25th JULY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
- வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு இனக்குழுகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி அம்மாநில முதல்வர் பைரன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
- புதிய முதல்வரை முடிவு செய்வதில் கருத்தொற்றுமை எட்டப்படாமல் இழுபறி நீடித்த சூழலில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
- இந்த நிலையில், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதற்கான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஜூலை 25) மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தவுள்ளார்.
- இது அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 13 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
- அரசியலமைப்பின் பிரிவு 356(3) இன் படி, ஆளுநரால் அமல்படுத்தப்படும் குடியரசுத் தலைவர் ஆட்சி வழக்கமாக 6 மாதங்கள் வரை நீடிக்கும்.
- மேலும், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம்.
- முன்னதாக, மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மெய்தேயி மற்றும் குகி ஆகிய சமூகங்களுக்கு இடையே மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன, இதில், இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில் என்ஜின் சோதனை வெற்றி
- ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் என்ஜினை உருவாக்கி, ஐசிஎஃப் தொழிற்சாலையில் இயக்கிப் பார்த்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
- ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரயில் என்ஜின்களைத் தயாரிக்க மத்திய ரயில்வேத் துறை ரூ. 2,000 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கியுள்ளது.
- இதையடுத்து சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப்-இல் ஹைட்ரஜன் ரயில் என்ஜின் தயாரிக்கும் பணி கடந்த 2024-ஆம் ஆண்டு தொடங்கியது. தற்போது ஹைட்ரஜன் ரயில் என்ஜின் தயாரிப்புப் பணி நிறைவடைந்து சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.
- நாட்டிலேய முதன்முறையாக இந்த ஹைட்ரஜன் ரயில்கள், வடக்கு ரயில்வே கோட்டத்தில் உள்ள ஜிந்த் ரயில் நிலையத்துக்கும் சோனிபேட் ரயில் நிலையத்துக்கும் இடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாக நீண்ட காலம் பணியாற்றிய 2-வது பிரதமர் சாதனை படைத்தார் பிரதமர் மோடி
- இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாக நீண்ட காலம் பணியாற்றிய 2-வது பிரதமர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
- பிரதமர் நரேந்திர மோடி தனது பதவி காலத்தில் வெள்ளிக்கிழமையான ஜூலை 25 ஆம் தேதியுடன் 4,078 நாள்களை நிறைவு செய்துள்ளார்.
- இதன் மூலம், முன்னாள் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் பதவிக்காலமான, தொடர்ச்சியாக 4,077 நாள்கள் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்திருந்த சாதனையை முறியடித்துள்ளார்.
- 1966 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி முதல் 1977 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி வரை இந்திரா காந்தி தொடர்ச்சியாக பிரதமராகப் பதவி வகித்திருந்தார்.
- இந்த மைல்கல் சாதனையுடன், பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்குப் பிறகு இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றிய 2-வது பிரதமர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.