Type Here to Get Search Results !

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு / Association of Southeast Asian Nations (ASEAN)

  • தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (Association of Southeast Asian Nations) அல்லது ஆசியான் (ASEAN) என்பது தென்கிழக்காசியாவின் 10 நாடுகளின் பொருளாதார, மற்றும் புவியியல் சார்ந்த அரசியல் கூட்டமைப்பு ஆகும். இதனை ஆகஸ்ட் 8, 1967 இல் இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து அமைத்தன.
  • அதன் பின்னர் புரூணை, மியான்மர், கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாம்ஆகிய நாடுகள் இக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்டன. பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தல், உறுப்பு நாடுகளிடையே சமூக, மற்றும் பண்பாட்டு உறவுகளைப் பேணல், பிராந்தியத்தில் அமைதி பேணல், உறுப்பு நாடுகளுக்கு ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பத்தை வழங்குதல் என்பன இவ்வமைப்பின் முக்கிய குறிக்கோள்களில் அடங்குகின்றன.
  • ஆசியான் அமைப்பானது 4.46 மில்லியன் km2 நிலப் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. இது மொத்த உலகின் பரப்பளவின் 3% ஆகும். இப் பிராந்தியத்தின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 600 மில்லியனாக உள்ளது. இது மொத்த உலகின் மக்கள் தொகையின் 8.8% ஆகும். 
  • ஆசியான் அமைப்பின் கடற் பரப்பளவானது இதன் நிலப் பரப்பளவை விட மூன்று மடங்கு பெரியதாகும். 2011 ஆம் ஆண்டு இவ்வமைப்பின் ஒருங்கிணைந்த மொத்தத் தேசிய உற்பத்தியானது 2 டிரில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக வளர்ச்சியடைந்தது. 
  • ஆசியான் அமைப்பை தனி அமைப்பாகக் கருதினால், இது உலகின் எட்டாவது மிகப்பெரிய பொருளதார அமைப்பாகக் காணப்படும்.
வரலாறு
  • ஆசியான் கூட்டமைப்பிற்கு முன்னர் தோற்றம் பெற்ற அமைப்பே "தென்கிழக்கு ஆசியக் கூட்டமைப்பு" (Association of Southeast Asia) ஆகும். இது பொதுவாக ASA என அழைக்கப்பட்டது. 
  • இக் கூட்டமைப்பு பிலிப்பீன்சு, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கி 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பாங்கொக்கிலுள்ளதாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சரகத்தில் ஒன்றுகூடி "ஆசியான் பிரகடனத்தில்" கையெழுத்திட்டதன் மூலம் ஆசியான் கூட்டமைப்பு 1967 ஆகத்து 8 இல் நிறுவப்பட்டது. 
  • இந்த ஆசியான் பிரகடனமே பொதுவாக "பாங்கொக் பிரகடனம்" என அழைக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் ஆடம் மாலிக், பிலிப்பீன்சின் நார்க்கிசோ ராமொஸ், மலேசியாவின் அப்துல் ரசாக், சிங்கப்பூரின் சி. இராசரத்தினம் மற்றும் தாய்லாந்தின் தனட் கோமன் ஆகிய இந்த ஐவரே இப்பிரகடனத்தில் கையெழுத்திட்ட வெளியுறவுத்துறை அமைச்சர்களாவார். 
  • இவர்களே இந்த ஆசியான் கூட்டமைப்பின் நிறுவுனர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
நோக்கங்கள்
  • கூட்டு முயற்சிகளின் மூலம் தென்கிழக்காசிய_நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை அதிகரித்தலும் சமூக கலாச்சார மேம்பாட்டை ஏற்படுத்துதலும்.
  • நீதிக்கும் சட்டத்திற்கும் மதிப்பளிப்பதன் மூலமும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் கொள்கைகளை கடைபிடிப்பதன் மூலமும் பிராந்தியத்தில் சமாதானத்தையும் உறுதிப்பாட்டையும் ஏற்படுத்துதல்.
  • தீவிர ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவியின் மூலம் பொருளாதார, சமூக, கலாச்சார, தொழில்நுட்ப, அறிவியல் மற்றும் நிர்வாகத் துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்துதல்.
  • கல்வி, தொழில், தொழில்நுட்ப, மற்றும் நிர்வாகத் துறைகளில், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வசதிகளை ஏற்படுத்தி ஏனைய நாடுகளுக்கு உதவுதல்.
  • அவர்களின் விவசாயம் மற்றும் கைத்தொழிற் பயன்பாடு, வர்த்தகத்தினை விரிவாக்குதல், போக்குவரத்து வசதியை மேம்படுத்துதல், தொடர்பாடல் வசதிகளை ஏற்படுத்துதல் என்பவற்றில் கூடிய கவனமெடுத்தல்.
  • தென்கிழக்கு ஆசிய கற்கைநெறிகளை மேம்படுத்துதல்.
  • சமமான நோக்கங்களைக் கொண்ட சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புக்களுடன் நெருக்கமான நன்மைமிக்க உறவுகளை ஏற்படுத்துதல்.
தொடர்ந்த விரிவாக்கம்
  • புரூணை நாடானது 1 ஜனவரி 1984 இல் சுதந்திரமடைந்ததன் பின்னர் ஒரு வாரத்தில் 8 ஜனவரி 1984 இல் இக்கூட்டமைப்புடன் ஆறாவது உறுப்பினராக இணைந்துகொண்டதன் மூலம் இக் கூட்டமைப்பின் வளர்ச்சி ஆரம்பித்தது.
  • 28 ஜூலை 1995 இல் வியட்நாம் இக்கூட்டமைப்புடன் ஏழாவது உறுப்பினராக இணைந்துகொண்டது.
  • வியட்நாம் இணைந்து இரண்டு வருடங்களின் பின்னர் 23 ஜூலை 1997 இல் லாவோஸ் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகள் ஆசியான் கூட்டமைப்பில் இணைந்துகொண்டன.
  • கம்போடியாவும் லாவோஸ் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளுடன் ஆசியான்கூட்டமைப்பில் இணைந்துகொள்ள இருந்த போதிலும் அந்நாட்டின் உள்நாட்டு அரசியல் போராட்டத்தின் காரணமாக இணைந்துகொள்ள முடியவில்லை. பின்னர் 30 ஏப்ரல் 1999 இல் கம்போடியா தனது அரசியல் உறுதிப்பாட்டின் பின்னர் ஆசியான் கூட்டமைப்பில் இணைந்துகொண்டது.
  • 1990 களில் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்தவர்களின் எண்ணிக்கையும் நாடுகளுக்கிடையிலான மேலதிக ஒருங்கிணைப்பும் அதிகரித்தது. 1990 ஆம் ஆண்டு கிழக்கு ஆசியாவின் பொருளாதாரக் குழுவை உருவாக்க மலேசியா தீர்மானித்தது.
  • இதன் மூலம் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்தவர்களையும் சீனக் குடியரசு, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளையும் உள்ளடக்கி ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பில் உள்ள ஐக்கிய அமெரிக்காவின் செல்வாக்கு அதிகரித்தலை முழு ஆசியப் பிராந்தியத்திலும் கட்டுப்படுத்துதலே இக் குழுவின் நோக்கமாகும்.
  • ஐக்கிய அமெரிக்காவில் இருந்தும் ஜப்பானி இருந்தும் வந்த பாரிய எதிர்ப்பின் காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டது. இத்திட்டம் தோல்வியில் முடிந்த போதிலும் அங்கத்துவ நாடுகள் மேலதிக ஒருங்கிணைப்பிற்குத் தமது பணியைத் தொடர்ந்து 1997 இல் ஆசியான் மற்றும் மூன்று (ASEAN Plus Three) எனப்படும் அமைப்பு உருவாக்கப்பட்டது.
கிழக்குத் திமோரும் பப்புவா நியூ கினியாவும்
  • 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசியான் உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டின் போது கிழக்குத் திமோர் ஆசியான் கூட்டமைப்பில் பதினோராவது அங்கத்தவராக இணைய விருப்பம் தெரிவித்து விண்ணப்பக் கடிதத்தைக் கையளித்தது. இந்தோனேசியா கிழக்குத் திமோருக்கு இதயங்கனிந்த வரவேற்பை தெரிவித்தது.
  • பப்புவா நியூகினியா 1976 ஆம் ஆண்டு பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டதுடன் 1981 ஆம் ஆண்டில் விசேட பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. பப்புவா நியூகினியா ஒரு மெலனேசியன் அரசாகும்.



சுதந்திர வர்த்தகம்
  • 2007 ஆம் ஆண்டில் ஆசியான் கூட்டமைப்பு தனது 40 ஆவது வருட நிறைவு விழாவையும் ஐக்கிய அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகளின் 30 வருடப் பூர்த்தியையும் கொண்டாடியது.
  • 2013 ஆம் ஆண்டளவில் சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடுகளை ஏற்ப்டுத்திக் கொள்வதென 26 ஓகஸ்ட் 2007 இல் தீர்மானிக்கப்பட்டதுடன் 2015 ஆம் ஆண்டில் ஆசியான் பொருளாதார சமூகத்தை நிறுவுவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.
  • 27 பெப்ரவரி 2009 இல் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்று ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளுக்கும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துஆகிய நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டது. 
  • இந்தச் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமானது 12 நாடுகளினதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2000 தொடக்கம் 2020 வரையான வருடக் காலப் பகுதியில் 48 பில்லியன் அமெரிக்க டொலர்களால் உயர்த்துவதையே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
  • ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளும் அவர்களின் ஆறு பெரிய வர்த்தகப் பங்காளிகளான ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளும் 26-28 பெப்பிரவரி 2013 காலப்பகுதியில் இந்தோனேசியாவின் பாலி நகரில் பிராந்திய பரந்த பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர்.
ஆசியான் வழி
அடிப்படை கோட்பாடுகள்
  • சுதந்திரம், இறைமை, சமத்துவம், பிராந்திய ஒருமைப்பாடு, மற்றும் அனைத்து அங்கத்துவ நாடுகளின் தேசிய அடையாளங்களின் மீதான பரஸ்பர மரியாதை.
  • வெளித் தலையீடு, நாசவேலை அல்லது பலாத்காரத்தில் இருந்து விடுபட்டுத் தன்னுடைய தேசிய இருப்புக்கு வழிவகுத்தல் ஒவ்வொரு அரசினதும் உரிமை.
  • மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாக் கொள்கை.
  • அமைதியான முறையில் வேறுபாடுகள் அல்லது பிணக்குகளை தீர்த்தல்.
  • படை அச்சுறுத்தல் அல்லது பயன்பாட்டை நிராகரித்தல்.
  • அங்கத்துவ நாடுகளுக்கு மத்தியில் திறமையான ஒத்துழைப்பு.
விமர்சன வரவேற்பு
  • ஆசியான் வழி அமைப்பின் உருவாக்க நிலைகளின் சூழ்நிலை சமகால அரசியல் யதார்த்தத்தில் இருந்து மாறுபட்டிருப்பதைக் காணலாம்.



கூட்டங்கள்
ஆசியான் உச்சி மாநாடுகள்
  • தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பால் நடாத்தப்படும் கூட்டங்கள் ஆசியான் உச்சி மாநாடுகள் என அழைக்கப்படுகின்றன. இவ்வாறான ஆசியான் உச்சி மாநாடுகளில் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள்பிராந்தியப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவும் அவற்றைத் தீர்க்கவும் சந்தித்துக்கொள்வதோடு, ஆசியான் பிராந்தியத்திற்குள் உட்படாத வேற்று நாட்டுத் தலைவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வெளிநாடுகளுடனான தொடர்புகளையும் வளர்த்துக்கொள்கின்றனர்.
  • ஆசியான் தலைவர்களின் உத்தியோகபூர்வ உச்சி மாநாடு முதன்முதலாக இந்தோனேசியாவின் பாலி நகரில் 1976ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆசியானின் மூன்றாவது உத்தியோகபூர்வ உச்சி மாநாடு பிலிப்பைன்சின் மணிலாநகரில் 1987 ஆம் ஆண்டு நடைபெற்றது. 
  • அந்த மாநாட்டில் தென்கிழக்காசிய_நாடுகளின்_கூட்டமைபின் அரசுத் தலைவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை சந்தித்துக் கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.
  • தொடர்ச்சியாக 1992 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற நான்காவது உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டில் அரசுத் தலைவர்கள்அடிக்கடி சந்தித்துக்கொள்ள விருப்பமும் சம்மதமும் தெரிவித்ததையடுத்து மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஆசியான் உச்சி மாநாடுகளை நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.
  • அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டில், இப்பிராந்தியத்தில் தாக்கம் செலுத்தும் அவசரப் பிரச்சினைகளை குறிப்பிடுவதற்காக வருடாந்தம் சந்தித்துக் கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டை தமது பெயரின் அகர வரிசைப்படி ஒவ்வொரு நாட்டிலும் நடாத்த உறுப்பு நாடுகள் சம்மதம் தெரிவித்துக்கொண்டன. 
  • ஆனால் பர்மா நாடானது ஐக்கிய அமெரிக்காவாலும், ஐரோப்பிய ஒன்றியத்தாலும் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்களின் காரணமாக 2006 ஆம் ஆண்டில் ஆசியான் உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டை நடாத்தும் உரிமையை 2004 ஆம் ஆண்டில் இழந்தது.
  • 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசியான் சாசனம் நடைமுறைக்கு வந்ததையடுத்து ஆசியான் உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டை வருடத்திற்கு இருமுறை நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.
  • ஆசியான் உத்தியோகபூர்வ உச்சி மாநாடு மூன்று நாட்களுக்கு நடைபெறும். 
  • உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் உள்ளக அமைப்பு கூட்டமொன்றை நடாத்துவார்கள்.
  • உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் ஆசியான் பிராந்திய மன்றத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் மாநாடொன்றை நடாத்துவார்கள்.
  • ஆசியான் மற்றும் மூன்று (ASEAN Plus Three) எனப்படும் கூட்டமொன்று தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் மூன்று பேச்சுவார்த்தைக் கூட்டாளிகளான சீன மக்கள் குடியரசு, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கிடையில் நடைபெறும்.
  • ஆசியான் - சிஇஆர் (ASEAN-CER) எனப்படும் தனியான கூட்டமொன்று தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் இரண்டு பேச்சுவார்த்தைக் கூட்டாளிகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கிடையில் நடைபெறும்.
கிழக்கு ஆசிய உத்தியோகபூர்வ உச்சிமாநாடு
  • கிழக்கு ஆசிய உத்தியோகபூர்வ உச்சிமாநாடானது (EAS) ஆசியான் கூட்டமைப்பின் தலைமையுடன் கிழக்கு ஆசியா மற்றும் அப்பிராந்தியத்திலுள்ள 16 நாடுகளை உள்ளடக்கி ஒவ்வொரு வருடமும் கூட்டப்படும் ஒரு பரந்த ஆசிய அமைப்பாகும். 
  • இந்த உச்சிமாநாடானது வர்த்தகம், ஆற்றல் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் பிராந்திய ஒற்றுமையைக் கட்டியெழுப்பவும் நடாத்தப்படுகின்றது.
  • ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்தவர்களான 10 நாடுகளுடன் சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளே இந்த உச்சிமாநாட்டின் அங்கத்துவ நாடுகளாகும். 
  • இந்த நாடுகளின் மொத்த மக்கள் தொகை அண்ணளவாக உலகின் மக்கள் தொகையின் அரைப் பங்காகும். 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரஷ்யாவும், ஐக்கிய அமெரிக்காவும் 2011 ஆம் ஆண்டில் நடக்கும் உத்தியோகபூர்வ உச்சிமாநாட்டிற்கு இரு நாடுகளின் ஜனாதிபதிகளுடன் பூரண அங்கத்தவர்களாகக் கலந்துகொள்ள உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டது.
  • முதலாவது உத்தியோகபூர்வ உச்சிமாநாடானது கோலாலம்பூரில் 14 டிசம்பர் 2005 இல் நடைபெற்றது. அடுத்தடுத்த கூட்டங்கள் ஆசியான் தலைவர்களின் வருடாந்த சந்திப்பிற்குப் பின்னர் நடைபெற்றன.
விளையாட்டுக்கள்
தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள்
  • தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள் பொதுவாக எஸ்.ஈ.ஏ விளையாட்டுக்கள் (SEA Games) என அழைக்கப்படுகின்றன. இது பல்வேறுவகையான விளையாட்டுக்களை உள்ளடக்கி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது. 
  • இவ்விளையாட்டுக்களில் தென்கிழக்காசியாவைச் சேர்ந்த 11 நாடுகள் பங்குபற்றுகின்றன. இவ்விளையாட்டுக்க தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள் கூட்டமைப்பின் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவும் பன்னாட்டு ஒலிம்பிக் குழு (IOC) மற்றும் ஆசிய ஒலிம்பிக் குழு ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழும் நடைபெறுகின்றன.
ஆசியான் மாற்றுத் திறனாளர் விளையாட்டுக்கள்
  • ஆசியான் மாற்றுத் திறனாளர் விளையாட்டுக்கள் என்பது பல்வேறுவகையான விளையாட்டுக்களை உள்ளடக்கி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியாகும். 
  • இது ஒவ்வொரு தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்களின் பின்னரும் நடைபெறுகின்றது. இவ்விளையாட்டுக்களில் தென்கிழக்காசியாவைச் சேர்ந்த 11 நாடுகள் பங்குபற்றுகின்றன. 
  • இவ்விளையாட்டுக்கள் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் பின்னர் தோற்றம் பெற்றதுடன் இவ்விளையாட்டுக்களில் மாற்றுத்திறனாளிகளும், கண்பார்வைக் குறைபாடு உள்ளவர்களும் பங்குபற்றுகின்றனர்.
ஆசியான் காற்பந்து வெற்றிக்கிண்ணம்
  • ஆசியான் கால்பந்து வெற்றிக்கிண்ணம் என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காற்பந்தாட்டப்போட்டியாகும். இப்போட்டிகள் ஆசியான் காற்பந்துக் கூட்டமைப்பினால் நடாத்தப்படுவதுடன் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பினால் அங்கீகாரம் பெறப்பட்டவையாகவும் உள்ளன. 
  • இப்போட்டிகளில் தென்கிழக்காசிய நாடுகளின் தேசியக் காற்பந்து அணிகள் பங்குபற்றுகின்றன. இப்போட்டிகள் 1996 ஆம் ஆண்டு டைகர் கிண்ணம் என்ற பெயரில் தொடங்கி வைக்கப்பட்டதுடன் பின்னர் ஆசிய பசிபிக் பிரெவெரீஸ் நிறுவனத்தின் அனுசரணை ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதால் ஆசியான் காற்பந்து வெற்றிக்கிண்ணம் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 
  • தற்பொழுது, இந்த காற்பந்து விளையிட்டு போட்டி, AFF Suzuki என பெயர்மாற்றம் கண்டுலுள்ளது. இவண்டிற்கான இறுதிக்கட்ட சுற்று வரும் 18 நவம்பர் முதல் 15 டிசம்பர் 2018 வரை நடைபெறும்.
ஆசியான் 2030 பீபா உலகக் கோப்பை ஏல உரிமை
  • ஜனவரி 2011: ஆசியான் கூட்டமப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இந்தோனேசியாவின் லம்பொக் நகரில் நடத்திய சந்திப்பை அடுத்து 2030 ஆம் ஆண்டில் உலகக்கோப்பை காற்பந்தை நடத்தும் உரிமையை ஒரு தனி அமைப்பாகப் பெறத் தீர்மானிக்கப்பட்டது.
  • மே 2011: ஆசியான் 2030 ஆம் ஆண்டு உலகக்கோப்பை காற்பந்தை நடாத்த அதன் முயற்சியில் முன்னோக்கி செல்ல வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இச்சந்திப்பு ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் தொடர்ச்சியாக நடைபெற்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel