ஜாலியன்வாலா பாக் - நூற்றாண்டு நினைவு தபால் வெளியானது
- இந்தியப் சுதந்திர போராட்டத்தின் போது கடந்த 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலா பாக் பகுதியில் பொதுமக்கள் ஒன்று கூடி அமைதியான வழியில் அறப்போராட்டம் நடத்தினர்.
- அப்போதைய பிரிட்டன் ராணுவ ஜெனரல் டயர் உத்தரவின் பேரில் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
- இந்த துப்பாக்கி சூட்டில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக இயந்திர துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்ட இந்த சம்பவம் இந்திய சுதந்திர போராட்ட வரலாறில் மிகப்பெரிய துயரச் சம்பவமாக கருதப்படுகிறது. இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.
- இந்நிலையில், அமிர்தசரஸ் நகரில் இந்த கொடூர சம்பவம் நடந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜாலியன்வாலா பாக் தியாகிகள் சதுக்கத்தில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு இன்று அஞ்சலி செலுத்தினார்.
- பின்னர் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் தனது கருத்தை பதிவிட்ட துணை ஜனாதிபதி ஜாலியன்வாலா பாக் படுகொலை நூற்றாண்டு நினைவு தபால் தலைகள் மற்றும் 100 ரூபாய் நாணயங்களை வெளியிட்டார்.
உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரம்
- மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான மறைந்த பால் ஆலன் உலகின் மிகப்பெரிய விமானமாக ஸ்டிராட்டோலான்ச் விமானத்தை உருவாக்க வேண்டும் என்று 2011ம் ஆண்டு திட்டமிட்டார். அவர் மறைந்துவிட்ட நிலையில், அவரது கனவு 8 ஆண்டுகளுக்கு பின் நேற்று நினைவாகி உள்ளது.
- மறைந்த பால் ஆலனின் கனவுத்திட்டமான ஸ்டிராட்டோலான்ச் விமானத்தின் சோதனை ஓட்டம், கலிபோர்னியாவில் சனிக்கிழமை காலை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
- இந்த ஸ்டிராட்டோலான்ச் விமானத்தின் இறக்கைகளுக்கு இடையேயான தொலைவு மட்டும் 385 அடியாகும். பார்ப்பதற்கு இரண்டு பெரிய விமானங்கள் போல் காட்சி அளிக்கும் இந்த விமானம் 6 இன்ஜின்கள் மற்றும் 28 சக்கரங்களுடனும், 5 லட்சம் பவுண்ட் எடையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.
கோவா அணி சாம்பியன்
- ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், 2வது இந்தியன் சூப்பர் கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. இதன் பைனலில் கோவா, சென்னை எப்.சி., அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட கோவா அணிக்கு 51வது நிமிடத்தில் கோரோ முதல் கோலடித்தார். இ
- தற்கு, 54வது நிமிடத்தில் சென்னை அணியின் ரபேல் அகஸ்டோ ஒரு கோலடித்து பதிலடி தந்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட கோவா அணிக்கு 64வது நிமிடத்தில் பிரண்டன் பெர்ணான்டஸ் ஒரு கோலடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய சென்னை அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை.
- ஆட்டநேர முடிவில் கோவா அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த சீசனில் பெங்களூரு அணி, ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி கோப்பை வென்றிருந்தது. இம்முறை அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் கோவா அணியின் கோரோ (5 கோல்) முதலிடம் பிடித்தார்.
சகிப்பு தன்மையை வலியுறுத்து நிகழ்ச்சி கின்னஸ் சாதனை
- ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் 'யாஸ் வாட்டர்வேர்ல்ட்' என்ற பெயரில் மிக பிரமாண்டமான நீர்சறுக்கு பூங்கா கடந்த 2013-ம் ஆண்டு திறக்கப்பட்டது. பல்வேறு நீர்சறுக்கு விளையாட்டுகள், கடலில் முத்துக்குளிக்கும் அனுபவம், விதவிதமான நீச்சல் குளங்கள் என 40 கேளிக்கை அம்சங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.
- உலகம் முழுவதும் சமீபகாலமாக மக்களிடையே சகிப்புத்தன்மையின்மையும், வெறுப்புணர்வும் அதிகரித்து வரும் நிலையில், உலகின் பல பகுதிகளில் பல்வேறு மாறுபட்ட மொழிகள் மற்றும் கலாச்சாரங்களை பின்பற்றி வாழும் மக்கள் ஒரே நீச்சல் குளத்தில் குளித்து மகிழும் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு 'யாஸ் வாட்டர்வேர்ல்ட்' நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
- இந்த நிகழ்ச்சியில் உலக மக்களுக்கிடையில் சகிப்புத்தன்மையை வலியுறுத்தும் வகையில் 102 நாடுகளை சேர்ந்த தேசிய இனத்தவர்கள் ஒரே நீச்சல் குளத்தில் ஒரே நேரத்தில் குளித்து புதிய கின்னஸ் சாதனை படைத்தனர்.