5446 குரூப் 2 பணியிடங்களுக்காக நேர்முக தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அல்லாத பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்றது.
அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குரூப் 2 முதன்மை தேர்வு கடந்த பிப்ரவரி மாதத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. இத்தேர்வை 55,071 ஆயிரம் தேர்வர்கள் எழுதியுள்ளனர். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 8 மாதங்களாக வெளியிடப்படாமல் உள்ளது.
இந்நிலையில், முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல என்று தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 55 ஆயிரம் தேர்வர்களின் எழுத்து வடிவ விடைத்தாள்களையும் கணினி வழி கொண்டு திருத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.
அதன்படி ஒவ்வொரு தேர்வரின் விடைத்தாளையும் ஒவ்வொரு கேள்விக்கான பதிலாக கணினி மூலம் இரண்டு தேர்வு மதிப்பீடாளர்கள் மதிப்பீடு செய்து வருவதாகவும், தனித்தனியாக மதிப்பீடு செய்யும் பணி செய்ய வேண்டியுள்ளதால், அதற்கு கால அவகாசம் தேவைப் படுவதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
எனவே, ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் மாதத்தில் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தலைவர் இதுவரை நியமிக்கப்படாமல் உள்ளதும், உறுப்பினர்கள் முழுவதும் நியமிக்கப்படாமல் இருப்பதும் கால தாமத்தை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர்.
மேலும், தற்போது விடைத்தாள் மதிப்பீட்டில் பணியில் உள்ள மதிப்பீட்டாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பது தேர்வர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதால், 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை காத்திருக்கும் நிலை உள்ளதாக கூறியுள்ளனர். இதனால், மன உளைச்சல் ஏற்படுத்துவதுடன் பொருளாதார நெருக்கடிகளையும் சந்திப்பதாக தேர்வர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.