2nd March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது
- வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் மொத்தம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
- அந்த மாநிலத்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி), பாஜக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இதில் என்டிபிபி கட்சி 40 தொகுதிகளிலும் பாஜக 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன. காங்கிரஸ் 23, நாகா மக்கள் முன்னணி 22 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. கடந்த 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டன.
- இதில் என்டிபிபி கட்சி 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான பாஜக 12 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஆட்சியமைக்க 31 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் பாஜக கூட்டணி அறுதிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது.
- தேசியவாத காங்கிரஸ் 7, தேசிய மக்கள் கட்சி 5, இந்திய குடியரசு (அத்வாலே) கட்சி 2, நாகா மக்கள் முன்னணி 2, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சி 2, ஐக்கிய ஜனதா தளம் ஓரிடத்தில் வெற்றி பெற்றன. சுயேச்சைகள் 4 இடங்களில் வெற்றி பெற்றனர்.
- மேகாலயா மாநிலத்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 27-ல் நடைபெற்றது. இம்மாநிலத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
- இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவை. ஆனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மைக்கான 31 இடங்கள் கிடைக்கவில்லை. என்பிபி கட்சி மட்டும் தனிப்பெரும் கட்சியாக 26 இடங்களைப் பெற்றது.
- இதனையடுத்து 2 இடங்களில் வென்ற பாஜக உள்ளிட்ட இதர கட்சிகளின் ஆதரவை என்பிபி தலைவரான முதல்வர் கான்ராட் சங்மா கோரி இருந்தார்.
- இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து 2 இடங்களில் மட்டும் வென்ற பாஜக, மேகாலயாவில் ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் வழங்கி உள்ளது. இதனால் மேகாலயா மாநில கூட்டணி ஆட்சியிலும் பாஜக இணைந்து கொள்கிறது.
- பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் ஆணையர்கள், தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்தது.
- மத்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்தவர் அருண் கோயல். பஞ்சாப் மாநில ஐஏஎஸ் அதிகாரியான இவர் கடந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி தானாக முன்வந்து ஓய்வு பெற்றார்.
- ஆனால், மறுநாளே இவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக் காலம் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடைகிறது.
- அதன்பின் அருண்கோயல் தலைமை தேர்தல் ஆணையராக இருப்பார். மொத்தம் 5 ஆண்டுகளுக்கு மேல் இவர் தேர்தல் ஆணையத்தில் இருப்பார்.
- தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம் மின்னல் வேகத்தில் நடந்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பலர் மனுத் தாக்கல் செய்தனர். தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு கொலீஜியம் போன்ற அமைப்பு இருக்க வேண்டும் என அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
- இந்த மனுக்களை நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹரிஷிகேஷ் ராய், சிடி ரவி குமார் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது.
- இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஒருமனதாக தீர்ப்பு வழங்கியது. இந்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி ரஸ்தோகி, நீதிபதி ஜோசப் தலைமையிலான அமர்வின் ஒருமனதான முடிவுக்கு சம்மதம் தெரிவித்தார். ஆனாலும், தனது காரணங்களுடன் அவர் தனிப்பட்ட தீர்ப்பையும் வழங்கினார்.
- உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: சட்டம் இயற்றும்வரை..: பிரதமர், மக்களவை எதிர்கட்சி தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் ஆணையர்கள், தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்ய வேண்டும். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் இல்லை என்றால், தனிப் பெரும்பான்மையுள்ள எதிர்க்கட்சியின் தலைவர், இந்த குழுவில் இடம்பெற வேண்டும். தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் வரை இந்த நடைமுறை தொடரும்.
- கடந்த மாதம் 16-ம் தேதி திரிபுராவிலும், 27-ம் தேதி மேகாலயா, நாகாலாந்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த 3 வடகிழக்கு மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
- திரிபுராவில் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 55 தொகுதிகளிலும், மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணிக் கட்சியான ஐபிஎப்டி-யும் போட்டியிட்டன.
- இதில் பாஜக 32 தொகுதிகளிலும், ஐபிஎப்டி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க 31 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள பாஜக 2-வது முறையாக ஆட்சி அமைக்கிறது.
- சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், டென்மார்க் நாட்டின் பட்டத்து இளவரசர் ப்ரெடரிக், இளவரசி மேரி ஆகியோர் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- அமைச்சர்கள் தியாகராஜன், மனோ தங்கராஜ், வனத் துறை செயலர் சுப்ரியா சாஹு, நகராட்சி நிர்வாக துறை செயலர் சிவ்தாஸ் மீனா, வீட்டுவசதித் துறை செயலர் அபூர்வா கலந்து கொண்டனர்.
- இந்த ஒப்பந்தம் வாயிலாக, அதிகரித்து வரும் தீவிர வெப்பத்தை தணிப்பதற்கான முன் முயற்சிகளில், இரு நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்கும்.
- தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை, நகராட்சி நிர்வாக துறை, வீட்டுவசதித் துறை ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்படும். நகரங்களின் பசுமைப் போர்வையை மேம்படுத்துதல், வலுவான செயல் திறன் நடவடிக்கைகள், வெப்பத்தை தணிக்க திட்டமிடுதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
- அமெரிக்காவின் முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நடத்திய ஆய்வில் இந்திய தொழிலதிபர் கவுதம் அதானியின், அதானி குழுமம் பங்கு சந்தையில் வரலாறு காணாத வகையில் ரூ.17.80 லட்சம் கோடி மோசடி செய்ததாக ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டது.
- இதனைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்தன. இந்நிலையில், அதானி குழும முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
- இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.
- அதானி விவகாரம் என்பது மூலதனம் தொடர்பானது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் அதானி குழுமத்தில் எஸ்.பி.ஐ மற்றும் எல்.ஐ.சி ஆகிய அரசு நிறுவனங்களின் பங்குகள் அதிகம் உள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் முதலீட்டாளர்களின் பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
- குறிப்பாக இதுபோன்ற சர்ச்சை விவகாரங்கள் வருவதன் மூலம் செபி அமைப்பு சரியான பாதுகாப்பை முதலீட்டாளர்களுக்கு வழங்கவில்லை என்பது தெரியவருகிறது. அதனை அவர்கள் உடனடியாக உறுதி செய்ய வேண்டும்.
- மேலும் அதானி- ஹிண்டன்பர்க் விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பதனையும் ஆய்வு செய்ய வேண்டும். இதுதொடர்பான ஒரு கட்டமைப்பை செபி விரைவில் உருவாக்க வேண்டும்.
- குறிப்பாக அதானிக்கு எதிரான விசாரணையை செபி நிறுத்தி விட்டதாக தெரிய வருகிறது. மேலும் இந்த விவகாரம் என்பது செபி விதிகளின் எஸ்: 19 என்பது மீறப்பட்டுள்ளதா, பங்கு விலையில் ஏதேனும் முறைகேடு செய்யப்பட்டுள்ளதா என்பதை செபி விசாரிக்க வேண்டும்.
- இந்த முறைகேடு குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் ஒரு சிறப்பு நிபுணர் குழு உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்படுகிறது.
- அதில், ஸ்டேட் வங்கி முன்னாள் தலைவர் ஓ.பி.பட், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.தேவ்தத், இன்போசிஸ் மென்பொருள் நிறுவன நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நீல்கேனி, பிரிக்ஸ் நாடுகளின் புதிய மேம்பாட்டு வங்கியின் தலைவர் கே.வி.காமத், வழக்கறிஞர் சோமசேகரன் சுந்தரேசன் ஆகிய ஐந்து பேர்கள் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
- விசாரணைக்கு ஒன்றிய அரசும், செபி அமைப்பும் உதவ வேண்டும். இதுதொடர்பான விரிவான விசாரணையை தினமும் நடத்தி இரண்டு மாதத்தில் சீலிடப்பட்ட கவரில் நிலை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளனர்.
- பாரம்பரிய மருத்துவம் தொடர்பான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதலாவது சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் குவஹாத்தியில் இன்று தொடங்கி வைத்தார்.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 17 நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர். 2 நாட்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், பாரம்பரிய மருத்துவப் பொருட்கள் தொடர்பான ஒழுங்கு முறை செயல்திட்டத்தை வகுப்பது, உற்பத்தியாளர்கள் மற்றும் வாங்குவோர் மத்தியிலான கலந்துரையாடல்களை ஊக்குவிப்பது, பாரம்பரிய மருந்துகளை ஊக்குவிப்பதில் அரசு அமைப்புகளின் பங்கு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.
- நான்கு நாட்கள் நடைபெறவுள்ள பாராம்பரிய மருத்துவப் பொருட்கள் கண்காட்சியும் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பாரம்பரிய மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதி செய்வோர் ஆகியோர் தங்களது பொருட்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர்.