Type Here to Get Search Results !

மின்திறன் ஒழுங்குமுறை விதிகள் / EB REGULATION ACT 2003

நோக்கம்

  • 2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் (மத்தியச்சட்டம் 36/2003) 61 ஆம் பிரிவின்படி மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணத்தை நிர்ணயித்திருப்பதற்கான விதிமுறைகளையும், வரையறைகளையும், குறித்துரைக்க வேண்டியதிருப்பதாலும், தற்போது, அதற்காக, மேற்சொன்ன 2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் 86(1)(ந) பிரிவுடனும், 181 ஆம் பிரிவுடனும் சேர்த்துப் படிக்கப்படும் 61(h) பிரிவின் படி வழங்கப்பட்ட அதிகாரங்களையும் மற்றும் இதன் பொருட்டு அதனை இயல்விக்கும் பிற அதிகாரங்கள் அனைத்தையும் செலுத்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பின்வரும் ஒழுங்குமுறை விதிகளை இதன் மூலம் இயற்றுகிறது.
தொடக்கம், பொருந்துகை மற்றும் அளாவுகை

  • இந்த ஒழுங்குமுறை விதிகள், “2008 ஆம் ஆண்டு புதிய மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆதாரங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் மின்திறன் ஒழுங்குமுறை விதிகள்” என்று வழங்கப்பெறும்.
  • இந்த ஒழுங்குமுறை விதிகள், 2006, மே 15 நாளிட்ட, ஆணையத்தின் ஆணை எண்.3 வெளியிடப்பட்டுள்ள 2006, மே 15 அன்று நடைமுறைக்கு வந்துள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும்.
  • இந்த ஓழுங்குமுறை விதிகள், 2006, மே 15 அன்று அல்லது அதற்குப் பின்பு, மின் வாங்குகை உடன்பாட்டுப்பத்திரங்களில் / ஒப்பந்தப்பத்திரங்களில் கையொப்பமிடப்பட்டுள்ளதும், தமிழ்நாடு மாநிலத்திற்குள் அமைந்துள்ளதுமான இணை-மின் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளடங்கலான புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களின் அடிப்படையில் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அனைத்திற்கும் பொருந்தும்.
  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களின் அடிப்படையிலான மின் உற்பத்தியாளர்கள் மற்றும் மின் பகிர்வு உரிமம்தாரர்களுக்கிடையேயானதும், 2006 மே 15ஆம் நாளுக்கு முன்பு கையொப்பமிடப்பட்டதுமான ஒப்பந்தப்பத்திரங்கள் மற்றும் உடன்பாட்டுப்பத்திரங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வரும். 
  • எனினும், மின் உற்பத்தியாளர்கள் மற்றும் மின் பகிர்வு உரிமம்தாரர்கள், அந்த உடன்பாட்டுப்பத்திரங்கள் / ஒப்பந்தங்கள் முடிவடைவதற்கு முன்பு, இந்த ஒழுங்குமுறை விதிகளுக்கிணங்க, 2006 மே 15ஆம் நாளுக்கு முன்பு கையொப்பமிடப்பட்ட இந்த உடன்பாட்டுப்பத்திரங்கள் / ஒப்பந்தப்பத்திரங்களை ஒருவருக்கொருவர் மறுபடியும் மாற்றிக்கொள்ள தெரிவுரிமை உடையவராவர். 
  • அதன் நலனைப் பயன்படுத்துவதற்காக, மின் உற்பத்தியாளர் / மின் பகிர்வு உரிமம்தாரர் புதிய உடன்பாட்டுப்பத்திரத்தின் / ஒப்பந்தப்பத்திரத்தின் கீழ் வருவதற்கு தெரிவு செய்யும்போது, மின் உற்பத்தியாளர் / மின்பகிர்வு உரிமம்தாரர் தெரிவுரிமையை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும், மற்றும் அத்தகைய தெரிவுரிமைத் தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் திருத்திய உடன்பாடடுப்பத்திரத்தை எழுதிக்கொடுத்தல் வேண்டும்.
  • புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தப்பத்திரங்கள் / உடன்பாட்டுப்பத்திரங்கள், புதிய ஒப்பந்தப்பத்திரங்கள்/ உடன்பாட்டுப்பத்திரத்திங்கள் எதுவும், இந்த ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்கியவாறு இருத்தல் வேண்டும்.
  • இந்த ஒழுங்குமுறை விதிகள் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அளாவி நிற்கும்.



பொருள் வரையறைகள்

  • இந்த ஒழுங்குமுறை விதிகளில், சூழ்நிலை வேறுபொருள் குறித்தாலன்றி,- (ய) “சட்டம்” என்பது, 2003 ஆம் ஆண்டு மின்சாரச்சட்டம், (மத்தியச் சட்டம் 36/2003) என்று பொருள்படும்;
  • “இணை-மின் உற்பத்தி“ என்பது, (மின்சாரம் உள்ளடங்கலான) இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட வடிவில் பயனுள்ள ஆற்றலை ஒரே சமயத்தில் உற்பத்தி செய்கிற ஒரு செய்முறை என்று பொருள்படும்;
  • “ஆணையம்“ என்பது, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்று பொருள்படும்;
  • “அரசு” என்பது, தமிழ்நாடு அரசு என்று பொருள்படும்;
  • “நிலையான மின்சக்தி“ என்பது, பட்டியலிடப்பட்ட மெகாவாட் (ஆறு) ஒவ்வொன்றிற்கும் ஒரு மணி நேரத்திற்கு மின் உற்பத்தி இயந்திரத்தின் மூலம் மின் கம்பி சட்டத்திற்குள் குறைந்தது 700 யூனிட்கள் உட்புகுத்துதல் என்று பொருள்படும்.
  • இந்த கணக்கீடு 70% வழக்கமான சுமைக் காரணியின் அடிப்படையில் செய்யப்படுகிறது,
  • “நிலையற்ற மின்சக்தி“ என்பது, குறுகிய கால அறிவிப்பின்படி தடை செய்யத்தக்கதான நிலையான மின்சக்தியாக இராத மின்சக்தி வழங்கீடு என்று பொருள்படும்.
  • “புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள்“ என்பது, சிறிய, மிகச்சிறிய நீர்மின் உற்பத்தி, காற்று, சூர்யசக்தி, உயிர்க்கூளம், கரும்புச்சக்கை அடிப்படையிலான இணை-மின் உற்பத்தி, நகரக / நகராட்சிக் கழிவு போன்ற பிற ஆதாரங்கள் அல்லது பொதுவாக முழுவதும் செலவழியாததும், மற்றும் குறுகிய காலத்தில் ஈடுசெய்யக்கூடியதும், இந்திய அரசால் அல்லது தமிழ்நாடு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டவாறானதுமான, பிற மரபுசாரா மின் உற்பத்தி செய்யும் ஆதாரங்கள் என்று பொருள்படும் ;
  • இந்த ஒழுங்குமுறை விதிகளில் காணப்படும் மற்றும் இதில் பொருள் வரையறை செய்யப்படாத, ஆனால், ஆணையத்தால் வெளியிடப்பட்ட பிற ஒழுங்குமுறை விதிகளில் அல்லது சட்டத்தில் பொருள்வரையறை செய்யப்பட்ட சொற்களும், வாசகங்களும், அந்தச் சட்டத்தில் / ஒழுங்குமுறை விதிகளில் அவற்றிற்கு முறையே குறித்தளிக்கப்பட்டுள்ள அதே பொருள்களை உடையனவாக இருத்தல் வேண்டும்.
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை ஊக்குவித்தல்

  • மின்பகிர்வு உரிமம்தாரர் ஒவ்வொருவரும், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்படவேண்டிய எரிசக்தியின் குறைந்தபட்ச அளவானது, அத்தகைய எரிசக்தியின் கிடைக்கக்கூடிய நிலைமைக்கு உட்பட்டு, அவ்வப்போது பிறப்பிக்கப்படும் ஆணையத்தின் ஆணையில் குறிப்பிடப்படுதல் வேண்டும். 
  • மின்பகிர்வு உரிமம்தாரர், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களிலிருந்து மற்றும் இணை மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து வாங்கப்படுகிற மின்சாரத்தின் அளவினை, வரவிருக்கும் ஆண்டிற்காகத் தாக்கல் செய்யும் வருடாந்திர வருவாய்த் தேவைக்கான சமர்ப்பிப்பில் கொடுத்தல் வேண்டும்.
  • கரும்புச் சக்கை / உயிர்க்கூளம் அடிப்படையில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் ஒர் ஆண்டில் தொடங்குகை, நிலைப்படுத்துகை மற்றும் நீட்டித்த நாட்களில் இயங்குகை ஆகியவற்றிற்கு மரபு சார்ந்த எரிபொருள் பயன்படுத்துவது ஓராண்டுக்கு பயன்படுத்தப்படும் எரி பொருளில் அதிகபட்சமாக 25 விழுக்காடு மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • 2005 ஆம் ஆண்டு மாநிலத்திற்குள் திறந்த நுழைவுரிமை ஒழுங்குமுறை விதிகள், 2007 ஆம் ஆண்டு மத்திய மின்சார அதிகார அமைப்பு (மின் கட்டமைப்பினை இணைக்கிற தொழில்நுட்பச் செந்தரங்கள்) ஒழுங்குமுறை விதிகள், மற்றும் தமிழ்நாடு மின்சார கட்டமைப்பு விதித் தொகுப்பு ஆகியவற்றின்படி, மாநில மின் செலுத்தப் பணி நிறுவனத்தினால் (மா.மி.செ.ப) / மின் பகிர்வு உரிமம்தாரரால் மின்சக்தியை வெளியேற்றுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படுதல் வேண்டும். 
  • இடைத்தள மின் தொடர்கள், இணைப்பமைப்பு, மின் அளவி, பாதுகாப்பு ஏற்பாடு, உள் தொடர்பு முனையம் வரையிலுள்ள தொடர்புடைய பிற சாதனங்கள் ஆகியவற்றின் செலவுத் தொகை மின் உற்பத்தியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுதல் வேண்டும். ஆனால், அந்தப் பணி மா.மி.செ.ப. நிறுவனத்தினால் / மின் பகிர்வு உரிமம்தாரரால் நிறைவேற்றப்படுதல் வேண்டும்.
  • குறிப்பிட்ட வகையான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களிலிருந்து உற்பத்தி செய்யும் எரிசக்தியை சேமிக்கும் முறையினை அத்தகைய ஆதாரங்களின் உள்ளுறைத் தன்மைகளைப் பொறுத்து ஆணையம் பரிசீலனை செய்யும்.
  • உரிமம்தாரர், மின் வாங்குகைக்காக மின் உற்பத்தியாளர்களுக்குப் போதியச் செலுத்துகை உத்தரவாதம் அளித்தல் வேண்டும்.



மின்கட்டண வீதத்தை நிர்ணயித்தல்

  • ஆணையம் மின் உற்பத்தியாளர்களால், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும். மின்சாரத்திற்கான மின் கட்டண வீதம் நிர்ணயிப்பதற்கு கீழே குறிப்பிடப்பட்ட செய்முறையைப் பின்பற்றுதல் வேண்டும் :-
  • தானாக முற்பட்டோ அல்லது மின்பகிர்வு உரிமம்தாரரால் அல்லது மின் உற்பத்தியாளரால் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பத்தின் பேரிலோ, மின் கட்டண வீதத்தினை நிர்ணயிப்பதற்கான செய்முறையைத் தொடங்குதல்;
  • தானே முற்பட்ட நடவடிக்கைகளின் பேரில் அல்லது மின்பகிர்வு உரிமம்தாரரால் அல்லது மின் உற்பத்தியாளரால் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பத்தின் பேரில் பொதுமக்களின் ஏற்புத் தன்மையைக் கோருதல்;
  • மேலேயுள்ளவற்றின் பேரில் பொது மக்களிடம் கருத்துக் கேட்டறிதல்;
  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தியாளர்களிடமிருந்து செய்யப்படும்
  • மின்கொள்முதலுக்காகப் பொது அல்லது குறித்தவகைக் கட்டணவீத ஆணையைப் பிறப்பித்தல்.
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தியாளர்களிடமிருந்து மின் பகிர்வு உரிமம்தாரால் வாங்கப்படும் மின்சாரத்திற்கான கட்டண வீதத்தை நிர்ணயிக்கையில், ஆணையம், சாத்தியமான அளவுக்கு:-

  • மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம்,
  • தேசிய மின்சாரக் கொள்கை,
  • இந்திய அரசால் பிறப்பிக்கப்படும் மின் கட்டண வீதக் கொள்கை,
  • ஊரகப் பகுதியில் மின் வசதி செய்தல் கொள்கை,
  • ஒழுங்குபடுத்துவோர் மன்றம்,
  • மத்திய மற்றும் மாநில அரசுகள்
  • ஆணையம், பொது அல்லது குறித்தவகை ஆணையின் மூலம், ஒவ்வொருவகையான புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தியாளர்களிடமிருந்து மின் பகிர்வு உரிமம்தாரரால் வாங்கப்படும் மின்சாரத்திற்கான கட்டண வீதத்தை நிர்ணயித்தல் வேண்டும்.
  • ஐந்து மெகாவாட்டிற்கு (5 ஆறு) மேற்பட்ட திறன்கொண்ட, ஆனால், இருபைத்தைந்து மெகாவாட் (25 ஆறு) திறன்களுக்கு மேற்படாத சிறிய நீர் மின் திட்டங்களைப் பொறுத்தவரை, ஆணையம், அத்தகைய மின் கட்டண வீதத்தை அந்தந்தக் கோரிக்கையின் அடிப்படையில் நிர்ணயிக்கும்:
  • ஆயினும், சட்டத்தின் 63ஆம் பிரிவின்படி வகை செய்யப்பட்டவாறு, மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க பின்வரும் ஒளிவு மறைவற்ற ஏலக்கேட்பு முறையின் மூலம் மின் கட்டண வீதம் நிர்ணயிக்கப்படுமாயின், ஆணையம் அத்தகைய மின் கட்டண வீதத்தை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
  • மின் கட்டண வீதத்தை நிர்ணயிக்கையில், ஆணையம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆதாரத்தின் வகை ஒவ்வொன்றின் தொழில் நுட்பம், எரிபொருள், சந்தை இடர், சுற்றுச்சூழல் நலன்கள் மற்றும் சமுதாயத்தில் ஏற்படும் விளைவு முதலியவற்றின் அடிப்படையில் ஊக்கம் / ஊக்கத் தடையை சாத்தியமான அளவிற்கு அனுமதிக்கலாம்.
  • மின் கட்டண வீதத்தை நிர்ணயிக்கையில், ஆணையம், உரிய நிதி மற்றும் இயக்க அளவுருக்குகளை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
  • மின் கட்டண வீதத்தை நிர்ணயிக்கையில், ஆணையம், பின்னர் மறு பரிசீலனை செய்யக் கூடிய செலவு அடிப்படையில் கணிக்கப்பட்ட ஒரு காரணி மின் கட்டண வீதத்தை ஏற்றுக் கொள்ளலாம்.
எடுத்து சென்ற மின்சாரத்தைச் சரிகட்டுவதற்கான கட்டணங்கள்

  • ஆணையம், சுமைக்காரணி, மின்காரணி, மின்னழுத்தம், ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட கால அளவின் போது அல்லது மின் வழங்கல் தேவைப்படும் நேரத்தில் மொத்த மின் நுகர்வு அல்லது மின் உற்பத்தி செய்யப்படும் அல்லது வழங்கப்படும் ஏதேனும் வட்டாரப் பகுதியின் புவியியல் நிலை, மின் வழங்கல் தன்மை மற்றும் மின் வழங்கலைச் சரி செய்வதற்கான நோக்கம் இவற்றின் அடிப்படையில் எடுத்து சென்ற மின்சாரத்தைச் சரி கட்டுவதற்காக உரிய கட்டணங்களை விதிக்கலாம்.



உடன்பாடு மற்றும் கட்டுப்பாட்டுக் காலம்

  • மின் கட்டண வீத ஆணையில் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட மின்கட்டண வீதம், மின் வாங்குகை உடன்பாட்டுக் காலமான இருபது ஆண்டுகளுக்குப் பொருந்தத்தக்கதாகும். கட்டுப்பாட்டுக் காலம் மூன்றாண்டுகளாக இருக்கலாம். 
  • ஆணையம், மின்கட்டண வீதம் மற்றும் அது தொடர்பானவற்றை மாற்றம் செய்யும் போது, அந்த மாற்றம், அத்தகைய மாற்றம் செய்யப்பட்ட ஆணைத் தேதிக்குப்பின்பு தொடங்கிய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் மின் உற்பத்தியாளருக்கு மட்டுமே பொருந்தத் தக்கதாகும்.
  • மின் வாங்குகை உடன்பாட்டுப்பத்திரம் மற்றும் மின்கொண்டு செல்லுதல் உடன்பாட்டுப்பத்திரம் மின்பகிர்வு உரிமம்தாரர், ஆணையத்தால் குறித்துரைக்கப்படும் கால அளவிற்குள், ஆணையம் ஒப்புதலளிப்பதற்காக மின்வாங்குகை உடன்பாட்டுப்பத்திரத்தின் மாதிரியினைத் தாக்கல் செய்தல் வேண்டும். 
  • அடுத்து வரும் மாதத்தின் 10 ஆம் தேதிக்கு முன்பு மின்உரிமம்தாரர் / மின் உற்பத்தியாளர், முந்திய மாதத்தின்போது எழுதிக்கொடுத்த மின்வாங்குகை உடன்பாட்டுப்பத்திரங்களின் பட்டியலை அளித்தல் வேண்டும், மற்றும் 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டணங்கள் மற்றும் அபராதங்கள் ஒழுங்குமுறை விதிகளில் குறிப்பிடப்பட்டவாறு பொருந்தத்தக்க கட்டணங்களைச் செலுத்துதல் வேண்டும்.
  • மின்பகிர்வு உரிமம்தாரர் / மா.மி.செ.ப, பொது அல்லது சிறப்பு மின்கட்டணவீத ஆணையில் விவரிக்கப்பட்ட மின்கொண்டு செல்லுதல் நெறிமுறைகளைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு மின்கொண்டு செல்லுதல் உடன்பாட்டுப்பத்திரத்தில் கையொப்பமிடுதல் வேண்டும்.
சுயஉபயோகம் மற்றும் மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை தொடர்பான பிரச்சனைகள்

  • ஆணையம், பொது அல்லது குறித்தவகை மின்கட்டணவீத ஆணையைப் பிறப்பிக்கையில், மின்பகிர்வு உரிமம்தாரருக்கு மின்சார விற்பனைக்காக, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களின் உற்பத்தியாளர்களால் சுயஉபயோகம் மற்றும் மூன்றாம் தரப்பினருக்கு மின்சார விற்பனைக்காக, பின்வருவனவற்றின் பேரில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆதாரத்தின் வகை ஒவ்வொன்றிற்கும் உரிய அளவுகள் / நடைமுறை/ அளவுருக்கள் / கட்டணங்களைப் பரிசீலனை செய்யலாம் :
  • நிர்ணயிக்கப்பட்ட தேவைக்கட்டணங்கள்.
  • நிர்ணயிக்கப்பட்ட மின்கட்டணங்கள்.
  • கிடைக்கக் கூடிய மின்கட்டமைப்புக் கட்டணங்கள்.
  • பட்டியலிடல் மற்றும் மின் அமைப்புமுறை இயக்கக் கட்டணங்கள்.
  • மின்செலுத்தல் மற்றும் மின்கொண்டு செல்லுதல் கட்டணங்கள்
  • மற்றும் தொடர் இழப்புகள்.
  • எதிர்வினை மின்கட்டணங்கள்.
  • மின்சாரத்தின் உச்சநிலை மற்றும் உச்சமற்ற நிலைக்காலங்களில் சரிக்கட்டல்.
  • மின்காரணி ஊக்கம் / ஊக்கத்தடை.
  • சுயஉபயோகிப்பாளரால் / மூன்றாம் தரப்பு உபயோகிப்பாளரால் செலுத்தப்படும் பிணைய வைப்புத் தொகை.
  • மின்பகிர்வு உரிமம்தாரரால் மின் உற்பத்தியாளருக்குப் பட்டியல் கொடுத்தலும், பணச் செலுத்துகையும்.
  • நிர்ணயிக்கப்பட்ட திறந்த நுழைவுரிமைப் பதிவுக் கட்டணம் மற்றும் திறந்த நுழைவுரிமை உடன்பாட்டுக் கட்டணம்.
இடர்ப்பாடுகளை நீக்குவதற்கு அதிகாரம்

  • இந்த ஒழுங்குமுறை விதிகளின் வகைமுறைகளில் எதனையும் செயற்படுத்துகையில் இடர்ப்பாடு எதுவும் எழுமானால், ஆணையம் பொது அல்லது சிறப்பு ஆணை வாயிலாக, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு ஒவ்வுதலாகவுள்ள நடவடிக்கையினை எடுக்கலாம்.
திருத்தம் செய்வதற்கு அதிகாரம்

  • தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைப்படி, ஆணையம், எந்த நேரத்திலும், இந்த ஒழுங்குமுறை விதிகளில் எதனையும் சேர்க்கலாம், மாற்றலாம், நீக்கலாம் அல்லது திருத்தலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel