பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தும் அண்ணா பல்கலையின் முடிவிற்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவு
- அண்ணா பல்கலைக்கழகத்துக்குட்பட்ட உறுப்புக் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளுக்கு வரும் கல்வியாண்டில்(2019-2020) கட்டணம் உயர்த்தப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார்.
- இந்த முடிவுக்கு பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு இருப்பதாகவும், மாறி வரும் பொருளாதார சூழலுக்கு ஏற்றவாறு கட்டண உயர்வு இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
- அதன்படி, செமஸ்டருக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு, இந்த முடிவானது அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
- இந்த நிலையில், பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவிற்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, அரசு பொறியியல் கல்லூரிகளில் கட்டண உயர்வு இருக்காது என உயர்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சர்க்கரை நோயாளிகளுக்கு உதவ 'புராஜெக்ட் கதிர்' திட்டம் துவக்கம்
- சர்க்கரை நோயாளிகளுக்கு உதவ, 'புராஜெக்ட் கதிர்' திட்டத்தை, கோவை மத்திய ரோட்டரி கிளப் நேற்று துவக்கியது.கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் நேற்று நடந்த, துவக்க விழாவில், தலைவர் அறிவுடை நம்பி பேசுகையில், ''முதலாவது வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ, இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
புதிய மார்க்கமாக வள்ளலார் வழிபாடு: அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
- மதுரை உத்தங்குடியை சேர்ந்த ராமலட்சுமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:திருவருட்பிரகாச வள்ளலார், 19ம் நூற்றாண்டில் தோன்றிய ஞானி. ஆரம்ப காலத்தில் சமயத்தின் மீது பற்று வைத்திருந்தார்.
- பின்பு அப்பற்றை கைவிட்டு சாதி, சமய, மதங்களுக்கு அப்பாற்பட்டு சமரச சுத்த சன்மார்க்கம் என்ற ஒரு புதிய பொது மார்க்கத்தை உலகுக்கு வௌிப்படுத்தினார்.
- வள்ளலார் கடந்த 1867ல் ஏற்றிய அணையா அடுப்பு 152 ஆண்டுகளாக அணையாமல் ஜீவகாருண்ய பணியில் ஈடுபட்டுள்ளது. சமரச சுத்த சன்மார்க்கத்திற்கென தனிக்கொள்ைக, கடவுள் பயன் உள்ளிட்டவற்றை தனித்தன்மையோடு வள்ளலார் கண்டு வெளிப்படுத்தியுள்ளார்.
- எனவே, வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க முறையின் கொள்கையை ஒரு புதிய மார்க்கம் அல்லது தனிநெறி என அறிவிப்பது குறித்து, அறநிலையத்துறை சார்பில் அரசுக்கு பரிந்துரைக்கவும், அதன்படி தமிழக அரசு வள்ளலார் வழிபாட்ைட புதிய மார்க்கம் அல்லது தனிநெறியாக அறிவிக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
- மனுவை விசாரித்த நீதிபதிகள், 'இந்த மனு குறித்து தமிழக அரசு பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றார் அபிஷேக் வர்மா
- உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஆடவர் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்தியாவின் அபிஷேக் வர்மா. மேலும் அதே நேரத்தில் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
- இறுதிச் சுற்றில் 242.7 புள்ளிகளுடன் தங்கம் வென்றார் அபிஷேக். ஏற்கெனவே இந்திய நட்சத்திரங்கள் திவ்யான்ஸ் சிங், அபூர்வி சந்தேலா, அஞ்சும் முட்கில், செளரவ் செளதரி ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு 2 வெள்ளி
- சீனாவின் ஸியானில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக ஆடவர் கிரேக்கோ ரோமன் 77 கிலோ இறுதிச் சுற்றில் இந்தியாவின் குர்ப்ரீத் சிங்-கொரியாவின் கிம் மோதினர்.
- இதில் 0-8 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியுற்ற குர்ப்ரீத் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- 87 கிலோ பிரிவு இறுதியில் இந்தியாவின் சுனில்குமார்-ஈரானின் அகமது நூரியை எதிர்கொண்டார். இதில் 0-2 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியுற்ற சுனில் வெள்ளி வென்றார்.
- இதுவரை 1 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 14 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது இந்தியா.
பொருளாதார வழித்தட திட்டம்: ரூ.4.4 லட்சம் கோடிக்கு ஒப்பந்தங்கள்
- சீனத் தலைநகர் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார வழித்தட திட்டத்தின் இரண்டாவது கூட்டத்தில், 64 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.4.4 லட்சம் கோடி) மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்தார்.
- "சர்வதேச பொருளாதார வழித்தடம்' மூலம், ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்களைச் சேர்ந்த பல நாடுகளை சாலை வழியாகவும், கடல் வழியாகவும் இணைக்க சீனா திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம், அந்நாடுகளுடனான வர்த்தகத் தொடர்பு அதிகரிக்கும் என்று சீனா கூறினாலும், சர்வதேச அளவில் தன்னை முன்னிலைப்படுத்துவதற்கான வியூகமாக இத்திட்டத்தை அந்த நாடு முன்னெடுத்து வருகிறது.
- இந்நிலையில், இத்திட்டத்தில் இணைந்துள்ள நாடுகள் பங்குபெறும் இரண்டாவது கூட்டம், சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 25}ஆம் தேதி தொடங்கியது. சனிக்கிழமையுடன் நிறைவடைந்த இந்த கூட்டத்தில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்பட 37 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். சுமார் 150 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து விலகுகிறோம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
- சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்து போட்டது.
- 2013-ல் போடப்பட்ட இந்த ஒப்பந்தம், 2014-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 24-ந்தேதி அமலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தமானது, சர்வதேச அளவில் மரபு ரீதியிலான ஆயுத வர்த்தகத்தை ஒழுங்குப்படுத்தும். குறிப்பாக சிறிய ரக ஆயுதங்கள் தொடங்கி போர் விமானம் வரை இதன் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
முகமது சமி, ஜடேஜா, பும்ரா அர்ஜூனா விருதுக்குப் பரிந்துரை
- இந்திய விளையாட்டுத் துறையில் உயரிய விருதாக கருதப்படும் அர்ஜூனா விருதை, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் ஒவ்வோர் ஆண்டும் வழங்கி வருகிறது. இந்த 2019 ஆண்டுக்கான அர்ஜூனா விருதுகளுக்கு, கிரிக்கெட் வீரர்களை பரிந்துரைப்பது தொடர்பாக பிசிசிஐ இன்று ஆலோசனை நடத்தியது.
- இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனை பூனம் யாதவ், கிரிக்கெட் வீரர்கள் முகமது சமி, ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது பெயர்களை மத்திய அரசுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.