நதிகளை முறையாக பராமரிக்காததற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ. 100 கோடி அபராதத்திற்கு தடை
- சென்னையில் ஓடும் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை மாசடைந்துவிட்டது. இதை தமிழக அரசு முறையாக பராமரிக்கத் தவறியது என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஜவகர் சண்முகம் என்பவர் உள்பட சிலர் மனு தாக்கல் செய்தனர்.
- இதை விசாரித்த தீர்ப்பாயம் 19 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வெளியிட்டது. அதில் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய நீர்நிலைகள், தங்குதடையின்றி மாசடைந்து வருகின்றன. அவை சாக்கடையாகவே மாறிவிட்டன. இதை தடுக்க தவறிய மாநில அரசின் தோல்வியையே இந்நிகழ்வு காட்டுகிறது.
- மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தயாரித்த 351 மாசடைந்த ஆறுகள் பட்டியலில் மேற்கண்ட 3 நீர்நிலைகளும் இல்லை. இருப்பினும், இவை மாசடைந்து விட்டது என்பதிலோ, அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை போதுமானது அல்ல என்பதிலோ மாற்றுக்கருத்து இல்லை.
- கூவம், அடையாறு ஆறுகளை சீரமைக்க ரூ.104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் அவை சீரமைக்கப்படவில்லை. மாநில அரசின் தோல்வியை கருத்திற்கொண்டு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறோம்.
அரசு ஆசிரியர்கள் டியுஷன் எடுக்க தடை - நீதிமன்றம் உத்தரவு
- அரசுப்பள்ளி ஆசிரியர்கள் லாப நோக்கில் டியுஷன் எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவை அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் இடமாற்றம் தொடர்பாக தொடுத்த வழக்கு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தனியாக லாப நோக்குடன் டியுஷன் எடுப்பதற்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளன.
- விதிகளை மீறி தனியாக டியூசன் எடுக்கும் ஆசிரியர்களைக் கண்காணித்து, கடும் நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். இது போல டியுஷன் எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் நடக்கும் பாலியல் தொல்லைகள் பற்றி மாணவ மாணவிகள் புகார் அளிக்கவும் கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்களை எட்டு வாரங்களுக்குள் அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அதைப் பள்ளிக் கல்லூரி சுவர்களில் ஒட்டவேண்டும். மேலும் அளிக்கப்படும் புகார்கள் 24 மணிநேரத்தில் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளனர்
54வது சிஆர்பிஎப் வீர தினம்! ஜனாதிபதி விருதுகளை வழங்கினார்
- 54வது சிஆர்பிஎப் வீர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்முறையாக கலந்து கொண்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
- இந்த நிகழ்ச்சியில், புல்வாமா தாக்குதலில் பலியான 40 வீரர்களுக்கான விருது அவர்களின் குடும்பத்தினருக்கு ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, 'சிஆர்பிஎப் வீர் பரிவார்' என்ற செல்போன் செயலியை குடியரசுத் தலைவர் அறிமுகம் செய்து வைத்தார்.ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 9ம் தேதி சிஆர்பிஎப் வீரர் தினமாக கொண்டாடப்படுகிறது.
வீட்டுக்கு பணம் அனுப்புவதில் இந்தியர் முதலிடம்:உலக வங்கி அறிக்கை வெளியீடு
- வெளிநாடுகளில் உள்ளோர், தாயகத்திற்கு பணம் அனுப்புவதில், இந்தாண்டும், இந்தியா முதலிடத்தை தக்க வைத்து உள்ளதாக, உலக வங்கி ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
- வெளிநாடுகளில் உள்ளோர், தாயகத்திற்கு அதிக பணம் அனுப்புவதில், 2018ம் ஆண்டிலும், இந்தியர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.அவர்கள் மூலம், இந்தியாவுக்கு, 7,900 கோடி டாலர், அதாவது, 5.53 லட்சம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
- கடந்த, மூன்று ஆண்டுகளில், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள், தாயகத்திற்கு பணம் அனுப்புவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த, 2016 மற்றும்2017ல், முறையே, 6,270 கோடி டாலர் மற்றும் 6,530 கோடி டாலர் அனுப்பப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டு, கேரளாவில் மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அங்கு அதிக அளவில் நிதியுதவி குவிந்தது. இதனால், தாயகத்திற்கு கிடைத்த பணம், 14 சதவீதம் அதிகரித்துள்ளது.
- பாகிஸ்தான் சவுதி அரேபியாவின் நிதி வரத்து குறைவால், பாகிஸ்தான் ஈர்த்த தொகை, 7 சதவீத அளவிற்கு மிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. இது, வங்கதேசத்தில், 15 சதவீதமாக உயர்ந்துள்ளது.குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கு கிடைத்த தொகை, 9.6 சதவீதம் உயர்ந்து, 52 ஆயிரத்து, 900 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
நேரடி வரி வசூல் இலக்கில் ரூ.50,000 கோடி குறையும்: மத்திய அரசு
- மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2018-19 நிதியாண்டில் நேரடி வரிகள் வாயிலாக ரூ.11.5 லட்சம் கோடி திரட்ட பட்ஜெட்டில் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அதன் பின்பு அந்த இலக்கானது ரூ. 12 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டது.
- ஆனால், உண்மையில், 2018-19 நிதியாண்டுக்கான நேரடி வரி வசூல் ரூ.11.5 லட்சம் கோடி என்ற அளவிலேயே இருக்கும் என தெரிகிறது. எனவே, அதிகரிக்கப்பட்ட பட்ஜெட் இலக்கில் நேரடி வரி வசூலானது ரூ.50,000 கோடி வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேரடி வரி வசூலில், நிறுவனங்கள் செலுத்தும் வரியானது அதிகளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
- பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.7.44 லட்சம் கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் அந்த இலக்கு ரூ.6.44 லட்சம் கோடியாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டது.
- இந்த நிலையில், 2018-19 நிதியாண்டில் பல்வேறு பொருள்களுக்கான வரி விகிதத்தை ஜிஎஸ்டி கவுன்சில் வெகுவாக குறைத்ததையடுத்து ஜிஎஸ்டி வரி வசூல் இலக்கும் எட்டப்படாது என்றே மதிப்பிடப்பட்டுள்ளது.
ராணுவ துறையில் ஒத்துழைப்பு இந்தியா- இலங்கை ஒப்பந்தம்
- இந்தியா - இலங்கை நாடுகளிடையே ராணுவத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இதன்படி இலங்கை ராணுவத்தினருக்கு, இந்திய ராணுவம் பயிற்சி அளிக்கும் என இந்திய வெளியுறவுத்துறை செயலர் சஞ்சை மித்ரா தெரிவித்தார்.
லண்டனில் இயங்குகிறது 24 மணிநேர மாசு கட்டுப்பாடு மண்டலம்
- காற்று மாசுபடுவதை தடுக்க, உலகிலேயே முதன்முறையாக லண்டன் நகரில் வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் மாசுக் கட்டுப்பாட்டு மண்டலம் செயல்படுத்தப்படுகிறது.
- வாகனங்கள் வெளியிடும் புகையினால் ஏற்படும் காற்று மாசினை குறைக்கவும், மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும் லண்டன் அரசு, காற்றில் மாசு பரவுவதை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் காற்றின் மாசு அளவினை கண்டறியும் தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்பட்ட சோதனையில், பெருகிவரும் வாகனங்கள் மற்றும் பழைய வாகனங்களின் புகைகளால் அதிக அளவில் மாசுப்படுவதாக கண்டறியப்பட்டது.
இந்தோனேஷிய இனிப்பூட்டிகளுக்கு மிகை இறக்குமதி தடுப்பு வரி: வர்த்தக அமைச்சகம் பரிந்துரை
- இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இனிப்பூட்டியான சாக்கரின் மீது மிகை இறக்குமதி தடுப்பு வரி விதிக்க மத்திய நிதியமைச்சகத்துக்கு, மத்திய வர்த்தக அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
- மத்திய வர்த்தக அமைச்சகத்தின் பொது வர்த்தகத் தீர்வுகள் துறை (டிஜிடிஆர்) இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணை முடிவடைந்த நிலையில், இது தொடர்பான அறிக்கையை அந்தத் துறை வெளியிட்டது. அதில், இந்தோனேஷிய இனிப்பூட்டிகள் குறைவான விலையில் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட புகார் உண்மையே. இதனால், உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதைத் தடுக்க, சாக்கரின் மீது டன்னுக்கு சுமார் ரூ. 1.14 லட்சம் மிகை இறக்குமதி தடுப்பு வரி விதிக்க டிஜிடிஆர் பரிந்துரை செய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இளம்பெண்ணுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செயற்கை நுரையீரல் வால்வு பொருத்தம்
- அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவருக்கு முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட செயற்கை நுரையீரல் வால்வு (குழாய்) பொருத்தப்பட்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வால்வை நோயாளிக்கு பொருத்துவது இந்தியாவிலேயே இது முதன்முறையாகும்.
- அரக்கோணத்தைச் சேர்ந்தவர் ரேகா (26). பிறவியிலேயே, டெட்ராலஜி ஆப் பாலட் என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டார். அதன் விளைவாக, இதயத்தில் இருந்து நுரையீரலுக்கு ரத்தம் செல்லும் குழாயில் அவருக்கு அடைப்பு ஏற்பட்டது.