மதுரையில் ரூ.600 கோடியில் டைடல் பார்க் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
- சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலர் அருண்ராய் வரவேற்றார். 'ஆன்லைன்' முறை அமைச்சர்கள் அன்பரசன், மூர்த்தி, மகேஷ், தியாகராஜன், எம்.பி.,வெங்கடேசன், கலெக்டர் அனீஷ்சேகர் பங்கேற்றனர்.
- இதில், 1,391 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும், பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்க சிந்தனைகளை வளர்க்கும் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்திற்கான முத்திரையையும் வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
- தொழில் முனைவோர் சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெறும் போது, உரிமை பத்திரம் ஒப்படைத்து சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
- அதே சொத்தின் மீது எத்தனை முறை கூடுதல் கடன் பெற்றாலும், சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இதனால் கால தாமதமும், வீண் அலைச்சலும் ஏற்படும். இதைத் தவிர்க்க, அதே சொத்தின் மீது கூடுதல் கடன் பெற நினைத்தால், சார் - பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டியது இல்லை.
- 'ஆன்லைன்' முறையில் எளிமையாக பதிவு செய்யலாம்.10 ஆயிரம் பேருக்கு வேலை அறிவு சார்ந்த தொழில்நுட்பத்தை உருவாக்க, மதுரை மாநகராட்சி மற்றும் டைடல் நிறுவனம் சார்பில் மாட்டுத்தாவணியில், 5 ஏக்கரில், 600 கோடி ரூபாய் மதிப்பில் டைடல் பூங்கா அமைத்து, புதிய தொழில் நிறுவனங்களுக்கு தரமான உள் கட்டமைப்பு வசதி வழங்கப்படும்.
- இரண்டாவது கட்டமாக, 5 ஏக்கரில் டைடல் பூங்கா விரிவுபடுத்தப்படும். இதன் மூலம், 10 ஆயிரம்பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.தொழில் வளர்ச்சி என்பது தொழில்கள் சார்ந்த வளர்ச்சி மட்டும் அல்ல. பல்லாயிரம் குடும்பங்கள் வளர்ச்சி பெறும்.
- இதுவே மாநில வளர்ச்சி குறியீடு அதிகரிப்பதற்கும் உதவுகிறது. புவிசார் குறியீடு பெற்ற, 42 பொருட்களில் 18ம், விண்ணப்பித்துள்ள, 25ல், 14 பொருட்களும் தென் மாநிலங்களைச் சேர்ந்தவை.
- தொழில்கள் துவங்குவதை எளிமையாக்கியதன் மூலம் இந்தியாவில், 14வது இடத்தில் இருந்த தமிழகம், 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய பொருளாதாரம் 7.5 சதவீத வளர்ச்சியை எட்டும் - எஸ்.சி.ஓ., மாநாட்டில் பிரதமர் மோடி நம்பிக்கை
- நம் அண்டை நாடான சீனாவின் பீஜிங்கை தலைமையிடமாக வைத்து செயல்படும், எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
- இதன் மாநாடு, மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் துவங்கியது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக 'ஆன்லைன்' வாயிலாகவே நடந்த இந்த மாநாடு, இந்தாண்டு நேரடியாக நடக்கிறது.
- இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஷீ ஜிங்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். மாநாட்டில் பங்கேற்பதற்காக டில்லியில் இருந்து புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி அங்கு சென்றார்.
- இந்நிலையில், நேற்று நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:கொரோனா தொற்று பரவலுக்குப் பின், சர்வதேச நாடுகளின் பொருளாதாரத்தில் ஒருவித மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
- இதை சீரமைப்பதற்கான முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.கொரோனா பரவலும், உக்ரைனில் நடக்கும் போரும், சர்வதேச அளவிலான பொருட்களின் வினியோக சங்கிலியில் தடைகளை ஏற்படுத்தின.
- இதனால் உலகம் முழுதும் உணவு பாதுகாப்பிலும், எரிசக்தி துறையிலும் நெருக்கடி உருவாகி உள்ளது. எனவே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, சீரான வினியோகச் சங்கிலியை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கையும், ஒத்துழைப்பும் ஏற்படுவதை இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும்.குடிமக்களுக்கான உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய மிகப் பெரிய கடமை, அரசுகளுக்கு உள்ளது.
- இதில், பெரும் சவால்கள் எழுந்துள்ளன. சிறு தானியங்களின் விளைச்சலையும், அதன் நுகர்வையும் ஊக்குவிப்பது தான் இதற்கான ஒரே தீர்வு. இதற்கான முயற்சியில் அனைத்து நாடுகளும் இறங்க வேண்டும்.
- உணவுப் பொருள் நெருக்கடிக்கு இது ஒரு சரியான மாற்றாக இருக்கும். இது, ஒரு ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய அம்சம்.
- எனவே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்பில், சிறு தானிய உணவுத் திருவிழாவை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். உலகம் முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தபோது, அதிலிருந்து சர்வதேச பொருளாதாரம் மீண்டு வர, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு முக்கிய பங்காற்றியது.
- இந்தியாவை சர்வதேச உற்பத்தி மையமாக மாற்றுவதில் நல்ல வளர்ச்சியை அடைந்து உள்ளோம். இந்தியாவின் திறமையான இளம் தொழிலாளர்கள், எங்கள் நாட்டை இயற்கையான போட்டியாளராக உருவாக்கி உள்ளனர்.
- இந்தாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கிறோம். இந்த 7.5 சதவீத வளர்ச்சி என்பது, சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் நாடுகளின் வளர்ச்சியில் முதன்மையானதாக இருக்கும். நநஅதேபோல் புதிய கண்டுபிடிப்புகளுக்கு நாங்கள் எப்போதும் முன்னுரிமை அளிக்கிறோம்.
- இந்தியாவில் தற்போது 70 ஆயிரம் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த விஷயத்தில், எங்கள் அனுபவத்தை மற்ற உறுப்பு நாடுகளுக்கு பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளோம்.
- உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையம் குஜராத்தில் துவக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார மையத்தால் நிறுவப்பட்டுள்ள உலகின் ஒரே பாரம்பரிய மருத்துவ மையம் இது.
- பாரம்பரிய மருத்துவம் தொடர்பான விஷயங்களை, உறுப்பு நாடுகளுக்கு பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார் பிரதமர் மோடி - உணவு, எரிபொருள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை
- உஸ்பெகிஸ்தான் நாட்டில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். பின்னர் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவும் ரஷியாவும் பல ஆண்டுகளாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இன்றைய சகாப்தம் போருக்கானது அல்ல.
- அமைதிப் பாதையில் எவ்வாறு நாம் முன்னேறலாம் என்பதைப் பற்றி பேச இன்று நமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தியா - ரஷியா இரு நாட்டு விஷயங்கள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து நாம் பல முறை தொலைபேசியில் பேசியிருக்கிறோம்.
- உணவு, எரிபொருள் பாதுகாப்பு மற்றும் உரங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காணும் வழியை கண்டுபிடிக்க வேண்டும். உக்ரைனில் தவித்த மாணவர்களை மீட்பதற்காக உதவிய ரஷியா மற்றும் உக்ரைனுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.