ரஃபேல் வழக்கில் மறுசீராய்வு: மத்திய அரசின் ஆட்சேபனையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
- ரஃபேல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுவை பத்திரிகைகளில் வெளியான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைக்கு ஏற்கக்கூடாது என்று மத்திய அரசு எழுப்பிய முதல் கட்ட ஆட்சேபனையை இந்திய உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
- ரஃபேல் விவகாரத்தில் எந்த ஒரு ஊழலும் நடைபெறவில்லை என முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
- இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஊடகங்களில் வெளியான ஆவணங்களின் அடிப்படையில் விசாரிக்கக் கூடாது என்று மத்திய அரசு ஆட்சேபனை தெரிவித்தது.
- மத்திய அரசின் ஆட்சேபனை குறித்து இன்று விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசஃப் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த ஆட்சேபனையை நிராகரித்தது.
- ஜாலியன் வாலாபாக் படுகொலையை நடத்தியதற்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்தார்.
- ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது, 1919 ஏப்ரல் 13 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில், ஜாலியன்வாலா பாக்கில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் குறிப்பாக சீக்கியர்கள் மீது, ஆங்கிலேயப் படையினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அந்த கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 1000 பேர் உயிரிழந்தனர்;
- 1500 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் ஜாலியன் வாலாபாக் சம்பவத்தின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி, இங்கிலாந்து வருத்தம் தெரிவித்தது.
- இதில், 400-க்கும் மேற்பட்டோர் கொத்து கொத்தாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக, ஆங்கிலேய அரசு அறிவித்தது. ஆயினும், இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதாக, இந்திய தரப்பில் கூறப்பட்டது. இந்த படுகொலை சம்பவத்தின் நினைவாக, ஜாலியன்வாலா பாக்கில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு இந்தியா வந்திருந்த, அப்போதைய பிரதமர் டேவிட் கேமருன், இந்த சம்பவம் வெட்கப்படக் கூடியது என்றாரே தவிர, இதற்கு மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
- இந்நிலையில், ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவம் நிகழந்து, 100 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், பிரிட்டன் பார்லிமென்ட்டில் பேசிய, அந்நாட்டு பிரதமர் தெரசா மே, இச்சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல், வருத்தம் தெரிவித்துள்ளார். அவரும், மன்னிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.
இலங்கையின் முதல் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் - உடன்படிக்கை கையெழுத்து
- இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
- மின்வலு, சக்திவலு மற்றும் தொழில்துறை அமைச்சுக்கும், கனேடிய கமர்ஷியல் கோப்பரேஷன் நிறுவனத்திற்கும் இடையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று (செவ்வாய்கிழமை) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
- மாதுறுஓயா நீர்த்தேக்கத்தில் 100 மெகாவாட்ஸ் வலுவுடைய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையே கைச்சாத்திடப்பட்டுள்ளது.
- நாட்டின் பல பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையங்களினால் 2030ஆம் ஆண்டாகும் போது, இலங்கையின் மின்சார தேவையில் 50 சதவீதத்தை பூர்த்தி செய்துக் கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
- இதன் முதற்கட்டமாக மகாவலி வலயத்திற்குட்பட்ட மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தை மையப்படுத்தி இந்த முதலாவது சூரிய மின்சக்தி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
மோடி திரைப்படத்துக்கு ஆணையம் தடை
- பிரதமர் மோடியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தை வெளியிட, தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளது.
- பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து, பி.எம்., நரேந்திர மோடி என்ற படம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், மோடி வேடத்தில், பிரபல நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். படத்தை சந்தீப் சிங் தயாரிக்க, ஓமங் குமார், இயக்கி உள்ளார்.
- சமீபத்தில் துவக்கப்பட்ட, 'நமோ டிவி'க்கும் இந்த உத்தரவு பொருந்தும் என, தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
மாநிலத் தேர்தல் ஆணையராக ஆர்.பழனிசாமி பொறுப்பேற்பு
- தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக ஆர்.பழனிசாமி புதன்கிழமை பொறுப்பேற்றார். அவர் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகப் பணியாற்றி வந்தார். ஐ.ஏ.எஸ்., பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்கள் உள்ள நிலையில் மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
- கடந்த 1960-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி பிறந்த ஆர்.பழனிசாமி, கோவையைச் சொந்த ஊராகக் கொண்டவர். கடந்த 2000-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகப் பொறுப்பு வகித்து வந்த நிலையில், அவர் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக புதன்கிழமை பொறுப்பேற்றார்.
- அவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பதவியில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரியில் ஓய்வு பெற்றாலும், இரண்டு ஆண்டுகள் வரையில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராகத் தொடர்ந்து பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் பொதுத்தேர்தல் நேதன்யாஹு வெற்றி
- மத்திய கிழக்கு நாடான, இஸ்ரேலில் நடந்த பொதுத்தேர்தலில், பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, நேதன்யாஹு, 69, ஐந்தாவது முறையாக, பிரதமராக பதவியேற்கவுள்ளார். இஸ்ரேல் பார்லிமென்டிற்கான பொதுத் தேர்தல், நேற்று முன்தினம் நடந்தது.
- இந்த தேர்தலில், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தலைமையிலான, வலதுசாரி லிக்குட் கட்சி மற்றும் முன்னாள் ராணுவ தளபதி பென்னி கான்ட்ஸ் தலைமையிலான, 'ப்ளூ அண்ட் ஒயிட்' கட்சிக்கும் இடையில், கடும் போட்டி நிலவியது.
- இந்நிலையில், தேர்தலில் பதிவான ஒட்டுகள், நேற்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், தற்போதைய பிரதமர் நேதன்யாஹு தலைமையிலான கட்சி, பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது.இதையடுத்து அவர், ஐந்தாவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். நேதன்யாஹு, 13 ஆண்டுகளாக, இஸ்ரேல் பிரதமராக பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரித்திரத்தில் முதல் முறையாக வெளியாகிய கருந்துளை புகைப்படம்
- உலகில் முதல் முறையாக விண்வெளியில் ஏற்பட்டுள்ள கருந்துளையின் புகைப்படம் வெளியாகி உள்ளது.
- விண்வெளியில் உள்ள ஒரு பிரமாண்டமான பரப்பை கருந்துளை என அழைக்கின்றனர். கருந்துளை வழியாக ஒளி உள்ளிட்ட எந்த பொருளும் ஊடுருவி செல்ல முடியாது. இந்த பரப்பு துளை என பெயரிடப்பட்டிருந்தாலும் அது காலியான துளையாக இருப்பதில்லை. அந்த சிறிய பகுதிக்குள் பல அடர்த்தியான விஷயங்கள் நிரம்பி உள்ளன.
- இந்த கருந்துளையின் ஒரு பகுதியை திரும்பி வர இயலாத புள்ளி (POINY OG NO RETRUN) என அழைக்கிறார்கள். அந்த இடத்துக்கு சென்றவர்கள் யாரும் திரும்பவே முடியாது. அங்குள்ள ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு சின்னா பின்னம் ஆகி விடுவார்கள். அதே வேளையில் அங்கு ஒரு மனிதன் சென்றால் எவ்வாறு உயிர் இழக்க நேரிடும் என்பது குறித்து எந்த ஒரு விஞ்ஞானியாலும் விவரிக்க இயலவில்லை.
- கடந்த 10 நாட்களாக இம்முயற்சியில் ஈடுபட்டிருந்த 200 விஞ்ஞானிகள் கொண்ட இந்த குழு இந்த கருந்துளையின் புகைபடத்தை வெளியிட்டுள்ளது. இந்த கருந்துளை நமது சூரிய குடும்பத்தின் மொத்த அளவை விட பெரியதாகும். அத்துடன் சூரியனை விட 6500 கோடி அளவுக்கு கூடுதல் எடை கொண்டதாகும். சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களின் ஒளியைக் காட்டிலும் அதிக ஒளி பொருந்தியதாகும்.
பிரெக்சிட்டை தாமதப்படுத்தும் மசோதா... ஒப்புதல் அளித்தார் பிரிட்டன் ராணி
- ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் பிரெக்சிட்டை தாமதப்படுத்தும் மசோதாவுக்கு பிரிட்டன் ராணி ஒப்புதல் அளித்துள்ளார்.
- ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதற்கான காலக்கெடு வருகிற 12-ந் தேதியுடன் முடிகிறது. இது சாத்தியமானால் பிரிட்டனில் வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் பாதுகாப்பில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
- எனவே இதனை தவிர்க்கும் விதமாக 'பிரெக்ஸிட்' நடவடிக்கையை தாமதப்படுத்த வலியுறுத்தி பிரிட்டன் பாராளுமன்றத்தின் கீழ்சபையில் எதிர்க்கட்சியினர் மசோதா ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மசோதா அங்கு ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் நிறைவேறியது.
- அதனை தொடர்ந்து அந்த மசோதா மேல்சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கும் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது. அதன் பின்னர் அந்த மசோதா ராணி எலிசபெத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கியால்சன் சிகர உச்சியை அடைந்து சாதனை படைத்த வீரர்கள்
- நேபாளத்தின் உயரமான சிகரங்களில் ஒன்றான கியால்சன் சிகரத்தின் உச்சியினை 3 மலையேறும் வீரர்கள் முதன்முறையாக எட்டி சாதனை படைத்துள்ளனர்.
- உலகின் முதல் பத்து உயரமான மலைகளில் எட்டு நேபாளத்தில் அமைந்துள்ளது. உலகில் மூன்றாவது உயரமான மலையான கஞ்சன்சுங்கா மலை, கிழக்கு சிக்கிமுடனான எல்லையில் அமைந்துள்ளது.
- இதேப்போல் நேபாளத்தின் ஜுகால் ஹிமால் பகுதியில் கியால்சன் சிகரம் உள்ளது. இது 6,151 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த சிகரத்தின் உச்சியினை இதுவரை யாரும் அடைந்ததில்லை. இந்த மலையின் உச்சியினை எட்ட, கடந்த வெள்ளி அன்று 6 பேர் கொண்ட குழு பயணத்தை துவங்கினர்.
- ஆனால், கால நிலைமாற்றத்தினால் மழை பெய்ததில், ஏறமுடியாமல் திணறிய 3 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். இதையடுத்து மாயா குருங், சர்மிளா தபா, மிலன் தமங் ஆகிய 3 மலையேறும் வீரர்களும் முதன்முறையாக சிகரத்தின் உச்சியினை அடைந்து சாதனை படைத்துள்ளனர்.
- இந்த சிகரத்தின் உச்சியில் மனிதர்களின் கால் தடம் பதிந்துள்ளது இதுவே முதன்முறையாகும் என ஜுகால் கிராமப்பகுதி அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் காத்மண்ட்டிலிருந்து 145 கிலோ மீட்டர் தொலைவில் சிந்துபல்ஜோக் மாவட்டத்தில் உள்ள இந்த மலை, மலையேறும் வீரர்களின் கவனத்தை அதிகம் ஈர்ப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிலாவில் முதல் தனியார் ஊர்தி
- இஸ்ரேலைச் சேர்ந்த, ஸ்பேஸ் ஐ.எல்., என்ற ஆராய்ச்சிக் குழு, விரைவில் நிலாவில் ஒரு சிறிய ஊர்தியை தரையிறக்கவுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், சந்திரனின் மேற்பரப்பில் சில மீட்டர் தொலைவாவது பயணிக்கும் சிறிய ஊர்தியை அனுப்பும் தனியார் அமைப்புக்கு, பல கோடி ரூபாய் பரிசு தரப்போவதாக, 'கூகுளின் லுானார் எக்ஸ் பிரைஸ்' போட்டியை அறிவித்தது.
- இதில் இந்தியாவிலுள்ள, 'டீம் இண்டஸ்' உள்ளிட்ட, பல நாடுகளிலிருந்து விண்வெளி ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். போட்டிக்கான காலக்கெடுவை பல முறை நீட்டிக்க கோரிக்கைகள் வந்தபடியே இருந்ததால், கூகுள் போட்டியை ரத்து செய்தது.
- போட்டியில் பங்கு பெற நினைத்த ஸ்பேஸ் ஐ.எல்., 'பெரெசீட்' என்ற நான்கு கால்களைக் கொண்ட ஒரு விண்கலனை வடிவமைத்தது. வெறும், 600 கிலோ எடை கொண்ட இந்த விண்கலனை, கடந்த பிப்ரவரியில், அமெரிக்காவின் கேப் கனேவெரல் ஏவு தளத்திலிருந்து, 'பால்கன் - 9' ராக்கெட் மூலம் விண்வெளியில் ஏவித் தந்தது ஸ்பேஸ் எக்ஸ்.அப்போது ஏவப்பட்ட பெரசீட் கலன், ஏப்ரல் 4 அன்று நிலாவை நெருங்கி வட்டமிட ஆரம்பித்தது.
- ஏப்ரல் 11 அன்று திட்டமிட்டபடியே எல்லாம் நடந்தால், பெரெசீட், நிலாவில் தரையிறங்கும்.அதற்கடுத்து, நிலாவின் காந்தப்புலம் குறித்து, பெரெசீட் சில சோதனைகளைச் செய்து, பூமிக்கு தகவல்களை அனுப்பும். தவிர, அந்தக் கலனில் இஸ்ரேல் நாட்டு வரலாற்றை நினைவூட்டும் சில பொருட்களையும், ஸ்பேஸ் ஐ.எல்., வைத்து அனுப்பிஉள்ளது.