ரஷியா: புதின், கிம் ஜோங்-உன்: முதல் முறையாக சந்திப்பு
- ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் வியாழக்கிழமை முதல் முறையாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
- ரஷியாவின் விளாதிவோஸ்டாக் நகரில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின்போது, இருநாட்டு நட்புறவை மேம்படுத்த இரு தலைவர்களும் உறுதிபூண்டனர்.
நாடு முழுவதும் ட்ரோன்கள் பறக்கத் தடை - இலங்கை விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவு
- கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் எனப் பல்வேறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. தற்கொலைப்படை தாக்குதலான இதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
- இந்தத் தாக்குதல்களில் 350-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கிறார்கள். குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து சில நாள்கள் கடந்துவிட்ட போதிலும் நாட்டின் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது.
- மேலும், அசம்பாவிதங்கள் நிகழ்வதைத் தடுக்கும் விதமாகப் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது மட்டுமின்றி புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், நாடு முழுவதும் ட்ரோன்கள் எனப்படும் சிறிய ரக விமானங்கள் பறக்க நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஆசிய தடகள போட்டியில் இந்தியாவுக்கு 4-வது இடம்
- 23-வது ஆசிய தடகள போட்டி கத்தார் நாட்டில் உள்ள தோஹா நகரில் நடைபெற்றது. இதன் கடைசி நாளான நேற்று முன்தினம் இந்தியாவுக்கு மேலும் 4 பதக்கங்கள் கிடைத்தது.
- மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பி.யூ.சித்ரா பந்தய தூரத்தை 4 நிமிடங்கள் 14.56 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.
- இந்தத் தொடரில் இந்தியா பெற்ற 3-வது தங்கப் பதக்கம் இதுவாக அமைந்தது. 800 மீட்டர் ஓட்டத்தில் கோமதியும், குண்டு எறிதலில் தஜிந்தர் பால் சிங்கும் ஏற்கெனவே தங்கம் வென்றிருந்தனர். கடந்த 2017-ம் ஆண்டு தொடரிலும் சித்ரா தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பஹ்ரைனை சேர்ந்த டைஜஸ்ட் காஷா (4:14.81) வெள்ளிப் பதக்கமும், வின்பிரட் யாவி (4:16.18) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
- ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் அஜெய் குமார் சரோஜ் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர், பந்தைய தூரத்தை 3 நிமிடங்கள் 43.18 விநாடிகளில் கடந்தார். பஹ்ரைனின் கிப்சிர் ரோட்டிக் (3:42.85) தங்கம் வென்றார்.
- மகளிருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பிராச்சி, பூவம்மா, சரிதாபென் கெய்க்வாட், விஷ்மயா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 3 நிமிடங்கள் 32.21 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது. பஹ்ரைன் அணி (3:32.10) தங்கப் பதக்கம் வென்றது.
- மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் டூட்டி சந்த் பந்தய தூரத்தை 23.24 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் பெற்றார். பஹ்ரைனின் சல்வா நாசர் (22.74) தங்கப் பதக்கமும், கஜகஸ்தானின் ஓல்கா சாப்ஃரோநோவா (22.87) வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
- 4 நாட்கள் நடைபெற்ற இந்தத் தொடரில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்கள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. கடந்த 2017-ம் ஆண்டு புவனேஷ்வரில் நடைபெற்ற தொடரில் இந்திய அணி 12 தங்கத்துடன் 29 பதக்கங்கள் குவித்து முதலிடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- இம்முறை பஹ்ரைன் 11 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலத்துடன் மொத்தம் 22 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. சீனா 10 தங்கம், 13 வெள்ளி, 7 வெண்கலத்துடன் 2-வது இடத்தையும் ஜப்பான் 5 தங்கம், 4 வெள்ளி, 9 வெண்லகத்துடன் 3-வது இடத்தையும் பிடித்தன.
துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை இந்தியாவுக்கு 2 தங்கம்
- பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எப் உலக துப்பாக்கி சுடும் போட்டியில் வியாழக்கிழமை ஏர் ரைபிள் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் அன்ஜும் மொட்கில்-திவ்யான்ஸ் சிங் பன்வார் இணை 17-15 என்ற புள்ளிக்கணக்கில் சீன இணையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
- அதே போல் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மானு பாக்கர்-செளரவ் செளதரி இணை 16-6 என்ற புள்ளிக் கணக்கில் சீன இணையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 6 வெண்கலம்
- பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை மகளிர் 60 கிலோ பிரிவில் மூத்த வீராங்கனை சரிதாதேவி, 54 கிலோ பிரிவில் மணிஷா மெளன் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். அரையிறுதியில் தைவானின் ஹுவாங் வென்னிடம் தோல்வியுற்றார் மணிஷா. மற்றொரு ஆட்டத்தில் சரிதா தேவி முன்னாள் உலக சாம்பியன் யாங் வென்லுவிடம் போராடி தோற்றார்.
- அதே போல் 57 கிலோ பிரிவில் சோனியா சஹல், 51 கிலோ பிரிவில் நிகாட் ஸரீன் உள்ளிட்டோரும் வெண்கலம் வென்றனர். இருவரும் வெண்கலப் பதக்கம் வென்றனர். ஆடவர்60 கிலோ பிரிவில் ஷிவ தாபா வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் 69 கிலோ பிரிவில் இந்தியாவின் ஆஷிஷ் வெண்கலம் வென்றார்.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் மஞ்சு குமாரி வெண்கல பதக்கம் வென்றார்
- ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான 59 கிலோ எடை பிரிவில் இந்தியா விரங்கனை மஞ்சு குமாரி வியட்நாம் வீராங்கனையை எதிர்கொண்டார். இதில் 11-2 என மஞ்சு குமாரி வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.
இந்தியாவின் பி.யூ.சித்ரா தங்கம் வென்றார்
- கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்த, இந்தியாவின் பி.யூ.சித்ரா தங்கப்பதக்கம் வென்றார்.
- சித்ரா பந்தய தூரத்தை 4 நிமிடம் 14.46 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். அவருக்கு அடுத்த இரண்டு இடங்களை பஹ்ரைன் நாட்டு வீராங்கனைகள் பிடித்து வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர்.
அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் அந்தஸ்து அளித்த ஐசிசி
- சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் (ஐசிசி.,) உறுப்பு நாடுகளுக்கு இடையே நமிபியாவில் உலக கிரிக்கெட் லீக் டிவிசன் 2 கிரிக்கெட் தொடர் நடக்கிறது.
- இத்தொடரில் ஓமன், அமெரிக்கா, நமிபியா, ஹாங் காங், கனடா, பப்புவா நியூகினியா என ஆறு அணிகள் பங்கேற்கிறது. இதில் தகுதி பெறும் அணிகள் வரும் 2023ல் இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.
- இத்தொடரின் முடிவில் தற்போதுள்ள 16 ஒருநாள் அந்தஸ்து பெற்ற அணிகளுடன் கூடுதலாக 4 அணிகள் தற்காலிகமாக ஒருநாள் அந்தஸ்து வழங்கப்பட்டு மொத்தம் 20 அணிகள் ஐசிசி., தரவரிசையில் இடம் பெறும்.
- இதில் அமெரிக்கா, ஓமன் அணிகளின் இடம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அடுத்த 2 ஆண்டுகளில் அமெரிக்க அணி ஒருநாள் அந்தஸ்து பெற்று 36 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.