மாற்றுத்திறனாளிகள் 4% இட ஒதுக்கீடு - உயர்மட்டக் குழு நியமனம்
- மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீட்டினை வழங்க ஏதுவாக உகந்த பதவியிடங்கள் கண்டறியப்பட்டு பணிநியமனம் செய்வதை கண்காணிக்கும் பொருட்டு உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
- அதனடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் நடைமுறையில் உள்ள 4% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்திடும் வகையில் உயர்மட்டக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளர் தலைவராகவும், தொழிலாளர் நலத்துறை, மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர்கள் உள்ளிட்ட 9 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
5 வாரங்களில் 2-வது முறையாக வட்டி விகிதங்களை உயர்த்தியது ஆர்பிஐ - கார், வீட்டு கடன் சுலப தவணை அதிகரிக்கிறது
- ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் 6 பேர் அடங்கிய குழு வட்டி உயர்வுக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளித்தது. இதனால் வட்டி விகிதம் தற்போது 4.90 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.
- கடந்த மே மாதத்தில் 40 புள்ளிகள் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. வளர்ச்சி பாதிக்காமல் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மிக எச்சரிக்கையாக மேற்கொண்டுள்ளதாக சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.
- நிதிக் கொள்கை குழு நடப்பு நிதி ஆண்டில் பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. அதேசமயம் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
- நாட்டின் பணவீக்கம் அபாயகரமான அளவை எட்டியுள்ளது. ஆர்பிஐ கணிப்பின்படி டிசம்பர் வரையான காலம் வரை அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்தே இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் ஓய்வை அறிவித்தார்
- சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் களத்தில் 23 ஆண்டுகள் விளையாடிய முதல் கிரிக்கெட் வீராங்கனை என்னும் சாதனைக்கு உரியவர் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ்.
- கடந்த 1999-ம் ஆண்டு முதல் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் இவர், தற்போது அனைத்து வித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
- இதன்மூலம், பெண்கள் கிரிக்கெட் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையும் இவர் வசம் உள்ளது. அதேபோல், 12 டெஸ்ட் போட்டிகளில் 699 ரன்களும், 89 ட்வெண்டி-20 போட்டிகளில் 2,364 ரன்களும் எடுத்துள்ளார்.
வேளாண் விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு
- ஆண்டுதோறும் காரிப் பருவத்துக்கான விதைப்புப் பணி தொடங்கும்போது, விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடுவது விவசாயிகளுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்.
- இதன்மூலம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். அந்த வகையில், நடப்பு 2022-23 காரிப் பருவகாலத்தில் பயிரிடப்படும் 14 வகை வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது' என்றார்.
- இதன்படி, ஒரு குவின்ட்டால் நெல்லுக்கான (பொது) எம்எஸ்பி ரூ.1,940-லிருந்து ரூ.2,040 ஆகவும் கிரேடு ஏ நெல்லுக்கான எம்எஸ்பி ரூ.1,960-லிருந்து ரூ.2,060 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
- ராகி குவின்ட்டால் விலை ரூ.3,377-லிருந்து ரூ.3,578 ஆகவும், சோளம் ரூ.1,870-லிருந்து ரூ.1,962 ஆகவும், துவரை ரூ.6,300-லிருந்து ரூ.6,600 ஆகவும், உளுந்து ரூ.6,300-லிருந்து ரூ.6,600 ஆகவும், வேர்க்கடலை ரூ.5,550-லிருந்து ரூ.5,850 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
- கம்பு குவின்ட்டால் விலை ரூ.2,250-லிருந்து ரூ.2,350 ஆகவும், பாசி பயறு ரூ.7,275-லிருந்து ரூ.7,755 ஆகவும் சூரியகாந்தி விதை ரூ.6,015-லிருந்து ரூ.6,400 ஆகவும் சோயாபீன் ரூ.3,950-லிருந்து ரூ.4,300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து தேசிய அளவில் தமிழகம் 4வது இடம்
- மத்திய மின் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,12,000 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்திலும், 7,970 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து கர்நாடகா இரண்டாவது இடத்திலும், 7,180 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து குஜராத் மூன்றாவது இடத்திலும், 5067 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழகம் 4வது இடத்தில் உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
78 மணி நேரத்தில் 25 கி.மீ. நெடுஞ்சாலை - புனே நிறுவனம் கின்னஸ் சாதனை
- கத்தார் நாட்டில் தோஹா எனுமிடத்தில் 25.27 கி.மீ. தூர தார் சாலை போட்டதே இதுவரை உலக சாதனையாக இருந்தது. அதை தற்போது இந்திய நிறுவனம் முறியடித்துள்ளது.
- ராஜ்பாத் இன்பிராகான் என்ற நிறுவனம் 800 பணியாளர்கள் மற்றும் 700 தொழிலாளர்கள் உதவியோடு இந்த சாதனையை புரிந்துள்ளது.
- அமராவதி மற்றும் அகோலா இடையே இந்த சாலை போடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் இந்தப் பகுதியில் 70 கி.மீ. தூரத்துக்கு விரிவாக்கம் செய்யும் பணியை இந்நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.
- பணிகளை மேற்பார்வையிடும் வேலை எம்எஸ்வி இன்டர்நேஷனல் இன்கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி ஜூன் 3-ம் தேதி தொடங்கப்பட்டு இடைவெளியின்றி தொடர்ந்து நடைபெற்றது.
இந்தியா - வியட்நாம் இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது
- நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் அரசுமுறை பயணமாக, தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமுக்கு நேற்று முன் தினம் சென்றார்.
- அந்நாட்டு ராணுவ அமைச்சர் ஜெனரல் பான் வான் ஜியாங்கை ந்தித்து பேசினார். இருதரப்பு உறவை விரிவுபடுத்துவது குறித்து பேச்சு நடத்தப்பட்டது.
- இந்தோ - பசிபிக் பகுதியின் ஸ்திரத்தன்மைக்கு இந்த ராணுவ மற்றும் பாதுகாப்பு உறவு முக்கிய காரணியாக உள்ளது.பேச்சுக்கு பின், 2030ம் ஆண்டுக்கான இந்தியா- - வியட்நாம் ராணுவ உறவின் கூட்டறிக்கையில் இருநாடுகளும் கையொப்பமிட்டன.
- மேலும், இரு நாட்டு ராணுவமும், பராமரிப்பு மற்றும் இதர பணிகளுக்கு தங்கள் ராணுவ தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தானது.
மருத்துவ உலகில் புதிய மைல்கல் புற்றுநோயை பூரண குணமாக்கும் மருந்து
- மிஸ்மேட்ச் ரிப்பேர் (எம்எம்ஆர்) குறைபாடுள்ள செல்கள் பொதுவாக புற்றுநோய்க்கு வழிவகுக்கும் பல டிஎன்ஏ மரபணு மாற்றங்களை கொண்டுள்ளன.
- இந்த குறைபாடு பெருங்குடல் புற்றுநோய், பிற வகை இரைப்பை குடல் புற்றுநோய் மற்றும் கர்ப்ப பை புற்றுநோய் ஆகியவற்றில் மிகவும் பொதுவாக காணப்படும்.
- நியூயார்க்கில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் அறக்கட்டளை புற்றுநோய் மையத்தில் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2வது மற்றும் 3வது நிலையில் புற்றுநோய் கட்டிகள் இருந்த 12 நோயாளிகளுக்கு 6 மாதங்களுக்கு ஒவ்வொரு 3 வாரங்களுக்கும் தொடர்ந்து மருந்து வழங்கப்பட்டது.
- இந்த கட்டிகளுக்கு டோஸ்டார்லிமாப் என்ற புதிய மருந்து, எதிர்ப்பு மருந்து, தொடர் கீமோதெரபி மற்றும் அறுவை சிகிச்சை ஆகிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
- இதைத் தொடர்ந்து, இந்த நோயாளிகளுக்கு மேலும் சில தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சை முறைகள், பரிசோதனைகள் நடத்தப்பட்டது. ஆறு மாத முடிவில், சிகிச்சையில் இருந்த 12 நோயாளிகளின் உடல், எண்டோஸ்கோபி, பயாஸ்கோபி, பிஇடி ஸ்கேன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறிக்கைகள் எதிலும் அவர்களுக்கு இருந்த புற்றுநோய் கட்டி தென்படவில்லை.
- இது தவிர, காந்த அதிர்வு இமேஜிங்கில் கூட கட்டி இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
- இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே தொழில்துறை மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- முதலீடுகள், தொழில்நுட்ப பரிமாற்றம், தொழில் நிறுவனங்களில் முக்கிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளின் தொழில்துறைகளை வலுப்படுத்தி மேம்படுத்துவது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இது வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் உதவும்.
- இந்த ஒப்பந்தம் அமலாகும் போது, பரஸ்பர ஒத்துழைப்புள்ள அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக புதுப்பிக்கவல்ல எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, தொழில் துறை சார்ந்த தொழில்நுட்பங்கள், சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுப்பிடிப்பை அதிகரிக்க வழிவகுக்கும்.
- சுற்றுச்சூழல் ஆய்வுக்கான ஜப்பானின் தேசிய நிறுவனம் மற்றும் இந்தியாவின் ஆர்யபட்டா ஆய்வு நிறுவனம் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- காற்றின் தரம் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து கூட்டு ஆராய்ச்சியை நடத்தவும், அமலாக்கவும், இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. மேலும், கடந்த காலத்தில், வேறு எந்த வெளிநாட்டு அமைப்புடனும் இது போன்ற ஆராய்ச்சிக்கு ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனம் ஒப்பந்தம் எதையும் செய்துகொண்டதில்லை.
- அறிவியல் கருவிகளின் கூட்டுப்பயன்பாடு மற்றும் இயக்கம், கண்காணிப்பு முறைகளில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல் பரிமாற்றம், கூட்டான கல்வி மற்றும் ஆராய்ச்சி செயல்பாடுகள், ஆராய்ச்சி செய்வதன் நோக்கத்துடன் முனைவர் பட்டத்திற்கான மாணவர்கள் உட்பட ஆய்வாளர்கள் பரிமாற்றம், கூட்டான அறிவியல் பயிலரங்குகள் / கருத்தரங்குகள் போன்றவை இந்த ஒப்பந்தத்தின் மூலம் சாத்தியமாகும் செயல்பாடுகளாகும்.
- நவீன காந்தவியல் மற்றும் இடவியல் தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள அடிப்படை அறிவியலுக்கான எஸ் என் போஸ் தேசிய மையத்திற்கும், ஜெர்மனி நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- காந்தவியல் மற்றும் இடவியலில் நவீன ஞானத்தைப் பெறும் வாய்ப்புகளை வழங்குவதில், இந்திய – ஜெர்மன் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது இந்த கூட்டு முயற்சி இலக்காகும்.
- ஒருங்கிணைந்து ஆய்வு செய்வதற்கு அனுபவ மற்றும் கணக்கீட்டு தரவுகள் பகிர்வு, தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை சார்ந்த ஆதரவு பரிமற்றம், பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பரிமாற்றம் உள்ளிட்ட விஷயங்களில் ஒத்துழைப்புக்கும் இது உதவி செய்யும்.
- நகர்ப்புற நீர் நிர்வாகத்தில் தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ஆஸ்திரேலியாவின் வெளியுறவு மற்றும் வர்த்தகத்துறை இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2021 டிசம்பரில் கையெழுத்தானது.
- நகர்ப்புற நீர்ப்பாதுகாப்புத் துறையில், இரு நாடுகளுக்கு இடையே இருதரப்பு ஒத்துழைப்பை இந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது. நகர்ப்புற நீர்ப்பாதுகாப்புத் துறையில் இருநாடுகளால் பெறப்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து இருதரப்பினரும், அறிந்துகொள்ள இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. தற்சார்பு இந்தியா என்பதை எதார்த்தமாக்க இது உதவும்.
- மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம், அமெரிக்காவின் சர்வதேச எய்ட்ஸ் தடுப்பூசி முன்னெடுப்பு, இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- உயிர்க் கொல்லி நோய், காசநோய், கொவிட் உள்ளிட்ட நோய்களைத் தடுப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும், தேவையான புதிய உயிரி மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை கண்டறிவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா – அமெரிக்கா இடையேயான சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும், வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 10 தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை மத்திய அரசின் விண்வெளித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனமான நியூ ஸ்பேஸ் இந்திய லிமிடெட் நிறுவனத்துக்கு மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- மேலும், அந்த நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு முதலீட்டை 1,000 கோடி ரூபாயிலிருந்து 7,500 கோடி ரூபாயாக அதிகரிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இதன் மூலம் நியூ ஸ்பேஸ் இந்திய லிமிடெட் நிறுவனத்துக்கு தன்னாட்சி நிதி அதிகாரம் வழங்கப்படும் என்றும் பெருமளவிலான வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்வெளித்துறையில் உள்நாட்டுப் பொருளாதார நிலை மேம்பட்டு சர்வதேச விண்வெளி சந்தையில் இந்தியாவின் பங்கு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- விண்வெளித் துறை சீர்திருத்தங்கள், நியூ ஸ்பேஸ் இந்திய லிமிடெட் நிறுவனத்தை முழுமையான வணிக விண்வெளி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், முழு அளவிலான செயற்கைக்கோள் இயக்குநராக செயல்படவும் வழிவகை ஏற்பட்டுள்ளது.
- ஒற்றைச் சாளர இயக்குநராக செயல்படும் நியூ ஸ்பேஸ் இந்திய லிமிடெட் நிறுவனம், விண்வெளித் துறையில் எளிதாக வர்த்தகம் செய்ய முடியும்.
- இதன் மூலம் நியூ ஸ்பேஸ் இந்திய லிமிடெட் நிறுவனம், உலகளாவிய நிலைகளுக்கு ஏற்ப டிரான்ஸ்பாண்டர்களின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் பெறும்.