தமிழ்நாட்டில் உள்ள 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர உறுதி சான்றிதழ்
- தமிழ்நாட்டில் உள்ள 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர உறுதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தளவாய்பட்டினம், திருப்பத்தூர் மாவட்டம் பாச்சூர், ராமநாதபுரம் மாவட்டம் வெங்கிட்டாங்குறிச்சி, தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தர உறுதி சான்று கிடைக்கபெற்றுள்ளது.
முருகப்பா குழுமத்தின் 'மோன்ட்ரா' 3 சக்கர மின் வாகனம்: ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
- டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆப் இந்தியா (டிஐஐ), கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும், முருகப்பா குழுமத்தின் ஒரு அங்கமாகும். நாட்டிலேயே சைக்கிள் உற்பத்தியில் இந்த நிறுவனம் முன்னோடியாக திகழ்கிறது.
- முருகப்பா குழுமத்தின் மற்றொரு நிறுவனமான டிஐ கிளீன் மொபிலிட்டி நிறுவனம், சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின் வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டது.
- இதையடுத்து, அம்பத்தூரில் உள்ள டிஐ சைக்கிள்ஸ் வளாகத்தில், ரூ.140 கோடி முதலீட்டில் 580 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மூன்று சக்கர மின் வாகனங்களை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது.
- இதற்காக, கடந்த ஆண்டு ஜூலை 20-ம் தேதி நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
- அதன் அடிப்படையில் டிஐகிளீன் மொபிலிட்டி நிறுவனத்தின் மோன்ட்ரா என்ற வணிகப் பெயரிடப்பட்ட 3 சக்கர மின் வாகனங்கள் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட ஓராண்டிலேயே இந்த உற்பத்தி திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
- சென்னை தலைமைச் செயலகத்தில் மோன்ட்ரா 3 சக்கர மின்வாகனத்தை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
- தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித்துறை செயலர் நா.முருகானந்தம், உள்துறை செயலர் க.பணீந்திர ரெட்டி, பொதுத்துறை செயலர் டி.ஜெகந்நாதன், முதல்வரின் செயலர்கள் டி.உதயசந்திரன், உமாநாத், அனுஜார்ஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
- தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இரு முக்கிய விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி பேரணி நடத்திய மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும், தூத்துக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிகழ்ந்த பிந்தைய நிகழ்வுகள் குறித்தும் விசாரணை செய்வதற்காக நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தால் கடந்த மே 18-ம் தேதி அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கை குறித்து அமைச்சரவை விரிவாக விவாதித்தது.
- ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 17 காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 4 அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு, அவை துறைகளின் பரிசீலனையில் உள்ளதை அமைச்சரவை கவனத்தில் கொண்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைகள் தகுந்த நடவடிக்கை மேற்கொண்ட பின்னர், அதற்கான விவர அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கையை சட்டப்பேரவையில் வைக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளது
- மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு செப்.22ம் தேதி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழல்கள் குறித்தும், அதைத் தொடர்ந்து அதே ஆண்டு டிச.5-ம் தேதி அவரது மரணம் வரையிலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும் விசாரணை செய்வதற்காக நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தால் கடந்த ஆக.27-ம் தேதி அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கையும் அமைச்சரவையின் முன் வைக்கப்பட்டது. இந்த அறிக்கை குறித்து அமைச்சரவை விரிவாக விவாதித்தது. விசாரணை ஆணையத்தின் அறிக்கையை அமைச்சரவை பரிசீலித்து, அதில் தெரிவிக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலா, சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலர் ராமமோகன் ராவ் உள்ளிட்டோர் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- அந்த பரிந்துரைகள் மீது சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும், அதன்பின், அதற்கான விவர அறிக்கையுடன், ஆணையத்தின் அறிக்கையை, பேரவையில் வைக்கவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சில இணையதள விளையாட்டுகளால் ஏற்படும் சமுதாயக்கேடுகள் குறித்தும் அதுதொடர்பாக தடைச் சட்டம் கொண்டுவருவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இத்தகைய தடைச் சட்டங்கள் குறித்து நீதிமன்றங்கள் தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையிலும், பொதுமக்கள் மற்றும் வல்லுநர்களிடம் இருந்து வரப்பெற்றுள்ள ஆலோசனைகளை கருத்தில் கொண்டும், இதுபோன்ற விளையாட்டுகளை தடை செய்வது குறித்த சட்ட வரைவை வகுப்பது குறித்தும், அதில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த வகை விளையாட்டுகளை தடை செய்வதற்காக அவசரச் சட்டம் கொண்டுவரப்பட உள்ள விவரமும் அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா, சீனா, ரஷ்யா கூட்டு போர் பயிற்சி
- ரஷ்யாவின் கிழக்கு ராணுவப் பிரிவின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டு ராணுவப் போர் பயிற்சியில் பல்வேறு விதமான போர் உத்திகள் குறித்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- செப்டம்பர் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை, எட்டு நாட்கள் நடைபெறும் இந்த போர் பயிற்சி ஜப்பான், ஓகோட்ஸ்க் கடல் பகுதிகளில் 7 சுற்றுகளாக நடத்தப்படும்.
- இதில் 140 போர் விமானங்கள், 60 போர் கப்பல்கள், துப்பாக்கி பொருத்திய படகுகள், துணைப்படகுகள் உள்ளிட்ட 5,000 ராணுவ தளவாடங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன.
- இந்த பயிற்சியில் இந்தியா, சீனா, லாவோஸ், மங்கோலியா, நிகரகுவா, சிரியா மற்றும் முன்னாள் சோவியத் நாடுகள் உள்பட பல்வேறு நாடுகள் பங்கேற்க இருக்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'நான் முதல்வன்' திறன் மேம்பாட்டுத் திட்டம் : முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்
- தமிழ்நாடு முதலமைச்சர் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுத் திட்டத்தினை சென்னை கலைவாணர் அரங்கில் துவங்கி வைத்தார்.
- கல்லூரி மாணவர்களுக்கான திறன்களை மேம்படுத்த 50-க்கும் மேற்பட்ட தொழிற் நிறுவனங்களுடன், தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி,பல்கலைக்கழக மாணவ மாணவியர்களின் தனித் திறமையை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் நோக்கில் 'நான் முதல்வன்' திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மார்ச் 1ம் தேதி துவங்கி வைத்தார்.
- ஆண்டுக்கு, 10 லட்சம் தமிழ்நாட்டு இளைஞர்களைப் படிப்பில், சிந்தனையில், ஆற்றலில் மேம்படுத்துவது இட்த்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
- இத்திட்டம், தமிழ்நாடு முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை திட்டத்தினை ஒருங்கிணைக்கும் , மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு இத்திட்டத்தினை செயல்படுத்தும்.
- திறன் மேம்பாட்டு, வழிகாட்டி ஆகிய இரண்டு கூறுகளை இத்திட்டம் கொண்டுள்ளது. 12ம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம் என்று வழிகாட்டும் naanmudhalvan.tnschools.gov.in என்ற இணைய தளம் தொடங்கப்பட்டது.
- மேலும், துறைசார் நிபுணர்கள், வழிகாட்டிகள் மூலம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கென இணைய வழி அமர்வுகள் பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன.
“சூரிய வணக்கத்திற்கு பின் அறிவியல்” என்ற புத்தகத்தை ஆயுஷ் துறை இணையமைச்சர் டாக்டர் முன்ஞ்பாரா மகேந்திரபாய் வெளியிட்டார்
- அகில இந்திய ஆயுர்வேத நிறுனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரபல யோகாசனங்கள் குறித்து ஆராய்ச்சி அடிப்படையில் சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ள சூரிய வணத்திற்கு பின் அறிவியல் என்ற புத்தகத்தை மத்திய ஆயுஷ் மற்றும் குழந்தைகள், மகளிர் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் டாக்டர் முன்ஞ்பாரா மகேந்திரபாய் வெளியிட்டார்.
- இந்த நிகழ்ச்சியில் அகில ஆயுர்வேத நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் தனுஜா மனோஜ் நேசரி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.