
ஐ.நா. பெண்கள் அமைப்புக்கும் - தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று (5.1.2026) தலைமைச் செயலகத்தில், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை சார்பில் மாநிலத்தில் பெண்களின் நலன், பாலின சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பிற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- மேலும், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு (OECD), பொதுத்துறை கண்டுபிடிப்புகளின் கண்காணிப்பகம் (OPSI), ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF - OoI) ஆகிய அமைப்புகளுடன் தமிழ்நாடு அரசின் மாநில திட்ட குழுவுக்கும் இடையேயான முத்தரப்பு ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்டது.
- அத்துடன் தமிழ்நாடு மாநிலக் குறிக்காட்டி வரையறை-2.0வை வெளியிட்டு, மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட நான்கு ஆய்வறிக்கைகளையும் பெற்றுக் கொண்டார்.
- பத்து லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் திங்கள்கிழமை இன்று (ஜன.5) தொடக்கி வைத்தார்.
- சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
- இந்நிகழ்ச்சியில் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கும் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.
- இந்தியா கடலோரக் காவல்படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது மாசுக் கட்டுப்பாட்டு கப்பலான (Pollution Control Vessel) 'சமுத்ர பிரதாப்' கப்பலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (திங்கட்கிழமை) நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தால் (GSL) கட்டப்பட்டுள்ள இந்தக் கப்பல் 60 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு உதிரிபாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
- கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அதை நவீன தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. 4,170 டன் எடை கொண்ட இந்தக் கப்பல், கடலோரக் காவல்படையின் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றாகும்.
- மணிக்கு 22 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 6,000 மைல்கள் வரை பயணிக்க முடியும். தீயணைப்பு கருவிகள், ஹெலிகாப்டர் தளம் மற்றும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
- ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் இரண்டாயிரத்து 756 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது.
- இதில், இடஒதுக்கீட்டு பிரிவினரை விட பொதுப்பிரிவினருக்கு குறைந்த கட் அப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இடஒதுக்கீட்டு பிரிவில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் பொதுப்பிரிவினருக்கான பிரிவில் பணி ஒதுக்கக் கோரி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
- இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இடஒதுக்கீட்டு பிரிவினரையும் பொதுப்பிரிவு பதவியில் நியமிக்க உத்தரவிட்டது.
- இதனை எதிர்த்து ராஜஸ்தான் உயர்நீதிமன்ற பதிவாளர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் மஷி ஆகியோர் அடங்கிய அமர்வு, பொதுப்பிரிவு பதவி என்பது எந்த ஒரு தனிப்பட்ட பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டது கிடையாது என்று கருத்து தெரிவித்தனர்.
- இதனால், தகுதிவாய்ந்த கட் ஆப் மதிப்பெண் பெற்றிருக்கும் பட்சத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும், பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினர் ஆகியோரையும் பொதுப்பிரிவு பதவிகளுக்கு நியமிக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

