.
 • இந்த சவால்களை சமாளிப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய கொள்கை நடவடிக்கைகள் மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கிறது.
அந்த சவால்கள் குறித்த விவரம் வருமாறு:
நிலப்பயன்பாடு மற்றும் நிலப்போர்வையில் மாற்றம்
 • நகர்ப்புற மக்கள் தொகை அதிகரிக்க, அதிகரிக்க பல்வேறு நகர்ப்புற பயன்பாடுகளுக்கான நிலத்தின் தேவையும் அதிகரித்து வருகிறது. நகர்ப்புறமயமாக்கல் காரணமாக காடுகளை அழிக்க வேண்டியதும், பசுமை நிலங்களை பயன்பாடற்று போகச் செய்வதும், ஈர நிலங்களை காயவைப்பதும், விளைநிலங்களை ஆக்கிரமிப்பதும் அவசியமாகிறது. இது ஒரு மிகப்பெரிய சவாலாகும். 
 • ஏனெனில், இதனால் பசுமைப் போர்வைகள் குறைக்கப்படுகின்றன; படிம எரிபொருட்களின் பயன்பாடும், பசுமை இல்ல வாயுக்களின் வெளியீடும் அதிகரிக்கின்றன. இதனால் புவி வெப்பநிலை அதிகரிக்கிறது.
திடக்கழிவு உருவாக்கம், சேகரிப்பு மற்றும் மேலாண்மை
 • இதுதான் நகர்ப்புற மயமாக்கலின் மிகப் பெரிய சவால் ஆகும். ஏனெனில், தெருக்களின் ஓரத்தில் குப்பைகள் பெருமளவில் போடப்படுகின்றன. காலப்போக்கில் அவை அழுகி விடுகின்றன. 
 • இதுதான் சுகாதாரக் கேடுகளுக்கான முக்கிய ஆதாரமாக உள்ளது. மேலும், இவ்வாறு உருவாகும் திடக் கழிவுகளை சேகரிப்பதற்கும் அகற்றுவதற்கும் சரியான அமைப்புகள் இல்லை.
மோசமான துப்புறவு
 • இதுவும் ஒரு பெரிய சவால்தான். ஏனெனில் இன்னும் பெரும்பாலான மக்கள் திறந்த வெளியில்தான் மலம் கழிக்கின்றனர். இதனால் நிலப்பகுதியும் நிலத்தடி நீர் ஆதாரங்களும் மாசுபடுவதற்கு இது ஒரு ஆதாரமாக உள்ளது.
நிலப்பயன்பாடு மற்றும் நிலப் போர்வையில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் சவால்களின் தீவிரத் தன்மையை விளக்குவதற்கான அனுபவ ஆதாரங்கள்:
 • இந்தியாவில் பெங்களூர் போன்ற நகரங்களில் நிலப்போர்வை குறைந்து வருவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. நகரமயமாக்கலின் விளைவாக நீர்நிலைகளின் பரப்பு 61% குறைந்து விட்டது. 
 • அதுமட்டுமின்றி, 1973ஆம் ஆண்டில் 68% ஆக இருந்த பெங்களூர் மாநகரத்தின் பசுமைப் பரப்பு 2007ஆம் ஆண்டில் 25% ஆக குறைந்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் கட்டுமானப் பரப்புகள் அதிகரித்து விட்டதுதான்.
 • தில்லியிலிருந்து இதே போன்ற ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தில்லி மாநகரம், குறிப்பாக, மேற்கு, கிழக்கு, தென்மேற்கு ஆகிய பகுதிகள் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. 
 • விளிம்பு நிலைப் பகுதிகளில் நகரமயமாக்கல் அதிகரித்து வருவதால் வேளாண் நிலங்களின் பரப்பு 17% குறைந்து விட்டது. வரலாறு காணாத அளவுக்கு வேளாண் நிலப்பரப்பு குறைந்ததற்கு முக்கிய காரணம் என்னவென்றால், நகரமயமாக்கல்தான். 
 • தில்லியின் நுரையீரல் என்று கருதப்படும் வரம்புப் பகுதிகளின் பரப்பும் குறைந்து விட்டது. சட்டவிரோதமாக மரங்களை வெட்டுதல், மணலை தோண்டி எடுத்தல், கட்டுமானப் பணிகள் ஆகியவை தான் இதற்குக் காரணமாகும்.
திடக்கழிவு மேலாண்மை
 • இந்திய நகரங்களிலும் மாநகரங்களிலும், சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கு முக்கியக் காரணமாக இருப்பது திடக்கழிவுகள் தான். 2047ஆம் ஆண்டிற்குள் இந்திய மாநகரங்களில் உருவாகும் திடக் கழிவுகளின் அளவு 5 மடங்கு அதிகரித்து ஆண்டுக்கு 26 கோடி டன் என்ற அளவை எட்டும் என்று எரிசக்தி மற்றும் வள நிறுவனம் மதிப்பிட்டிருக்கிறது. 
 • இதன்மூலம் இன்றைய நிலையில் இந்தியாவில் ஆண்டுக்கு 5 கோடி டன் திடக்கழிவு உற்பத்தியாகிறது என்பதை அந்த அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது. 
 • 2006ம் ஆண்டில் உலக வங்கி நடத்திய ஆய்வில் இந்தியாவில் உருவாகும் கழிவுகளின் அளவு குறைவாகவே, அதாவது ஆண்டுக்கு 3.5 கோடி டன் முதல் 4.5 கோடி டன் வரை, மதிப்பிடப்பட்டிருந்தது. 
 • இதை வைத்துப் பார்க்கும்போது இந்தியாவில் நாள்தோறும் 100,000 - 1,20,000 மெட்ரிக் டன் வரை திடக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படலாம் என மதிப்பிடப்பட்டிருக்கிறது
 • திடக்கழிவுகளை மிக மோசமான முறையில் மேலாண்மை செய்வதால் நிலத்தடி நீர் மாசுப்படும் நிலை உருவாகிறது. திரவ கழிவுகள் கலப்பதன் மூலம் நீர்நிலைகள் மாசுப்படுகின்றன. கழிவுகளை கட்டுப்பாடின்றி எரிப்பதால் காற்றும் மாசுபடுகிறது. 
 • கழிவுகளை பதப்படுத்துவதில் அறிவியல்பூர்வமற்ற முறைகளை கையாள்வதால் திடக்கழிவு மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீமை அதிகரிக்கிறது. இந்திய மாநகரச் சாலைகளில் சேரும் திடக்கழிவுகளில் 30 - 35 விழுக்காடு கழிவுகள் சேகரிக்கப்படுவதில்லை என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. 
 • அதுமட்டுமின்றி பெரும்பாலான நகரங்களிலும் மாநகரங்களிலும் கழிவு அகற்றும் சேவை என்பது பழங்கால முறைகளிலும் போதிய வசதிகள் இல்லாமலும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. 
 • குப்பைகளை சேகரித்தல், பாதுகாப்பற்ற முறையில் அகற்றுதல், போன்றவற்றில் காணப்படும் திறமைக் குறைவுகளின் விளைவாக நாடு முழுவதும் துப்புறவின்மை, அசுத்தமான நீர், கடுமையான சுவாச நோய்கள் மற்றும் எளிதில் பரவும் நோய்கள் ஏற்படுகின்றன.
 • பெரும்பாலான ஊர்கள் குப்பைகளை திறந்தவெளியில் கொட்டும் நடைமுறையையே பின்பற்றுகின்றன. மும்பையில் 100 விழுக்காடு குப்பையும் திறந்தவெளியில்தான் கொட்டப் படுகிறது. தில்லியில் 94 விழுக்காடு குப்பைகள் திறந்த வெளியில் சேமிக்கப்படுகின்றன. 
 • தில்லி, பரிதாபாத், மும்பை, ஜெய்பூர், லக்னோ, லூதியானா, புனே, சூரத் போன்ற நகரங்களில் அதிக அளவில் குப்பைகள் உருவாகின்றன. இந்த நகரங்களில் உருவாகும் குப்பைகளில் 80 விழுக்காட்டிற்கும் கூடுலானவை திறந்தவெளி குப்பை கிடங்குகளில்தான் கொட்டப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 • துப்புரவு இந்தியாவின் நகர்ப்புறங்களில் திறந்தவெளியில் மலம் கழிப்பது பரவலாகக் காணப்படுகிறது. இந்தியாவிலும் பிற வளரும் நாடுகளிலும் இது சாதாரணமான ஒன்றாகும். இந்தியாவில் பல கோடி நகர்ப்புற வீடுகளில் கழிப்பறை வசதிகள் இல்லை. 
 • இதனால் அவர்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கின்றனர். சில நகர்ப்புற குடும்பங்கள் சமுதாய கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றன. மேலும் சில குடும்பங்கள் கூட்டுக் கழிப்பறைகளை பயன்படுத்துகின்றன. நகர்ப்புறங்களில் உற்பத்தி செய்யப்படும் மனித கழிவுகளில் 37 விழுக்காட்டிற்கும் அதிகமான அளவு பாதுகாப்பற்ற முறையில் அகற்றப்படுகிறது. 
 • இதனால்தான் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 60 விழுக் காட்டிற்கும் கூடுதலான அளவை பங்களிக்கும் நகர்ப்புற பகுதிகளில் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான செலவு அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். மோசமான துப்புரவு காரணமாக நகர்ப்புற ஏழைகளில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
நிலப்பயன்பாடு
 • நிர்வாகம் வெளிப்படைத் தன்மை சுற்றுச்சூழல் மற்றும் வனத்தை பாதுகாப்பதில் பங்கேற்றல் ஆகியவற்றுக்கான பணிக்குழு ஒன்று கடந்த 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மத்திய திட்ட ஆணையத்தால் அமைக்கப்பட்டது. 
இப்பணிக்குழுவின் முக்கிய பரிந்துரைகள்:
 • தேசிய நிலப் பயன்பாட்டு வாரியத்தை மீண்டும் முழு அளவில் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
 • நாடு முழுவதும் உள்ள நிலம் மற்றும் தண்ணிர் வளங்களை பாதுகாப்பதற்கான நடைமுறை, அவற்றின் பயன்பாட்டை நீடிக்கச் செய்வதற்கான நடைமுறை ஆகியவற்றுக்கு வழிகாட்டும் அளவிலான கொள்கை மற்றும் திட்டங்களை வகுக்கும் பொறுப்பை அந்த அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்.
 • இத்தகைய நிலம் மற்றும் நீர் பயன்பாட்டிற்கான தேசீய கொள்கை மற்றும் திட்டம் உருவாக்கப்படுவதை முறையான சட்டத்தின் மூலம் கட்டாயமாக்க வேண்டும்.
 • பல்லுயிர் வாழிட பாதுகாப்பு, உள்ளூர் மக்களின் குடியிருப்பு மற்றும் வாழ்வாதாரம் பயன்பாடு, சமுதாய மக்களின் வணிக பயன்பாடு உள்ளிட்ட குறிப்பிட்ட பயன்பாடுகள் தொழில் மற்றும் நகர்ப்புற பயன்பாடுகள் ஆகியவற்றை குறிப்பிட்டு அதற்கான வரைப்படங்களும் உருவாக்கப்பட வேண்டும்.
 • சூழலியல் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் வாழ்நிலையை சார்ந்திருக்கும் உயிரினங்களின் வாழ்வாதார பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்ய முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
 • 'அ' முதல் 'ஈ' வரையிலான பிரிவு நிலங்களை, தொழிற்சாலைகள் கட்டமைப்பு வசதிகள், வணிக மேம்பாடு ஆகியவற்றுக்கு உட்படுத்தக்கூடாது, மாறாக அடிப்படை வாழ்வாதாரத்திற்கும் குடிமக்களுக்கு வளர்ச்சி வசதிகளை செய்து தருவதற்கும் பயன்படுத்த வேண்டும்
 • தீவிர பல்லுயிர் வாழ்நிலை பாதுகாப்புக்கு மிகவும் அவசியமான பகுதிகள் (உதாரணம் : தற்போதுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகள், சமுதாய பாதுகாப்புப் பகுதிகள், உயிர் மண்டல சரணாலயங்கள், சூழலியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள்)
 • உள்ளூர் மயமாக்கப்பட்ட பல்லுயிர் வாழ்நிலை பாதுகாப்பு, நீடித்த வேளாண் அமைப்புகள், மாநில, மத்திய உணவு பாதுகாப்பு ஆகியவற்றுக்கு மிகவும் அவசியமான பகுதிகள்.
 • நீர் ஒடும் பகுதிகள் நீர்ப்பிடிப்பு பகுதிகள், மண் வளம், கடலோரப் பாதுகாப்பு, மற்றும் பிற பயன்பாடுகளுக்கான (ஆறுகள் உருவாவதற்கான ஆதாரங்கள், ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள், மாங்ரோ காடுகள், பவழப் பாறைகள், அதிகளவு தண்ணிரை தேக்கி வைக்கும் மற்றும் சேமித்து வைக்கும் திறன் கொண்ட அடர்த்தியான காடுகள், புல்வெளிகள்)
 • இயற்கை வளங்களின் பயன்பாடு மற்றும் தொடர்ந்து வெட்டியெடுப்பதற்கும் கலாச்சார / வாழ்வாதார பாதுகாப்புக்கும் முக்கியமான பகுதிகள். இவற்றில் வளம் ஈர நிலம், கடல், புல்வெளிகள், வேளாண் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் மற்றும் பிற சூழல் அமைப்புகள் அடங்கும். இவற்றில் பாரம்பரியமாக ஒரு பகுதியில் வாழும் மக்களின் வசிக்கும் மற்றும் வாழ்வாதார தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
 • மேற்கூறப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகள் இவை தொழிற்சாலைகளுக்கான மூலப் பொருட்களை தயாரிப்பதற்கும், தொழிற்சாலைகளை அமைப்பதற்கும், நகரமயமாக்கலை விரிவுப் படுத்துவதற்கும், கட்டமைப்பு மேம்பாட்டிற்கும், பிற நீர் நில மேம்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுபவையாக இருக்கலாம்.
 • பல்வேறு வகையான நில, நீர் பயன்பாடுகளை தாண்டி சில இடங்களில் மாநில எல்லைகளைக் கடந்து பல்லுயிர் வாழிட பகுதிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெரிய அளவிலான சூழல் மண்டலங்கள் இவற்றில் உயிரி மண்டல சரணாலயங்கள் ஆற்றுப்படுகைகள் ஆகியவையும் அடங்கும். தேசிய அளவிலும் மாநில அளவிலும் இந்த பகுதிகள் தெளிவாக பிரித்து வரையறுக்கப்பட வேண்டும். இவற்றை குறிக்கும் வகையிலான நில / நீர் பயன்பாட்டு அட்லஸ் உருவாக்கப்பட வேண்டும்.
 • நில, நீர்ப் பயன்பாட்டிற்கான தேசிய கொள்கை மற்றும் திட்டம் என்பது இதில் சம்பந்தப்பட்ட பல்வேறு வகையான பங்குதாரர்கள் மற்றும் உரிமைதாரர்களுடன் விரிவான முறையில் கலந்தாலோசனைகள் நடத்தி உருவாக்கப்பட வேண்டும். நுண்ணிய அளவிலும் பெரிய அளவிலும் சமுதாயம் சார்ந்த இயற்கை வள வரைபடம் தயாரிப்பு ஊக்குவிக்கப்பட வேண்டும்.
திடக்கழிவுகள்
 • திடக்கழிவு மேலாண்மையில் விரும்பத்தக்க அளவிலான சேவை அளவு என்ன என்பதை பரிந்துரைக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. நகரப்பகுதிகளில் உருவாகும் கழிவுகள் முழுவதையும் சேகரித்து முழுமையாக அகற்ற வேண்டும் என்று பல்வேறு குழுக்கள் பரிந்துரைத்துள்ளன. 
 • 100 விழுக்காடு குப்பைகளை அகற்ற வேண்டும் என்ற யோசனையை செயல்படுத்துவதற்காக இந்தியாவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட திடக்கழிவு மேலாண்மை மற்றும் கையாளும் விதிகள் வழங்குகின்றன.
வழிகாட்டி விதிமுறைகள்
 • மட்கக்கூடிய கழிவுகளை போடுவதற்காக ஒரு தொட்டியும், மறுசுழற்சி செய்யும் கழிவுகளைப் போடுவதற்காக இன்னொரு தொட்டியும் வைத்து கழிவுகளை அதன் ஆதாரத்திலேயே சேகரிப்பதை உறுதி செய்வதன் மூலம் சாலைகளிலும் தெருக்களிலும் குப்பை சேர்வதை தடுத்தல்.
 • முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட நேர அட்டவணைப்படி ஒவ்வொரு வீட்டிற்கும் தினந்தோறும் சென்று மட்கக்கூடிய மற்றும் மட்காத குப்பைகளை சேகரித்தல்.
 • அனைத்து நாட்களிலும் அனைத்து குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளிலும் தெருக் கூட்டுதல்.
 • திறந்த நிலையில் உள்ள திடக்கழிவு குப்பைத் தொட்டிகளை அகற்றிவிட்டு மூடப்பட்ட குப்பைத் தொட்டிகளை வைத்தல்.
 • குப்பைகளை மூடப்பட்ட ஊர்திகள் மூலம் பாதுகாப்பான முறையில் தினமும் அகற்றுதல்.
 • மட்கக்கூடிய கழிவுகளை சுத்திகரித்தல்.
 • குப்பை கிடங்குகளுக்குச் செல்லும் குப்பையின் அளவை பெருமளவு குறைத்தல்.
உலக வங்கியில் உள்ள டாசூயெட்அல் நடத்திய ஆய்வின்படி
 • இந்தியாவில் உருவாகும் திடக் கழிவுகளில் சுமார் 55 விழுக்காடு இயற்கை கழிவுகள் என்றும் அவற்றை மட்க வைத்து உரமாக மாற்றலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். 
 • மேலும் 15 விழுக்காடு கழிவுகளை மறுசுழற்சி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். 2012ம் ஆண்டில் சுற்றுச்சூழல் வல்லுநர் கவுசல் இது தொடர்பாக வெளியிட்ட ஆய்வறிக்கையில், வெளிநாடுகளில் உள்ள கழிவிலிருந்து எரிசக்தி தயாரிக்கும் ஆலைகள் திடக்கழிவு மேலாண்மைக்கு பெருமளவில் உதவி செய்கின்றன என்றும் இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு குறைந்த அளவே பாதிப்புகள் ஏற்படுகின்றன என்றும் குறிப்பிட்டிருந்தார் . 
 • அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் நகரில் உள்ள சேமாஸ் (SEMASS) என்ற கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையை அவர் உதாரணமாக காட்டியிருந்தார். 
 • இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் டன் திடக்கழிவை பயன்படுத்தி 60 கோடி கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், 40 ஆயிரம் டன் உலோகங்கள் மறுசுழற்சி செய்யப்படுவதாகவும் கவுசல் கூறியிருந்தார். 
 • இந்த நடைமுறை மூலம் ஆண்டுதோறும் வெளியாகும் நச்சுக் கழிவுகளின் அளவு அரை கிராமுக்கும் குறைவுதான் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய ஆலைகளை அமைப்பது அனைவருக்கும் பயனளிக்கும் ஒன்றாக இருக்கும். இந்த நடைமுறைகளை இந்தியா தீவிரமாக பின்பற்றலாம்.
 • துப்புரவு ஐக்கிய நாடுகள் அமைப்பில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் உருவாக்கிய புத்தாயிரமாண்டு வளர்ச்சி இலக்குகளின்படி 2025ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட வசதி வழங்கப்பட வேண்டும். 
 • இதன் மூலம் சொல்லப்படுவது என்னவென்றால் மேம்படுத்தப்பட்ட துப்புரவு வசதிகள் இல்லாத வீடுகளுக்கு அந்த வசதிகளை செய்து தர வேண்டும் - திறந்த வெளியில் மலம் கழிக்கும் பகுதிகள் இல்லாத நகரங்களை உருவாக்குவதற்காக பொது இடங்களில் முறையான துப்புரவு வசதிகள் செய்யப்பட வேண்டும்.
தேசிய நகர்ப்புற துப்புரவு கொள்கையின் நோக்கம் 
 • நகர்ப்புற இந்தியாவை முழுமையான துப்புரவு வசதி கொண்ட சுகாதாரமான வாழ்வதற்கு ஏற்ப நகரங்களும் மாநகரங்களும் கொண்ட நாடாக மாற்றுவதுதான். 
கொள்கையின் இலக்குகள்
 • விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் மக்களின் போக்கின் மாற்றத்தை உருவாக்குதல்.
 • திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கம் இல்லாத நகரங்களை உருவாக்குதல். இந்த இலக்கை எட்டுவதற்காக கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கிறது.
தூய்மை இந்தியா- பசுமை இந்தியா
தூய்மை இந்தியா திட்டம்
 • தூய்மை இந்தியா திட்டம் - கிராமப்புறம் 02.10.2014 அன்று தொடங்கப்பட்டது
 • தூய்மையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவை காணவேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் திட்டம்.
இலக்கு
 • 2019 அக்டோபர் 2-ம் தேதிக்குள் திறந்தவெளிக் கழிப்பிடங்களை அகற்றுதல்.
 • திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து (31 மார்ச் 2018 நிலவரப்படி) 6.8 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளில் நவீனக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.
 • 266 மாவட்டங்களில் உள்ள 3.4 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடமற்றவையாக (31 மார்ச் 2018 நிலவரப்படி) மாற்றப்பட்டுள்ளன. 
 • கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 4,464 கிராமங்கள் திறந்தவெளிக் கழிப்பிடமற்றவையாக மாற்றப்பட்டுள்ளன.
 • துப்புரவு பணிகளின் பரப்பு 2014-ல் 38.70% லிருந்து 21.03.2018 நிலவரப்படி 78.98% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 • தனிநபர் கழிப்பறைகளுக்கான ஊக்கத்தொகை ரூ.12,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா கோஷ்
 • கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தூய்மை நிலையை மேம்படுத்த, பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிப்பறைகள் கட்ட முன்னுரிமை.
 • பள்ளிகளில் புதிய கழிப்பறைகள் அமைக்கவும் பயன்படாத கழிப்பறைகளை புதுப்பிக்கவும் ரூ.365 கோடி செலவிடப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா செஸ்
 • தூய்மை இந்தியா திட்டத்திற்காக, தூய்மை இந்தியா என்ற பெயரில் கூடுதல் வரி வசூலிக்கப்பட்டு, இலக்கை அடைய செலவிடப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா நகர்ப்புறம்
 • 4,041 நகரங்கள் மற்றும் நகரப்பகுதிகளை 2019 அக்டோபருக்குள் திறந்தவெளி கழிப்பிடமற்றவையாக மாற்றவும், 100% திடக்கழிவு மேலாண்மைக்காகவும் 02.10.2014அன்று தொடங்கப்பட்டது.
சாதனைகள்
 • 47.10 லட்சம் வீடுகளில் தனிநபர் கழிப்பறைகள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளது.
 • 3.18 லட்சம் சமுதாய மற்றும் பொதுக் கழிப்பறைகள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன.
 • 2679 நகரங்கள் இதுவரை திறந்தவெளி கழிப்பிடமற்றவையாக அறிவிக்கப்பட்டு, 2,133 நகரங்கள் / நகர்ப்புற உள்ளாட்சிகள் திறந்தவெளிக் கழிப்பிடமற்றவையாக, 3-ம் நபர் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.
 • 62,436 நகர்ப்புற வார்டுகள், 100% அளவுக்கு வீடு வீடாக திடக்கழிவுகள் பெறும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
 • கழிவுகளை உரமாக மாற்றும் 145 நிலையங்கள் மூலம் 13.11 லட்சம் டன் உரங்கள் தயாரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
 • கழிவுகளிலிருந்து 88 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
 • பல்வேறு திட்டத்தொகுப்புகள் மூலம் இதுவரை ரூ.6,592 கோடி மாநில அரசுகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
தூய்மையான கல்வி நிலையங்கள்
 • 15.08.2014 முதல் 15.08.2015 வரையிலான ஓராண்டுக் காலத்தில் 2,61,400 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 4,17,796 கழிப்பறைகள் கட்டப்பட்டு இலக்கு முழுமையாக எட்டப்பட்டுள்ளது.
 • நாட்டில் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளான இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள், வனப்பகுதிகள், மலைப்பகுதிகளில் உள்ள தொலைதூரக் குடியிருப்புகள் மற்றும் மக்கள் நெருக்கடி மிகுந்த குடிசைப்பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களும் இதில் அடங்கும்.
 • இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள 11.02 லட்சம் அரசுபள்ளிகளில் பயிலும் 14.31 கோடி மாணவ, மாணவியருக்கு என தனித்தனி கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்வச் ஸ்வஸ்த் சர்வத்ரா
 • தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் காயகல்ப் திட்டங்களின் சாதனைகளுக்கு தூண்டுகோலாக, மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை ஆகியவை இணைந்து ஏற்படுத்திய கூட்டு முயற்சியாகும்.
கிராமப்புற குடிநீர் விநியோகம்
 • கிராமப்புற குடிநீர் விநியோக பரப்பளவு – 01.04.2014 ல் 73.66% ஆக இருந்த குடிநீர் முழுமையாக விநியோகம் செய்யப்படும் குடியிருப்புகளின் எண்ணிக்கை 2017-ல் 78%க்கு அதிகமாக உயர்ந்துள்ளது.
 • 2014-2017 காலக்கட்டத்தில் 2,70,000 குடியிருப்புகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 • கிராமப்புற மக்கள் தொகையில் 56%க்கும் மேற்பட்டோருக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 • 17% வீடுகளுக்கு குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
 • ஆர்சனிக் மற்றும் புளோரைடு கலந்த தண்ணீரால் பாதிக்கப்பட்ட 28,000 குடியிருப்புகளில் 2020-க்குள் தூய்மையான குடிநீர் வழங்கப்படும்.
தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் சார்பு இயக்கம்
 • ஆர்சனிக் மற்றும் புளோரைடு கலந்த தண்ணீரால் பாதிக்கப்பட்ட 28,000 குடியிருப்புகளில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் தூய்மையான குடிநீர் வழங்குதல்.
 • ஆர்சனிக் / புளோரைடு கலந்த தண்ணீரால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளில் தேசிய தண்ணீர் தர நிர்ணய துணைத்திட்டத்தின் கீழ் கவனம் செலுத்துதல்.
கங்கை தூய்மைப்படுத்துதல்
 • தேசிய கங்கை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 31 மார்ச் 2018 வரை, ரூ.20,601.11 கோடி மதிப்பீட்டிலான 193 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 • கங்கை மற்றும் யமுனை ஆற்றங்கரைகளில், 2311.08 எம் எல் டி கழிவுநீர் சுத்திகரிப்புக்கான புதிய அமைப்புகளை ஏற்படுத்தவும், 886.88 எம் எல் டி கழிவு சுத்திகரிப்பு அமைப்புகளை சீரமைக்கவும், 4766 கிலோமீட்டர் தொலைவுக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்ளுதல் / சீரமைக்க, இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 • இதுவரை 20 கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு திட்டங்கள் நிறைவேற்றி முடிக்கப்பட்டு, 262 எம் எல் டி திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன், 379.85 கிலோமீட்டர் தொலைவுக்கு கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது
 • ரூ.1216.41 கோடி மதிப்பீட்டில், 37 கரையோர அடக்க ஸ்தலங்கள் மற்றும் மயானங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 • கரையோரத் தூய்மைப்பணிகளுக்கான ரூ.15 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்
 • நதிகளின் மேற்பரப்பை தூய்மைப்படுத்துவதற்கான ரூ.55.24 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்முயற்சிகள்
 • அனைத்து சுற்றுச்சூழல் ஒப்பளிப்புகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.
 • நாடு முழுவதும் உள்ள பெரிய நகரங்களில் காற்றின் தரத்தை பரிசோதிக்க, தேசிய காற்று தர நிர்ணய அட்டவணை முறை 06 ஏப்ரல் 2015 அன்று தொடங்கப்பட்டுள்ளது.
 • கழிவு மேலாண்மைக்கான ஆறு ஜோடி விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • 2015 டிசம்பரில் பாரீசில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டை ஒட்டி, தேசிய அளவிலான தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளுக்கான நோக்கத்தை இந்தியா அறிவித்தது.
 • புலிகள் பாதுகாப்பு அமைப்பினரால் பரிந்துரைக்கப்பட்ட புதிய வழிமுறைகளைப் பின்பற்றி, நாடு முழுவதும் உள்ள புலிகளின் நிலை, இணை விலங்குகள் மற்றும் அவற்றுக்கான இரை பற்றிய 3-வது மதிப்பீடு ஜனவரி 2015-ல் வெளியிடப்பட்டது.
 • 2010 கணக்கெடுப்பின் போது 1,706 புலிகள் என்ற நிலையை ஒப்பிடுகையில், 2014 கணக்கெடுப்பின் போது 2,226 புலிகள் கண்டறியப்பட்டிருப்பதன் மூலம் நாடு முழுவதும் உள்ள புலிகளின் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
உஜாலா (அனைவருக்கும் குறைந்த விலையில் எல் இ டி பல்பு வழங்கும் உன்னத் ஜோதி திட்டம்)
 • 05.01.2015 அன்று தொடங்கப்பட்டது.
 • 29.83 கோடிக்கும் மேற்பட்ட எல்இடி பல்புகள் விநியோகம்
 • மின்சார சேமிப்பு ஆண்டுக்கு – 38743 மில்லியன் kWh
 • மிச்சப்படுத்தப்பட்ட செலவுத்தொகை ஆண்டுக்கு ரூ.15,497 கோடி
 • கரியமில வாயு வெளியேற்றம் குறைப்பு ஆண்டுக்கு 3,13,82,026 டன்
 • நெரிசல் நேர தேவை தவிர்ப்பு – 7,757 MW

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a comment