தாமஸ் கோப்பை பேட்மின்டன் முதல் முறையாக இந்தியா சாம்பியன்
- தாமஸ் கோப்பை பேட்மின்டன் இறுதிப் போட்டியில் 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை நேற்று எதிர்கொண்டது இந்தியா. முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷியா சென் 8-21, 21-17, 21-16 என்ற செட் கணக்கில் அந்தோனி ஜின்டிங்கை வீழ்த்தி 1-0 என முன்னிலை கொடுத்தார்.
- அடுத்து நடந்த இரட்டையர் ஆட்டத்தில் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி இணை 18-21, 23-21, 21-19 என்ற செட் கணக்கில் முகமது ஆசன் - கெவின் சஞ்ஜெயா சுகமுல்ஜோ ஜோடியை வீழ்த்த, இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.
- இதையடுத்து நடந்த ஒற்றையர் ஆட்டத்தில் ஜொனாதன் கிறிஸ்டியுடன் மோதிய கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-15, 23-21 என்ற நேர் செட்களில் வீழ்த்த, இந்தியா 3-0 என்ற கணக்கில் அபாரமாக வென்று 73 ஆண்டுகளில் முதல் முறையாக தங்கப் பதக்கத்தை முத்தமிட்டு வரலாற்று சாதனை படைத்தது.
- 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்தி முதன்முறையாக இந்திய அணி தாமஸ் கோப்பையை வென்றுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில் நேட்டோவில் இணைய பின்லாந்து விண்ணப்பம் - மின்சார விநியோகத்தை நிறுத்தியது ரஷ்யா
- ஐரோப்பிய யூனியன் ஒன்றியத்தில் 27 நாடுகள் உள்ளன. நேட்டோ கூட்டமைப்பில் 31 நாடுகள் உள்ளன. தற்போது, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நேட்டோ அமைப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றன.
- குறிப்பாக, ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் உள்ள உக்ரைன், பின்லாந்து, சுவீடன் போன்ற நாடுகள் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து வருகின்றன.
- இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்யா, தற்போது உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் போர் தொடுத்துள்ளது. இந்த சூழலில், ரஷ்யாவின் கடும் எச்சரிக்கையும் மீறி, நேட்டோ அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பிக்க போவதாக பின்லாந்து அதிபர் சவுலி நினிஸ்டோவும், பிரதமர் சன்னா மரினும் கூட்டாக அறிவித்தனர்.
- இதற்கிடையே, நேட்டோவில் சேர பின்லாந்து விண்ணப்பிக்க உள்ளதால், அவர்களுக்கு வழங்கி வந்த மின்சாரத்தை ரஷ்யா நிறுத்தி உள்ளது.
இத்தாலி ஓப்பன் - ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்
- செர்பிய நாட்டை சேர்ந்தவர் 34 வயதான ஜோகோவிச். டென்னிஸ் உலகில் நம்பர் ஒன் வீரர். இந்நிலையில், இத்தாலி ஓப்பன் தொடரில் பங்கேற்று விளையாடினார் அவர். இந்த தொடரில் அவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் நேர் செட் கணக்கில் ஆட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
- இதன் மூலம் ஆறாவது முறையாக அவர் இத்தாலி ஓப்பன் பட்டத்தை வென்றுள்ளார்.
- முன்னதாக, அரையிறுதியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆயிரம் வெற்றிகளை பதிவு செய்த வீரர் என்ற மைல்கல்லை எட்டினார் அவர். இந்த சாதனையை படைத்துள்ள ஐந்தாவது வீரராகி உள்ளார் அவர்.
இந்தியாவின் முதல் பொதுநிலை அருளாளர் தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வாடிகனில் போப் பிரான்சிஸ் வழங்கினார்
- குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே நட்டாலம் கிராமத்தில் 1712ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி பிறந்தவர் நீலகண்டன் என்ற இயற்பெயரை கொண்ட தேவசகாயம். 1741ல் திருவிதாங்கூர் படைகளுக்கும், டச்சு படைகளுக்கும் இடையே நடைபெற்ற குளச்சல் போரில் மன்னர் மார்த்தாண்ட வர்மாவிடம் டச்சுப் படைத் தளபதி பெனடிக்ட் டிலனாய் போர் கைதியானார். அவருடன் நீலகண்டன் பழகினார். நண்பராகி அவருடன் உரையாடியதில் இருந்து கிறிஸ்தவத்தை பற்றி அறிந்து கிறிஸ்தவத்தை தழுவ தொடங்கினார்.
- 1745ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி வடக்கன்குளம் திருக்குடும்ப ஆலயத்தில் திருமுழுக்கு பெற்றார். ''லாசர்'' என்ற விவிலிய பெயருடன் தமிழில் ''தேவசகாயம்'' என்று அழைக்கப்பட்டார்.
- மனைவி பார்கவியும் திருமுழுக்கு பெற்று ''தெரேஸ்'' என்றும் தமிழில் ''ஞானப்பூ'' என்றும் அழைக்கப்பட்டார். அப்போது படை வீரர்களும் பலர் மனம் மாறினர்.
- இதையடுத்து, உயர் குலத்தாரை புறக்கணித்தார் என்றும், மன்னரை அவமதித்து விட்டார் என்றும் அவரது கிறிஸ்தவ விசுவாசத்திற்காக 1752ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி மன்னரின் கட்டளைப்படி ஆரல்வாய்மொழி காற்றாடிமலையில் தேவசகாயம் சுட்டு கொல்லப்பட்டார். அவரின் உடல் பகுதிகள் சேகரிக்கப்பட்டு கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் பீடத்திற்கு முன்பு நல்லடக்கம் செய்யப்பட்டது.
- தேவசகாயத்திற்கு 22-12-2003 அன்று இறையூழியர் பட்டம் வழங்கப்பட்டது. 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் நாள், தேவசகாயம் ''மறை சாட்சி'' என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ''முக்திப்பேறு பெற்றவர்'' (அருளாளர்) என்னும் பட்டமும் அளிக்கப்பட்டது.
- கடந்த 28-2-2019-ல் இவரை புனிதராக அறிவிக்கும் ஆவணத்தில் போப் பிரான்சிஸ் கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து அருளாளர் தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றது.
- இதில், தமிழக அரசின் சார்பில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டனர்.
- மறை சாட்சியாக விளங்கிய தமிழகத்தின் முதல் புனிதர், இந்தியாவில் முதல் பொதுநிலையினரான புனிதர் அருளாளர் தேவசகாயத்திற்கு புனிதர் பட்டத்தை வாடிகன் வழங்கி இருப்பது பெரும் பெருமையை சேர்த்துள்ளது.
- வாடிகன் நகரில் புனிதர் பட்டம் வழங்குவதையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப் பெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மண்வெட்டி கண்டெடுப்பு
- ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் 32 குழிகள் தோண்டப்பட்டதில் 62-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- தற்போது இரும்பு பொருள் கண்டெடுக்கப்பட்டது. இது மண்வெட்டி என்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் மண்வெட்டி பயன்படுத்தி விவசாயம் செய்துள்ளனர் என, ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.