8th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தொழில் 4.0 என்ற தொழில்நுட்ப மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
- தொழிலாளர் நலத்துறை சார்பில், சென்னை ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) நடைபெற்ற நிகழ்ச்சியில், 22 அரசு ஐடிஐ-க்களில் ரூ.762.30 கோடியில் கட்டப்பட்ட `தொழில் 4.0' என்ற தொழில்நுட்ப மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
- மேலும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், அரசு ஐடிஐ-யில் பயிலும் 5 மாணவிகளுக்கு வங்கிபற்று அட்டைகளை வழங்கினார். இதுதவிர, மாணவ, மாணவிகளுக்கு தமிழ்வழி பாடப் புத்தகங்களையும் வழங்கினார்.
- தமிழகத்தில் 71 அரசு ஐடிஐ-க்களை, ரூ.2,877 கோடி செலவில் உயர் தொழில்நுட்ப மையங்களாக மாற்றும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
- இந்த மையங்களில், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து, புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் மென்பொருட்களை நிறுவி, ரோபோட்டிக்ஸ், இண்டஸ்ட்டிரியல் ஆட்டோமேஷன் உள்ளிட்ட நவீன திறன் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்கு 20 சர்வதேச நிறுவனங்கள் ஒத்துழைப்பு தருகின்றன.
- முதல்கட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 22 அரசு ஐடிஐ-க்களில்ரூ.762.30 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரகடத்தில் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.
- அணு ஆயுதங்களைச் தாங்கிச் செல்லும் நவீன, 'அக்னி பிரைம்' ஏவுகணையை ஒடிசா கடற்கரைக்கு அப்பால் இருக்கும் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் தீவிலிருந்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) இரவு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.
- 'ஏற்கெனவே மூன்று முறை சோதனை அடிப்படையில் செலுத்தப்பட்ட இதுபோன்ற ஏவுகணைகளின் துல்லியம் மற்றும் செயல்முறையின் நம்பகத் தன்மை ஆகியவை உறுதி செய்யப்படுவதற்கு, ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கு முன்பு, முதன் முறையாக இந்த இரவு நேரப் பரிசோதனை நடத்தப்பட்டு இருக்கிறது.
- இந்த ஏவுகணையின் செலுத்து பாதை முழுவதும் பல்வேறு இடங்களில் ராடார், டெலிமெட்ரிக், மின்னணு கண்ணாடி இழை கண்காணிப்பு செயல்முறை போன்றவை அமைக்கப்பட்டு இருந்தன.
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மூத்த அதிகாரிகள், பாதுகாப்புப் படைகளின் தளபதிகள் ஆகியோர் இந்த வெற்றிகரமான அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணை சோதனையைப் பார்வையிட்டு உள்ளனர்.
- “கூட்டுறவு மூலம் வளமை” என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் விதமாக மத்திய அரசு மேலும் ஐந்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
- புதுதில்லியில், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டுறவு அமைச்சகம் மற்றும் உரங்கள் துறையின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
- இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஐந்து முக்கிய முடிவுகள்:
- நாடு முழுவதும் உள்ள சுமார் ஒரு லட்சம் தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் படிப்படியாக உரங்களை சில்லரை விற்பனை செய்யும் அமைப்புகளாக செயல்பட ஊக்கப்படுத்தப்படும்.
- பிரதமரின் விவசாய வளம் மையங்களாக தற்போது செயல்படாத தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் இந்த வரம்புக்குள் கொண்டுவரப்படும்.
- தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள், இயற்கை உரங்கள் சந்தையுடன் இணைக்கப்படும்.
- உரங்கள் துறையின் சந்தை மேம்பாட்டு உதவித்திட்டத்தின் கீழ், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்களும் மொத்த வியாபார/ சில்லரை வியாபார அமைப்புகளாக சேர்க்கப்படும்.
- உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கான ட்ரோன் தொழில் முனைவோராக தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் ஈடுபடுத்தப்படும். சொத்துக்கள் அளவெடுப்பதற்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்.
- இந்த முடிவுகளால் தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்களின் வருவாய் அதிகரிக்கும். மேலும் கிராமப்பகுதிகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். அத்துடன் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், விதைகள், வேளாண் கருவிகள் போன்றவற்றை உள்ளூர் நிலையிலேயே விவசாயிகள் பெற முடியும்.
- இந்தியா – பிரான்ஸ் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே முதலாவது கடல் சார் ஒத்துழைப்பு பயிற்சி 2023 ஜூன் 7 அன்று ஓமன் வளைகுடாவில் தொடங்கியது.
- இந்தப் பயிற்சியில் இந்தியாவின் ஐஎன்எஸ் தற்காஷ், பிரான்ஸ் நாட்டின் சர்காஃப் கப்பல், ரஃபேல் போர் விமானம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கப்பற் படையின் ரோந்து போர் விமானம் ஆகியவை ஈடுபட்டுள்ளன.
- இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த முதலாவது கூட்டுப்பயிற்சி மூன்று நாடுகளின் கப்பற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாக கொண்டது.
- கடற்பகுதியில் ஏற்படும் பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கும் இது வழிவகுக்கும்.
- கடல்சார்ந்த வணிகத்தை உறுதி செய்வதில் ஒத்துழைப்பை இது அதிகரிப்பதோடு, இந்தப் பிராந்தியத்தின் கடற்பகுதியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்கும் பயன்படும்.
- வணிக நிலக்கரிச் சுரங்க ஏலத்தின் கீழ் 22 நிலக்கரிச் சுரங்கங்களுக்கான ஆணைகளை மத்திய நிலக்கரி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. 22 நிலக்கரிச் சுரங்கங்களில், பதினொரு சுரங்கங்கள் நிலக்கரிச் சுரங்கங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 2015-இன் கீழ் உள்ளன.
- மீதமுள்ள சுரங்கங்கள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957 இன் கீழ் உள்ளன. பதினாறு நிலக்கரிச் சுரங்கங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட சுரங்கங்கள் ஆகும். ஆறு சுரங்கங்கள் பகுதியாக ஆய்வு செய்யப்பட்டவை ஆகும்.
- 22 நிலக்கரிச் சுரங்கங்களின் ஒட்டுமொத்த உச்ச மதிப்புத் திறன் ஆண்டுக்கு 53 மில்லியன் டன் ஆகும். இந்த சுரங்கங்கள் மூலம் ஆண்டு வருமானமாக ரூ. 9,831 கோடி கிடைக்கும். ரூ.7,929 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்படும். இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 71,467 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
- இந்த 22 நிலக்கரிச் சுரங்கங்களை ஒப்படைத்ததன் மூலம், நிலக்கரி அமைச்சகம் வணிக ஏலத்தின் கீழ் மொத்தம் 73 நிலக்கரிச் சுரங்கங்களுக்கு ஆணை வழங்கியுள்ளது.
- இதன் மூலம் மாநில அரசுகளுக்கு ஆண்டு வருமானமாக ரூ.23,097.64 கோடி கிடைக்கும். நேரடியாகவும், மறைமுகமாகவும் 2,01,847 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.