Type Here to Get Search Results !

பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம், 2013

பாலியல் வன்முறை தடுப்பு
  • இந்தியாவில் பணியிடத்தில் பாலியல் வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம், 2013 நிறைவேற்றப்பட்டது.
பின்னணி
  • 1997-ம் ஆண்டில் விசாகா வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றமானது பணியிடத்தில் பாலியல் வன்முறை என்பது மனித உரிமைமீறல் நடவடிக்கையாகும் என்பதனை முதல் முறையாக ஏற்றுக் கொண்டது. 
  • இவ்வழக்கில் தனது தீர்ப்பினை அளிக்கும்போது பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தடுத்திட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களையும் அளித்தது. இதுதொடர்பான சட்டம் இயற்றப்படும் வரை இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் இந்தவழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப் படுவதனைக் கட்டாயம் ஆக்கியது. 
  • இதனடிப்படையில்தான் பணியிடத்தில் பாலியல் வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான சூழல் எழுந்தது.



சட்டத்தின் அம்சங்கள்
  • விசாகா வழக்கில் நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலானது, நிறுவனம் மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களை மட்டுமே கட்டுப்படுத்துவதாக இருந்தது. ஆனால், பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டமானது , அலுவலகங்களில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, கட்டிடத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள் உள்ளிட்ட முறைசாராத் தொழிலாளர்கள், தற்காலிக அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்கள், தினக்கூலி அல்லது பயிற்சி அல்லது அப்ரெண்டிஸ் அடிப்படையில் வேலை செய்பவர்கள், ஊதியம் பெற்றோ அல்லது பெறாமலோ பணிபுரிபவர், தன்னார்வ அடிப்படையில் பணிபுரிபவர் என அனைத்து பெண் தொழிலாளர்களுக்கும் பணியிடத்தில் பாதுகாப்பு அளிப்பதாக உள்ளது. 
  • இச்சட்டத்தின்படி, 10 பேருக்கு மேல் பெண்களை பணியிலமர்த்தி உள்ள எந்தவொரு நிறுவனமும் அலுவலக அளவிலான புகார் குழு ஒன்றை அமைத்திட வேண்டும். இக்குழுவின் தலைவராக அந்நிறுவனத்தில் உயர்நிலை பொறுப்பில் பணிபுரியும் பெண் ஒருவர் இருக்க வேண்டும். 
  • பெண்களின் நலனில் அக்கறையோடு அல்லது சமூக செயல்பாட்டில் அக்கறையோடு அல்லது சட்ட அறிவு கொண்ட சக பெண் ஊழியர் இருவர் உறுப்பினராக இருப்பதுடன், பெண்களின் மேம்பாட்டில் ஈடுபடும் அல்லது பாலியல் துன்புறுத்தல் குறித்த வழக்குகளில் தலையீடு செய்யும் அனுபவம் கொண்ட தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவரும் இக் குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும். 
  • பணியிடத்தில் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த புகாரினை நிறுவன அளவிலான அல்லது இட அளவிலான புகார் குழுவிடம் அளித்திடலாம். பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நடந்து 3 மாதங்களில் எழுத்துப்பூர்வமான புகாரினை அளித்திட வேண்டும். 
  • உடல் அல்லது உளரீதியான பாதிப்பின் காரணமாக இறப்பு அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணால் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க இயலவில்லை எனில் அவளது சட்டப்பூர்வமான வாக்ச்சுதாரரோ அல்லது வேறு எவரேனுமோ புகாரினை பதிவு செய்திடலாம். 
  • பாதிப்பிற்காளான பெண் விரும்பினால் புகார் குழுவானது விசாரணை மேற்கொள்வதற்கு முன்னதாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சியினை மேற்கொள்ளலாம். பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட தீர்வு அமலாகாதபோது புகார் குழு தனது விசாரணையைத் துவக்கிடலாம். புகாரினை விசாரித்திடும் இக்குழுவானது, குற்றம் உண்மையெனில் ஊழியரின் தவறுக்கேற்ப எச்சரிப்பது அல்லது அலுவலகம் சார்ந்த நடவடிக்கை மேற்கொள்வது அல்லது காவல்துறையிடம் வழக்கை ஒப்படைப்பது என்ற நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். 
  • விசாரணை நடைபெறும் காலத்தில் பாதிக்கப்பட்ட பெண் எழுத்துமூலம் கோரினால் அப்பெண்ணையோ அல்லது குற்றம்சாட்டப்பட்டவரையோ இடமாற்றம் செய்திடலாம். ஏற்கனவே உள்ள விடுப்புடன் 3 மாத காலம் வரையிலான சிறப்பு விடுப்பு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அளித்திடலாம். பொதுவாக விசாரணை என்பது 90 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். 
  • விசாரணை நடத்தப்பட்டு முடிந்தவுடன் 10 நாட்களுக்குள் புகார் குழுவானது தனது அறிக்கையை அளித்திட வேண்டும். இந்த அறிக்கையின் அடிப்படையில் 60 நாட்களுக்குள் முதலாளி அல்லது நிறுவனர் அல்லது மாவட்ட அதிகாரி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து புகார் குழுவிற்கும் தெரிவிக்க வேண்டும்.



எவை பாலியல் வன்முறை
  • விசாகா வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலில் பாலியல் வன்முறை என்பது வரையறை செய்யப்பட்டிருந்தது. இதனை ஒட்டியே, இச் சட்டத்திலும் பாலியல் வன்முறை என்பது வரையறை செய்யப்பட்டுள்ளது. 
  • இச்சட்டத்தின்படி, பாலியல் துன்புறுத்தல் என்பதில் தொடுதல் அல்லது தொட முயற்சித்தல், பாலியல் ரீதியான விஷயங்களைக் கோருதல் அல்லது வலியுறுத்தல், பாலியல் தொனியில் பேசுதல், ஆபாச படங்களைக் காட்டுதல், இதர விரும்பத்தகாத பாலியல் தன்மையுடன் கூடிய உடல் ரீதியான அல்லது வார்த்தைகள், சைகைகள் கொண்ட நடத்தை போன்றவை அடங்கும்.
அபராதம்
  • இச்சட்டம் கறாராக அமலாக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதால்தான் புகார் குழு அமைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் இருந்தாலோ அல்லது சட்டத்தின் விதிமுறைகளை மீறினாலோ ரூ.50000 வரை அபராதம் விதிக்கவும் இச்சட்டம் வழி வகை செய்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel