டெல்லியில் வீட்டுக்கே சென்று ரேஷன் விநியோகிக்கும் திட்டம் ரத்து - உயர் நீதிமன்றம்
- டெல்லியில் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி, தேர்தல் வாக்குறுதியாக ரேஷன் பொருள்கள் நேரடியாக வீட்டுக்கே வந்து விநியோகிக்கும் திட்டத்தை அறிவித்திருந்தது.
- ஆனால் இந்த திட்டத்தை எதிர்த்து ரேஷன் டீலர்கள் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த இரண்டு மனுக்களையும் டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
- அதைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி விபின் சங்கி மற்றும் நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாநில அரசு தனியாக வழங்கும் ரேஷன் திட்டத்தை வேண்டுமானால் வீட்டுக்கு வீடு கொண்டு போய் கொடுக்கலாம்.
- ஆனால் மத்திய அரசு வழங்கும் ரேஷன் தானியங்களை வழங்க இந்த திட்டத்தைப் பயன்படுத்த முடியாது எனக் கூறி இந்தத் திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ தளவாடங்களை அனுப்பும் அமெரிக்கா
- ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட உக்ரைனுக்கு உதவும் விதமாக, 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கூடுதல் இராணுவ உதவியை அமெரிக்கா அனுப்பவிருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
- ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, அமெரிக்கா பல்வேறு வகையான ஆயுதங்களை வழங்குவதன் மூலம் உக்ரைனுக்கு உதவி வருகிறது.
- பிடென் பத்தாவது முறையாக தனது ஜனாதிபதி டிராடவுன் ஆணையத்தை (Presidential Drawdown Authority (PDA)) பயன்படுத்தி, இந்த இராணுவ உதவியை உக்ரைனுக்கு வழங்குக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, PDA நிதியத்தில் உள்ள நிதியை அதிபர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வழங்கலாம்.
- அவசரநிலை ஏற்பட்டால் காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் அமெரிக்க பங்குகளில் இருந்து அதிகப்படியான ஆயுதங்களை மாற்ற பிடனுக்கு PDA அங்கீகாரம் அளிக்கிறது.
உலகக் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்தார் இந்தியாவின் நிகத் ஜரீன்
- ஐபிஏ பெண்கள் உலகக் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நிகத் ஜரீன் தாய்லாந்தின் ஜிட்பாங் ஜுடாமஸ் என்ற வீராங்கனையை 52 கிலோ உடல் எடைப்பிரிவில் 30-27, 29-28, 29-28, 30-27, 29-28 என்று 5-0 என்று வெளுத்து வாங்கி விட்டார்.
- இதன் மூலம் உலகக்க்குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற 5வது வீராங்கனையானார் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நிகத் ஜரீன்.
- இந்திய நட்சத்திர வீராங்கனை மேரி கோம் 2002, 2005, 2006, 2008, 2010 மற்றும் 2028-ல் தங்கம் வென்று 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.
- மேர்கோம் தவிர சரிதா தேவி (2006), ஜென்னி (2006), கே.சி.லேகா (2006) ஆகியோர் வென்றதையடுத்து இப்போது 5வது வீராங்கனையாக நிகத் ஜரீன் தங்கம் வென்று வரலாறு படைத்தார்.
உலகக் கோப்பை வில்வித்தையில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்
- தென் கொரியாவின் குவாங்ஜு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான ரீகர்வ் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ரிதி போர், கோமலிகா பாரி, அங்கிதா பகத் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி, சீன தைபே அணியை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
மத்திய - மாநில அரசுகளுக்கு சம அதிகாரம்; ஜி.எஸ்.டி., வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
- நாடு முழுதும் சீரான வரி விதிப்பு முறையை தர, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, 2017ல் அறிமுகம் செய்யப்பட்டது.வரி விதிப்பில் மாற்றம் செய்ய, மத்திய நிதி அமைச்சர் தலைமையில், மாநில அமைச்சர்கள் அடங்கிய, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூடி முடிவு செய்கிறது.
- இந்நிலையில், கடல் சார் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு, ஐ.ஜி.எஸ்.டி., எனப்படும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், அந்த வரி விதிப்புக்கு தடை விதித்தது.
- இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
- அப்போது, நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளதாவது:ஜி.எஸ்.டி., விவகாரத்தில் சட்டங்கள் இயற்ற, மத்திய - மாநில அரசுகளுக்கு சமமான, அதே நேரத்தில் ஒருங்கிணைந்த அதிகாரம் உள்ளது.
- ஜி.எஸ்.டி., கவுன்சிலில் எடுக்கப்படும் முடிவுகள், மத்திய - மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. அதே நேரத்தில் இணக்கமாக செயல்படுவதற்கு அந்த முடிவுகள் உதவும்.மாநிலங்களுக்கு இடையே மோதல், பிரச்னை ஏற்படும்போது, அதற்கு தீர்வு காண்பதற்காகவே, கூட்டாட்சி தத்துவத்தில் மத்திய அரசுக்கு அதிக அதிகாரத்தை, நம் அரசியல் சாசனம் வழங்கிஉள்ளது.
- அதுபோலவே, ஜி.எஸ்.டி., கவுன்சிலில், கூட்டு விவாதங்கள் மூலமே ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதே நேரத்தில், ஒரு தரப்புக்கு சற்று அதிக அதிகாரம் தேவை. நம் நாட்டின் கூட்டாட்சி தத்துவம் என்பது, ஒத்துழைப்பு மற்றும் ஒத்துழையாமை கலந்தது; கலந்து பேசியே தீர்வு காண வேண்டும்.
ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை வெளியிட்ட பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கை
- பெருந்தொற்றின் பாதிப்பிலிருந்து மீண்டு வரும் உலக பொருளாதாரத்தை உக்ரைன்-ரஷியா இடையே நீடித்து வரும் போா் நிலைகுலையச் செய்துள்ளது.
- உணவு மற்றும் இதர பொருள்களின் விலை அதிகரிப்புக்கு காரணமாகியுள்ளதுடன் பணவீக்கத்தை தூண்டி உலக நாடுகளை அழுத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், ஐரோப்பாவில் நெருக்கடிகளை தூண்டிவிட்டுள்ளது.
- 2022 ஜனவரியில் வெளியிடப்பட்ட மதிப்பீட்டில் சா்வதேச பொருளாதாரம் 4.0 சதவீதம் அளவுக்கு வளா்ச்சி காணும் என கணிக்கப்பட்டிருந்தது.
- ஆனால், தற்போது சா்வதேச நிலவரங்கள் முற்றிலும் மாறியுள்ளதால் உலகப் பொருளாதரம் 3.1 சதவீத வளா்ச்சியை மட்டுமே எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- இந்தியாவைப் பொருத்தவரையில், அதிக பணவீக்கம், வேலைவாய்ப்பு சந்தையில் காணப்படும் சமச்சீரற்ற மீட்சி நிலையால் தனியாா் நுகா்வு மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளில் பாதிப்பு ஆகியவற்றுக்கிடையிலும் வேகமாக வளா்ச்சி கண்டு வரும் மிக முக்கிய பொருளாதார நாடாக இன்னும் உள்ளது.
- கடந்த ஆண்டில் இந்தியா 8.8 சதவீத பொருளாதார வளா்ச்சியை பதிவு செய்த நிலையில், நடப்பாண்டில் 6.4 சதவீத வளா்ச்சியை மட்டுமே எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2023 நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி மேலும் சரிந்து 6 சதவீதமாகும்.
- உணவு மற்றும் எரிபொருள்களின் விலை அதிகரிப்பால், உலக பணவீக்கம் 2022-இல் 6.7 சதவீதமாக அதிகரிக்கும். இது, 2010-2020 ஆண்டுகளுக்கிடையில் காணப்பட்ட சா்வதேச பணவீக்கமான 2.9 சதவீதத்தை காட்டிலும் இரு மடங்கு அதிகம் என ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமயமலையில் திறக்கப்பட்ட உலகின் மிக உயரமான வானிலை மையம்
- நேஷனல் ஜியோகிராஃபிக் சொசைட்டி (National geographic society) வல்லுநர்களால் உலகின் மிக உயரமான வானிலை மையம் இமயமலையில் 8,830 மீட்டர் உயரத்தில் இன்று (வியாழக்கிழமை) அமைக்கப்பட்டுள்ளது.
- இமயமலையில் அமைந்துள்ள இந்த வானிலை மையமானது தானாக இயங்கும் திறன் கொண்டது என நேபாளத்தின் நீரியல் மற்றும் வானிலைத் துறை தெரிவித்துள்ளது.
- மேலும், சூரிய சக்தி ஆற்றலின் உதவியுடன் இயங்கும் இந்த வானிலை நிலையம் இமயமலையின் உச்சிப்பகுதிக்கு சில மீட்டர்கள் கீழே அமைக்கப்பட்டுள்ளது.
- இமயமலைப் பகுதியில் உள்ள வெப்பநிலை, காற்றின் வேகம் மற்றும் திசை போன்றவற்றை அறிந்து கொள்ள இந்த வானிலை மையம் உதவியாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
- இந்த வானிலை மையத்தை அமைப்பதற்காக நேஷனல் ஜியோகிராஃபிக் சொசைட்டி (National geographic society) மற்றும் நேபாள நாட்டிற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருந்தது.
- அதன்படி, 2025ஆம் ஆண்டு வரை நேஷனல் ஜியோகிராஃபிக் சொசைட்டியும் அதன்பின்னர் நேபாள அரசின் கட்டுப்பாட்டின் கீழும் இயங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இயல் விருது 2022
- இலக்கியம், பண்பாட்டு தளங்களில் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும் உயரிய விருது இதுவாகும். கனடாவை சேர்ந்த தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் சார்பில் இயல் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
- நீதிபதி கே.சந்துரு (கட்டுரை), பா.அ.ஜெயகரன் (புனைவிலக்கியம்), ஆஸி.யை சேர்ந்த ஆழியாள் (கவிதை) ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஸ்வராஜிலிருந்து புதிய இந்தியாவுக்கு இந்தியாவின் கொள்கைகள் மறுபார்வை குறித்து தில்லி பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கிவைத்தார் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் முன்னிலை வகித்தார்.