உலக வில்வித்தையில் இந்திய மகளிர் அணிக்கு வெள்ளி
- உலக வில்வித்தைப் போட்டிகள் பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்றன. வில்வித்தைப் போட்டியின் இறுதிச் சுற்றில் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவும், சீன தைபே அணியும் மோதின.
- இந்திய அணியில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், சிம்ரன்ஜீத் கவுர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த சீன தைபே அணி 5-1 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. இதையடுத்து 2-ம் இடம் பிடித்த இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
தூத்துக்குடியில் சிப்பெட் கல்வி மையம்
- சென்னை கிண்டி தொழிற்பேட்டையில், 'சிப்பெட்' என்ற, மத்திய பிளாஸ்டிக்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், 1968ல் துவங்கப்பட்டது. பிளாஸ்டிக்ஸ் தொடர்பான இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் மற்றும் டிப்ளமா படிப்புகள் இங்கு கற்பிக்கப்படுகின்றன.
- இந்நிலையில், கிண்டியில் உள்ள சிப்பெட் வளாகத்தில், 59.19 கோடி ரூபாய் மதிப்பில், ஆறு அடுக்கு உடைய தொழில்நுட்ப மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது.
- மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தொழில்நுட்ப மையத்திற்கான அடிக்கல் நாட்டினார்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் ம.பி. முதல் முறையாக சாம்பியன்
- எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த 22ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன் குவித்து ஆல் அவுட்டானது.
- மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்சில் 536 ரன் குவித்தது. 2வது இன்னிங்சை விளையாடிய மும்பை அணி 269 ரன் எடுத்து ஆல் அவுட்டானது.
- இதையடுத்து, 108 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மத்திய பிரதேசம், 29.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது.
- ம.பி. அணி முதல் முறையாக ரஞ்சி கோப்பையை முத்தமிட்டு சாதனை படைக்க, 41 முறை சாம்பியனான மும்பை அணி இம்முறை 2வது இடத்துடன் திருப்தி அடைந்தது.
- ம.பி. வீரர் ஷுபம் ஷர்மா ஆட்ட நாயகன் விருதும், மும்பையின் சர்பராஸ் கான் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாடு சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கினார் ஜோ பைடன்
- அமெரிக்காவில் துப்பாக்கி பயன்படுத்துவதற்கு பெரிய அளவில் கட்டுப்பாடுகள் இல்லை. இதனால், துப்பாக்கியால் சுட்டு கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
- இதையடுத்து துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான விவாதம் தொடங்கியது. துப்பாக்கி வைத்திருப்பதற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.
- இந்நிலையில், இது தொடர்பான மசோதா, அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேறியது. இந்த மசோதாவை சட்டமாக்கும் அரசாணையில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.
- இந்த சட்டத்தின்படி, பல புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வயதில் குறைந்தவர்களுக்கு துப்பாக்கிகளை விற்பதற்கு முன், அவர்களுடைய பின்புலத்தை விசாரிக்க வேண்டும்.
- குடும்ப வன்முறையில் ஈடுபட்டோருக்கு துப்பாக்கி விற்க கூடாது. ஆபத்தானவர்கள் என்று கருதுவோருக்கு துப்பாக்கி விற்பனையை தடை செய்யும் சட்டங்களை அந்தந்த மாகாணங்கள் நிறைவேற்றி கொள்ள இந்த சட்டம் அனுமதி அளிக்கிறது.
- மேலும், துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு மனரீதியிலான சிகிச்சை அளிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் நீண்ட பாலம் திறந்து வைத்தார் பிரதமர் ஹசீனா
- நம் அண்டை நாடான வங்கதேசத்தில் தென்மேற்கே உள்ள பகுதிகளை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் பத்மா நதியின் குறுக்கே மிகப் பெரிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
- மொத்தம் 28 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 6.15 கி.மீ. நீளமுள்ள இந்தப் பாலம் வங்கதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய உள்கட்டமைப்பு வசதியாக பார்க்கப்படுகிறது.
- இரண்டு அடுக்குகளை உடைய இந்த பாலத்தின் மேல் பகுதியில் சாலைப் போக்குவரத்தும் கீழ் பகுதியில் ரயில்களும் இயக்க முடியும். இந்தப் பாலத்துக்கான தூண் 400 அடி ஆழம் வரை அமைக்கப்பட்டுள்ளது.
- உலகிலேயே மிக ஆழத்தில் பாலத் தூண் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது. பல்வேறு பொறியியல் சிறப்புகளை பெற்றுள்ள இந்தப் பாலத்தை அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா திறந்து வைத்தார்.