Type Here to Get Search Results !

TNPSC 26th JANUARY 2023 TAMIL CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


74-வது குடியரசு தின விழா - ஜனாதிபதி தேசியக் கொடியேற்றினார்
 • நாட்டின் 74-வது குடியரசு தின விழா தலைநகர் டெல்லியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 
 • விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்குமாறு, எகிப்து அதிபர் அப்தெல் படாக் எல்-சிசி அழைக்கப்பட்டிருந்தார். அவரை குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து, ராணுவ அணிவகுப்பு நடைபெறும் கடமை பாதைக்கு, குதிரைப்படை வீரர்கள் புடைசூழ குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது வாகனத்தில் அழைத்து வந்தார். 
 • குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பின்னர் திரவுபதி முர்மு கலந்துகொள்ளும் முதல் குடியரசு தின விழா இதுவாகும்.
 • இருவரையும் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள் ஆகியோர் வரவேற்று, விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர்.
 • தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியேற்றிவைத்தார். அப்போது 21 பீரங்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
 • பின்னர், கமாண்டர் லெப். ஜெனரல் திராஜ் சேத் தலைமையில் ராணுவ அணிவகுப்பு தொடங்கியது. கடமை பாதையில், உள்நாட்டுத் தயாரிப்பான ஆகாஷ் ஏவுகணைகளை ஏந்திய ராணுவ வாகனங்கள், அர்ஜுன் பீரங்கி வாகனங்களுடன், பாதுகாப்புப் படையினர் அணிவகுத்து வந்தனர். முதல் அணியாக எகிப்து நாட்டின் ராணுவ வீரர்கள் 144 பேர், கர்னல் மகமூத் முகமது அப்தெல் ஃபதா எல் கரசாவி தலைமையில் அணிவகுத்து வந்தனர். 
 • இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில், எகிப்து படைப் பிரிவு பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். விழாவில், குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 • அணிவகுப்பில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகள், மத்திய அரசுத் துறைகளின் 6 அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.
 • தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியில், தஞ்சை பெரிய கோயில் கோபுரம், நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. 
 • கல்வி, அறிவாற்றல், கலை, போர், வேளாண்மை ஆகியவற்றில் பெண்கள் வலிமையோடுத் திகழ்கிறார்கள் என்பதைக் குறிக்கும் வகையில் தமிழ்நாடு ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது. 
 • முகப்பில் அவ்வையார் கம்பீரமாக தோற்றமளித்தார். இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி, பரதநாட்டியக் கலைஞர் தஞ்சாவூர் பால சரஸ்வதி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி, விவசாயப் பணி மேற்கொள்ளும் 107 வயது மூதாட்டி பாப்பம்மாள் ஆகியோரது சிலைகளும் இடம் பெற்றிருந்தன. ஊர்தியின் முகப்பில் தமிழ்ப் பெண்களின் வீரத்தைப் போற்றும் வகையில் வேலு நாச்சியார், குதிரை மீது அமர்ந்து போர்புரியும் காட்சி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
 • அணிவகுப்பின் இறுதி நிகழ்ச்சியாக, விமானப்படையின் போர் விமானங்கள் சாகசங்கள் நிகழ்த்தி, பார்வையாளர்களைக் கவர்ந்தன. இந்திய விமானப்படையின் 45 விமானங்கள் அணிவகுப்பில் பங்கேற்றன.
சென்னையில் குடியரசு தினவிழா கோலாகலம் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார்
 • சென்னை மெரினா கடற்கரையில் நடப்பாண்டு முதல்முறையாக உழைப்பாளர் சிலை பகுதியில் குடியரசு தின விழா நடைபெற்றது. வழக்கமாக விழா நடைபெறும் காந்தி சிலை பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், இந்த முறை இடம் மாற்றப்பட்டது.
 • காலை 7.50 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினும், 7.52 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியும் அங்கு வந்தனர். தலைமைச் செயலர் வெ.இறையன்பு, ஆளுநருக்கு முப்படை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளை அறிமுகம் செய்துவைத்தார். காலை 8 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
 • முதல்வர் மு.க.ஸ்டாலின் அணிவகுப்பு மேடைக்கு வந்து வீரதீர செயல்புரிந்த 5 பேருக்கு அண்ணா பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். 
 • சென்னை அமைந்தகரை தலைமை காவலர் சரவணன், வேலூர் செவிலியர் ஜெயக்குமார் பொன்னரசு, திருச்செந்தூர் புன்னக்காயல் அந்தோணிசாமி, நாகர்கோவிலை சேர்ந்த கிருஷ்ணன், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த செல்வம் ஆகிய 5 பேருக்கு அண்ணா பதக்கம் , ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் கோவை மாவட்டம், தெற்கு உக்கடம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த இனயத்துல்லாவுக்கு வழங்கப்பட்டது. இவருக்கு ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையும், பதக்கம், சான்றிதழும் வழங்கப்பட்டது. 
 • திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக புதுக்கோட்டை ஆலவயல் கிராமத்தை சேர்ந்த வசந்தா என்பவருக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலை, பதக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கள்ளச்சாராயத்தை ஒழிக்க மெச்சத்தக்க வகையில் பணியாற்றிய சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி, பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயமோகன், சேலம் மத்திய நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன், விழுப்புரம் மத்திய நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் இனாயத் பாஷா, செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் போலீஸ் நிலைய தலைமை காவலர் சிவனேசன் ஆகிய 5 பேருக்கு காந்தியடிகள் காவல் பதக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 
 • சிறந்த காவல் நிலையங்களுக்கான முதல் பரிசு திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு வழங்கப்பட்டது. இதற்கான கோப்பையை இன்ஸ்பெக்டர் உதயகுமாரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 2வது பரிசை திருச்சி கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தயாளன் பெற்றுக் கொண்டார். 3வது பரிசு திண்டுக்கல் போலீஸ் நிலையத்துக்கு கிடைத்தது. விருது பெற்றவர்கள் அனைவரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். 
 • இதை தொடர்ந்து, பள்ளி மாணவ-மாணவிகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சாதனைகளை வெளிப்படுத்தும் 22 அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன. 
 • முதல் அலங்கார ஊர்தியாக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 'தமிழ்நாடு வாழ்க' என்று பெயர் பொறித்த அலங்கார ஊர்தி வந்தது. அதில் நாதஸ்வர மங்கள இசையுடன் பரத நாட்டிய கலைஞர்கள் நடனமாடியபடி வந்தனர். 
 • 2வது ஊர்தியாக கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் இடம் பெற்ற ஊர்தி அணிவகுத்து வந்தது. 3வது ஊர்தியாக 'போதையில்லா தமிழ்நாடு ' என்பதை சித்தரிக்கும் காவல்துறையின் அலங்கார ஊர்தி வந்தது. 
 • 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உச்சரித்து பேசும் வார்த்தைகளுடன், போதையில்லா தமிழ் நாட்டை உருவாக்குவதற்காக அவர் பேசுவது அதில் ஒளிபரப்பப்பட்டது. 
 • 4வது ஊர்தியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் அலங்கார ஊர்தி வந்தது. அந்த ஊர்தியில் அனைத்து தொகுதியிலும் மினி ஸ்டேடியத்தை உருவாக்கும் காட்சிகளும், செஸ் ஒலிம்பியாட் போட்டியை சித்தரிக்கும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.
மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகம் செய்து வைத்தார் மத்திய அமைச்சர்
 • கொரோனா தொற்று பாதிப்பை தடுப்பதற்காக கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தடுப்பூசியாக செலுத்தப்பட்டு வருகிறது. 
 • மேலும் ஊசி அல்லாமல் மூக்க மூலமாக செலுத்தும் தடுப்பு மருந்தையும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதத்தில் அவசரகால அனுமதியை வழங்கி இருந்தது.
 • இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா குடியரசு தினத்தை முன்னிட்டு மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தான "இன்கோவாக்" மருந்தை டெல்லியில் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் இந்த மருந்தானது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel