Type Here to Get Search Results !

ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) / JALLIKATTU




  • ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.
  • தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம்அவனியாபுரம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும்,[திருச்சி ] பெரிய சூரியூர்,நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி , புதுக்கோட்டை மாவட்டம்நார்த்தாமலை, திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம்போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.
பெயர்க்காரணம்
  • சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. 
  • அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். 
  • இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' ஆனது என்றும் கூறப்படுகிறது.
வகைகள்
  • வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது.வாடிவாசல் ஜல்லிக்கட்டு
  • மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.வடம் ஜல்லிக்கட்டு
  • வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.
வரலாறு
  • பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. 
  • கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. 
  • இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆயர்கள்/யாதவர்கள் இந்தியா முழுவதும் பரவி வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சங்க இலக்கியங்களில் ஏறுதழுவுதல்
சங்க இலக்கியமான கலித்தொகை
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்.
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய - உயிர்துறந்து நைவாரா ஆய மகள் தோள்.
  • அதற்கு நச்சினார்க்கினியர் எழுதும் உரை: "கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்." என்பதாகும். 
  • பாடலின் இறுதியில் அடக்கப்பட்ட மற்றும் அடக்கப்படாத காளைகள் தொழுவத்தைக் கடந்து வயல்வெளிகளுக்கு ஓடிவிட்ட பின்னர் காளைகளும் ஆயர்குல மகளிரும் ஆட்டம் ஆடும்போது திருமாலையும் அரசனையும் வாழ்த்துகின்றனர்.
  • பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது. ஆயர் குல இளைஞர்கள் ஊரார் முன்னிலையில் காளையை அடக்குவர். வெற்றி பெற்ற இளைஞர்களில் மனம் கவர்ந்தவனுக்கு மாலை சூட்டுவாள் ஆயர் குலப் பெண்.
ஆயச்சியர் குரவைக் கூத்தும் ஏறு தழுவுதலும்
  • ஏறு தழுவலுக்கும் குரவைக் கூத்திற்கும் தொடர்பிருந்தது. குரவைக் கூத்து ஏறு தழுவலுக்குரிய நாளுக்கு முதல் நாள் மாலையிலாவது, ஏறு தழுவும் நாளின் மாலையிலாவது ஊர் பொதுமன்றே நிகழும். 
  • முதல் நாளாயின் தம் காதலரை ஏறு தழுவுவதற்குத் தூண்டும் பாட்டுகளையும், ஏறுதழுவிய நாளாயின் தம் காதலர் வெற்றியைக் கொண்டாடும் பாட்டுகளையும் ஆயர் குல மகளிர் பாடுவர். ஏறுதழுவுதல் மண வினையுடன் தொடர்புடையதாய் அமைந்திருந்தது. 
  • காளையை அடக்கிய மணமாகா இளைஞர் பெண்ணினைப் பரிசாகப் பெறுவதுண்டு. இன்று ஏறு தழுவுதல் என்ற பெயர் வழக்கில் இல்லை. இருப்பினும் ஏறுதழுவலின் எச்சமாக இன்றைய சல்லிக்கட்டு விளங்குகிறது.
ஏறுதழுவுதலும் ஜல்லிக்கட்டும்
  • ஏறு தழுவுவதற்கும் சல்லிக்கட்டுக்கும் சில வேறுபாடுகளே உள்ளன. முல்லை நிலத்து மக்களாகிய ஆயரிடம் மட்டுமே ஏறுதழுவுதல் இடம்பெற்றது. தற்போது சல்லிக்கட்டில் ஆயர் மட்டுமின்றிப் பல திறத்தவரும் பங்கேற்கிறார்கள். 
  • இருப்பினும் சல்லிக்கட்டில் வென்றவர் பணமுடிப்பினைப் பரிசாகப் பெறுதல் ஆயரிடம் பெரும்பான்மையாக உள்ளது. சல்லிக்கட்டு தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழா போல் கொண்டாடப்படுகிறது. ஏறு தழுவுதல் விழா தெய்வ நம்பிக்கையுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை. 
  • ஆனால் சல்லிக்கட்டு கிராமிய தேவதைகளின் வழிபாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது. அம்மை, வைசூரி போன்ற கொடிய நோய்கள் பரவிய காலத்திலும், மழையில்லா வறட்சிக் காலங்களிலும், பிள்ளை வரம் கேட்கும் நிலையிலும் வேண்டுதல் நடைபெறும். இக்குறைகள் நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று சல்லிக்கட்டுகிறோம் என்பதே வேண்டுகோளாய் அமைகிறது.
மற்ற நாடுகளில் காளைப்போர்
  • ஸ்பெயின், போர்ச்சுகல், மெக்சிகோ நாடுகளில் காளைப் போர் முக்கியமான தேசியப் பொழுதுபோக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைகளை அரங்கத்திற்குள் விரட்டி, ஆத்திரமூட்டிச் சண்டையிட்டுக் கொல்வதே இக்காளைப் போரின் நோக்கம். இம்மேனாட்டுக் காளைப் போரும் சல்லிக்கட்டும் ஒன்று போலத் தோன்றினாலும், இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை ஆகும்.
தற்காலச் சிக்கல்கள்
  • ஏறுதழுவல் விலங்குகளைத் துன்புறுத்துவதாகக் கருதுவோரும் தேவையற்ற உயிரிழப்பும் காயங்களும் ஏற்படுவதாகக் கருதுவோரும் அண்மைய ஆண்டுகளில் சல்லிக்கட்டைத் தடை செய்யக் கோரி இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து வருகின்றனர். 
  • விலங்குகள் நல ஆர்வலர்கள், இந்திய விலங்கு நல வாரியம், பீட்டா (PETA), இந்திய நீலச் சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளும் இதில் அடக்கம். இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம், 1960 இனை சல்லிக்கட்டு நிகழ்வுகள் மீறுகின்றன என்பது இவர்களது குற்றச்சாட்டு. 
  • 2008 முதல் ஒவ்வொரு ஆண்டும் சல்லிக்கட்டின் ஆதரவாளர்களும் எதிர்ர்ப்பாளர்களும் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்காடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிபந்தனைகளுடன் சல்லிக்கட்டு நடைபெற நீதிமன்றங்கள் அனுமதி அளித்து வருகின்றன.
ஆதரிப்போர் கருத்து
  • சல்லிக்கட்டை ஆதரிப்போர் அது தமிழர்களின் பண்பாடாகக் கருதப்படுவதாகவும் அதை அழியவிடக் கூடாது என்றும் கூறுகின்றனர். மேலும், அவர்கள் கூறுவது: சல்லிக்கட்டுக் காளையை உழவுக்குப் பயன்படுத்துவது இல்லை. 
  • கன்றில் இருந்தே சிறப்பாக வளர்க்கப்பட்டுக் கோவில் மாடாக வழிபட்டு சல்லிக்கட்டுக்கு மட்டும் பயன்படுத்த வளர்க்கப்படுகிறது. ஒன்றிய அரசு விதித்துள்ள கட்டுப்பாடு யானைக்குக் கூட இல்லை. கேரளத்தில் யானையை வைத்துப் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எதிர்ப்போர் கருத்து
  • சல்லிக்கட்டை எதிர்ப்போர் கூறும் முதன்மையான வாதம் விலங்கு வதை. உழவுக்குப் பயன்படுத்தாமல் பாராட்டி சீராட்டி வளர்ப்பது அந்தக் காளையை ஆண்டின் ஒரு நாளில் உடல், மன அழுத்தங்களுக்கு உட்படுத்த முடியும் என்ற உரிமையை வளர்ப்பவருக்கு கொடுத்து விடாது என்பது சல்லிக்கட்டை எதிர்ப்பவர்களின் வாதம். 
  • கேரளாவில் இன்னொரு விலங்கை மனிதனின் களியாட்டங்களுக்கு பாவிப்பதையும் சில ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் இதைவிட கடுமையான நிகழ்வுகளையும் தடை செய்தால்தான் இதையும் தடைசெய்ய முடியும் என்ற சல்லிக்கட்டு ஆதரவாளர்களின் நிலைப்பாட்டையும் இவர்கள் மறுக்கின்றார்கள். 
  • ஒரு பண்பாட்டு நிகழ்ச்சி அடிப்படையிலேயே தவறாக இருப்பதால் அதை விட்டுக்கொடுத்து விலங்குகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்கிறார்கள். அது மட்டுமன்றி சல்லிக்கட்டு என்பது ஒட்டு மொத்த தமிழ் நாட்டின் பண்பாடு அல்லாது ஒரு சில மாவட்டங்களிலுள்ள சில மக்கட்பிரிவின் அடையாளம் என்ற வாதமும் இவர்களால் முன்வைக்கப்படுகிறது.
2008-11
  • சல்லிக்கட்டில் காளைகள் கொடுமை செய்யப்படுவதாகப் புகார் சொல்லி, விலங்குகள் நல வாரியம் மூலம் 2008 சனவரியில் பொங்கல் விழாவுக்குச் சில நாட்களுக்கு முன் மேனகா காந்தி வழக்கு தொடர்ந்தார். இந்திய உச்ச நீதிமன்றம் சல்லிக்கட்டு நடத்துவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு விதித்தது. 
  • ஒருசில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் சல்லிக்கட்டு நடத்த ஒப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மறுமுறையீடு செய்தது. பின்னர் இச்சிக்கலை எதிர்கொள்ள ”தமிழ்நாடு சல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009” இனை இயற்றியது. இச்சட்டம் சல்லிக்கட்டு நடத்துபவர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளைப் பட்டியிலிட்டது. 
  • தமிழக அரசு, தடையை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து சல்லிக்கட்டு நடைபெற மீண்டும் அனுமதி பெற்றது. இச்சட்டம் சரிவர செயல்படுத்தப்படுவதில்லை என விலங்கு நல ஆர்வலர்கள் தொடர்ந்து நீதிமன்றங்களை அணுகினர்.
  • உச்ச நீதிமன்றத்தில் இந்திய விலங்கு நல வாரியம் சல்லிக்கட்டு தொடர்பாக முன்வைத்த சில ஆலோசனைகள்:
  • ஒரு மாவட்டத்தில் ஓராண்டில் மூன்று சல்லிக்கட்டுகளுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.
  • குறைந்த அளவாக ரூ.20 இலட்சத்தை வைப்புநிதியாக சல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் செலுத்த வேண்டும். போட்டியின்போது காயமடைபவர்களின் நலனுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும்.
  • தகுந்த மருத்துவத் துணைக்கருவிகள், மருந்துகளுடன் கால்நடை மருத்துவர் ஒருவரும் போட்டியின்போது பணியில் இருக்க வேண்டும்.
  • ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஐந்து பேருக்கு மேல் காளையை அடக்க அனுமதிக்கக் கூடாது.
  • ஏற்கனவே உள்ள சல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டத்தை மீறுபவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. ஒரு இலட்சம் தண்டமும் விதிக்கும் வகையில் சட்டத்தின் ஏழாவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • இது போன்ற பல நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 2011 பொங்கல் திருவிழாவை ஒட்டி சல்லிக்கட்டை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. 2011 இல் சல்லிக்கட்டு நிகழ்வுகளால் ஏற்பட்ட இறப்புகளும் காயமடைந்தோர் எண்ணிக்கையும் முந்தைய ஆண்டுகளை விடக் குறைவாக இருந்தன.
  • பொங்கல் முடிந்த பின்னரும் 2011 இல் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. மார்ச் 2011 இல் சல்லிகட்டு நடத்துவதற்கு கூடுதல் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆணையிட்டது.
  • சல்லிக்கட்டை எதிர்த்து 2011 இல் உச்சநீதிமன்றத்தில் மேலுமொரு மனு பெடா அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டது.[14] 2011, சூலை மாதம் மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் ஓர் உத்தரவு பிறப்பித்தார். 
  • சிங்கம், புலி, கரடி, குரங்கு போன்ற காட்டு விலங்குளைக் கூண்டில் அடைத்தோ பொது இடங்களில் வைத்தோ வித்தை காட்டக் கூடாது என ஏற்கனவே உள்ள சட்டத்தில் "காளை" புதிதாகச் சேர்க்கப்பட்டது. இந்த உத்தரவு சல்லிக்கட்டுக்கு நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாகத் தடைவிதித்தது போல் ஆனது.
2012
  • ஒன்றிய அரசின் மேற்கூறிய கட்டுப்பாடு நடப்பில் இருந்தாலும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 2012 இல் சல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. 
  • 2012 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி, உச்ச நீதிமன்றத்தின் 77 நிபந்தனைகளுக்கு உட்பட்டு சல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் நடந்தன. காளைகளைப் பதிவு செய்வதற்காகக் கால்நடை மருத்துவர்களிடம் உடல் தகுதிச் சான்று பெறப்பட்டது. 
  • மாடுபிடி வீரர்களுக்கு முதன்முறையாகப் பயிற்சி முகாம் மதுரையில் மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் சனவரி 7ஆம் நாள் நடந்தது. நாட்டுப்புறச் சல்லிக்கட்டு விழாக் குழுவினர் சீருடை தைப்பது, பரிசுப் பொருட்களைத் தயார் செய்வது, விழா அழைப்பிதழ் வழங்குவது, சல்லிக்கட்டுக் காளைகளுக்குப் பயிற்சி அளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.
  • பொங்கல் திருநாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள் சனவரி 16ஆம் நாள் பாலமேட்டிலும், 17ஆம் நாள் அலங்காநல்லூரிலும் சல்லிக்கட்டு விழா நடைபெற்றது. 
  • இதற்காகக் கால்நடைப் பராமரிப்புத் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் சல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாகத் தங்களுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவுப்படி பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டனர். 
  • இந்நிகழ்வுகளில் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருந்தன. காளைகளுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது; கூர்மையான கொம்புகளைக் கொண்ட மாடுகள் போட்டியிலிருந்து விலக்கப்பட்டன.
2014
  • மே 7 , 2014 இல் சல்லிக்கட்டு நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காளைகள் துன்புறுத்தப்படுவதால் சல்லிக்கட்டு நடத்தக் கூடாது என அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது. 
  • சல்லிக்கட்டுக்கு முழுமையாகத் தடை விதிக்கக் கோரி விலங்குகள் நல அமைப்பு சார்பில் தொடரப்பட்ட பொது நல வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே. எஸ். ராதாகிருஷ்ணன், பினாகி சந்திர கோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்றது. 
  • இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ஒன்றிய அரசு, சல்லிக்கட்டுப் பேரவை மற்றும் விலங்குகள் நல வாரியம் ஆகியோர் சார்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 
  • சல்லிக்கட்டுப் போட்டிகளைக் கண்காணிக்கவும் காளைகள் துன்புறுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தவும் விலங்குகள் நல வாரியத்தின் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமிக்கலாம் என ஒன்றிய அரசு சார்பில் விவாதம் நடந்தது. 
  • ஆனால், போட்டிகளின் போது கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படாததால், காளைகள் துன்புறுத்தப்படுவதாகச் சல்லிக்கட்டிற்குத் தடைவிதிக்க வேண்டும் என விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 
  • இந்த நிலையில் காளைகள் துன்புறுத்தப்படுவதாலும், அதனைத் தடுக்கத் தகுந்த நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளவில்லை என்பதாலும் சல்லிக்கட்டு நடத்தத் தடை விதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது.
  • இதனை எதிர்த்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மக்கள் கருப்புக் கொடி ஏந்தி போராடினர். இதனையடுத்து தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது . தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் யோகேசு கண்ணா மனு தாக்கல் செய்தார்.
2016
  • ஏறுதழுவுதலுக்கு இருந்த தடையை 2011ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் துறையின் அறிக்கையை மாற்றி இந்திய ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது.
  • இந்திய விலங்குகள் நல வாரியம் ஏறுதழுவுதலுக்கான தடையை நீக்கவில்லை என்றும் ஏறுதழுவலுக்கான அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுவதாக பெட்டா அமைப்பு கூறியது.
  • பெட்டா அமைப்பு சல்லிக்கட்டை நடத்தலாம் என்ற அரசு அனுதியை எதிர்த்து திங்கள் கிழமை இந்திய உச்ச நீதிமன்றம் சென்று மீண்டும் உச்ச நீதிமன்றம் மூலம் செவ்வாய் 01-12-2016 அன்று தடைவாங்கியது.
2017
  • ஏறுதழுவல் விளையாட்டில் காளைகளும் வீரர்களும் இறக்கக் கூடும் அல்லது காயமடையக் கூடும். கடந்த காலத்தில் இறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.
  • சிறு அளவிலோ பெரும் அளவிலோ காயங்கள் ஏற்படுவது வழமை. ஒவ்வொரு ஆண்டும் சல்லிக்கட்டின் போதும் அதைத் தொடர்ந்தும் காயமுற்ற 80 முதல் 100 பேர் மதுரை இராசாசி மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார்கள். சிறு காயமுற்றோர் சல்லிக்கட்டு நடைபெறுகின்ற அவனியாபுரம், பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குப் போகிறார்கள்.
2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள்
  • 2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் என்பது சல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டுக்கு வெளியேயும் 2017 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் நடந்த போராட்டங்களைக் குறிக்கும். 
  • இந்தப் போராட்டங்கள் தைப் புரட்சி, மெரீனாப் புரட்சி, இளைஞர்கள் புரட்சி சிறப்புப் பெயர்களால் ஊடகங்களாலும், சில அரசியல் கட்சித் தலைவர்களாலும் குறிப்பிடப்பட்டன. இது ஒரு எழுச்சிப் போராட்டமாக இருந்தமையால், தை எழுச்சி, இளைஞர்கள் புரட்சி எனவும் அறியப்படுகிறது.
  • அரசியல் கட்சித்தலைமைகளின் முனைப்புகள் ஏதுமின்றி, குறிப்பிடத்தக்க தலைமை அடையாளங்கள் ஏதுமின்றி, தன்னிச்சையாகவே பொதுமக்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சமூகவலைத்தளங்களின் வழியாகவே பெருந்திரளான இளைஞர்களைத் திரட்டி அமைதி வழியில் போராட்டங்களை நடத்தினர்.சமூக இணையதளங்களின் வாயிலாக ஒருங்கிணைந்த இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் இந்தப் போராட்டங்களை நடத்தினர்.
  • அலங்காநல்லூர், சென்னை மெரீனா கடற்கரை, மதுரை தமுக்கம் மைதானம், கோவை வ.உ.சி மைதானம், திண்டுக்கல், திருச்சி, சேலம், திருநெல்வேலி வ.உ.சி மைதானம், வேலூர், புதுச்சேரி ஆகியன முக்கியப் போராட்டக் களங்களாக அமைந்தன.
  • தமிழத்தில் முதல் ஏழு நாட்கள் பெரும்பாலும் அறவழியில் நடந்துவந்த போராட்டங்கள், எட்டாவது நாளில் காவல்துறை - பொதுமக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு நிறைவுக்கு வந்தன.



அலங்காநல்லூரில் போராட்டம்
  • சனவரி 16, திங்கட்கிழமையன்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் இரவு முழுவதும் தொடர்ந்தது.
  • சனவரி 17, செவ்வாயன்று அதிகாலையில் 200 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அப்பகுதிவாழ் மக்களும், அண்டை ஊர் மக்களும் போராட்டத்தில் இணைந்தனர். இதனையடுத்து கைதானவர்களை காவல்துறை விடுதலை செய்தபோதிலும், சுமார் 100 பேர் அங்கிருந்து அகல மறுத்தனர்.
  • மதுரை நகர், அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடக்கும் பகுதிக்கு வந்தவண்ணம் இருந்தனர். போராட்டம் நடத்துவோருக்கு குடிநீரும், உணவுப் பொருட்களையும் அந்த மக்கள் வழங்கினர். மதுரையில் நடைப்பெற்ற போராட்டம் மற்ற மாவட்ட மக்களுக்கு உத்வேகமத்தை அளித்தது. தமிழ் கலாசாரத்தை காக்க ஒவ்வொரு மாவட்ட மக்களும் அறவழி போராட்டதை தொடங்கினர்.
  • காலையில் போராட்டம் தொடர்ந்தபோது, போராட்டத்தை முடித்துக் கொண்டு கலைந்து செல்லுமாறு பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள் விடுத்தது. இதனை அந்த மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதையடுத்து, போராட்டக்காரர்கள் அனைவரும் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டனர். அப்போது தடியடியும் நடத்தப்பட்டது.
சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம்
  • சனவரி 16 நாள் முழுவதும் சனவரி 17 அதிகாலையிலும் அலங்காநல்லூரில் நடந்த நிகழ்வுகள் சமூக வலைத்தளங்களில் கவனிக்கப்பட்டன. சனவரி 17 அன்று சென்னை மெரீனா கடற்கரையில் கூடிய இளைஞர்கள் இரவு முழுதும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • காலையில் அமைதியான முறையில் தொடங்கிய போராட்டம், மாலையில் பெரியளவில் தொடர்ந்தது. இதனால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காமராஜர் சாலையில் விவேகானந்தர் இல்லத்துக்குஎதிரே கல்லூரி மாணவர்கள் கூடினர். 
  • பீட்டா இயக்கத்துக்கு எதிராகவும், இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராகவும் அவர்கள் குரல் எழுப்பினர். மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்வகையில் குரல் எழுப்பினர். இளைஞர் குழுக்களுடன் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைகள் பலனளிக்காது, போராட்டம் நள்ளிரவிலும் தொடர்ந்தது.
  • இடைவிடாது நடந்த போராட்டங்கள், இரவிலும் தொடர்ந்தது. இரவு 8 மணிவாக்கில் போராட்டக் குழு ஒன்றின்மீது காவல்துறையினர் இலேசான தடியடி நடத்தினர்.
  • போராடுவோர் தமது போராட்டங்களை முடித்துக்கொண்டு கலைந்து செல்லுமாறு காவல்துறை அதிகாலை முதற்கொண்டு அறிவிப்புகளை செய்து வந்தனர். இடத்தைவிட்டு அகலாதோரை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் அகற்றினர். ஒரு கட்டத்தில் சென்னை மெரினா கடற்கரையில் மீதமிருந்த போராட்டக்காரர்கள் கடல்நீரை ஒட்டிய பகுதிகளில் அணிவகுத்து நின்றனர். 
  • இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. பின்பு கடற்கரையைச் சுற்றியுள்ள நகர்புற இடங்களில் கலவரம் மூண்டது. ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்துக்கும் அதன் முன்பிருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் பேசுகையில் கலவரத்திற்கு மாணவர்கள் காரணமில்லையென்றும் மாணவர் கூட்டத்தில் கலந்த சமூக விரோத சக்திகளே காரணம் என்றும் விளக்கமளித்தார்.
  • காவல்துறையினரே பல வாகனங்களுக்குத் தீ மூட்டியதையும், வேண்டுமென்றே நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல வாகனங்களை சேதப்படுத்தியதையும் பெண்கள் உட்பட்ட பலரைக் கல்லெறிந்தும் அடித்தும் விரட்டியதையும் பொதுமக்கள் தங்கள் அலைபேசியில் பதிவு செய்து சமூக ஊடகங்கள் மூலம் பரவிவந்த காணொளிகளையும், ஊடகங்கள் பதிவு செய்த காணொளிகளையும் ஊடகங்கள் பதிவு செய்தன.
புதுமையான வழிமுறைகள்
  • ஜல்லிக்கட்டு மெரீனா புரட்சி இரவு நேரத்தில் தமது கைப்பேசியில் (செல்போன்) உள்ள விளக்கினை உயர்த்திக் காட்டி, அசைத்தல் [37]. விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏந்திப் போராடுவதை ஒத்ததாக இது அமைந்திருந்தது.
  • கல்லூரி மாணவியர், தகவல் தொழினுட்ப அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள், குடும்பத் தலைவிகள் என அனைத்துத் தரப்பு மகளிர் பெருமளவில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.



தமிழக அரசின் பதில் நடவடிக்கைகள்
  • சனவரி 17 - நள்ளிரவில் மெரீனா கடற்கரை போராட்டக்காரர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அடுத்த நாள் அறிக்கை விடுவார் என்றும் போராட்டத்தை இப்போது கைவிடுமாறும் இந்த அமைச்சர்கள் கேட்டுக் கொண்டனர். போராட்டத்தை கைவிட மறுத்து, இளைஞர் குழுக்கள் தமது போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
  • சனவரி 18 - முதல்வர் பன்னீர்செல்வத்தின் அறிக்கை வெளியிடப்பட்டது. இளைஞர் குழு ஒன்றுடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் போராட்டத்தைக் கைவிட மறுத்து, இளைஞர் குழுக்கள் 
  • மெரினா கடற்கரையில் தமது போராட்டங்களைத் தொடர்ந்தனர். இந்தியப் பிரதமரை சந்தித்து தமிழகத்தின் கோரிக்கையை தெரிவிப்பதற்காக முதல்வர் அன்றிரவு புது தில்லி புறப்பட்டார்.
  • சனவரி 19 - காலையில் புது தில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார்.
  • தடை குறித்தான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், ஒன்றிய அரசால் எதுவும் செய்ய முடியாது; மாநில அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு ஆதரவளிக்கும் [41] தமிழக முதல்வர் சென்னை திரும்பாமல், புது தில்லியில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்தார்.
  • சனவரி 20 - காலையில் முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்: சட்ட வல்லுநர்களின் ஆலோசனையின்படி மத்திய அரசின் மிருக வதை தடைச் சட்டத்தில் மாநில அளவில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. 
  • நேற்றிரவே ஜல்லிக்கட்டு தொடர்பாக வரைவு அவசரச் சட்டம் தயார் செய்யப்பட்டது. இந்த வரைவு அவசரச் சட்டத்தை மத்திய அரசுக்கு அனுப்பி உள்துறை வாயிலாக குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும். அவ்வாறு ஒப்புதல் பெற்ற பிறகு மாநில ஆளுநர் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அவசரச் சட்டத்தை பிறப்பிப்பார். 
  • சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப்படி தயாரிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு வரைவு அவசரச் சட்டம் மத்திய உள்துறைக்கு இன்று காலை அனுப்பப்பட்டுவிட்டது. மத்திய அரசு மாநில அரசின் முடிவுக்கு துணை நிற்கும். எனவே, இன்னும் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என நான் உறுதியளிக்கிறேன். 
  • ஜல்லிக்கட்டு விரைவில் நடைபெறவிருக்கும் சூழலில், தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களும், மாணவர்களும், பொதுமக்களும் தங்கள் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
  • சனவரி 21 - ஆளுநர் வித்யா சாகர் ராவ் சல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தார். சல்லிக்கட்டினை நடத்துவதற்கான தடை நீங்கியது என்றும், சல்லிக்கட்டினை அலங்காநல்லூரில் சனவரி 22 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தான் தொடங்கி வைக்கவிருப்பதாகவும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.எனினும் நிரந்தரச் சட்டம் ஏற்படுத்தப்படும் வரை போராட்டங்கள் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அறிவித்தனர்.
  • சனவரி 22 – சல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு என்றழைக்கப்படும் மனு தாக்கல் செய்யப்பட்டது. யார் வழக்கு தொடர்ந்தாலும், தமிழக அரசின் கருத்தைக் கேட்க வேண்டும்; மேலும், தமிழக அரசு தரப்பின் கருத்தைக் கேட்காமல் சல்லிக்கட்டு விவகாரத்தில் எந்த உத்தரவையும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்கக்கூடாது என்பது இந்த மனுவின் மூலமாக வைக்கப்பட்ட கோரிக்கையாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel