டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் இந்த தேர்வானது நடைபெற்றது.
விஏஒ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், வன அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வர்களில் தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது இந்த குரூப் 4 தேர்வுதான்.
ஏனெனில், பத்தாம் வகுப்பு கல்வி தகுதி என்பதால் கடுமையான போட்டி இந்த தேர்வுக்கு உள்ளது. போட்டித் தேர்வில் தேவையான கட் ஆஃப் எடுத்தால் போதும். வேலை நிச்சயம் என்பதால் குரூப் 4 தேர்வை பல லட்சம் பேர் எழுதுகிறார்கள்.
இன்று நடைபெற்ற தேர்வை மொத்தம் உள்ள 3,935 பணியிடங்களுக்கு 13,89,738 பேர் விண்ணப்பித்து இருந்தனர். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற்றது. 200 கேள்விகள் இடம் பெற்று இருந்தன.
எத்தனை பேர் ஆப்சென்ட்?
தேர்வை பொறுத்தவரையில், பிரிவு-அ-இல், தமிழ் தகுதித்தாள் தேர்வு 100 வினாக்களுக்கு 150 மதிப்பெண்ணுக்கும், பிரிவு-ஆ-இல் பொது அறிவு, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு தாள் தேர்வு 100 வினாக்களுக்கு 150 மதிப்பெண்ணுக்கும் கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. இன்று தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் சுமார் 2.40 லட்சம் தேர்வுக்கு வராமல் ஆப்செண்ட் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு இடத்துக்கு எத்தனை பேர் போட்டி?
இதன்படி பார்த்தால் மொத்தம் விண்ணப்பித்தவர்களில் 11.48 லட்சம் பேர் (தோராயமாக) தேர்வை எழுதியுள்ளனர். மொத்தம் உள்ள காலிப்பணியிடங்களுடன் ஒப்பிட்டால் ஒரு இடத்திற்கு கிட்டத்தட்ட 300 பேர் போட்டி போடுவதாக தெரிகிறது.
கடந்த முறையை விட இந்த ஆண்டு குரூப் 4 தேர்வு கடினமாக இருந்ததாக தேர்வர்கள் பலரும் கூறினார். குரூப் 1, 2, 2 ஏ தேர்வு வினாத்தாள் போல இருந்ததாக தேர்வர்கள் சிலரும் கூறுவதை பார்க்க முடிந்தது.
தமிழ்நாடு இடஒதுக்கீடு முறை
தமிழ்நாடு இடஒதுக்கீடு முறையின் கீழ், அறிவிக்கப்பட்ட காலியிடங்களில் 1% பழங்குடியினர் பிரிவுக்கும், 15% ஆதிதிராவிடர் பிரிவினருக்கும், 3% ஆதிதிராவிட அருந்ததியர் பிரிவினருக்கும், 26.5% பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (முஸ்லீம் அல்லாதோர்), 3.5% பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம்க்கும், 20% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ சீர் மரபினருக்கும் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 31% இடங்கள் பொது முறையின் கீழ் நிரப்பப்படுகிறது.ஒவ்வொரு, இடஒதுக்கீடு பிரிவுகளிலும் அறிவிக்கப்பட்ட பணி இடங்களை விட இரண்டு மடங்கு பேர் மூலச்சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
கடந்தாண்டு, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் என பதவிகளையும் சேர்த்து மொத்தம் 6,007 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
இந்த 6,007 பணியிடங்களுக்கு, பொதுப் பிரிவு பட்டியலில் (Communal Rank) 2607 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், முஸ்லீம் அல்லாத பிசி பிரிவில் முதல் 5,527 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், எம்பிசி பிரிவில் 9,057 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், பிசி முஸ்லீம் பிரிவில், 24,057 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், எஸ்சி பிரிவில் 12,992 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், எஸ்சி (அருந்ததியர்) பிரிவில் 17,393 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், பழங்குடியினர் பிரிவில் 31,927 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.
இந்தாண்டு குரூப் 4 தேர்வில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் மற்றும் பண்டக காப்பாளர் என மூன்று பதவிகளையும் சேர்த்து மொத்தம் 5,596 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த மூன்று பதவிகளில், கடந்தாண்டை விட கிட்டத்தட்ட 411 பணியிடங்கள் மட்டுமே குறைவாக நிரப்பப்பட உள்ளன. எனவே, தற்போது கட் ஆஃப் சற்று அதிகமாக இருக்கும் என்று எதிரிபார்க்கப்படுகிறது.
இருப்பினும், பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு பார்த்தால், கடந்தாண்டை போலவே இந்தாண்டும் சான்றிதழ் சரிப்பர்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சான்றிதழ் சரிபார்ப்பு
இன்னும் சில தினங்களில், எழுத்துத் தேர்வின் அடிப்படையில், இளநிலை உதவியாளர்/கிராம நிர்வாக உதவியாளர் (Junior Assistant/VAO), தட்டச்சர்(Typist), சுருக்கெழுத்தர் (Steno Typist) ஆகிய பதவிகளுக்கு இணைய வழி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வானவர்கள் பட்டியலை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தனித்தனியாக வெளியிடும்.இந்த தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் சான்றிதழ்களை இணையவழியில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
உங்கள் தகுதியினை உறுதிப்படுத்தும் அனைத்து மூலச் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின்னர், எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மூலச்சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
தேர்வர்கள், அவ்வபோதைய நிலவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு வரும்?
கடினமாக இருந்ததாக தேர்வர்கள் பலரும் கூறியதை வைத்து பார்க்கும் போது இந்த முறை கட் ஆப் குறைய வாய்ப்பு உள்ளது. அது போக குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் தற்போது 3,935 என அறிவிக்கப்பட்டாலும், வரும் நாட்களில் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TNPSC Group - 4 & VAO 2025 Expected Cut off Marks (Based on No.of correct questions) | ||
Male | Female | |
General | 165+ | 160+ |
BC | 160+ | 158+ |
MBC | 162+ | 160+ |
BC(M) | 155+ | 152+ |
SC | 145+ | 140+ |
SC(A) | 144+ | 138+ |
ST | 142+ | 140+ |
Note: For PSTM deduct around 2-3 Qns in the respective Category. For PH deduct around 4-9 Qns in the respective category. |