தமிழ்நாடு அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கான குரூப் 2 தேர்வு ஆட்சேர்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த ஆட்சேர்ப்பு மூலம் 5413 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளது.
சில பதவிகள் முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. அதே சமயம், பெரும்பாலான பதவிகளுக்கு முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு நிலைகளில் மட்டும் நியமனங்கள் நடைபெறும் என்று தெரிவிக்கிப்பட்டது.
அனைத்து பதவிகளுக்காமான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. 11,78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். முதல்நிலை தேர்வு முடிவுகள் கடந்தாண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி வெளியிடப்பட்டது.
முதல்நிலைத் தேர்வையடுத்து, முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத் தமிழ்மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு ஆகிய 2 தாள்களுக்குமான தேர்வு கடந்த பிப்.25-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர்.
இந்த முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், டிசம்பர் மாதம் முடிவுகள் வெளியாகும் என்கின்ற தகவலை டிஎன்பிசி ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடையும் நிலையில் இருப்பதாகவும், டிசம்பர் 15 ஆம் தேதிக்கு முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகளுக்கு பின்னர் குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.