
20th NOVEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை திருநாளில் மட்டும் தூணில் தீபமேற்ற அனுமதி - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
- திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்துக்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று ராம.ரவிக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார். அதே நேரத்தில் அங்குள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவுக்கு அருகில், மலையின் உச்சியில் விளக்கு ஏற்றுவதாக சர்ச்சை எழுந்தது.
- இந்த விவகாரத்தில் தீபம் ஏற்றப்படும் இடம் தர்காவின் பகுதிக்கு வெளியே உள்ள கோயில் நிலம் என்று உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்து, தீபத்தூணில் தீபம் ஏற்றும் சடங்கை நடத்த அனுமதித்தார்.
- ஆனால், சட்டம்-ஒழுங்கு கவலைகளைக் காரணம் காட்டி உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில் தனி நீதிபதி தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஜனவரி 6-ஆம் தேதி உறுதிப்படுத்தியது.
- இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் கடந்த ஜூன் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
- அதில், "நவம்பர் 24' அன்று கார்த்திகை தீபம் பண்டிகை நெருங்கி வருவதால் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' எனக் கோரப்பட்டது.
- இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கல் தூணில் தீபமேற்றும் மரபோ வழக்கமோ முன்னர் இருந்ததில்லை என எதிர் மனுதாரர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.
- ஆகையால், தீபத் தூண் விவகாரத்தில் முன்பு இல்லாத நடைமுறை, மரபை உத்தரவின் மூலம் அனுமதிக்கக் கூடாது என அரசின் தரப்பில் வாதிடப்பட்டது.
- இதனைத் தொடர்ந்து, உத்தரவு பிறப்பிப்பது குறித்த விவகாரங்களை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
- தொடர்ந்து, பகல் 1 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், இந்த விவகாரத்தில் எந்த அளவுக்குத் தலையிட முடியும் என நீதிமன்றம் விரிவான விசாரணை மேற்கொண்டது. இதில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய 6 வார கால அவகாசம் அளிக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
- மேலும், தீபத் தூணில் தீபமேற்ற இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், கார்த்திகை திருநாளில் மட்டும் தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

