புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல்
- உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உள்ள யு.யு.லலித் வரும் நவம்பர் 8-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதி பெயரை பரிந்துரை செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
- இதன் பேரில், தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட் பெயரை புதிய தலைமை நீதிபதி பதவிக்கு லலித் பரிந்துரை செய்திருந்தார்.
- இந்நிலையில், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டை நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார் என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ட்விட்டரில் தெரிவித்தார்.
- அவருக்கு வரும் நவம்பர் 9-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
- சந்திரசூட் 2024-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி வரை இந்தப் பதவியில் இருப்பார். நீண்ட காலம் தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஒய்.வி.சந்திரசூட் மகன்தான் டி.ஒய்.சந்திரசூட் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் 12-வது தவணையாக சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.16,000 கோடி நிதியுதவியை பிரதமர் மோடி வழங்கினார். மேலும், `ஒரே நாடு, ஒரே உரம்' திட்டம் மற்றும் 'கிசான் சம்ருதி கேந்திரா' எனப்படும், விவசாயிகளுக்கான 600 உதவி மையங்களையும் பிரதமர் திறந்து வைத்தார்.
- டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் `கிசான் சம்மான் சம்மேளன் 2022' மாநாட்டை பிரதமர் நேற்று தொடங்கிவைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 13,500 விவசாயிகளும், 1,500 வேளாண் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர்.
- மேலும், நாடு முழுவதும் இருந்து சுமார் ஒரு கோடி விவசாயிகள் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர். மாநாட்டில், வேளாண் கண்காட்சி அரங்கையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.
- தொடர்ந்து, உரம் பற்றிய மின் இதழான `இந்தியன் எட்ஜ்'-ஐ பிரதமர் தொடங்கிவைத்தார். இதில், வேளாண் துறை சார்ந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
- இந்த மாநாட்டில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய ரசாயனம், உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
200 கி.மீ தூர இலக்கை தாக்கும் மின்காந்த பீரங்கிகள் சோதனை வெற்றி
- 'எலக்ட்ரோ மேக்னடிக் ரயில்கன் (இஎம்ஆர்ஜி)' என்ற சிறிய ரக மின்காந்த பீரங்கிகளை ராணுவத்தின் முப்படைகளின் பயன்பாட்டுக்காக டிஆர்டிஓ தயாரித்துள்ளது.
- போர்கப்பல்கள் அனைத்திலும், எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக இந்த இஎம்ஆர்ஜி பொருத்தப்பட்டிருக்கும். இதன் குண்டுகள் மணிக்கு 4,500 மைல் வேகத்தில் சென்று தாக்கும் திறன் படைத்தவை.
- இதில் பயன்படுத்தப்படும் குண்டுகள் லேசர்கள் மற்றும் இயக்க ஆற்றல் மூலம் அதிவேகத்தில் சென்று தாக்கும். இஎம்ஆர்ஜி ரக பீரங்கிகளை தயாரித்துள்ள டிஆர்டிஓ அதில் 12 எம்.எம் குண்டுகளை வைத்து தற்போது வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது.
- இந்த குண்டுகள் சுமார் 200 கி.மீ தூரமுள்ள இலக்குகளை, அதிவேகத்தில் சென்றும் தாக்கும் திறன் படைத்தவை. அடுத்ததாக 30 எம்.எம் குண்டுகளை பயன்படுத்தி டிஆர்டிஓ சோதனை செய்யவுள்ளது.
- 10 மெகாஜோல்ஸ் திறனுடன் டிஆர்டிஓ உருவாக்கியுள்ள இஎம்ஆர்ஜி பீரங்கிகள் ஒரு கிலோ கிராம் குண்டுகளை வினாடிக்கு 2,000 மீட்டர் வேகத்தில் சுடும் திறன் படைத்தவை.
- மின்காந்த சக்தியில் இயங்கும் இதன் குண்டுகள், ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் சென்று தாக்கும். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஆயுத ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் இந்த இஎம்ஆர்ஜி பீரங்கிகள் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளன.