13th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகில் அக்தர் நியமனம்
- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, தமிழக அரசின் சார்பில் கடந்த 2005-ம் ஆண்டு மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த ஆணையத்துக்கு முதலில் தலைமை தகவல் ஆணையர் ஒருவர் மற்றும் 2 தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். பின்னர் கடந்த 2008-ம் ஆண்டு தகவல் ஆணையர்களின் எண்ணிக்கை இரண்டில் இருந்து ஆறாக உயர்த்தப்பட்டு இருந்தது.
- தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிந்தது. அதேபோல், தகவல் ஆணையர்களாக இருந்த எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்ச்செல்வன், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ், பி.தனசேகரன், எம்.ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
- இந்த நிலையில் இன்று தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகில் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் ஆணையர் பதவிகளும் நிரப்பப்பட்டுள்ளன.
- முன்னாள் ஏடிஜிபிக்களான தாமரைக்கண்ணன், பிரியாகுமார், திருமலை முத்து, செல்வராஜ் ஆகியோர் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை தகவல் ஆணையராக ஷகில் அக்தர் மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பார்.
- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று காலை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்களிடம் விக்யான் பவனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- அந்த கூட்டத்தில் ரூ.8,000 கோடி மதிப்பிலான பேரிடர் மேலாண்மைக்கான மூன்று முக்கிய திட்டங்களை அமித்ஷா அறிவித்துள்ளார்.
- அதன்படி, மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்தவும் நவீனப்படுத்தவும் மொத்தம் ரூ.5,000 கோடி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், அதிக மக்கள்தொகை கொண்ட மும்பை, சென்னை, கொல்கத்தா பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் புனே ஆகிய 7 பெருநகரங்களுக்கு ரூ.2,500 கோடி திட்டமும் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
- மேலும், 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிலச்சரிவு தணிப்புக்காக ரூ.825 கோடியில் தேசிய நிலச்சரிவு அபாயத் தணிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறிய அமித்ஷா, கடந்த ஒன்பது ஆண்டுகளில் மத்திய அரசு பேரிடர் மேலாண்மை துறையில் நிறைய சாதித்துள்ளது, அணு மின் நிலையங்கள் அமைக்கப்படும் மாநிலங்களுக்கு அவசரகால சூழ்நிலையில் பின்பற்ற வேண்டிய கடுமையான நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
- பாலூட்டிகளின் உறுப்புகளில் இருந்து உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒருவகை திசு மருந்து, குறைந்த செலவில் தோல் காயங்களை மிகக் குறைந்த தழும்புகளுடன் விரைவாக குணப்படுத்தும் உயிரியல் மருத்துவ சாதனத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் அளித்துள்ளார்.
- மத்திய அரசின் மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் தரச்சான்றிதழுக்கு தேவையான அனைத்து சட்டபூர்வ அம்சங்களையும் கொண்டுள்ளதால், ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
- மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் அனைத்து சட்டப்பூர்வ தேவைகளைப் பூர்த்தி செய்யும் டி வகுப்பு மருத்துவ சாதனங்களை உருவாக்கிய நாட்டின் முதல் நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
- விலங்குகளிலிருந்து எடுக்கும் பொருட்களை மேம்பட்ட காயம் பராமரிப்புப் பொருட்களாகப் பயன்படுத்துவது புதியதல்ல. ஆனால், மருந்துக் கட்டுப்பாட்டாளரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தரமான தயாரிப்புகளைத் தயாரிப்பதற்கு உள்நாட்டு தொழில்நுட்பம் இதுவரை கிடைக்காமல் இருந்தது. எனவே, அத்தகைய பொருட்கள் அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.
- பேராசிரியர் டி.வி.அனில்குமார் தலைமையில் 15 ஆண்டுகளாக நடந்து வந்த ஆராய்ச்சியின் பயனாக Cholederm எனப்படும் ஒருவகை திசு இணைப்பு சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தீக்காயங்கள் மற்றும் நீரிழிவு காயங்களை குறைந்த வடுக்களுடன் குணப்படுத்துவது கண்டறியப்பட்டது.
- இந்திய சந்தையில் கோலடெர்ம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், சிகிச்சைச் செலவு ரூ.10,000/-லிருந்து ரூ.2,000/- ஆகக் குறைக்கப்பட்டு, சாமானியர்களுக்குக் கட்டுப்படியாகக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
- வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் மோடி இதில் கலந்து கொண்டார். தொடர்ந்து பணிநியமன ஆணைகளை அவர் வழங்கினார்.
- நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலிலிருந்து அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள், நிதிச்சேவைகள் துறை, அஞ்சல்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, பாதுகாப்பு அமைச்சகம், வருவாய்த்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், அணுசக்தித்துறை, ரயில்வே அமைச்சகம், கணக்கு மற்றும் தணிக்கைத்துறை, உள்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்ற உள்ளனர்.
- இந்த வேலைவாய்ப்புத் திருவிழா நாடு முழுவதும் 43 இடங்களில் நடைபெற்றது. மத்திய அரசின் துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளின் துறைகளில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.