Type Here to Get Search Results !

TNPSC 9th MAY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ரத்த உறவில் திருமணங்கள் செய்வதில் தமிழகத்திற்கு முதலிடம்

  • ரத்த உறவு முறை கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்யும் போது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு குறைப்பாடு, ரத்த சோகை அல்லது மரபணு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
  • ஆனாலும் தென் மாநிலங்களில் ரத்த உறவு திருமணங்கள் தான் அதிகளவில் நடந்து வருகிறது. இந்த ரத்த உறவு திருமணங்களில் கர்நாடகம் 2-வது இடத்தை பிடித்து உள்ளது. 
  • கர்நாடகத்தில் 27 சதவீத மக்கள் ரத்த உறவில் திருமணம் செய்து கொள்வது தேசிய குடும்ப சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • கர்நாடகத்தில் 9.6 சதவீத பெண்கள் தந்தை வழி ரத்த உறவிலும், 13.9 சதவீத பெண்கள் தாய் வழி ரத்த உறவிலும் திருமணம் செய்து கொள்கின்றனர். 
  • இந்த ரத்த உறவு திருமணங்கள் மூலம் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
  • தென்மாநிலங்களில் ரத்த உறவு திருமணங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. அதாவது அங்கு 28 சதவீதம் ரத்த உறவு திருமணங்கள் நடக்கிறது. 
  • ஆந்திராவில் 26 சதவீதமும், புதுச்சேரியில் 19 சதவீதமும், தெலுங்கானாவில் 18 சதவீதமும் ரத்த உறவு திருமணங்கள் நடப்பதாக தகவல்கள் கூறுகிறது.

எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க அரசுக்கு அதிகாரம் - சட்டப்பேரவையில் மசோதா அறிமுகம்

  • தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும்போது, மாநில அரசின்பரிந்துரைப்படி, பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் நியமிக்கும் நடைமுறை இருந்தது.
  • இந்நிலையில், சமீபகாலமாக ஆளுநரே நேரடியாக துணைவேந்தர்களை நியமிக்கும் நடைமுறை உள்ளது. இதற்கு மாநில அரசு சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
  • அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் குஜராத்தில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடமே உள்ளது. 
  • இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்திலும் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் வகையில், பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • அதன்படி, சென்னைப் பல்கலைக்கழகம் உட்பட 13 பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டு, சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியால் சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டது. 
  • தொடர்ந்து, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை, தமிழக அரசுக்கும் வழங்கும் சட்டத்திருத்த முன்வடிவை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, அறிமுகம் செய்தார்.
  • இந்நிலையில் சட்டப் பேரவையில் நேற்று தமிழ்நாடு டாக்டர்எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்த முன்வடிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார்.
கூட்டுறவு சட்டத்திருத்தம்
  • கூட்டுறவு சங்கங்களின் முறையான ஆளுகையை உறுதி செய்யவும், அதன் மூலம் பொதுநலனைப் பாதுகாக்கவும், முறையான கட்டுப்பாடு, கண்காணிப்புக்கான சட்டத்திருத்த முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டது.
  • அதேபோல, கூட்டுறவு சங்கத்தில் கையாடல், மோசடியாக பணத்தை தக்க வைத்தல் போன்றவற்றுக்கு, பதவிக்காலம் முடிந்த பின் பெறப்படும் புகார்களின் அடிப்படையில், சங்கத்தின் நிர்வாகம் அல்லது பணியாளர்களுக்கு உடந்தையாக உள்ள வெளியாட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சட்ட முன்வடிவும் சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமியால் அறிமுகம் செய்யப்பட்டது.

4,200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாடு தமிழக அகழாய்வில் கண்டுபிடிப்பு - முதல்வர் ஸ்டாலின் 

  • அகழாய்வுகளில் கிடைக்கக் கூடிய தொல்பொருட்களை ஆய்வு செய்ய, புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 
  • அவ்வாறு அறிவியல் வழி ஆய்வு செய்யப்பட்டதில், சிவகங்கை மாவட்டம், கீழடிக்கு அருகே அகரத்தில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில், அங்கே நெல் பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
  • துாத்துக்குடி மாவட்டம், சிவகளை வாழ்விடப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்ததில், அங்கே நீர் செல்லும் செங்கல் வடிகாலில், நன்னீர் சென்றுள்ளதாகவும், தேக்கி வைக்கப்பட்ட நீர் நிலையிலிருந்து இந்நீர் கொண்டு வரப்பட்டதாகவும், ஆய்வில் தெரிய வருகிறது.
  • கடந்த ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறையில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு சேகரிக்கப்பட்ட இரண்டு கரிம மாதிரிகள், அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தின் 'பீட்டா' பகுப்பாய்வுக் கூடத்திற்கு அனுப்பப்பட்டன.
  • அந்த பகுப்பாய்வின் காலக்கணக்கீடு முடிவுகள் தற்போது பெறப்பட்டுள்ளன. அவற்றின் மைய அளவீட்டுக் காலம் முறையே, கி.மு., 1615 மற்றும் கி.மு., 2172 என்று காலக்கணக்கீடு செய்யப்பட்டுள்ளன.
  • இதன் வழியாக, தமிழகத்தில் இரும்பு பயன்பாடு, 4,200 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. மனித இனம் இரும்பின் பயனை உணரத் துவங்கிய பின்பு தான், அடர்ந்த வனங்களை அழித்து, வேளாண்மை செய்திடும் போக்கு உருவாகி உள்ளது.
  • அந்த வகையில், தமிழகத்தில் வேளாண்மை சமூகம் துவங்கிய காலம் குறித்தான கேள்விகளுக்கு, ஒரு தெளிவான விடை கிடைத்திருக்கிறது. 
  • இந்தியாவில் இரும்புக் கால பண்பாடு நிலவிய கங்கை சமவெளி, கர்நாடகம் உள்ளிட்ட, 28 இடங்களில், இதுவரை காலக் கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. 
  • அவற்றில் தற்போது கிடைத்துள்ள மயிலாடும்பாறை ஆய்வு முடிவுகளான, 4,200 ஆண்டுகள் என்பதே, காலத்தால் முந்தியது என்பது, நமக்கெல்லாம் பெருமை அளிக்கத்தக்க செய்தி.
  • அதேபோல், கருப்பு - சிவப்பு பானை வகைகள், 4,200 ஆண்டுகளுக்கு முன்னரே, அதுவும் புதிய கற்காலத்தின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது.தமிழக தொல்லியல் துறையின் முயற்சிகள், இத்தோடு நின்றுவிடப் போவதில்லை.
  • இந்த ஆண்டு கேரளாவின் பட்டணம்; கர்நாடகாவின் தலைக்காடு; ஆந்திராவின் வேங்கி; ஒடிசாவின் பாலுார் பகுதிகளில், அகழாய்வு மேற்கொள்ளப்படும். 
  • கடமைசங்க காலத் துறைமுகமான கொற்கையில், ஆழ்கடலாய்வின் முதற்கட்டமாக, முன்கள ஆய்வு இந்த மாதம் துவக்கப்பட உள்ளது.
  • தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட, ஏராளமான பானை ஓடுகளில் காணப்படும் குறியீடுகளுக்கும், சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துகளுக்குமான உறவை ஒப்பீடு செய்து, ஆய்வு செய்திடும் திட்டத்தை, தமிழக தொல்லியல் துறை, இந்த ஆண்டு முதல் மேற்கொள்ளும்.
  • இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் துவங்கி எழுதப்பட வேண்டும் என்பதை, சான்றுகளின் அடிப்படையில், அறிவியல் வழி நிறுவுவதே, நம் அரசின் தலையாயக் கடமை. 
  • இதற்கு முத்தாய்ப்பாக, தமிழகத்தில் இரும்பின் பயன்பாடு, 4,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை, மயிலாடும்பாறை ஆய்வு முடிவுகள் நிலை நிறுத்தியுள்ளன. இது நமக்கெல்லாம் பெருமை. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா

  • இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது, பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, நாடு முழுதும் கலவரம் மூண்டது.
  • இதில், 130 பேர் காயம் அடைந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • போலீசாருக்கு உதவ, ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது. நிலைமை கைமீறிப் போனதை அடுத்து, மகிந்த ராஜபக்சே, 76, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
போக்சோ வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரமான பிரிவு - 142ஐ பயன்படுத்தி சிறை தண்டனை ரத்து 
  • திருப்பூர் மாவட்டம் பிச்சம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் தனது சொந்த அக்கா மகளான 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக சேர்ந்து வாழ்ந்துள்ளார்.
  • இதன் காரணமாக சிறுமி 15 வயதிலும், 17 வயதிலும் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். மருத்துவமனைக்கு சென்ற போது, தண்டபாணி மீது காவல்துறையால் போக்சோ சட்டம் பதிவு செய்யப்பட்டது. 
  • சிறுமிக்கு 18 வயது நிறைவடைந்தவுடன் தண்டபாணி அவரை திருமணம் செய்துள்ளார். ஆனால் போக்சோ சட்டத்தின் அடிப்படையில் தண்டபாணிக்கு கீழமை நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. சென்னை உயர் நீதிமன்றமும் இந்த உத்தரவை உறுதி செய்தது.
  • தண்டபாணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில், ''இந்த விவகாரத்தில் தண்டபாணி செய்தது தவறானது என்றாலும், தற்போதைய நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுடனான திருமண வாழ்க்கை சுமூகமாகவும், மகிழ்ச்சியாகவும் சென்று கொண்டிருப்பதாக கூறியிருப்பதால் ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தில் பிரச்னையை உருவாக்க விரும்பவில்லை. 
  • இந்த வழக்கில் தண்டபாணிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை அரசியலமைப்பு உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரமான பிரிவு-142ஐ பயன்படுத்தி ரத்து செய்கிறோம். 
  • அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணை தண்டபாணி நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை அதிலிருந்து அவர் தவறும் பட்சத்தில் அந்த இளம்பெண்ணோ அல்லது தமிழக காவல் துறையோ நீதிமன்றத்தை நாடும் பட்சத்தில், அவரது தண்டனை ரத்து செய்த இந்த தீர்ப்பானது மாற்றி அமைக்கப்படும்'' எனக்கூறி வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
மேற்கூரை சூரிய சக்தி தகடுகளை பொருத்த இந்திய சூரிய சக்தி மின் உற்பத்தி கழகம் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
  • மத்திய ஆயுத காவல் படை மற்றும்  தேசிய பாதுகாப்புப் படை வளாகங்களில் மேற்கூரை சூரிய சக்தி உற்பத்திக்காக, இந்திய சூரிய சக்தி மின் உற்பத்தி கழகம் மத்திய உள்துறை அமைச்சகத்துடன்  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 
  • மத்திய உள்துறை செயலாளர்  திரு. அஜய் குமார் பல்லா, மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிச்சக்தித்துறை செயலாளர் திரு.இந்து சேகர் சதுர்வேதி  ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் போது உடனிருந்தனர்.
  • இந்த உடன்படிக்கை  நாட்டின் பாதுகாப்பு படைகளுக்கு பசுமை எரி சக்தியை வழங்குவதற்கான நடவடிக்கையின் முதல்படி ஆகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel