
26th FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாட்டில் ரூ.5,000 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலை அமைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (26.2.2025) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஃபீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனம், கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில்,
- 5,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 50,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தோல் அல்லாத காலணி உற்பத்தி திட்டத்தை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் மற்றும் எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைச் செயலாளர் வி. அருண் ராய், இ.ஆ.ப. மற்றும் நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
- சென்னை தரமணி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்த நியமனம் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வுகளுக்கு புதிய உந்துதலை அளிக்கும். பாலகிருஷ்ணன் ஒரு புகழ்பெற்ற தமிழ்மொழி அறிஞரும், ஆட்சிப்பணி வல்லுநரும் ஆவார்.
- தமிழ் இலக்கியத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டங்களைப் பெற்ற இவர், தமிழில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுதி வென்ற முதல் தமிழ் மாணவர். ஆய்வாளர், படைப்பாளர் என்ற இரு தளங்களில் செயல்படும் இவர் 15 நூல்களின் ஆசிரியர்.
- சிந்துவெளிப் பண்பாட்டு தொல்லியல் தரவுகளை சங்க இலக்கியங்கள் மற்றும் தமிழ்நாட்டு அகழாய்வுத் தரவுகளுடன் ஒப்பிட்டு இவர் எழுதியுள்ள ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.
- இந்திய ராணுவம் பிப்ரவரி 25, 2025 அன்று ரூ.80.43 கோடி செலவில், 223 தானியங்கி ரசாயனப் பொருளைக் கண்டறிந்து எச்சரிக்கும் அமைப்புகளை வாங்குவதற்காக எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- உபகரணங்களின் 80%-க்கும் அதிகமான உதிரி பாகங்கள் மற்றும் துணை அமைப்புகள் உள்ளூரில் இருந்து பெறப்படுவதால், இது இந்திய அரசின் தற்சார்பு இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும்.
- குவாலியரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. இது வேதியியல், உயிரியல், கதிரியக்கவியல், அணு ஆயுதங்களிடமிருந்து பாதுகாக்கும் முயற்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
- காற்றின் வழியாக பரவும் நச்சு வேதிப்பொருட்களை கண்டறிய இந்த அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. களப் பிரிவுகளில் இதனைச் சேர்ப்பது, இந்திய ராணுவத்தின் தற்காப்புத் திறன் நடவடிக்கைகளுக்கும், அமைதிக் காலத்திலும், குறிப்பாக தொழில்துறை விபத்துக்கள் தொடர்பான பேரிடர் நிவாரண சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கும் இது பயன்படும்.