Thursday, 27 December 2018

காஷ்மீர் மாநிலத்துக்கு சில சலுகைகள்


 • இந்தியாவில் இதர மாநிலங்களைக் காட்டிலும் காஷ்மீர் மாநிலத்துக்கு சில சலுகைகள் கொடுக்கப்பட்டுளதை நாம் அறிவோம். மேலும் மத்திய அரசு இயற்றும் அனைத்துச் சட்டங்களிலும், ஜம்மு-காஷ்மீர் தவிர, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று சொல்லப்படுவதைப் பார்த்திருக்கிறோம். 
வரலாற்றுப் பின்னணி

 • மேற்கே காபுல் (இன்றைய ஆப்கானிஸ்தான்) முதல் கிழக்கே இமய மலையின் அடிவாரம் வரை பரவியிருந்தது அப்போதைய காஷ்மீர். "காஷ்யப்" என்ற துறவி காஷ்மீரை உருவாக்கியவர்களுள் முக்கியமானவர். 
 • இமய மலை முழுவதும் சென்று அருட்பணி ஆற்றியவர். காஷ்மீர் என்றால் சமஸ்கிருத்தில் உலர்விக்கப்பட்ட நிலம் (கா= தண்ணீர்+ ஷமீர்=உலர்ந்த நிலம்) என்று பொருள். கல்ஹனர் எழுதிய ‘ராஜதரங்கிணி’ என்னும் வரலாற்று நூலில், காஷ்யப் வாராகமுல்லை மலையை (இன்றைய பெயர் பாரமுல்லா) பிளந்து தண்ணீர் வரச்செய்து, பின்னர் தண்ணீர் உலர்ந்ததும் பண்டிதர்களை குடியிருக்கச் செய்ததாக கூறுகிறது.
 • ஜம்மூவின் பெயர் காரணம் சற்று விசித்திரமானது, ஜம்பூலசன் என்னும் அரசன் ஒருமுறை காஷ்மீர் மலைப் பகுதிக்கு வேட்டைக்கு சென்ற போது, ஒரே இடத்தில் ஒரு சிங்கமும், ஒரு ஆடும் ‘தவி’ ஆற்றில் நீர் அருந்துவதைப் பார்த்து பரவசமடைந்து அங்கே ஒரு நகரத்தை தோற்றுவித்தார். 
 • அதற்கு, ஜம்பூ என அவர் பெயரையே சூட்டி இருந்தார். பின்னாளில் மருவி ஜம்மு என்றானது. முதலில் பண்டிதர்களும், பிறகு புத்த மதமும் காஷ்மீரில் கால் பதிக்க புத்த கோவில்களும், விகாரங்களும் காஷ்மீரில் எழுந்தன. கி.மு 250 வரை அசோகரும் பின் மௌரிய வம்சத்தினரும் ஆண்டு வந்தனர். 
 • மௌரியர்களைத் தொடர்ந்து குஷான வம்சத்தினர் காஷ்மீரின் மிச்ச வருடங்களை ஆண்டனர். பண்டிதர்களும், புத்த மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த 13-ம் நூற்றாண்டில், சரியாக சொல்வதென்றால் கி.பி 1326-ல் மேற்கில் இருந்து வந்தது வினை. 
 • ஷாமிர் என்ற மன்னன் ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் வழியில் உள்ள அத்தனை ஊர்களையும் சூரையாடிவிட்டு காஷ்மீருக்கு வந்தார். காஷ்மீரைப் பொறுத்தவரை காண்பவர் எவரும் அதன் அழகில் மயங்கி அமைதி அடைவர், ஆனால் ஷாமிர் மேலும் உற்சாகமடைந்து ஊரை சூரையாடத் தொடங்கினான். 
 • இப்படியாக இஸ்லாம் காஷ்மீரில் நுழைந்தது. பின்னர் அங்கு வந்த சுல்தான் சிக்கந்தர் அங்கு இருந்த மக்களையும், குறு நில ஆட்சியாளர்களையும் இஸ்லாத்திற்கு மாறும்படி பணித்தார். இஸ்லாம் அல்லாத மற்ற மக்களுக்கு வரி விதிப்புகளும், சிறப்பு சட்டங்களும் இயற்றப்பட்டன.
 • இவர் காலத்தில் தான், பெர்ஷிய சிற்பக் கலையும், கம்பளி தயாரிப்பும் வளர்ச்சி அடைந்தது. 16-ம் நூற்றாண்டு தொடங்கி பண்டிதர்களும், பவுத்தர்களும் இரண்டாம் தர குடிகள் ஆனர்கள். பின்னர் 18-ம் நூற்றாண்டு முடிவில் அவுரங்கசீப் மறைவிற்கு பின் முகலாய அரசர்களின் பிடி தளர்ந்தது.
 • 1846 ல் ஏற்பட்ட ஆங்கிலோ சீக்கிய போரின் முடிவில், குலாப் சிங் லாகூர் மற்றும் சில மேற்கு பகுதிகளை விட்டுக் கொடுத்துவிட்டு காஷ்மீரை வாங்கிக் கொண்டார். காஷ்மீருக்கு அவர் ஆங்கிலேயருக்கு வருடம் இவ்வளவு என்று வரி செலுத்த வேண்டும் என்பது ஒப்பந்தம். குலாப் சிங்கிற்கு காஷ்மீர் கிடைத்தது ஒரு சுவையான சம்பவம். 
 • அப்போதைய பஞ்சாப், காஷ்மீர் வரை நீண்டிருந்தது. குலாப் சிங், தோக்ரா என்ற மலைவாழ் இனத்தை சார்ந்தவர். ஆங்கிலோ சீக்கிய போரில் வீரம் காட்டிய குலாப் சிங்கிற்கு காஷ்மீரை பரிசாக கொடுத்தார் பஞ்சாப் அரசர். குலாபிற்கு பின் வந்த ரன்பீர் சிங், இப்போதைய கில்கிட் பால்டிஸ்தான் வரை கைப்பற்றினார். அதன் பின் காஷ்மீரின் கடைசி மன்னர் ஹரி சிங். காஷ்மீர் இவருக்கு தாத்தா சொத்து.
 • ரன்பீர் சிங்கின் பேரன் ஹரி சிங் 1925 ஆம் ஆண்டு அரியணை ஏற்றபோது, இந்திய விடுதலை போராட்டம் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருந்தது. 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்தியப் பிரிவினையின் போது இரு நாடுகளும் அப்போதைய இந்தியாவில் இருந்த அனைத்து சிற்றரசர்களும் தம் விருப்பப்பட்டு.
 • தாம் விரும்பும் படி இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணையவோ, அல்லது சில குறிப்பிட்ட பகுதிகளில் தனி நாடாகச் செயல்படவோ ஒப்புக் கொண்டன. 1947 ஆம் ஆண்டு காஸ்மீர் அரசின் மக்கள்தொகையில் சுமார் 77% இசுலாமியர் வாழ்ந்து வந்தனர். 
 • ஒப்பந்தத்தை மீறி அக்டோபர் 20, 1947 அன்று பாகிஸ்தான் ஆதரவில் செயல்பட்ட பழங்குடிகள் காஸ்மீரைத் தாக்கிக் கைப்பற்ற முயன்றனர். ஆரம்பத்தில் பாகிஸ்தானை எதிர்த்துப் போராடிய காஷ்மீர் அரசர் ஹரி சிங், அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி இந்தியாவின் தலைமை ஆளுநர் மவுண்ட்பேட்டன் பிரபுவின் உதவியை நாடினார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முன்வந்தால் உதவ இயலும் என்ற மவுண்ட்பேட்டன் பிரபுவின் நிபந்தனையின் பேரில், இந்தியாவுடன் இணையும் உடன்பாட்டு ஆவணம் கையெழுத்து ஆனது.
 • 1947 இந்திய விடுதலை சட்டத்தின் படி, மகாராஜா ஹரி சிங் தனது ஜம்மு காஷ்மீரை, இந்தியாவுடன் இணைத்துக் கொள்வதை தாமாக முன்வந்து ஏற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டார். 
 • இந்திய கவர்னர் ஜெனரலராக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபு 27 அக்டோபர் 1947 அன்று, ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்தார். ஒப்பந்தம் கையெழுத்து ஆனதும் இந்திய போர்வீரர்கள் மேற்படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தும் ஆணையுடன் காஷ்மீருக்குள் நுழைந்தனர். 
 • ஆனால், அவ்வாணைப்படி புதிய ஆக்கிரமிப்பை மட்டுமே தடுக்க வேண்டும். ஏற்கனவே பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியைத் திரும்பப் பெறும் முயற்சி செய்யப்பட மாட்டாது. இம்முயற்சியின் போது இந்தியா இவ்விவகாரத்தை ஐக்கிய நாடுகள் அவைக்கு கொண்டு சென்றது. ஐ நா தீர்மானத்தில், பாகிஸ்தான் தாம் கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேறவும், இந்தியா, மக்கள் எந்த நாட்டுடன் வாழ விரும்புகிறார்கள் என்பதை அறியும் வகையில் ஐ நாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் வழி கூறப்பட்டது இந்த உடன்படிக்கையால் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதால் ஜம்மு காஷ்மீர் உரிமைப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 
 • ஜம்மு காஷ்மீர், இந்தியாவுடன் இணைக்க ஒப்பந்தம் செய்து கொண்ட நாளான அக்டோபர் 26 ஆம் தேதியை, ஆண்டுதோறும் ஜம்மு காஷ்மீர் இணைப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது.சட்டப்பிரிவு 35-A என்ன சொல்கிறது?

 • 1954 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் ஜம்மு - காஷ்மீர் பிராந்திய பிரதமர் ஷேக் அப்துல்லா இருவரும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, 370 மற்றும் 35-A சட்டப்பிரிவு இந்திய அரசமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டது.
 • 1954ஆம் ஆண்டு, இந்திய குடியரசுத் தலைவரின் உத்தரவின் படி 35-A சட்டப்பிரிவு, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதியை வழங்கும் சட்டப்பிரிவு 370- உடன் சேர்க்கப்பட்டது. இது, மாநிலத்தின் நிரந்தர குடிமக்கள் யார், அவர்களுக்கு என்ன உரிமை என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை 35-ஏ பிரிவு மாநில அரசுக்கு வழங்குகிறது. மேலும் சம உரிமை, சமத்துவம் ஆகியவை பாதிக்காதவாறு, அம்மாநில சட்டப்பேரவை எந்தவொரு சட்டத்தையும் இயற்றிக் கொள்ளலாம்.370வது பிரிவு சொல்வது என்ன?

 • இந்திய அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிகமாக சிறப்பு அந்தஸ்தை அளிக்கிறது. இந்த சிறப்பு அந்தஸ்தின்படி இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மட்டுமே பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது.
 • இதன்படி, இந்திய நாடாளுமன்றத்தில் ராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாது.
 • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய உச்சநீதிமன்றம் ஆளுகையும் உள்ளது. மேலும் இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடி உண்டு ஆயினும் இந்தக் கொடியை இந்திய தேசியக் கொடியுடன் சேர்த்தே ஏற்றப்படவேண்டும். இம்மாநிலத்திற்கு தனி அரசியல் சாசனமும் உண்டு
 • அம்மாநில ஆளுநரை நியமிக்கும் பொழுது, அம்மாநில முதல்வரை ஆலோசித்தப் பின்னரே நியமிக்க வேண்டும். இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் இந்த மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
 • ஜம்மு காஷ்மீர் மாநில பெண்கள் மற்ற மாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால் அப்பெண்கள் நிலம் வாங்கும் உரிமையை இழந்துவிடுவார்கள், ஆண்கள் மற்ற மாநில பெண்களை மணந்தால் அவர்கள் நிலம் வாங்க முடியும்.
 • ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் 6 ஆண்டுகள் ஆகும். மற்ற எந்த இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும். அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது.
 • இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் XXI வது பகுதியில் திருத்தம் செய்து தற்காலிக மற்றும் மாறுதலுக்கு உட்படுத்துதலின் கீழ் 370வது பிரிவு வரையறுக்கப்பட்டது.
 • முதலில் உருவாக்கப்பட்ட 370வது பிரிவில், "மாநில அரசு என்பதற்கான அர்த்தம் ஜனாதிபதியால் தற்காலிகமாக அங்கீகரிக்கப்படுகிற நபரே ஜம்மு காஷ்மீரின் மகாராஜாவாக, மத்திய அமைச்சர்களின் அறிவுரைப்படி தற்காலிகமாக செயல்பட முடியும்" என கூறப்பட்டிருந்தது.
 • அதன்பின்னர் 1952 நவம்பர் 15-ல் அதில், அதாவது 370வது பிரிவில் மாற்றம் செய்யப்பட்டு, "மாநில அரசு என்பதற்கான அர்த்தம் ஜம்மு காஷ்மீர் கவர்னரால், மாநில சட்டசபை மூலம் பரிந்துரைக்கப்பட்டு, ஜனாதிபதியால் தற்காலிகமாக அங்கீகரிக்கப்படுகிற நபரே ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக மத்திய அமைச்சர்களின் அறிவுரைப்படி தற்காலிகமாக செயல்பட முடியும்" என வரையறுக்கப்பட்டது.
 • அரசியல் சாசனத்தின் 370வது பிரிவின்படி மாநிலத்தின் எல்லையை இந்திய நாடாளுமன்றத்தால் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a comment