Type Here to Get Search Results !

TNPSC 11th JANUARY 2023 TAMIL CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

 

ரூ.4,276 கோடி மதிப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஏவுகணைகள் கொள்முதல் - பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

  • பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான ஏவுகணைகளை ரூ.4,276 கோடி மதிப்பில் உள்நாட்டில் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதலை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் வழங்கியுள்ளது.
  • குறுகிய தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகளை (விசோராட்ஸ்), ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது. இந்த வகை ஏவுகணைகளை ரூ.1,920 கோடி மதிப்பில் வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • விசோராட்ஸ் ஏவுகணைகள் சீன எல்லையில் பயன்படுத்த தேவைப்படுகின்றன. எளிதில் தூக்கிச் செல்லக் கூடிய விசோராட்ஸ் ஏவுகணைகளை கரடுமுரடான மலைப்பகுதிகள் மற்றும் கடலில் பயன்படுத்தி, எதிரிகளின் அச்சுறுத்தல்களை முறியடிக்க முடியும்.
  • இதுதவிர, 500 ஹெலினா ஏவுகணைகளை வாங்கவும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இலகு ரக ஹெலிகாப்டரில் பொருத்தப்படும் இந்த ஏவுகணைகள், எதிரிநாட்டு பீரங்கி வாகனங்களைத் தகர்க்கும் திறன் வாய்ந்தவை. இந்த வகை ஏவுகணைகள், ராணுவத்தின் தாக்குதல் திறனை மேலும் வலுப்படுத்தும்.
  • கடற்படையின் பயன்பாட்டுக்காக, சிவாலிக் வகை போர்க் கப்பல்களில் பயன்படுத்தக்கூடிய பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணைகளின் லாஞ்சர்கள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள், அடுத்த தலைமுறை ஏவுகணைகளைக் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 
சென்னை மெட்ரோ - ஜப்பான் நிறுவனத்துடன் ரூ.163 கோடிக்கு ஒப்பந்தம்
  • மாதவரம் முதல் சோழிங்கநல்லூா் மற்றும் மாதவரம் முதல் சிஎம்பிடி வரையிலான வழித்தடங்களில் தண்டவாளங்களை அமைக்க ரூ.163.31 கோடி மதிப்பில், ஜப்பானின் மிட்சூ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 
  • மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா் த. அா்ச்சுனன், ஜப்பான் நிறுவன நிா்வாகி ஹாஜிம் மியாகே ஆகியோா் புதன்கிழமை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா். நிகழ்ச்சியில், மெட்ரோ ரயில் நிறுவன பொதுமேலாளா்கள் எஸ்.அசோக்குமாா், லிவிங்ஸ்டோன், ரேகா பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆர்ஆர்ஆர் பட பாடலுக்கு கோல்டன் குளோப் விருது
  • கோல்டன் குளோப் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வை ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜெரோட் கார்மைக்கேல் தொகுத்து வழங்கினார். 
  • விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்த பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய பாடல் என்ற பெருமையை 'நாட்டு நாட்டு' பாடல் பெற்றிந்தது.
  • இந்நிலையில், கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்வில், இயக்குநர் ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் உள்பட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர். 
  • அந்த வகையில், இந்தாண்டுக்கான சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவுக்கான கோல்டன் குளோப் விருதை ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் வென்றது. மேடையில் இந்த விருதை ஆர்ஆர்ஆர் படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி பெற்றுக்கொண்டார். 
  • கோல்டன் குளோப் விருதை குறிப்பாக இந்த பிரிவில் வாங்கும் முதல் ஆசிய திரைப்படம் என்ற பெருமையை ஆர்ஆர்ஆர் பெற்றுள்ளது. 
இந்தியாவின் நேரடி வரி வசூல் ரூ.12.31 லட்சம் கோடி
  • ஜனவரி 10, 2023 வரையிலான மொத்த நேரடி வரி வசூல், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தின் வசூலை விட 24.58% அதிகம். இது 14.71 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
  • அதில் ரீபண்டுகளை கழித்த பிறகு, நிகர நேரடி வரி வசூல் ரூ.12.31 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்திற்கான நிகர வசூலை விட 19.55% அதிகம். 
  • நடப்பு நிதியாண்டிற்கான நேரடி வரிகளின் நிகர வசூல் ரூ.14.20 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போது பட்ஜெட் மதிப்பீட்டில் 86.68% வசூலாகியுள்ளது. மேலும், ஏப்ரல் 1, 2022 முதல் ஜனவரி 10, 2023 வரை சுமார் ரூ.2.40 லட்சம் கோடி அளவிற்கு ரீபண்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 
  • இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தை விட 58.74% அதிகம். இதில் கார்ப்பரேட் வருமான வரி வசூல் 19.72% உயர்ந்துள்ளது. தனிநபர் வருமான வரி 30.46% அதிகரித்துள்ளது.
ஒடிஸாவில் தொடங்கியது உலகக் கோப்பை ஹாக்கி போட்டி
  • சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஹெச்) நடத்தும் ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி, ஒடிஸாவில் புதன்கிழமை தொடங்கியது. போட்டி அதிகாரப்பூா்வமாக புதன்கிழமை தொடங்கிய நிலையில், இந்தியா உள்ளிட்ட 16 அணிகள் மோதும் ஆட்டங்கள் யாவும் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி, 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. 
  • கட்டாக் மைதானத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா், ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக், சா்வதேச ஹாக்கி சம்மேளன தலைவா் தயாப் இக்ரம், ஹாக்கி இந்தியா தலைவா் திலிப் திா்கி உள்ளிட்டோா் பங்கேற்றனா். 
  • நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகா்கள் மைதானத்தில் கூடியிருக்க, ஆடல், பாடல் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அப்போது பேசிய தயாப் இக்ரம், தொடா்ந்து 2-ஆவது முறையாக உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை நடத்துவதற்காக ஒடிஸாவை பாராட்டினாா்.
சட்டப்பேரவை தலைவர்களின் 83-வது மாநாட்டை ஜெய்ப்பூரில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கிவைத்தார்
  • கில இந்திய சட்டப்பேரவை தலைவர்களின் 83-வது மாநாட்டை குடியரசுத் துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் ஜெய்ப்பூரில் தொடங்கிவைத்தார். 
  • தமது தொடக்க உரையில் அவர், இந்தியா ஜனநாயகத்தின் தாயகம் என குறிப்பிட்டார். மக்களின் தீர்ப்பு மற்றும் அவர்களது நலன்களை பாதுகாப்பதிலேயே ஜனநாயகத்தின் சாரம் அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.
  • இந்த மாநாட்டில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷ் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சட்டப்பேரவைத் தலைவர்கள் பங்கேற்றனர்.
கொல்கத்தாவின் ஜோகாவில் உள்ள குடிநீர், துப்புரவு மற்றும் தரத்திற்கான தேசிய மையத்தின் பெயரை ‘டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனம் என பின்னோக்கிய தேதியிட்டு மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, கொல்கத்தாவின் ஜோகா குடிநீர், துப்புரவு மற்றும் தரத்திற்கான தேசிய மையத்தின் பெயரை, ‘டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனம் (SPM-NIWAS) பின்னோக்கிய தேதியிட்டு பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
  • மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஜோகா டைமண்ட் ஹார்பர் சாலையில், 8.72 ஏக்கர் பரப்பளவில் இந்த நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. 
  • பயிற்சித் திட்டங்கள் மூலம் பொது சுகாதார பொறியியல், குடிநீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான முதன்மையான நிறுவனமாக இந்த நிறுவனம் அமைந்துள்ளது. 
  • இத்தகைய திறன்கள் தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ள முன்னணி பணியாளர்களுக்கு மட்டுமல்லாமல், கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் பொருத்தமாக அமையும். 
  • அதன்படி, பயிற்சி உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளாகம்,  மற்றும் குடியிருப்பு வளாகம் உள்ளிட்ட பொருத்தமான உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தில் பயிற்சியை எளிமையாக்கும் வகையில், நீர் தூய்மை மற்றும் சுகாதாரம் தொழில்நுட்பங்களின்  சிறிய மாதிரிகள் நிறுவப்பட்டுள்ளன.
  • டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி, முன்னணி தலைவராகவும், தேசிய ஒருங்கிணைப்பில் முக்கிய பங்காற்றியவராகவும் திகழ்ந்தார். தொழில் மயமாக்கலுக்கான உத்வேகத்துடன், திகழ்ந்த அவர், சிறந்த அறிஞர், கல்வியாளர் என பன்முக திறமைகளுடன்  விளங்கினார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இளம் துணைவேந்தராகவும் பொறுப்பு வகித்தார். 
  • தற்போது புதிய  நிறுவனத்திற்கு டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பெயர் சூட்டப்படுவது  அவரது அர்ப்பணிப்புடன் கூடிய பணியை ஊக்குவிப்பதுடன், நிறுவனத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்வேகத்தையும் வழங்கும். இந்த நிறுவனம் 2022 டிசம்பரில் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.
பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (எம்எஸ்சிஎஸ்) விதியின் 2002-ன் கீழ் தேசிய அளவிலான பன்-மாநில இயற்கை வேளாண்மை கூட்டுறவு சங்கம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (எம்எஸ்சிஎஸ்) 2002 விதியின் கீழ் தேசிய அளவிலான பன்-மாநில இயற்கை வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவெடுக்கப்பட்டது. 
  • இந்த முடிவுக்கு ஏதுவாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், உணவுப்பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் மற்றும் வடகிழக்கு மண்டல மேம்பாட்டுக்கான அமைச்சகத்தின் கொள்கைகள், திட்டங்கள் மூலம் ஆதரவளிக்கும் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த அணுகுமுறை  உருவாக்கப்படும். 
  • ஒருங்கிணைந்த முன்னேற்றம் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு வேளாண் தொழில் நிறுவனங்கள் வெற்றிபெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • எம்எஸ்இஎஸ் 2002 விதியின் கீழ் தேசிய அளவிலான கூட்டுறவு சங்கங்களை பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, இயற்கை வேளாண் பொருட்கள் மீது மக்களின் நம்பிக்கையைப் பெற ஏதுவாக, கூட்டுறவு சங்கங்களின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையிலும், ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் விதமாகவும் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த தேசிய அளவிலான கூட்டுறவு தொடக்க சங்கத்தில், மாவட்ட, மாநில  மற்றும் தேசிய அளவிலான கூட்டுறவு சங்கங்கள், பல மாநில கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வேளாண் உற்பத்தி நிறுவனங்கள் (எஃப்பிஓ) ஆகியவை உறுப்பினர்களாக இணைய முடியும்.  இந்த அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும், கூட்டுறவுசங்க விதிகளின்படி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவர்.
  • இந்த கூட்டுறவு சங்கம், இயற்கை வேளாண் பொருட்களை அங்கீகரிப்பதுடன் அவற்றுக்கு அங்கக சான்றிதழையும் வழங்கும் பணியையும் மேற்கொள்ளும். அதே போல், உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலான தேவை மற்றும் நுகர்வுக்கு இடையேயான இடைவெளியை சமன் செய்யவும் உதவும்.
பல்வேறு மாநிலங்கள் கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 2002-ன் கீழ் தேசிய அளவிலான பல்வேறு மாநில கூட்டுறவு விதைச் சங்கம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பல்வேறு மாநிலங்கள் கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 2002-ன் கீழ் தேசிய அளவிலான பல்வேறு மாநில கூட்டுறவு விதைச் சங்கம் அமைப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • தரமான விதைகளின் விநியோகம், சந்தைப் படுத்துதல், சேமித்தல், கட்டுதல், பெயரிடுதல், செயல்படுத்துதல், கொள்முதல் மற்றும் உற்பத்திக்கான முதன்மை அமைப்பாக இச்சங்கம் விளங்கும். உள்நாட்டு இயற்கை விதைகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்குமான நிறுவனமாக இது இருக்கும். 
  • வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், தேசிய விதை கழகம் உள்ளிட்டவை ஆதரவுடன்  நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் இது செயல்படும்.
  • விதை மாற்று விகிதம்   மற்றும் மாறுபாட்ட மாற்று விகிதம்  ஆகியவற்றை இது ஊக்குவிப்பதுடன், மகசூல் இடைவெளிகளைக் குறைத்து உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும்.
பல்வேறு மாநிலங்கள் கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 2002-ன் கீழ் தேசிய அளவிலான பல்வேறு மாநிலங்கள் கூட்டுறவு ஏற்றுமதி சங்கம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • கூட்டுறவு மற்றும் அதோடு தொடர்புடைய அமைப்புகளின் சரக்குகள்  மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்வதற்காக வெளியுறவு அமைச்சகம் மற்றும் வர்த்தகத்துறை, வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஆதரவுடன் பல்வேறு மாநிலங்கள் கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 2002-ன் கீழ் தேசிய அளவிலான பல்வேறு மாநிலங்கள் கூட்டுறவு ஏற்றுமதி சங்கம் அமைப்பதற்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • கூட்டுறவுத் துறையின் ஏற்றுமதியை மேம்படுத்த இச்சங்கம் முக்கிய காரணியாக திகழும். சர்வதேச சந்தையில் இந்திய கூட்டுறவு துறை பொருட்களை தடையின்றி ஏற்றுமதி செய்ய இது உதவிடும். 
  • மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் பல்வேறு ஏற்றுமதி தொடர்புடைய  திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு இச்சங்கம் உதவிகரமாக இருக்கும்.
ரூபே கடன் அட்டைகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள பீம்-யுபிஐ பரிவர்த்தனைகளை (நபரிலிருந்து வணிகருக்கு) மேம்படுத்துவதற்கான ஊக்கத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஏப்ரல் முதல் ஓராண்டு காலத்திற்கு  ரூபே கடன் அட்டைகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள பீம்-யுபிஐ பரிவர்த்தனைகளை (நபரிலிருந்து வணிகருக்கு) மேம்படுத்துவதை   ஊக்குவிப்பதற்கான ஊக்கத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • ரூபே கடன் அட்டைகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள பீம் யுபிஐ பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான திட்டத்திற்கு 2022 -23ம் ஆண்டில் 2600 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
  • இந்த திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டில் முனைய வணிகம் மற்றும் மின்னணு வர்த்தகத்தை ரூபே மற்றும் குறைந்த மதிப்பு யுபிஐ மூலம் மேற்கொள்வதை ஊக்குவிக்க வங்கிகளுக்கு நிதி ஊக்கத் தொகை வழங்கப்படும்.
  • நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் டிஜிட்டல் பரி்வர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான நிதியுதவிகள் தொடரும் என்று அறிவித்தார். அதன்படி, இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • 2021-22ம் நிதியாண்டில் பட்ஜெட் அறிவிப்புக்கிணங்க அரசு ஊக்கத்தொகைத் திட்டத்தை அறிவித்தது. அதன் விளைவாக, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை ஆண்டுக்கு 59 சதவீதம் அதிகரித்தது. பீம்-யுபிஐ பணப்பரிவர்த்தனை 106 சதவீத வளர்ச்சியை எட்டியது.
  • டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பில் உள்ள பல்வேறு தரப்பினர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் பல்வேறு அம்சங்கள் தொடர்பான கருத்துக்களை தெரிவித்தன. தேசிய பணப்பரிவர்த்தனை கழகமும், பீம்-யுபிஐ மற்றும் ரூபே கடன் அட்டை பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும்படி கோரிக்கை விடுத்தன.
  • மத்திய அரசு நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மிகப்பெரிய அளவில் வளர்ச்சிக் கண்டுள்ளது. 
  • கொவிட் பாதிப்பு  காலத்தில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மேலும் அதிகரித்தது. 2022 டிசம்பர் மாதத்தில் யுபிஐ மூலம் சாதனை அளவாக 12 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.
  • தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊக்குவிப்புத் திட்டம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சூழலை மேலும் வலுவாக்கும். அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற நோக்கத்திற்கிணங்க, யுபிஐ பரிவர்த்தனைகளை ஊக்குவித்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தீர்வுகளை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்து வலுவாக்க  இந்த திட்டம் உதவும்.
கனிம ஆய்வுத் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டிற்காக தேசிய கனிம ஆய்வுக் கழகத்திற்கு ரூ. 154.84 கோடி - மத்திய சுரங்க அமைச்சகம் ஒப்புதல்
  • மத்திய சுரங்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கனிம ஆய்வுக் கழகத்தின் நிர்வாகக் குழு கூட்டம் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் தலைமையில் நடைபெற்றது.
  • ரூ. 154.84 கோடி மதிப்பில் கனிம ஆய்வுத் திட்டங்களை மேற்கொள்ளவும், திறன்களை மேம்படுத்தவும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • நாட்டில் கனிம ஆய்வை ஊக்குவிப்பதற்கான கனிம ஆய்வு திட்டத்தில் கிராஃபைட், இரும்பு, நிலக்கரி, துத்தகநாகம் மற்றும் தொடர்புடைய தாதுக்கள், பாக்சைட், ஈயம், தாமிரம் போன்ற உலோகங்கள், வெள்ளீயம் மற்றும் அது சார்ந்த உலோகங்கள், மாங்கனீசு, சுண்ணாம்பு ஆகியவை அடங்கும்.
  • இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், இந்திய சுரங்க அலுவலகம் ஆகியவற்றின் திறனையும், கனிம ஆய்வையும்  மேம்படுத்துவதற்கு நிதி உதவி வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
  • இந்தக் கனிம ஆய்வுத் திட்டங்களும், ஆய்வு முகமைகளுக்கான நிதி உதவியும், நாட்டிற்கு ஏலம் விடக்கூடிய கனிம தொகுதிகளை வழங்குவதோடு, சுரங்கத் துறையில் தன்னிறைவு அடையவும் உதவியாக இருக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel