உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஸ்வப்னில் வெள்ளி பதக்கம் வென்றார்
- உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசஷின் பிரிவில் தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்வப்னில் குசலே, ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற உக்ரைனின் செர்ஹி குலிஷை எதிர்கொண்டார்.
- இதில் ஸ்வன்னில் குசலே 10-16 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். உலகக் கோப்பை தொடரில் ஸ்வப்னில் குசலே பதக்கம் வெல்வது இதுவே முதன் முறையாகும்.
- இந்தத் தொடரில் இந்தியாவில் இருந்து 12 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. இதுவரை ஒரு தங்கம், ஒரு வெள்ளி வென்றுள்ள இந்தியா பதக்கப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.
பைனலிசிமா கோப்பையை வென்றது அர்ஜென்டினா
- தென் அமெரிக்க, ஐரோப்பிய சாம்பியன் அணிகளுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக பைனலிசிமா கோப்பைக்கான போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் 3-வது ஆண்டுக்கான போட்டியில் அர்ஜென்டினா - இத்தாலி மோதின.
- லண்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதில் இரு கோல்களை அடிக்க உதவியிருந்த லயோனல் மெஸ்ஸி, சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏற்றுமதி - மூன்றாம் இடத்தில் தமிழகம்
- இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 2021 - 22ம் நிதியாண்டில் 31.46 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
- இவற்றில் 2.62 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியானவை. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 8.34 சதவீதமாக உயர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது.
- இது 2020 - 21ம் நிதியாண்டில் 1.93 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2019 - 20ம் நிதியாண்டில் தமிழக ஏற்றுமதியின் மதிப்பு 2.12 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
- 2021 - 22ம் நிதியாண்டில் 9.45 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் குஜராத் மாநிலம் முதல் இடத்திலும் 5.45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் மகராஷ்டிரா மாநிலம் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
நாட்டின் மிகப்பெரிய தனியார் விண்கல தயாரிப்பு மையம் பெங்களூருவில் திறப்பு
- ஹைதராபாத்தை சேர்ந்த ஆனந்த் டெக்னாலஜிஸ் என்ற விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் பெங்களூருவில் நாட்டிலே மிகப்பெரிய தனியார் விண்கல தயாரிப்பு மையத்தை பெங்களூருவில் புதன்கிழமை திறந்தது.
- கர்நாடக தொழில் மேம்பாட்டு துறையின் விண்வெளி பூங்காவில் அமைந்துள்ள இந்த மையம் 15 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.
- இதில் ஒரே நேரத்தில் நான்கு பெரிய விண்கலங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் சோதனையை நடத்த முடியும். இந்த மையத்தில் உள்ள 4 அலகுகளும் தனித்தனியாக இயங்குபவை. விண்கலங்களை சோதிக்கும்போது இந்த அலகுகள் தனியாகவே இறுதிநிலை வரை ஒருங்கிணைப்பு சோதனைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவை என ஆனந்த் டெக்னாலஜிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி - உயர்த்தி அறிவித்த எஸ்.பி.ஐ
- நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 7.5 சதவீதமாக இருக்கும் என, எஸ்.பி.ஐ., அறிவித்துள்ளது. அத்துடன், முந்தைய கணிப்பிலிருந்து 20 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு உயர்த்தி, தற்போதைய கணிப்பை வெளியிட்டு உள்ளது.
- பெரு நிறுவனங்களின் வளர்ச்சியை பொறுத்தவரை, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள, கிட்டத்தட்ட 2,000 நிறுவனங்களில், 29 சதவீத நிறுவனங்கள் முந்தைய ஆண்டை விட அதிகபட்ச வளர்ச்சியையும்; 52 சதவீத நிறுவனங்கள் அதிக நிகர லாபத்தையும் பதிவு செய்துள்ளன.
- இதன் அடிப்படையில், நாட்டின் வளர்ச்சி குறித்த கணிப்பு உயர்த்தப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை, கொரோனா காலத்தில் இருந்த 4 சதவீதத்திலிருந்து, கூடுதலாக 1.25 - 1.50 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 6.5 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாக இருக்கும்.
இந்தியா செனகல் இடையே 3 ஒப்பந்தங்கள் கையொப்பம்
- தலைநகா் டாக்கரில், வெங்கையா நாயுடுவுடன், செனகல் அதிபா் மேக்கி சால், அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்த பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, பல்வேறு துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான மூன்று புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
- தூதரக மற்றும் பணி தொடா்பான கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) வைத்திருப்பவா்களுக்கு விசா இல்லாத நடைமுறையை கொண்டு வருவது தொடா்பான ஒப்பந்தம், 2022-26 ஆண்டுகாலத்தில் இரு நாடுகளிடையேயான கலாசார பரிமாற்றத் திட்டத்தை புதுப்பித்தல் மற்றும் இருநாடுகளிடையே இளைஞா் விவகாரங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடா்பான ஒப்பந்தங்களில் இருநாட்டு தலைவா்களும் கையெழுத்திட்டனா்.
கலைஞர் எழுதுகோல் விருது 2022
- 2021-22 ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறை மானியக் கோரிக்கையில் இதழியல் துறையில் சிறந்த இதழியலாளருக்கு ஆண்டு தோறும் கலைஞர் எழுதுகோல் விருதும் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கபட்டு வருகிறது.
- ஜூன் 3 ஆம் தேதி கருணா நிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, கலைஞர் விருதுக்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்படி 2021 ஆம் ஆண்டிற்கான விருதாளரான மூத்த பத்திரிக்கையாளர் சண்முக நாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது 2022
- தமிழ்த் திரை உலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளர்களுக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரில் 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது' வழங்கப்படும் என தமிக அரசு அறிவித்து இருந்தது.
- இந்த விருது தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும், கலைஞர் பிறந்த தினமான ஜுன் 3 ஆம் தேதி அன்று வழங்கப்படும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
- அதன்படி 2022-ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதிற்காக பல்வேறு திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதி புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாஸ் (வயது 90) தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழு! - அரசாணை வெளியீடு
- மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ள நிலையில் அதில் உள்ள பல திட்டங்களை ஏற்க முடியாது என தமிழ அரசும் தொடர்ந்து வாதிட்டு வருகிறது. இந்நிலையில் சில நாட்கள் முன்னதாக தமிழ்நாட்டில் கல்வியை மேம்படுத்தும் வகையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
- அதன்படி தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநில கல்விக் கொள்கைகளை உருவாக்க 13 பேர் கொண்டு குழு அமைக்கப்படுகிறது. நீதியரசர் முருகேசன் தலைமையிலான இந்த 13 பேர் கொண்ட குழு ஒரு ஆண்டுக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும். இந்த குழுவில் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
- உலகளாவிய கல்வி, இளம் பருவத்தினருக்கான கல்வி ஆகியவற்றை கருத்தில் கொண்டு அறிக்கை தயாரிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.